nv ramana tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்’: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

Loading

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

“சட்டமன்றம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு நீதித்துறை மறுஆய்வு என்பது அரசமைப்பின் ஒரு பகுதி. இதை இந்திய அரசியலமைப்பின் ஆன்மா என்று நான் கூறுவேன். எனது பார்வையில், நீதித்துறை மறுஆய்வு என்ற ஒன்று இல்லாதிருந்தால் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்திருக்கும்.”

கடந்த ஜூலை 23 அன்று ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதிதான் இது. நீதிபதி என்.வி. ரமணா இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 16 மாதங்களில் அவர் ஆற்றிய 29 உரைகளில் இதுவும் ஒன்று.

ஆனால், ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த 53 வழக்குகளுக்கு நடுவர் மன்றம் எதுவும் அமைக்கப்படவில்லை. நடுவர் மன்றம் தேவைப்படாத தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்த 53 வழக்குகளிலும் முன்பிருந்த தலைமை நீதிபதிகளின் பாதையையே ரமணாவும் பின்பற்றியுள்ளார். நாங்கள் ஆய்வு செய்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கும் இதே நிலைதான். அதில் ஆறு வழக்குகளின் இன்றைய நிலையை மட்டும் இனி காண்போம்:

  1. ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு (1,115 நாட்களாக நிலுவையில் உள்ளது)
  2. தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு (1,816 நாட்களாக நிலுவையில் உள்ளது)
  3. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு (159 நாட்களாக நிலுவையில் உள்ளது)
  4. நலிவுற்ற பிரிவினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு (EWS) வழக்கு (1,323 நாட்களாக நிலுவையில் உள்ளது)
  5. கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் உபா சட்டத்திற்கு (UAPA) எதிரான வழக்கு (1,105 நாட்களாக நிலுவையில் உள்ளது)
  6. மத ரீதியிலான பாகுபாடுகளைக் கொண்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு (987 நாட்களாக நிலுவையில் உள்ளது)

“மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்” எனப்படும் தலைமை நீதிபதி, தான் அரசியலமைப்பு அமர்வுகள் உட்பட அனைத்து அமர்வுகளை அமைக்கவும், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளை முடிவு செய்யவும், குறிப்பிட்ட அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்கவும் அதிகாரம் பெற்றவர். வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பதற்கும் தலைமை நீதிபதியே காரணம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

5 நடுவர்களைக் கொண்ட ஒரே ஒரு அரசமைப்பு அமர்வுதான் இதுவரை தலைமை நீதிபதி என்.வி. ரமணாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 2021 செப்டம்பரில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமர்வு, குஜராத் மாநில மின்சார ஒழுங்குமுறை நிறுவனமான உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர் (முந்த்ரா) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தக் கடமைகள் சம்பந்தப்பட்ட தகராறு சார்ந்த ஒரு சீராய்வு மனுவை (முடிவுபெறும் தருவாயில்) விசாரித்தது. ஆனால் இந்த வழக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத்தில் முடிந்தது.

சென்ற ஆகஸ்ட் 22ம் தேதி, அதாவது ரமணா ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ளார். தில்லி அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே 2018ல் நிர்வாகச் சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு வந்த சட்டப் பிரச்னையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட அந்த அமர்வு விசாரணையை இன்னும் தொடங்கவில்லை.

இது தவிர்த்து, நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான நீண்டகால கோரிக்கைகள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு, நீதிபதிகள் தேர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயித்தல் போன்ற நீதித்துறை தொடர்பான பிற சிக்கல்களுக்கும் அவர் தீர்வுகாணவில்லை.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஆறு வழக்குகளின் மனுதாரர்களுடன் நாங்கள் மேற்கொண்ட உரையாடல் ஏமாற்றமும் நம்பிக்கையும் கலந்தே ஒன்றாகவே இருந்தது.

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு

ஒரு மாநிலத்தின் சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் யூனியன் பிரதேசமாகத் மாற்றுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதென்றும், பிரிவு 370ஐ ரத்து செய்ய முடியாது என்றும் இந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர்கள் வாதிடுகிறார்கள்.

வழக்கின் பெயர்: மனோகர் லால் சர்மா எதிர் இந்திய ஒன்றியம்

கடைசி விசாரணை: தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி, நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்ய காந்த்

முதல் விசாரணை தேதி: ஆகஸ்ட் 16, 2019

விசாரணையின் கடைசி தேதி: மார்ச் 2, 2020 (30 மாதங்களுக்கு முன்பு)

விசாரணைகள்: 11

விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: ஏப்ரல் 25, 2022 (தலைமை நீதிபதி ரமணா முன்)

நீதிபதியின் பதில்: “பார்க்கிறேன்.”

