கட்டுரைகள் 

அறிதல் முறைகள்

Loading

மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் என்ற பத்திரிகைச் செய்தி டால்ஸ்டாயின் மனதை உலுக்கிவிடுகிறது. இந்தச் சம்பவம்தான் அன்னா கரீனினா என்ற உலகப் புகழ்பெற்ற நாவலுக்கான விதையாக அமைந்தது. அன்றாடம் பார்க்கின்ற சாதாரண ஒரு பத்திரிகைச் செய்தி அவரது அகத்தை உலுக்கியதனால் பெரும் நாவலாக உருமாறியது. வட்டிக்கு விடக்கூடிய ஒரு யூதக்கிழவி ஒரு இளைஞனால் படுகொலை செய்யப்பட்டாள் என்ற பத்திரிகைச் செய்திதான் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற பெரு நாவலாக உருவெடுத்தது.

நம் மனதைத் தொடாத எந்தவொன்றும் நமக்குத் தகவல்தான். நம் மனதைத் தொட்டுவிட்டால் அது அறிதலாக உருமாறி விடுகிறது. தகவல்கள் நம்முடைய புற வாழ்வில் நமக்குப் பயனளிக்கலாம் பயனளிக்காமலும் இருக்கலாம். ஆனால் அறிதல்கள் நம் அக வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றைக் கொண்டே நாம் பக்குவமடைகிறோம், வளர்ச்சியடைகிறோம், பரிபூரணமடைகிறோம்.

அறிதல்களைக் கொண்டே மனிதர்கள் வேறுபடுகிறார்கள், தகவல்களைக் கொண்டு அல்ல. ஏராளமான தகவல்களை அறிந்திருக்கின்ற ஒருவன் அடிமுட்டாளாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் தகவல்களால் புற வாழ்க்கையில் பெரும் பயன்கள் மனிதனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் விரல் நுனியில் தகவல்களை அள்ளித் தருகின்ற இணையப் பெருவெளிக்கு முன்னால் அவற்றை நினைவில் வைத்திருப்பது தேவையற்ற சுமையாகவே தோன்றுகிறது.

உண்மையான ஆன்மீகவாதி தன்னைச் சுற்றிக் காணப்படும் படைப்புகளிலிருந்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலிருந்தும் அறிதல்களைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறான். அவை அவனுடைய அகத்தை பண்படுத்திக்கொண்டே, விசாலமாக்கிக்கொண்டே செல்கின்றன. அவன் சிறு துளியிலிருந்து பெரும் கடலை உருவாக்குகிறான். உலகாயதவாதி இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவன். அவனுக்கு எல்லாம் தகவல்கள்தாம். அவை அவனது அகத்தைத் தொடுவதுமில்லை. அதற்கு அவன் இடமளிப்பதுமில்லை.

அறிதல் முறைகளில் பயணமும் ஒன்றாகும். பயணம் எப்படி அறிதல் முறையாகும்? என்று நீங்கள் கேட்கலாம். பயணத்தில் மனிதனின் அகம் திறந்துகொள்கிறது. குறுகிய எண்ணங்களாலும் கவலைகளாலும் சிறைப்பட்டு கிடக்கும் அவனது அகம் பயணத்தில் பூரண விடுதலையை உணர்கிறது, கூர்மையடைகிறது. அது காணும் காட்சிகள் அதற்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தை அவன் தன் அகக்கண் கொண்டு வாசிக்கத் தொடங்குகிறான்.

இங்கு பயணம் என்று நான் குறிப்பிடுவது கேளிக்கைக்காக செய்யப்படும் பயணம் அல்ல. அப்படிப்பட்ட பயணத்தில் அவன் எதையும் பார்ப்பதோ கேட்பதோ அறிவதோ இல்லை. கேளிக்கைகளால் நேரக்கொல்லிகளால் அவன் தன்னை நிரப்பிக் கொள்கிறான். திறந்துவிட முனையும் அகத்தின் வாசலை அடைத்து விடுகிறான். இங்கு பயணம் என்று நான் குறிப்பிடுவது அகத்திறப்பிற்காக, அறிதலுக்காக செய்யப்படும் பயணத்தை.

