கட்டுரைகள் 

பணிவும் கண்ணியமும்

போலியான, சடங்குத்தனமான மரியாதை மரியாதையே அல்ல. உண்மையில் அது ஒரு அவமதிப்பு, நடிப்பு, நயவஞ்சகத்தனம். இருந்தும் அதனை விரும்பக்கூடியவர்கள் அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய போலியான ஒரு மரியாதையைப் பெற தங்களின் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் அதனை அடைவதையே வாழ்வின் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அவர்களில் பலர் சலிப்படைந்து விடுகிறார்கள். இதற்காகவா நம் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிட்டோம் என்று தங்களையே நொந்து கொள்கிறார்கள். சிலர் மரணிக்கும்வரை அந்த எண்ணத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக, தங்கள் ஆன்ம அமைதிக்காக வாழ்வதில்லை. மற்றவர்களின் பார்வையில் தாங்கள் சிறந்தவர்களாக, மதிப்புமிக்கவர்களாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களின் வாழ்க்கையையே பலியிடுகிறார்கள்.

சமூக உறவுகள் நம்மைச் சுற்றி பின்னி வைத்திருக்கும் வலைப்பின்னல்களில் நாம் சிக்கிவிட்டால் நம் தனித்தன்மையை இழந்துவிடுவோம். எதற்காக வாழ்ந்தோம் என்று அறியாமலேயே வாழ்ந்து மடிந்து விடுவோம். நம் இருப்புக்கும் இன்மைக்கும் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணங்களும் நமக்குச் சொந்தமானவை. மற்றவர்களின் விருப்பங்களோ பார்வைகளோ பழித்துரைத்தல்களோ அந்தக் கணங்களை நம்மிடமிருந்து பறித்துவிடக் கூடாது. நம் வாழ்வுக்கு அர்த்தம் இருக்கிறது. நம் இருப்பும் இன்மையும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் படைப்பாளன் நமக்கு அருளிய கொடைகள். அவற்றை நாம் அற்ப நோக்களுக்காக வீணாக்கிவிடக்கூடாது.

ஆன்மா அடையும் நிம்மதியே உண்மையான நிம்மதி. உடல் இச்சைகளை நிறைவேற்றுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள் ஆன்ம அமைதியைப் பெற முடியாது. வாழ்வின் நோக்கத்தை கண்டடையும் மனிதர்கள் ஆன்ம அமைதியில் திளைக்கிறார்கள். ஆம். வாழ்வின் நோக்கத்தை கண்டடைவதைக் கொண்டே வாழ்வு முழுமையடைகிறது. அதுதான் நம் இருப்பையும் இன்மையையும் வேறுபடுத்துகிறது.

பணிவு என்பது கர்வத்தின் எதிர்ப்பதம். அறிவு, செல்வம், பலம், ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் மற்றும் நம்மிடம் இருக்கும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் கர்வத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைப் பெற்றிருந்தும் ஒருவன் கர்வம்கொள்ளாமல் பணிவை வெளிப்படுத்தினால் நிச்சயம் அது போற்றத்தக்க பண்புதான். இந்த நிலையில் அவனிடமிருந்து வெளிப்படும் பணிவு உள்ளங்களை வசீகரிக்கும் தன்மைவாய்ந்தது. அது அவனுக்கு அரணாக, பொறாமைக் கண்களிலிருந்து அவனைப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்து விடுகிறது.

இன்னொரு வகையான பணிவு இயலாமையினால் வெளிப்படுவது. வறுமையினால் அறியாமையினால் பலவீனத்தினால் வெளிப்படுவது. கர்வத்தைத் தூண்டக்கூடிய எதுவும் அவனிடம் இல்லாததனால் அவன் கர்வம்கொள்வதில்லை. ஆகவே அவன் பணிவின் திருவுருவமாகவே வெளிப்படுகிறான். இந்த நிலையில் அவனிடமிருந்து வெளிப்படும் பணிவு அடிமைத்தனமும் இழிவுமாகும். இத்தகைய மனிதர்களிடத்தில் திடீரென பணமோ பதவியோ வந்து சேர்ந்துவிடும்போது தலைகீழாக மாறிவிடுகிறார்கள். பணிவின் திருவுருமாக இருந்தவர்கள் கர்வத்தின் உச்சாணிக் கொம்பில் பேயாட்டம் போடக்கூடியவர்களாகிவிடுகிறார்கள்.

மனிதர்களில் சிறந்தவர்கள் இருக்கும்போது பணிவோடும் இன்மையின்போது தன்மானத்தோடும் நடந்துகொள்ளக்கூடியவர்கள். இரு நிலைகளிலும் அவர்கள் தங்களின் தனித்தன்மைகளை இழப்பதில்லை. இருநிலைகளிலும் அவர்களின் மனபலமும் ஆளுமையுமே வெளிப்படுகின்றன.
காலம் விசித்திரமானது. அது எந்தவொன்றையும் அது ஒரே நிலையில் விட்டுவைப்பதில்லை. மனிதனிடம் இருப்பது எதுவுமே நிரந்தரமானது அல்ல. நிச்சயமின்மையே அவனது வாழ்க்கையைச் சூழ்ந்துள்ளது. கண நேரத்தில் அவன் முழுமையாக மாற்றப்பட்டுவிடலாம். சுகபோகத்தில் சொக்கிக் கிடப்பவர்கள் வேதனையின் வெம்மையில் வீழ்ந்துவிடலாம். அதிகாரத்தின் போதையில் மிதப்பவர்கள் அடிமைத்தனம் என்னும் சிறையில் அகப்பட்டுவிடலாம்.

