குறும்பதிவுகள் 

லௌகீகமும் ஆன்மீகமும்

Loading

லௌகீக வாழ்வில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டால் தன் ஆன்மீக வாழ்வை அவன் இழந்துவிடுவான். ஆன்மீக வாழ்வில் தன்னை தொலைப்பவன் தன் லௌகீகத்தை இழந்துவிடுவான். லௌகீகமும் ஆன்மீகமும் சரிவிகிதத்தில் கலந்த வாழ்வே மனிதனை சரியான நிலையில் நிலைநிறுத்த முடியும். இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே முன்வைக்கிறது. அது எந்தச் சமயத்திலும் லௌகீக வாழ்க்கையை வெறுக்கச் சொல்லவில்லை. ஆனால் ளெலகீகம் உங்களை அடிமைப்படுத்திவிடக்கூடாது என்றுதான் அது எச்சரிக்கிறது.

இஸ்லாம் கூறும் இந்த சமநிலையை அறியாதவர்கள் ஆன்மீகம் என்பது இன்பங்களை முற்றாகத் துறப்பதுதான் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்கள் அவ்வாறு எண்ணுவதற்கு லௌகீகத்தால் அவர்கள் அடைந்த சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எந்த மனிதனாலும் இன்பங்களை முற்றிலுமாகத் துறக்க முடியாது. அப்படிப்பட்ட ஆன்மீகம் மனிதனின் இயல்புக்கே முரணனாது. அப்படிப்பட்ட ஆன்மீகத்தை நம்புபவர்கள் ஒரு கட்டத்தில் அது தங்கள் இயல்புடன் மோதுகிறது என்பதை உணரும்போது உளச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். சிலர் ஆன்மீகத்தை முழுமையாகத் துறக்கிறார்கள். சிலர் தங்களால் முடியாமல் போனாலும் அவ்வாறு துறந்த புனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று எண்ணி புனித பிம்பங்களை கட்டமைத்து வழிபடுகிறார்கள்.

லௌகீக வாழ்வு ஏற்படுத்தும் சலிப்பு மனிதர்களை சமூக சேவையின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம் திருப்புகிறது. சமூக சேவையும் ஒரு வகையான ஆன்மீகம்தான். லௌகீக வாழ்வு ஒரு கட்டத்திற்குமேல் நிச்சயம் சலிப்பை ஏற்படுத்திவிடும். ஒருவன் தன் லௌகீக வாழ்வில் எவ்வளவு வெற்றிகளைக் குவித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றை அனுபவிக்க முடியாத, அவற்றை சுமைகளாகக் கருதக்கூடிய மனநிலையையும் அவன் அடைந்தே தீருவான்.

மனிதனின் இயல்பான உணர்வுகளுக்கு சரியான வடிகால் இருக்க வேண்டும். நிச்சயமாக மனிதர்களால் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது. மிகச் சொற்பமானவர்களே உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கானவர்கள். அவர்களைக் கொண்டு பெரும்பான்மையினரை அளவிட முடியாது. பெரும்பாலோர் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். சரியான வழிகளைப் பெறாதவன் தவறான வழிகளை நாடியே தீருவான். ஏதோ ஒரு வகையில் தன் இச்சைகள் தீர்க்கப்பட்டால் போதும் என்ற நிலைக்கு அவன் வந்து விடுவான். அதனால் தனக்கோ மற்றவர்களுக்கு தீங்கு நேரும் என்பதை அறிந்தாலும் அவன் அதிலிருந்து விலகுவதில்லை. இச்சைகளைத் தீர்ப்பது அவனது பிரதான நோக்கங்களில் ஒன்றாகிவிடும்.

தகுந்த வழிகளை ஏற்படுத்தாமல் சட்டத்தின்மூலம் அரசோ சமூகமோ மனிதர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. தேவையற்ற கட்டுப்பாடுகள் மீறல்களையே ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சமூகத்தில் மீறல்களே வழக்கங்களாகி விடுகின்றன. ஒடுக்குவதை ஒருபோதும் நிரந்தர தீர்வாக முன்வைக்க முடியாது.

இஸ்லாம் மனித உணர்வுகளை அடக்கி ஒடுக்கவில்லை. அவற்றுக்கான சரியான வழிகளை ஏற்படுத்தித் தருகிறது. தவறான வழிகளை மட்டுமே அது தடைசெய்கிறது. அதுவும் அவை மனிதர்களுக்குத் தீங்கிழைக்கின்றன என்பதனால்தான். அது தடைசெய்யப்பட்ட ஒவ்வொன்றுக்கும் சரியான மாற்றுத் தீர்வுகளைவும் முன்வைக்கின்றது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பினால் அனுமதிக்கப்பட்ட முறையின்மூலம் அவர்கள் இணைந்துகொள்ளலாம். அவர்கள் பிரிந்து செல்ல விரும்பினாலும் அனுமதிக்கப்பட்ட வழியின் வழியாக பிரிந்து செல்லலாம். இங்கு யாரும் யாருடனும் இருந்தே தீர வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமுமில்லை. திருமண உறவுகள் பிரிந்து செல்ல முடியாத இரத்த உறவுகளைப் போன்றவை அல்ல. அவை மெல்லிய இணைப்புகளால் இணைக்கப்படுபவை.

எந்தவொன்றும் அளவுக்கு மீறி புனிதப்படுத்தப்படும்போது அது சிக்கல்மிகுந்ததாகி விடுகின்றது. தேவையற்ற புனிதங்கள் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை தனிமனிதனின் மீது சமூகத்தின் மீது பெரும் சுமைகளாக மாறி நிற்கும்.

Related posts

Leave a Comment