கட்டுரைகள் 

தனிமையும் வெறுமையும்

Loading

தனிமை சில சமயங்களில் வரமாக அமைந்தாலும் பல சமயங்களில் சாபமாக அமைந்துவிடுகிறது. தனிமை மனிதனை தவறு செய்ய, பாவங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. மற்றவர்களின் முன் செய்வதற்கு வெட்கப்படும் செயல்களை தனிமையில் மிகச்சாதாரணமாக மனிதன் செய்துவிடுகிறான். இறையச்சம் மனிதனைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த கேடயம். இறைவன் மீதான பயம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு மனிதன் பாவங்களைவிட்டு விலகியிருக்கிறான்.

சுயநலம்மிகுந்த, தம் இச்சைகள் அனைத்தையும் அப்படியே நிறைவேற்றத் துடிக்கின்ற மனிதர்கள் பிற மனிதர்களை எண்ணி வெட்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக அருகில் வாழும் உறவினர்களை, நண்பர்களை எண்ணித்தான் அவர்கள் அதிகம் வெட்கப்படுகிறார்கள். முடிந்த மட்டும் தங்களை மறைத்துக் கொள்கிறார்கள். தனிமையில் அல்லது நெருங்கியவர்கள் காணாத இடங்களில் தங்களின் தவறான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறார்கள். சொந்த ஊரில் ஒழுக்கமாக இருப்பவர்கள் வெளியூர் சென்றவுடன் தறிகெட்டுத் திரிவது இதனால்தான்.

வெட்கமற்ற மனிதர்கள் யாரையும் பொருட்படுத்துவதில்லை. எல்லா இடங்களிலும் தங்களை அவர்கள் அப்படியே வெளிப்படுத்திவிடுகிறார்கள். அவர்கள் எதைச் செய்யவும் தயங்குவதில்லை. வெட்கம் மனிதனின் போற்றத்தக்க ஒரு நற்பண்பு. அது அவனை தீய செயல்களிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகவும் இருக்கின்றது.

இஸ்லாம் வெட்கத்தை ஈமானின் ஒரு பிரிவு என்கிறது. நம்பிக்கைகொண்ட மனிதனிடம் வெட்கம் இயல்பாகவே குடிகொண்டுவிடும். அவன் மனிதர்களைக் கண்டு வெட்கப்படுவதுபோல இறைவனைக் கண்டும் வெட்கப்படுகிறான். மனிதர்களுக்கு முன்னால் பாவமான ஒரு காரியத்தைச் செய்வதற்கு எப்படி அவன் வெட்கப்படுவானோ அதைவிட அதிகமாக அவன் இறைவனுக்கு முன்னால் வெட்கப்படுவான். அவன் சொந்த ஊரில் இருந்தாலும் வெளியூரில் இருந்தாலும் மக்களுடன் இருந்தாலும் தனிமையில் இருந்தாலும் அதுதான் அவனைப் பாவங்களிலிருந்து பாதுகாக்கும் பெரும் கேடயமாக இருக்கும்.

தனிமை எல்லோருக்கும் வரமாக அமைந்து விடுவதில்லை. அரிதிலும் அரிதானவர்களுக்குத்தான் அது வரம். அதுவும் எல்லா சமயங்களிலும் வரமாக இருப்பதில்லை. அத்தகையவர்களை நாம் கணக்கில் கொள்ள முடியாது. பெரும்பாலோருக்கு தனிமை ஒரு சாபம், பெரும் துன்பம். அது அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் விஷம். மனிதனுக்கு சக மனிதனின் தேவை மிகவும் இன்றியமையாதது. அவனிடம் பேசுவதற்கு அவன் பேசுவதை செவிகொடுத்துக் கேட்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்கமளிப்பதற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அவனைத் தேற்றுவதற்கு அவனுக்கு சக மனிதர்கள் மிகவும் அவசியம்.

