கட்டுரைகள் 

குடும்பம் என்னும் வலுவான உந்து சக்தி

நாம் தொடர்ந்து தொய்வடையாமல் இயங்குவதற்கு நம் மீது சுமத்தப்படும் பொறுப்புகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. பொறுப்புகள் சுமைகள் அல்ல. நாம் முன்னேறிச்செல்வதற்கு பல வகையில் அவை காரணமாகின்றன. அவை இல்லையெனில் நாம் தேக்கமடைந்து விடுவோம். ஒரு வகையில் அவை சுமைகளாக இருந்தாலும் தேவையற்ற சுமைகளைப் போக்கும் பயனுள்ள சுமைகளாக இருக்கின்றன. நாம் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருக்க முடியாது. மனித மனம் பாவத்தின் மீது கொண்டுள்ள மோகம் வலுவானது. பாவங்கள் நம்முள் தேங்கிவிடும். அவை நம்மை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுப்பவை. நம் வாழ்வை தேக்கமடையச் செய்பவை.

திருமணம் என்னும் உறவும் அது ஏற்படுத்தும் பொறுப்புகளும் ஒரு மனிதன் அவசியம் சுமக்க வேண்டிய பயனுள்ள சுமைகள். அது விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் ஒத்துழைப்பாலும் புரிந்துணர்வாலும் வலுவடைகிறது. அது விசுவாசமின்மையினாலும் துரோகத்தாலும் ஒத்துழைப்பின்மையாலும் சிதைகிறது. பொறுப்புகள் சுமத்தப்படும் மனிதன் அவற்றை நிறைவேற்றத் தூண்டும் காரணிகளையும் பெற்றிருக்க வேண்டும். விசுவாசமும் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் அவனைத் தூண்டக்கூடிய காரணிகள். எல்லாவற்றையும்விட அவனை தூண்டக்கூடிய வலுவான ஒரு காரணி அதற்காகவும் அவன் இறைவனால் கூலி வழங்கப்படுவான் என்ற கண்ணோட்டம்தான். ஒருவன் தன் குடும்பத்தாருக்கு செலவு செய்வதைக்கூட இஸ்லாம் தர்மம் என்றே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் செய்யும் தர்மத்திற்கு கூலி வழங்கப்படுவதைப்போன்றே அவன் தன் குடும்பத்தாருக்காக பாடுபடுவதற்கும் செலவு செய்வதற்கும் கூலி வழங்கப்படும். அதுவும் ஒரு வகையான வணக்க வழிபாடுதான்.

குடும்பம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகின்ற ஓர் அமைப்பு. மனிதர்கள் குடும்பம் குடும்பமாகத்தான் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சொற்பமான எண்ணிக்கையினரே இந்த வட்டத்திற்குள் சிக்காமல் அல்லது இதிலிருந்து விலகி தனித்து வாழ்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கானவர்கள். விதிவிலக்குகளை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

குடும்பம் இன்றி வாழக்கூடிய மனிதர்கள் எளிதில் முடங்கி விடுகிறார்கள். அதற்கு மாற்றாக நண்பர்களையோ இன்னபிற அமைப்பையோ பெற்றிராதவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுமையால் பீடிக்கப்படுகிறார்கள். தங்களை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கக்கூடிய தேவை அவர்களுக்கு இல்லாதததால் விரைவிலேயே அவர்களின் ஓட்டம் தடைபட்டும்விடுகிறது. தேவையே மனிதர்களை ஓடச் செய்கிறது. ஓட்டம் வெறுமையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

குடும்ப வாழ்வு பொறுப்புகளும் கடமைகளும் சூழ்ந்தது. நிச்சயமாக அது சிரமம்நிறைந்த வாழ்வும்கூட. ஆனால் குடும்பம் இன்றி வாழ்வதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குடும்ப வாழ்வே மிகச் சிறந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும். மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள். ஒருவரின் தேவை இன்னொருவரின் தேவையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண்ணுக்கு மத்தியில் இயல்பான ஈர்ப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்த ஈர்ப்பே அவர்களை குடும்ப அமைப்பின் பக்கம் இட்டுச் செல்கிறது. அன்பும் இரக்கமும் அந்த அமைப்பை சிதைந்துவிடாமல் பாதுகாக்க உதவுகின்றன.
“அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. உங்களிடையே அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். நிச்சயமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.” (30:21)