“விரைவாகவும், அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும் நீதியை வழங்கத் தவறும் நீதி அமைப்புதான் சட்டத்தின் ஆட்சியையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முக்கிய சவாலாக விளங்குகிறது” – தலைமை நீதிபதி ரமணா, ஸ்ரீநகர், மே 14, 2022.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு, லடாக் என்ற இரண்டு ஒன்றிய பிரதேசங்களாகப் பிரித்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை (2019) அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி ஆகஸ்ட் 5 ,6 தேதிகளில் 23க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு வரவில்லை. 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நீதிபதி ரமணாதான் அரசியல் சாசன அமர்வுக்குத் தலைமை வகித்தார். மேலும் கடந்த 2020 மார்ச் 2ல் கூடிய அமர்வு, ஏழு பேர் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற விடுத்த கோரிக்கையை இந்த அமர்வு நிராகரித்தது.

விசாரணைகள் மீண்டும் தொடங்குவதற்கு மனுதாரர்கள் “தேதி” கேட்டபோது, ​​​​சபரிமலை தொடர்பான விசாரணையின் அட்டவணையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று இந்த அமர்வு கூறியது.

சபரிமலை வழக்கில் மதச் சுதந்திரத்தின் வரம்பு மற்றும் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்பி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்குக்கான விசாரணை நடக்கவில்லை. இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன் பட்டியலிட கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்: “பார்ப்போம்”.

விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்றார் ரமணா. ஜூலை 10க்குப் பின் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நமது நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பொது வெளியில் பேசினாலும், நீதிமன்றங்களில் வழக்கை விசாரிக்கும்போது அவர்கள் பேசுவதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள் என்கிறார் இந்த வழக்கின் மனுதாரர் அத்னான் அஷ்ரஃப் மிர்.

அத்னான் அஷ்ரஃப் மிர்

மூன்றாண்டுகள் ஆகியும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களையாவது உச்ச நீதிமன்றம் கூறியாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிர். காஷ்மீருக்கு நடந்தது மற்ற மாநிலங்களுக்கும் நடக்கலாம் என்று கூறிய மிர், காஷ்மீர் மக்கள் அனைத்து அமைப்புகள் மீதும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். இந்தப் போக்கு ஆபத்தான ஒன்று எனக் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, முன்பிருந்த நிலை அப்படியே தொடரும் வகையில் தற்காலிகமாக தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டு காஷ்மீரின் சூழல் மாற்றமடைந்துவிட்டால் வழக்குத் தொடுத்தது அர்த்தமற்றதாகிவிடும். எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதி கவாய் நிராகரித்தார். ஒரு சட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தால் திரும்பப்பெற முடியும் என்றார் அவர்.

“சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிறகு பழைய நிலைக்குத் திரும்புவது கடினம். வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்ற மசோதாக்கள் ஏற்கனவே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன. எனவே, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க அவசரம் காட்ட வேண்டும்” என்றார் மிர்.

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் முறையற்ற வகையில் அரசியல் கட்சிகள் நிதி வசூலிப்பதாகவும், இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறும் மனுதாரர்கள், மாநிலங்களவையில் எந்த விவாதத்திற்கும் இடமின்றி இந்த சட்ட மசோதா நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது செல்லாது என்றும் வாதிடுகின்றனர்.

வழக்கின் பெயர்: ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் எதிர் இந்திய ஒன்றியம்

கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி வி. ராமசுப்ரமணியம்

முதல் விசாரணை தேதி: ஏப்ரல் 5, 2019

விசாரணையின் கடைசி தேதி: மார்ச் 29, 2020 (30 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 8

விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: ஏப்ரல் 25, 2022 (தலைமை நீதிபதி ரமணா முன்)

நீதிபதியின் பதில்: “கருத்தில் கொள்கிறேன்.”

“சட்டத்தைப் பற்றி குடிமக்கள் அறிந்திருப்பதன் மூலமும், அவர்களின் அன்றாட நடத்தையில் அதைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவைப்படும்போது நீதியை வலியுறுத்துவதன் மூலமும் ‘சட்டத்தின் ஆட்சியை’ வலுப்படுத்த முடியும்.” – தலைமை நீதிபதி ரமணா, பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவு, ஜூன் 30, 2021.