மனிதனின் இத்தகையை கொடும் தனிமையிலிருந்து தடுக்கும் இஸ்லாமிய போதனைகள் எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கின்றன. அது கடமையாக்கும் கூட்டுத்தொழுகையும் கூட்டு வாழ்க்கை தொடர்பாக அது கூறும் இன்னபிற அறிவுரைகளும் உண்மையில் பேராச்சர்யத்தை தரக்கூடியவைதாம். அவை மனித இயல்புகளோடு முழுவதுமாக பொருந்திப் போகக்கூடியவை.

ஐந்து வேளையும் தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றும் நம்பிக்கையாளர்கள் முதலில் கொடும் தனிமையிலிருந்து விடுதலையடைகிறார்கள். பள்ளிவாசல் அவர்களுக்கு சக மனிதர்களை சந்திப்பதற்கான, அவர்களுடன் உரையாடுவதற்கான நிரந்தரமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே உரியதாக அல்லாமல் எல்லோரையும் ஒன்றிணைக்கும் சமத்துவபுரமாகவும் திகழ்கின்றது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு அது மகத்தான அருட்கொடையும் ஆறுதல் களமும் ஆகும்.

தேவைகள்தாம் ஒரு மனிதன் மற்றவர்களுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. தங்களை தேவையற்றவர்களாகக் கருதும் செல்வந்தர்கள், பிரபல்யங்கள் தனிமையில் வீழ்ந்து விடுகிறார்கள். அவர்களிடம் இருக்கும் செல்வமும் புகழும் மற்றவர்களை சந்திப்பதற்கு பெரும் தடைகளாக வந்து நிற்கின்றன. அந்தத் தடைகளை கடந்து வருபவர்கள், சக மனிதர்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளை சகித்துக் கொள்பவர்கள் கொடும் தனிமையிலிருந்து விடுபட்டு விடுகிறார்கள்.

தனிமையும் ஒரு மனிதனுக்கு குறிப்பிட்ட அளவு அவசியமானது. அவன் தன்னைக் குறித்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் சிந்திப்பதற்கும் தன் இறைவனுடன் உரையாடுவதற்கும் அவனிடம் தன் பிரார்த்தனைகளை முன்வைப்பதற்கும். ஆனால் அது தன் எல்லைகளைக் கடந்துவிடக்கூடாது. எந்தவொன்றும் அவனை மக்களிடமிருந்து தூரமாக்கி விடக்கூடாது. ஒன்று மற்றொன்றை விழுங்காதவாறு தனிமையும் கூட்டு வாழ்க்கையும் அவற்றுக்கேயுரிய சரியான விகிதத்தில் அமைய வேண்டும்.

மனிதன் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்றால் அவன் ஆக்கிரமிக்கப்படுவான். நல்லவற்றைக் கொண்டு ஒருவன் தன்னை நிரப்பிக்கொள்ளவில்லையெனில் அந்த இடத்தில் தீயவை வந்து அமர்ந்துகொள்ளும்.
நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது என ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். உணர்ந்தோ உணராமலோ நாம் அவற்றின் தாக்கங்களை உள்வாங்கவே செய்கிறோம். நம்முடைய ஆளுமை என்பது இயல்பான நம் பண்புகளோடு இவையனைத்தும் கலந்து உருவாவதே.

இறைநினைவு இல்லாத உள்ளங்களில் ஷைத்தானின் ஆதிக்கமே நிலைத்திருக்கும். அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசிகள்போல எந்தவொன்றாலும் மிக எளிதாக இழுத்துச் செல்லப்பட்டுவிடும். அவை சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை இழந்த சூழலின் கைதிகள். சுதந்திரமான மனிதன் என்பவன் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளவன்; இச்சைகளால் வழிநடத்தப்படாதவன்; எந்தவொன்றுக்கும் அடிமையாதவன்.

ஈமான் என்பது உள்ளத்திற்கு அல்லாஹ் வழங்கும் ஒளியாகும். தான் நாடியவர்களுக்கே அந்த ஒளியை அவன் வழங்குகிறான். அந்த ஒளியைக் கொண்டே நாம் விசயங்களின் உண்மைநிலையை, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடியும். அந்த ஒளியைப் பெறாதவர்கள் எந்த அறிதல் முறையைக் கொண்டும் சத்தியத்தை அடைய முடியாது.