பணிவு உயர்வை ஏற்படுத்தும், தர்மம் செல்வத்தை அதிகரிக்கும் என்பது நபியின் வாக்கு. வெளிப்படையான காரணிகளைக் கொண்டு பார்க்கும்போது நமக்கு அதற்கு மாறாகத் தோன்றலாம். ஆனால் அனுபவம் நபியின் வாக்கையே உண்மைப்படுத்தும்.

உண்மையில் பணிவை வெளிப்படுத்தும் மனிதர்களே நம் மனதில் உயர்வடைகிறார்கள். கர்வத்தை வெளிப்படுத்தும் மனிதர்களை நாம் விரும்புவதில்லை. ஒரு மனிதன் கர்வத்தால் உயர நினைக்கும்போது இன்னொரு மனிதன் அவனது குறையை வெளிப்படுத்தி அவனை தாழ்த்த எண்ணுவான். கர்வம் எதிர்த்திசையில் கர்வத்தையே தூண்டும். மனிதர்கள் பிரதி உபகாரம் செய்பவர்கள். எந்தவொன்றுக்கும் அப்படியே எதிர்வினையாற்றுபவர்கள்.

நம்முடைய நன்னடத்தைகளும் பணிவான செயல்பாடுகளும் மக்களின் உள்ளத்தில் அவர்களையும் அறியாமல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நற்செயலுக்குப் பின்னர் ஒளிந்திருக்கும் புகழ்வெறிகூட மக்களிடத்தில் ஒரு வகையான வெறுப்புணர்வை ஏற்படுத்தும். அது உதவி பெறுபவர்கள் தன்மானம் உள்ளவர்கள் எனில் அவர்களை வெட்கத்தில், தாழ்வு மனப்பான்மையில் ஆழ்த்தும்.

கதாநாயக பிம்பம் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது. அது விரைவில் சிதைக்கப்பட்டு விடும். ஒரு தரப்பினர் ஒருவரை வரம்புமீறி புகழ்ந்தால் இன்னொரு தரப்பினர் அவரை வரம்புமீறி இகழவும் முற்படுவார்கள். ஒருவர் அனைத்து தரப்பு மனிதர்களையும் திருப்திபடுத்தக்கூடியவராக இருக்க முடியாது. அவர்கள் பல்வேறு இயல்புகளையும் இரசனைகளையும் கொண்டவர்கள்.

இறைதிருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் திருப்தியை பொருட்படுத்துவதில்லை. இறைதிருப்தியை நோக்கமாகக் கொள்ளும்போது அது மனிதர்களின் திருப்தியையும் ஒருசேர கொண்டு வரும்

செல்வத்தைக் கொண்டோ பட்டம், பதவிகளைக் கொண்டோ நாம் உண்மையான கண்ணியத்தை சம்பாதிக்க முடியாது. அவற்றின்மூலம் பெறுவது நயவஞ்சகத்தால் சூழப்பட்ட போலியான கண்ணியத்தை. நம் துதிபாடிகள் ஆபத்தானவர்கள். உண்மையில் அவர்கள் நமக்கான குழியை மறைமுகமாகத் தோண்டிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் புகழ்ச்சிமொழிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன, நம்மை அறுப்பதற்காக காத்திருக்கும் கூரான கத்திகள்.

நாம் செய்யக்கூடிய செயல்களுக்கும் கண்ணியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. நற்செயல்கள் கண்ணியத்தைப் பெற்றுத் தருகின்றன. தீய செயல்கள் இழிவைப் பெற்றுத் தருகின்றன. கர்வம் ஒருபோதும் கண்ணியத்தைப் பெற்றுத்தராது. அது நம்மை இழிவுபடுத்தாமல் ஓயாது. பணிவை இழிவெனவும் கர்வத்தை கண்ணியமெனவும் கருதுவோர் வடிகட்டிய மூடர்களே. எவ்வித அழுத்தமும் அதிகார நிர்பந்தமும் இன்றி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அளிக்கும் கண்ணியமே உண்மையான கண்ணியம் ஆகும்.

கண்ணியம் என்பது அல்லாஹ் அளிப்பது. அது நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டு சம்பாதிக்க முடியாதது. தான் விரும்பியவர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். தன் பக்கம் திரும்புவர்களையே அவன் விரும்புகிறான். அவன் யாரை கண்ணியப்படுத்த நாடுகிறானோ அவரை யாராலும் இழிவுபடுத்த முடியாது. அவன் யாரை இழிவுபடுத்த நாடுகிறானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. பாவிகள் உண்மையான கண்ணியத்தை ஒருபோதும் பெற மாட்டார்கள்.

Related posts

Leave a Comment