இந்தப் பிரபஞ்சம் வாசிக்கப்பட வேண்டிய மாபெரும் புத்தகம் என்கிறார் செய்யித் குதுப். திருக்குர்ஆனை ‘படிக்கப்பட வேண்டிய புத்தகம்’ என்றும் பிரபஞ்சத்தை ‘பார்க்கப்பட வேண்டிய புத்தகம்’ என்றும் அவர் வர்ணிக்கிறார். மனிதன் இரண்டையும் ஒருசேர வாசிப்பதன்மூலம் மனிதன் சத்தியத்தை கண்டுகொள்ளலாம். ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தும். இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வெளிப்பட்டவை.

இமாம் ஷாஃபியின் ஒரு கவிதை வரியை அடிக்கடி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. “பயணம் செய். தேங்கிக் கிடக்கும் நீர் அழுக்கடைந்துவிடும்” என்பதுதான் அது. சலிப்பிலிருந்து விடுபடவும் மனிதன் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளவும் குறுகிய சிந்தனைகளிலிருந்து அவன் விடுபடவும் பயணம் பெரிதும் துணைபுரிகிறது.

அறிதல் முறைகளில் புத்தக வாசிப்பும் ஒன்றாகும். பயணத்தில் மனிதனின் அகம் திறந்துகொள்வதுபோல வாசிப்பிலும் அது திறந்துகொள்கிறது. நல்ல சிந்தனையாளர்கள் புத்தக வாசிப்பையும் பிரபஞ்ச வாசிப்பையும் ஒருசேரக் கடைப்பிடிப்பார்கள்.
வாசிப்பு ஒருவித அகங்காரத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ஆழம் செல்லச் செல்ல அந்த அகங்காரம் அடிபட்டுப் போகும். நாம் அறிந்தது மிக மிகக் குறைவு என்ற உணர்வால் பீடிக்கப்படுபவர்கள் ஏராளமாக வாசிக்கிறார்கள். உண்மையில் இந்த உணர்வு வாசிப்பை நோக்கி உந்தித் தள்ளும் மாபெரும் உந்து சக்தி. இந்த உணர்வுதான் அறிஞர்களையும் தங்களை அறிஞர்கள்போன்று காட்டிக்கொள்வோரையும் வேறுபடுத்துகிறது. அறிஞர்கள்போன்று காட்டிக்கொள்பவர்களிடம் இதற்கு மாறான உணர்வே நிலைத்திருக்கும்.

தேடல் கொண்டவர்களின் வாசிப்பு வேறு. பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்கள் வேறு. இரண்டாவமர்களை சுவராசியம் மட்டுமே வழிநடத்தும். அவர்கள் சுவராசியமானவற்றைத் தவிர வேறு எதையும் வாசிக்க மாட்டார்கள். முதலாவது வகையினர் வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளால் அலைக்கழிக்கப்படுபவர்கள். அவற்றுக்கான விடைகளைத் தேடி அலைபவர்கள்.

வாசிப்பு உங்களுக்கு எதைக் கொடுக்கும்? குறைந்தபட்சம் உங்களை அடிமைத்தனத்திலிருந்து, பயத்திலிருந்து, தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும். அறியாமை உங்களை அடிமைப்படுத்திவிடும். பயத்திற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் உட்படுத்திவிடும். வாசிப்பின்மூலம் பரந்து விரிந்து கிடக்கும் மனித வாழ்வின் அனுபவங்களை உங்களால் முடிந்த அளவு அள்ளிப் பருக முடியும்.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அத்தனை விஷயங்களும் நம்முள் எங்கோ சென்று சேகரமாகின்றன. அவை நம்முள் ஏதோ ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. ஒரு சமயத்தில் நமக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் புதிய ஒன்றாக அவை நம்மிடமிருந்து வெளிப்படுகின்றன.

ஒரு விஷயத்தைக் குறித்த அறியாமை அதுகுறித்த பயத்தையோ வெறுப்பையோ ஏற்படுத்திவிடுகிறது. விளைவாக, மனிதர்கள் அதுகுறித்து நன்கறிந்தவர்களை, அந்தத் துறையின் வல்லுனர்களை கண்ணியப்படுத்துகிறார்கள், வழிபடுகிறார்கள். சிலர் அவர்களை வெறுக்கவும் செய்கிறார்கள். அறியாமையோடு கர்வத்தையும் கொண்டிருப்பவர்கள் அவர்களை வெறுக்கிறார்கள்.
அறியாமை மனிதர்களை அடிமைப்படுத்திவிடுகிறது. மதகுருக்கள், அறிவியலாளர்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள் ஆகியோருக்கு மனிதர்கள் அடிபணிவது இந்த அறியாமையின் விளைவேயாகும்.