வெறுமை ஒரு மனிதனைச் சூழ்ந்துகொள்ளும்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அவன் தடுமாறித் திரிகிறான். வெறுமையை எப்படி எதிர்கொள்வது என்று அறியாதவர்கள் அதிலிருந்து விடுபட அவர்கள் மனம் விரும்பும் ஏதாவது ஒன்றுக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மனம் விரும்பும் ஒன்று அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ நன்மையளிக்கக்கூடியதா? தீங்களிக்கக்கூடியதா? என்பதைப் பொறுத்துதான் சிக்கல் தொடங்குகிறது.

வெறுமைதான் மனிதனை சிற்றின்பங்களில் கேளிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது. அவன் தன்னை மறக்க விரும்புகிறான். தன்னைவிட்டே வெருண்டோட விரும்புகிறான். தனிமையும் வெறுமையும் இணைபிரியாத நண்பர்களைப் போன்றவை. ஒன்று மற்றொன்றைக் கொண்டு வந்துவிடும். தனிமை என்பது நண்பர்கள், உறவினர்கள் இல்லாத சூழல் மட்டுமல்ல. இருந்தும் வெறுமையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலும்தான்.

மனிதன் ஏதாவது ஒன்றால் தன்னை நிரப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அவன் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். களைப்பிற்குப் பிறகு கிடைக்கும் ஓய்வே உண்மையான ஓய்வு. மற்ற ஓய்வுகள் கொடும் தனிமையை அச்சுறுத்தும் வெறுமையைக் கொண்டு வந்துவிடலாம். மனிதன் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் மத்தியில் சுழன்று கொண்டே இருக்கிறான். இரண்டுக்கும் மத்தியிலான நிலை ஆரோக்கியமான நிலையாக இருந்தாலும் அந்த நிலையில் அவனால் தொடர்ந்து நீடிக்க முடியாது. இங்கு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது இரு நிலைகளிலும் சமநிலை இழக்காமல் தன்னை எப்படி காத்துக்கொள்வது என்பதைத்தான்.

வெறுமை தற்காலிகமானதுதான். எவ்வித பாதிப்புமின்றி அதனைக் கடத்தலே போதுமானது. பின்னர் மனம் தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். ஒருவன் ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு அல்லது குறைந்தபட்சம் அவனுக்குத் தீங்கிழைக்காத ஒரு செயலைக் கொண்டு வெறுமையைக் கடந்துவிடுவது அவனுக்குச் சிறந்த ஒன்றாக அமையலாம். தனக்குத் தீங்கிழைக்கும் ஒரு செயலைக் கொண்டு ஒருவன் வெறுமையைக் கடக்க முயன்றால் பின்னாளில் அதுவே அவனுக்குப் பெரும் அழுத்தமாக உருவெடுக்கலாம்.

நம் மனதில் அடுத்து என்ன வகையான எண்ணங்கள் தோன்றும், அவை நம்மை எங்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் அறிய மாட்டோம். உண்மையில் நம் மனம்கூட நமக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் முதலில் சாதாரண எண்ணங்களாகவே தோன்றுகின்றன. பின்னர் அவை தமக்கான நியாய வாதங்களைப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று செயல்களாக வெளிப்படுகின்றன.

மனித மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை. அது பல நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு, பகல் போன்று வெயில், மழை, குளிர் போன்று அதுவும் பல பருவங்களை கடந்து செல்கிறது. திடீரென வீசக்கூடிய புயல்காற்றுபோல, பேய்மழைபோல மனமும் திடீரென இக்கட்டான கட்டங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. மனம்தான் மனிதனுக்கு ஆணிவேர். அதனை ஒருவன் சரியாகப் பேணவில்லையென்றால் தன் இருப்பையே இழந்துவிடுவான்.

Related posts

Leave a Comment