2018 ஜனவரி 2 அன்று ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மனுதாரர்கள் எதிர்த்தார்கள். இது பெயர் தெரியாத வகையில் பெருநிறுவன நிதியை அரசியல் கட்சிகளுக்கு சேர்க்க வழிவகை செய்யும் என்றும், நிதி மசோதா என்ற பெயரில் இச்சட்டம் தவறாக நிறைவேற்றப்பட்டது செல்லாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

2019 நவம்பரில் வெளியான புலனாய்வுச் செய்தி ஒன்றில் இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய ரிசர்வ் வங்கி , நிதி மற்றும் சட்ட அமைச்சகங்கள் இந்தப் பத்திரங்களை “பணமோசடி செய்வதை ஊக்குவிக்கும், “தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்” என்று கூறி எதிர்த்தன என்பதை வெளிப்படுத்தியது.

2019 ஏப்ரலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்விடம் முதல்முறையும், 2021 மார்ச்சில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்விடம் இரண்டாவது முறையும் இந்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மனுதாரர்கள்.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் உறுப்பினர் ஜகதீப் சோக்கரிடம் பேசியபோது, இந்தத் திட்டம் முறையற்ற வகையிலான பணத்தை ஆளும் கட்சிக்கு லஞ்சமாகக் கொண்டு சேர்க்கிறது என்றார்.

ஜகதீப் சோகர்

இந்த ஆண்டு ஏப்ரல் 5 அன்று மேற்கு வங்காளத்திலிருந்து ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டிப் பேசிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் 40 கோடி ரூபாயை ஒரு நிறுவனம் மேற்கு வங்க ஆளும் கட்சிக்கு லஞ்சமாகச் செலுத்தியுள்ளது ஜனநாயக விரோதமான செயல் என்பதைக் குறிப்பிட்டு, இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி ரமணா அமர்வைக் கோரினார்.

பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ரமணா தெரிவித்தார். ஆனால், நான்கு மாத காலம் ஆகியும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

2019 ஏப்ரலில் இந்த வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை எழுப்பியபோது, இதை இப்போது விசாரிப்பது தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் நீதிபதி. அப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழக்கை விசாரிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும், ஐந்து ஆறு முறை முயற்சிகள் செய்தும் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறுகிறார் ஜகதீப் சோகர்.

கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் UAPA-வுக்கு எதிரான வழக்கு

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான UAPAவின் விதிகள் தெளிவற்றதாகவும், பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும், “நீதித்துறை தலையீடின்றி” அரசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவதாகவும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

வழக்கின் பெயர்: சஜல் அவஸ்தி எதிர் இந்திய ஒன்றியம்

கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி கோகோய், நீதிபதி அசோக் பூஷன்

முதல் விசாரணை தேதி: செப்டம்பர் 9, 2019

விசாரணையின் கடைசி தேதி: முதல் விசாரணைக்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை (35 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 1

விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை

நீதிபதியின் பதில்: NA

“உலகின் குடிமக்களாகிய நாம் அனைவரும், நமது முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் அயராது உழைக்க வேண்டியது அவசியம்.” – தலைமை நீதிபதி ரமணா, பிலடெல்பியா, அமெரிக்கா, 26 ஜூன் 2022

2019 முதலே பல்வேறு மனுதாரர்கள் UAPAவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதற்கான சுமையை குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதே இச்சட்டம் ஏற்படுத்துகிறது என்பதும், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒன்று என்பதும் மனுதாரர்கள் தரப்பு வாதம். சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த சஜல் அவஸ்தி தாக்கல் செய்த மனுவில், UAPA சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு யாரை வேண்டுமானாலும் எவ்வித ஆதாரமுமுமின்றி ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்தலாம். அப்படிச் செய்வது அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a)-வுக்கு எதிரானது என்று கூறினார்.

அப்போதைய தலைமை நீதிபதி கோகோய், மத்திய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தபோதிலும் விசாரணை நடைபெறவே இல்லை. ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் பல ஊடகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் UAPAவை பேச்சுரிமைக்கு எதிரானது என்றும், இச்சட்டம் விமர்சனங்களை நசுக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் முறையிட்டிருந்தார்கள்.

கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, பிறகு விசாரிப்பதாகக் கூறிய ரமணா, அதற்குப் பிறகு விசாரிப்பதற்கான எவ்வித முனைப்பும் காட்டவில்லை.

ஒரு ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் UAPA சட்டத் திருத்தம் அரசிலமைப்புப்படி செல்லுபடியாகுமா என்பதை உறுதிசெய்யாமல், டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த அரசின் மீதான கட்டுப்பாடுகளை செல்லாது என்று கூறி அவ்வுத்தரவை நிறுத்தி வைத்தது.

கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி ஜாமீன் மனு தொடர்பான உத்தரவில், தில்லி உயர் நீதிமன்றம் UAPAவின் கீழ் பயங்கரவாதச் செயலுக்கான வரையறையை “தெளிவற்றது” என்று கூறியது. மேலும், “சாதாரணக் குற்றங்கள் எல்லாம் எவ்வளவு மோசமான குற்றங்களாக இருந்தாலும் UAPAவின் கீழ் வராது” என்றும் கூறியது. மூன்று நாட்களுக்குப் பிறகு (ஜூன் 18) டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை “முன்னுதாரணமாகக் கருதக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

UAPA குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு பத்திரிக்கையாளரும் மனுதாரருமான ஷியாம் மீரா சிங், UAPA மீதான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்காதது வியப்பளிப்பதாகக் கூறினார். UAPA வழக்கில் FIR போடப்பட்டதிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், இதன் மூலம் அவரால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாமல் இருப்பதையும், அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி வருந்தினார். மேலும், எப்போதாவது காட்டப்படும் சிறு கருணையைத் தவிர்த்து நீதித்துறை மீதான நம்பிக்கையை அவர் முற்றிலும் இழந்துவிட்டதாகக் கூறினார். நீதித்துறையின் சமரசப் போக்கைச் சுட்டிக்காட்டிய அவர், கீழமை நீதிமன்றங்களின் நிலையும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஷியாம் மீரா சிங்

EWS இடஒதுக்கீடு வழக்கு

தலித், பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட அளவுகோல்களை மறுத்தும் பிற சமூக காரணிகளைக் கருத்தில் கொள்ளாமலும் , பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

வழக்கின் பெயர்: சமத்துவத்துக்கான இளைஞர்கள் எதிர் இந்திய ஒன்றியம்

கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி கவாய்

முதல் விசாரணை தேதி: மார்ச் 12, 2019

விசாரணையின் கடைசி தேதி: ஆகஸ்ட் 5, 2020 (24 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 6

விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை

நீதிபதியின் பதில்: NA

“நான் சமூக நீதியின் தீவிரமான ஆதரவாளன். திறமைகளை வளப்படுத்த, சட்டக் கல்வியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நான் உறுதியாக ஏற்றுக்கொண்டு அதை முன்மொழிகிறேன்.” – தலைமை நீதிபதி ரமணா, புது தில்லி, 10 மார்ச் 2022.

2019 ஜனவரி 9ம் நாள் நாடாளுமன்றம் 103வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இது அரசியலமைப்பின் 15 மற்றும் 16வது பிரிவுகளைத் திருத்தியது. இந்தச் சட்டத் திருத்தம் பொருளாதார அளவுகோல் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் அளித்தது.

இடஒதுக்கீட்டுக்கு விதித்திருந்த 50% உச்ச வரம்பை இந்தத் திருத்தம் மீறுவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. ஐந்து நாட்கள் விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் 5, 2020 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடிவு செய்தது. அதன் பிறகு இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. தலைமை நீதிபதி ரமணா காலத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

டெல்லி உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸிடம் பேசியபோது, தள்ளிப்போகும் விசாரணை தற்போது இருக்கும் நடைமுறை தொடரவே வழிவகுக்கும் என்றும், இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

சிஏஏவுக்கு எதிரான வழக்கு

2019ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்பது மனுதாரர்களின் வாதம். இந்தச் சட்டத் திருத்தம் மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், பிரிவு 21ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வழக்கின் பெயர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர் இந்திய ஒன்றியம்

கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி கவாய், நீதிபதி சூர்ய காந்த்

முதல் விசாரணை தேதி: டிசம்பர் 18, 2019

விசாரணையின் கடைசி தேதி: ஜனவரி 22, 2020 (31 மாதங்களுக்கு முன்பு)

