கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)

(முந்தைய பகுதியை வாசிக்க)

முற்போக்குவாதத்தின் தன்மை

தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் சமூகம் தொடர்ச்சியாக சிறந்த தெரிவை நோக்கி முன்நகர்வதாய் முற்போக்குவாதம் கருதுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஜான் ஸ்டீவர்ட் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களைப் போல் ஆண்கள் ஆடை அணிவதாகச் சொல்லி திருநங்கைகளை நகைப்புக்குள்ளாக்கினார். அனைவரும் சிரித்தார்கள். ஜான் ஸ்டீவர்ட் நவீனமானவராகவும் தாராளவாதியாகவும் அறியப்படுபவர்தான். இப்போது அவர் அப்படி செய்தால் Transphobic என்று எல்லாரும் அவர் மீது பாய்ந்திருப்பார்கள். ஏனெனில், இன்று சமூகம் முன்நகர்ந்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சரி – தவறு என்ற மதிப்பீடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகக் கருதுவது முற்போக்குவாதத்தின் ஓர் அடிப்படை.

பகுத்தறிவும் (Rationality), அற மதிப்பீடுகளும் (Morality) தொடர்ச்சியாக மாறிக்கொண்டும் முன்னேறிக்கொண்டும் இருப்பதாக முற்போக்குவாதம் வாதிடுகிறது. காலத்தையும் வரலாற்றையும் குறித்த இந்தக் கண்ணோட்டம் நவீன பொதுப்புத்தியில் ஆழமாகக் குடிகொண்டுள்ளது. இது இஸ்லாத்திலிருந்து எவ்விதத்தில் வேறுபடுகிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நபிகளாரை (ஸல்) பகுத்தறிவு, அற மதிப்பீடுகள் என இரு அம்சங்களிலும் சிறந்தவராக, உயர்ந்தவராக நாம் கருதுகிறோம். இஸ்லாமிய வரலாற்றின் முதல் மூன்று தலைமுறையினரான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள் ஆகியோரையும் இந்த அம்சங்களில் நாம் சிறந்து விளங்கியதாகக் கொள்கிறோம். அதிலும், முதல் தலைமுறையுடன் ஒப்பிடுகையில் அடுத்தடுத்த தலைமுறைக்கு சரிவு ஏற்பட்டதாகவே கூறுகிறோம். இது முற்போக்கு கண் கொண்டு பார்த்தால் தவறாகத் தோன்றும்.

வரலாறு குறித்த முற்போக்குக் கருதுகோள்
வரலாறு குறித்த இஸ்லாமியக் கருதுகோள்

உண்மையை சரியாக இனங்காண்பதுதான் பகுத்தறிவு என்றால், ஒருவர் இறைவன் இல்லை என்று சொல்வதுகூட ஒருவகையில் அறிவீனமானது இல்லையா?

முற்போக்குவாதம் தொடர்பாக எழும் அடிப்படையான கேள்வி: நம்முடன் ஒப்பிடும்போது, நமக்கு முன் வாழ்ந்த மனிதத் தலைமுறைகள் அறிவீனர்களாகவும் பண்பாடற்றவர்களாகவும்தான் இருந்தனவா?

தற்காலத்தில் இரு ஆண்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை யாரேனும் கண்டித்தால் அவர் வன்மையான கண்டனங்களுக்கு ஆளாவார். மூடர், பண்பற்றவர் எனத் தூற்றப்படுவார். இந்தக் கோணத்தில் பார்த்தால் நமக்கு முன் வாழ்ந்த மனித சமூகங்கள் அனைத்தும் இவ்விஷயத்தில் படுமோசமானது, மூடத்தனமானது எனக் கொள்ள வேண்டியிருக்கும். ஓர் எடுத்துக்காட்டுக்காக இவ்விவகாரத்தைச் சொல்கிறேன். ஏராளமான விவகாரங்களை இப்படி குறிப்பிடலாம்.

பெருங்கூட்டத்தில் ஒருவராக நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கே இருப்பவர்கள் பற்றியெல்லாம் பெரிதாக எதுவுமே தெரியாமல் உங்களை நீங்களே அங்குள்ள அனைவரையும் விட பகுத்தறிவுமிக்கவர் என்று நினைப்பது எந்த அளவுக்குத் தன்னகங்காரமானது? முற்காலத்தவர்கள் பற்றிய முற்போக்குவாத மதிப்பீடும் அப்படியானதே. ஆனால், இந்த மதிப்பீடு உள்ளுணர்வாக இன்று அனைவரையும் ஆட்கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். மட்டுமின்றி, இது இஸ்லாத்தையும் இஸ்லாமியப் பனுவல்களையும் புரிந்துகொள்வதில் கடுமையாக செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆக, முற்போக்குக் கண்ணோட்டத்துக்கு உரிய விதத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.

முற்போக்குவாதத்தை ஏற்பதா, மறுப்பதா?

முற்போக்குவாதத்தை ஏற்பதா, மறுப்பதா என்பதில் முஸ்லிம்களில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். ஏற்பது என்ற முதல் தெரிவு நிச்சயம் நாசகரமானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இருண்ட காலத்தைச் சார்ந்தது என்று சொல்லி இஸ்லாத்தையே பிற்போக்கானதாகவும், காலத்துக்குப் பொருந்தாததாகவும் நாம் கருத வேண்டிய நிலை உண்டாகும்.