ஆன்மாக்களுக்கு மத்தியிலுள்ள ஒத்திசைவு வலுவான குடும்பத்திற்கான அடிப்படை. ஆண், பெண் தொடர்பு ஊடலும் கூடலும் கலந்ததுதான். மணவாழ்வு மேடு, பள்ளங்களைக் கொண்டதுதான். உங்களின் அடிமையைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு முழுமையாக அடிபணிந்து இருக்க முடியாது. எதிர்பார்ப்புக்கும் எதார்த்தத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி மிகப்பெரியது என்பதை மனம் உணர்ந்துகொள்ளும்போது அது சகிப்புடன் வாழ பழகிக்கொள்கிறது. திருக்குர்ஆன் கூறுவதுபோன்று, உங்கள் துணையிடம் ஏதேனும் ஒரு பண்பை நீங்கள் வெறுத்தால் அல்லாஹ் அவர்மூலமாக உங்களுக்கு வேறு பல நன்மைகளையும் தருவான் என்பதையும் நினைவில் வையுங்கள்.

குடும்ப வாழ்வின் மிகப் பெரிய சிக்கலே ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதுதான். அதுவும் இருவரும் கூர்மையான ஈகோவை, தற்சார்பு வாழ்வைப் பெற்றிருந்தால் இல்லற வாழ்வு நாசமாகிவிடுகிறது. ஒருவர் மற்றவரை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகும்போது இணைந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் ஆகிவிடுகிறது.

பல சமயங்களில் தம்பதியினர் இணைந்து இருப்பதிலும் பிரிந்து செல்வதிலும் பெரிய அளவிலான காரணங்கள் எதுவும் இருப்பதில்லை. தினம் தினம் சண்டையிட்டாலும் சேர்ந்து இருக்கக்கூடிய தம்பதியினரும் இருக்கிறார்கள். அத்தனை சண்டைகளுக்கும் மத்தியிலும் அவர்களை இணைத்திருப்பது எது என்று அவர்களுக்கேகூட தெரியாமல் இருக்கலாம். சிறு சண்டைகூட சில தம்பதியினரை ஒரேயடியாகப் பிரித்துவிடவும் செய்கிறது. ஒருவர் மற்றவரோடு சேர்ந்து வாழ முடியாத அளவு மனவிலகலை ஏற்படுத்திவிடுகிறது.

மனஒத்திசைவையும் மனவிலகலையும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மனவிலகல் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறது. மனஒத்திசைவு பெரும் பெரும் காரணங்களைக்கூட சாதாரணமாகக் கடந்து செல்கிறது. இங்கு காரணங்கள் அல்ல செயல்படக்கூடியவை. அவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்று. அதை விதி என்றோ இறைநாட்டம் என்றோ கூறலாம். புரியாத ஒவ்வொன்றையும் விதியின் மீது சாட்டிவிடுவது நம் இயல்புதானே. நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது? உண்மையில் விதியை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதையும் தாண்டி உள்ளே செல்ல முயல்பவர்கள் குழப்பம் என்னும் வழிதெரியா காட்டில் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆண், பெண் இணைவில் உருவாகும் குழந்தைகள் அவர்களை இணைக்கும் பாலங்களாக ஆகிறார்கள். அவர்கள் இணைந்திருப்பதற்கான காரணங்களில் குழந்தைகள் முதன்மையானவர்கள். பிறக்கும் புதுஉறவு பழைய உறவை வலுப்படுத்துகிறது. ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழும் சார்பு வாழ்க்கையும் மணஉறவை நீட்டிக்க உதவுகிறது. சிலர் எல்லாவற்றையும் தாண்டி பிரிந்துவிடவும் செய்கிறார்கள். சில சமயங்களில் இருவரில் ஒருவரின் அத்தனை விட்டுக்கொடுத்தல்களுக்குப் பிறகும் இன்னொருவர் காரணங்களை உருவாக்கி பிரிந்து விடவும் செய்கிறார். இங்கு ஒருவருரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு உரியவர்களிடம் நிலைத்திருப்பார்கள். திருமணம் தக்க சமயத்தில் கூடிவரும் என்பார்கள். இங்கு இன்னொன்றையும் இணைத்துக் கூற வேண்டியிருக்கிறது. சிலருக்கு விவாகரத்தும் அப்படித்தான். அதுவும் தகுந்த காரணங்களைப் பெற்றோ பெறாமலோ தக்க சமயத்தில் நிகழ்ந்துவிடும்.

Related posts

Leave a Comment