காணொளிகள் குறும்பதிவுகள் 

“பௌத்தத்திற்கு மாறுவதில் அர்த்தமில்லை” – அம்பேத்கர்

Loading

The Radical in Ambedkar: Critical Reflections என்ற நூல் வெளிவந்த தருணத்தில் அதிலிருந்து மதமாற்றம் பற்றிய அம்பேத்கரின் நிலைப்பாட்டை விளக்கும் அத்தியாயத்தின் ஒரு பகுதியை எடுத்து Scroll.in தளம் வெளியிட்டிருந்தது.

தலித்துகள் இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்குள்ள ஒரே வழி, அவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறி வேறு மதத்தைத் தழுவுவதுதான் என்று முழங்கியவர் அண்ணல் அம்பேத்கர்.

அப்படியென்றால், எந்த மதத்தைத் தழுவுவது எனும் கேள்வி எழுந்தது. அம்பேத்கர் அதை இரு கோணங்களில் அணுகினார். ஒன்று சமூக வாழ்க்கை தொடர்பான புறநிலைக் கோணம்; மற்றது தனிமனித அறமேம்பாடு தொடர்பான ஆன்மிகக் கோணம்.

முதல் கோணத்தைப் பொறுத்தவரையில் அம்பேத்கரின் பார்வை இப்படியிருந்தது: சாதி இந்துக்கள் முன்புபோல் தலித்துகளை இழிவுசெய்ய வாய்ப்பிருக்கக் கூடாது. சமுதாயத்தில் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அந்தச் சமுதாயமே திரண்டுவந்து தோள்கொடுக்கும் படியான ஒரு மதச் சமுதாயத்துடன் தலித்துகள் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். அதற்கு அவர் முஸ்லிம் சமுதாயத்தை உதாரணமாக எடுத்துக் காட்டினார். அந்த வகையில் பௌத்தமோ ஆர்யசமாஜமோ சரிப்பட்டு வராது என்றும் சொன்னார். மதமாற்றத்தின் வாழ்க்கைப் பயன்பாடாக (existential utility) அம்பேத்கர் கருதியது இதைத்தான்.

“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”

பௌத்தராக மாறுவதில் அர்த்தமில்லை என்று அம்பேத்கர் இங்கு வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கவும். எனில், அப்போது அவர்முன்பு இரு தெரிவுகள் இருந்தன: கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம். தலித்துகள் மீதான தீண்டாமை கிறிஸ்தவத்திலும் தொடரும் என்பதால் அதைப் புறந்தள்ளிவிட்டு “இஸ்லாத்தின் மீது கவனத்தைக் குவித்தார் அம்பேத்கர்” என்கிறார் நூலாசிரியர் ஆனந்த் தெல்துப்ம்டே.

இறுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் மதம் மாறியபோது, வாழ்வின் புறநிலை அம்சத்தைக் காட்டிலும் ஆன்மிக அம்சத்துக்கு முன்னிடம் கொடுத்த அம்பேத்கர், ‘தலித்துகளின் வாழ்வுக்குப் பயன்படுவதாக அவர்களின் மதமாற்றம் இருக்கவேண்டும்’ என்கிற தனது தர்க்கத்தை தானே அலட்சியம்செய்தவராக பௌத்தத்தைத் தேர்வுசெய்தார் என்று அக்கட்டுரை முடிகிறது.

அம்பேத்கர் ஆன்மிகக் கோணத்தில் இஸ்லாத்தைவிட பௌத்தத்தை உயர்வாக மதிப்பிட்டதற்கான காரணங்கள் ஆய்வுக்கு உரியவை. இஸ்லாம்குறித்த வாசிப்புக்கு அவர் மேற்கத்திய ஓரியண்டலிஸ்டுகளின் ஆக்கங்களையே அதிகம் சார்ந்திருந்தார் என்பதும் அதில் ஒன்று. 

Related posts

Leave a Comment