முற்போக்குவாதத்தை நீங்கள் முற்றிலும் மறுத்தால் காட்டுமிராண்டியாகப் பார்க்கப்படுவீர்கள். தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் எனத் தூற்றப்படுவீர்கள். பண்பாடற்றவர், மூடர் என அடையாளப்படுத்தப்படுவீர்கள். இந்த இரண்டாவது தெரிவைப் பொறுத்தவரை, மனித நாகரிகம் பகுத்தறிவிலும் அற மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக முன்னேறுவதாக முற்போக்குவாதம் முன்வைக்கும் கருத்தாக்கத்தை நாம் முற்றிலும் மறுக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் அற விழுமியங்கள் நிலையானவை. அது காலத்துக்குக் காலம் மாறாது. மேலும், மாற்றம் என்பதே அதனளவில் சிறந்தது என்று கருதக் கூடாது. என்ன விதமான மாற்றம் என்பதைப் பொருத்தே அது நல்லதா, தீயதா என்று முடிவு செய்ய முடியும். முன்னேற்றம், மாற்றம் என முற்போக்குவாதிகள் குறிப்பிடும் அம்சங்கள் சிக்கலானவையாக உள்ளன.

முற்போக்குச் சிந்தனை, நவீனம் போன்ற வார்த்தைகளை சாதாரணமாக இன்றைக்குப் பலரும் நேர்மறையான அர்த்தத்தில் கையாண்டு வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சொற்களின் உள்ளடக்கமும் வரலாற்றுப் பின்புலமும் பலருக்கு விளங்குவதில்லை. இது ஒருவகையில் பிரச்னைக்குரியது.

வெகுசில முஸ்லிம்கள் முற்போக்குவாதத்தை முழுமையாகத் தழுவி அதற்காக அமைப்பு நிறுவும் வரை செல்கின்றனர். முஸ்லிம் சமூகம் காலத்துக்குத் தகுந்தார்போல் மாற வேண்டும் என்றும், இஸ்லாத்தை சீர்திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். இவர்களை முற்போக்கு முஸ்லிம்கள் எனலாம்.

முற்போக்குவாதத்தை மறுக்கும் மற்றொரு தரப்பினர் குருட்டு நம்பிக்கையை வலியுறுத்துபவர்கள். அவர்களை Fideist முஸ்லிம்கள் எனலாம். Fideism என்றால் அறிவுசார் அடிப்படையில்லாமல் ஒரு நம்பிக்கையைக் கண்மூடித்தனமாக ஏற்பதைக் குறிக்கும். அப்படியான தரப்பினர், இஸ்லாம் என்ன சொல்கிறதோ அதைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் என்றும், நவீன உலகை தாங்கள் மறுப்பதாகவும் கூறுவார்கள். ஆனால், அதற்கு எந்த விளக்கமும் தர மாட்டார்கள். இது சரியான நிலைப்பாடு அல்ல. ஏனெனில் இது வெகுகாலம் தாக்குப்பிடிக்காது. இஸ்லாமிய வழிகாட்டல்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டால் குருட்டு நம்பிக்கையை வைத்துக்கொண்டு பதிலளிக்க இயலாது அல்லவா?

செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பது நம்பிக்கையாளர்களின் கூற்று என்கிறது திருமறை. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதை இது குறிக்குமே அன்றி, குருட்டு நம்பிக்கையைக் குறிக்காது. இஸ்லாமிய வழிகாட்டலுக்கான தர்க்க நியாயங்களை நாம் கொடுக்கத் தவறினால் பலருக்கும் இஸ்லாத்தின் மீதான பிடிப்பு தளரலாம். தனியொருவர் Fideist முஸ்லிமாக இருப்பதைத்தாண்டி ஒரு சமூகத்துக்கு அதைப் பரிந்துரைத்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சில இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு தர்க்கப்பூர்வமாக விளக்கமளிக்க முடியாது என்பது உண்மை. மக்ரிப் தொழுகை மூன்று ரக்அத் என்றும், ஃபஜ்ர் இரண்டு ரக்அத் என்றும் இருப்பதற்குக் காரணமென்ன என்று ஒருவர் கேட்கலாம். ஏன் றமளானில் நோன்பு நோற்க வேண்டும் என்று இன்னொருவர் கேட்கலாம். இப்படியான வழிபாடு சம்பந்தப்பட்ட, மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு நாம் காரணம் சொல்ல முடியாது. ஆனால் இஸ்லாத்தின் எல்லா அம்சங்களுக்கும் இந்த வாதம் பொருந்தக்கூடியதல்ல. ஆக, இஸ்லாமிய நம்பிக்கை வலுப்பெற அறிவுசார் பிடிமானம் அவசியம். இஸ்லாத்தின் பக்கம் மற்றவர்களை அழைக்கவும் அது தேவையான ஒன்று.

(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!

(திருக்குர்ஆன் 16:125)

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)”

Leave a Reply to இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4) – மெய்ப்பொருள் காண்பது அறிவு Cancel reply