நாம் அனைவரும் ஒவ்வொன்றையும் குறித்து அக்குவேறு ஆணிவேராக அறிந்திருக்க வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அப்படியிருப்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றும் அல்ல. இங்கு நான் அவசியமெனக் குறிப்பிடுவது நம்மைச் சுற்றியிருக்கும் விஷயங்கள் குறித்து குறைந்தபட்ச அடிப்படையான வாசிப்பை. அது பிற மனிதர்கள் நம்மை அடிமைப்படுத்திவிடாமல், ஏமாற்றிவிடாமல் பாதுகாக்கும் பெரும் கேடயம்.

வாசிப்பு மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. விவகாரங்களைச் சரியான முறையில் அணுக அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. வாசிப்பற்ற மனிதன் ஓட்டிச் செல்லப்படும் மந்தையாகிவிடுகிறான். அது அவனுக்குள் பயத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிவிடுகிறது. அறிந்தவர்களை, திறமையானவர்களை கண்மூடித்தனமாக வழிபடக்கூடியவனாக அல்லது வெறுக்கக்கூடியவனாக அவனை ஆக்கிவிடுகிறது.

புத்தகங்களில் மற்றவர்களின் ஆய்வுகளை, அனுபவங்களை, அனுமானங்களை வாசிக்கின்றோம். பயணங்களில் பிரபஞ்சத்தை, இயற்கையை வாசிக்கின்றோம். மனிதர்களினுடனான சந்திப்புகளில் மனிதர்களை வாசிக்கின்றோம். ஒரு மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்துவதில் இந்த மூன்றுக்கும் பெரும் பங்கு இருக்கின்றன.

அறிதல் முறைகளில் உள்ளுணர்வுக்கு தவிர்க்க முடியாத முதன்மையான இடம் உண்டு. ஆச்சரியமான முறையில் மனிதனுக்கு திடீரென்று தோன்றக்கூடிய சில உள்ளுணர்வுகள் பல கண்டுபிடிப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. ஒரு மனிதன் எதைத் தேடுகிறானோ அதனைக் கண்டுகொள்கிறான். எதை நோக்கி அவன் பயணிக்கிறானோ அந்த இலக்கை அவன் அடைந்து விடுகிறான்.

‘வஹி’ என்ற வார்த்தை அரபியில் தன் தூதர்களுக்கு இறைவன் அருளக்கூடிய தூதைக் குறிக்கும். ‘வஹி’ இறைவனிடமிருந்து அவனுடைய தூதர்களுக்கு மட்டுமே வரக்கூடியதாகும். வஹியின் மூலமாக இறைவன் தன் தூதர்களுடன் தொடர்புகொள்கிறான். தூதர்களுக்கும் மற்ற மனிதர்களுக்குமான வேறுபாடு இந்த ‘வஹி’தான்.

அரபி மொழியில் பயன்படுத்தப்படும் ‘இல்ஹாம்’ என்ற வார்த்தை இறைவன் மனிதனின் உள்ளத்தில் போடக்கூடிய நல்ல உள்ளுதிப்புகளைக் குறிக்கும். அது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதன்மூலமாக இறைவன் மனிதனுக்கு வழிகாட்டுகிறான். பல சமயங்களில் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் கண்டுபிடிப்பாளர்களும் இந்த உள்ளுதிப்பின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்கள். இந்த இடத்தில் அவர்கள் ஓர் ஊடகமாக மாறிவிடுகிறார்கள். உண்மையில் அவர்களிடமிருந்து வெளிப்படுபவை அவர்களுடையவை அல்ல. அவை வெளிப்படுவதற்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த விசயத்தில் ஓர் அறிவியலாளரின் கருத்தை மிகச் சரியானதாகக் கருதுகிறேன். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர்தான். அவரது பெயர் என் நினைவில் இல்லை. அவர் கூறுகிறார், “திடீரென மனிதனுக்குத் தோன்றக்கூடிய சில உள்ளுதிப்புகள் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. ஆனால் அந்த உள்ளுதிப்புகள் அவை குறித்த தேடல் கொண்டவர்களுக்குத்தான் ஏற்படுகின்றன.”

Related posts

Leave a Comment