மொத்த விசாரணைகள்: 2

விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை

நீதிபதியின் பதில்: NA

“படித்த இளைஞர்கள் சமூக யதார்த்தத்திலிருந்து விலகி இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது… நீங்கள் தலைவர்களாகச் செயல்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் உணர்வு மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நமது அரசியலமைப்பின் லட்சியங்களை அடைய ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பொறுப்பான இளைஞர்கள் இன்றியமையாதவர்கள்.” – தலைமை நீதிபதி ரமணா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (டில்லி), டிசம்பர் 9, 2021.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019 டிசம்பரில் சிஏஏ சட்டத் திருத்தத்தை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தச் சட்டம் விரைவான குடியுரிமை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அரசு இதுவரை முறையான விதிகளை இன்னும் வகுக்காததால் இச்சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

சிஏஏவை எதிர்த்து இதுவரை 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிஏஏ என்பது முஸ்லிம்களை விலக்குவதால், அனைவருக்குமான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 14வது பிரிவை மீறுகிறது என்றும், இச்சட்டம் அரசையலமைப்புக்கு விரோதமானது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 18/12/2019 மற்றும் 22/1/2020 ஆகிய தேதிகளில் இரண்டு விசாரணைகளை நடத்தியது. அதில் இந்தச் சட்டத்திற்கு தற்காலிகத் தடை விதிக்க மறுக்கப்பட்டது. கடைசி விசாரணை நடந்தது 22/1/2020 அன்றுதான். அதன் பிறகு எந்த விசாரணையும் இல்லை.

2020 மே 20ம் தேதி அஸ்ஸாமில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்திற்குத் தடை கோரிய மற்றொரு மனு தலைமை நீதிபதி பாப்டேவின் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு அச்சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்து, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் மட்டும் அனுப்பியது.

United Against Hate குழுமத்தின் உறுப்பினர் பனோஜ் யோத்ஸ்னா லஹிரியிடம் பேசியபோது, முழு நாடும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சட்டத்தின் மீது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிறகும் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதது நியாயமற்றது என்றும், இதைவிட எப்படி தெளிவாகப் பேசுவது என்றும் கேள்வி எழுப்பினார். தலைமை நீதிபதி ரமணா தனது முற்போக்கு முகத்தை உரைகளில் மட்டுமல்லாது தீர்ப்புகள் மூலமும் உச்ச நீதிமன்றத்தில் காட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்டுகொள்ளப்படாத பிற பொதுநல வழக்குகள்

பலமுறை கோரிக்கை விடுத்தும் நீதிபதி ரமணா கண்டுகொள்ளப்படாத ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மிகச் சமீபத்தில் நடந்த பெகாசஸ் வழக்கைகூட தலைமை நீதிபதி ரமணா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரை உளவு பார்க்க இஸ்ரேலிய ஸ்பைவேரை ஒன்றிய அரசாங்கம் பயன்படுத்தியதா என்பதை விசாரிக்கக் கோரிய மனுக்களை நீதித்துறை துளியும் கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை 22 முதல் நிலுவையில் உள்ள 11 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு இப்போது ரமணா ஓய்வு பெற்ற பிறகு செப்டம்பர் 2 அன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான தொழில்நுட்பக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்துள்ள அரசின் முடிவை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஒரு வழக்கறிஞர் கோரினார். நீதிபதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தேதி எதுவும் தெரிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி ரமணா. இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 159 நாட்கள் ஆகிவிட்டன. விசாரணையில் இதுவரை எந்த அசைவும் இல்லை.

ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் ஹிஜாப் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய இரண்டு மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வு முன் வைக்கப்பட்டன. தலைமை நீதிபதி ரமணா விசாரிப்பதாக உறுதியளித்தார். ஏப்ரல் 26 அன்று, “இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என்றார். ஜூலை 13 அன்று, “அடுத்த வாரம்வரை காத்திருங்கள்” என்றார். வழக்கு இதுவரை விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.

சாதாரணமாக விசாரணை கோரி எழுப்பப்படும் சிறப்பு விடுப்பு மனுக்களை (SLP) 5 – 6 தினங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், பல மாதங்கள் ஆகியும் இவ்வழக்கை விசாரிக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் மெத்தனத்தையே காட்டுகிறது என்கிறார் ஹிஜாப் வழக்கின் வழக்கறிஞர் ஃபௌசியா ஷகில்.

சௌரவ் தாஸ், புலனாய்வு பத்திரிகையாளர்

மூலம்: Article 14

தமிழில்: கெளதம் ராஜ்

Related posts

Leave a Comment