salai basheer novel kasabathநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி

Loading

கசபத்‘ காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப் படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது. நாவலாசிரியர் சாளை பஷீரின் ஊர் காயல்பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மனத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் தங்கி விடுகிறது. குறிப்பாக, இஸ்மாயில் தேவர், சிறிது நேரமே வந்து செல்லும் ரயில் பெட்டியில் சந்தித்த சொதை மவ்லானா, லிங்கிச் செட்டித் தெரு கடை முதலாளி போன்றோரைச் சொல்லலாம். அவர்களின் எரிச்சலூட்டும் செயல்கள்தாம் அதற்குக் காரணமாகும். அந்த நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கதைப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

வீட்டில் எப்போதும் சோகம் நிறைந்த சூழலும், எப்போதுமே கோபக்காரராகக் காட்சி தருவது தந்தையின் குணமாக கதை முழுக்க காட்சிப்படுத்தப்பட்டாலும், வாப்பாவின் கடைசி நேர நிகழ்வின்போது அத்தனை பிம்பத்தையும் உடைத்து வாப்பா – மகனுக்கு மத்தியிலிருந்த உண்மை உணர்வை வெளிபடுத்த ஆசிரியர் தவறவில்லை. வாப்பா கடைசி நேரம் என்ன சொல்ல வந்தார் என்பதை அறிய முடியாமல் போனதையும், அந்த ஏக்கம் இன்றும் குறையவில்லை என்பதையும் உணர்த்தும் எழுத்து ஆழமான செய்திகளைப் பதிவு செய்கிறது.

கண்டிப்பான வாப்பாவின் வசவுகளைத் தன்னால் முடிந்த மட்டும் திசை திருப்பும் உம்மாவின் அணுகுமுறை,
எல்லா உம்மாவிடமும் இருக்கும் குணமாக இருந்தாலும், நாவலில் அதை மிகவும் உணர்வுப்பூர்வமாக நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்துள்ளார். வாசிப்பின் ருசியை அறியாதவர்கள், அதை வீண் பொழுது போக்கு என்று கருதுவது எதார்த்தமான உண்மை. அவ்வாறான பலரை வாசிப்பின் மீது காதல் கொண்டுள்ள கதாநாயகன் சந்திக்க நேரிடுகிறது.

அதேபோன்று, அந்த வயசுக்கே உரித்தான, பிறரின் அறிவுரைகள் மீதான கடும் சினம் அபுவுக்கும் ஏற்படுவதைப் பதிவு செய்கிறார். அறிவுரைகள் மீதும், அறிவுரை வழங்குபவர்களின் மீதும் ஏற்படும் எரிச்சலையும் சூழலோடு சுவை குன்றாமல், அதேசமயம் அவருக்கே இருக்கும் குசும்போடும் சொல்லியுள்ளார். ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன்’ என்பதில் உறுதியுடன் இருந்த இளைஞனை வேலைக்குப் போகச் சொல்வதும், அறிவுரை வழங்குவதும் எவ்வளவு கடினம்?

நாவல் முழுக்க இரவும் இருட்டும் குளிரும் குளிர்ச்சியும் சோகமும் நிரம்பியுள்ளதாக உணர்கிறேன். அதை சமன்படுத்த முயற்சித்திருக்கலாம். வானை அதிகம் விவரிப்பதை வைத்துப் பார்த்தால், வானை அதிகம் நோக்கும் கதாநாயகனாக அபு திகழ்கிறார் போலும். ஒவ்வொரு சூழலையும் மிகச் சிறப்பாக உவமானங்களோடு காட்சிபடுத்தியுள்ளார். காயல்பட்டினத் தமிழில் அத்தனை அறபி வார்த்தைகள் இருக்கின்றன என்பது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

“ஏழை உழைப்பாளியின் வியர்வை நாற்றத்தை எந்த எழுத்திலும் உணரவைக்க முடியாது” என்று அருந்ததி ராய் எழுதியதை ஏதோ கட்டுரையில் படித்த ஞாபகம். அந்தக் கருத்தை உடைத்து, நூலகத்திலுள்ள புத்தக மணங்களையும், காப்பியின் மணத்தையும், ரயில் பிரயாணம் என அனைத்திலும் இருக்கும் மணங்களை தத்ரூபமாக உணர வைத்துள்ளார்.

சம்பாதிக்க வேண்டும் என்ற வாப்பாவின் எரிச்சலூட்டும் அழுத்தம், வாசிப்பின் மீது இருக்கும் அபரிமிதமான ஆர்வம், பொருளாதாரத்தை எதிர்நோக்கும் குடும்பச் சூழல், ஊரைவிட்டுச் செல்ல மனம் ஏற்றுக்கொள்ளாத கதை நாயகனான அபுவின் வாழ்வில் பொது வாழ்விற்கான வாசல் திறக்கப்படுவது ஒரு திருப்புமுனை, அதற்காகப் பிரயாணம் என்பன வரையிலான நான்கு வருடங்களை தத்ரூபமாகவும், சுவை குன்றாமலும் சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர்.

கடைசி இரண்டு பக்கங்களில் மிக முக்கியச் செய்திகளைத் தன் நண்பர்களிடம் பதிய வைக்க முயல்கிறார். அதுதான் இந்நாவலின் நோக்கமாக முக்கியத்துவம் பெறுகிறது. நாவலின் ஊடாக ஆழ்மனத்தின் ஆறாத காயத்தைத் துடைக்க முயற்சித்துள்ளார். அது அபுவின் நீண்டகால கோபத்தின் வெளிப்பாடு. அது அவரிடம், “ஏன் புத்தகம், புத்தகம் என வீணாக காலத்தை வீணடிக்கிறாய்? சம்பாதி! வீணாகச் சுற்றாதே” என்று இருபது வயதில் துவங்கி இன்றுவரை சொல்பவர்களுக்குமான வார்த்தையாக உணர்கிறேன். அந்த வார்த்தைகளில் வேதனைகளும் வலிகளும் கோபங்களும் மிகைத்திருப்பதை உணர முடிகின்றது.

இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் எந்த சமூகச் செயற்பாட்டாளரும் இத்தகைய அறிவுரைகளைப் பெறாமல் கடந்து வந்திருக்க முடியாது. அதையே அபுவும் அனுபவித்திருக்கின்றார். அந்தச் செய்திகளைக் காட்டமாக நண்பர் சுலைமான், காட்டு மம்மது, மம்மதலி மூலம் அனைவருக்கும் கூறியிருக்கிறார் நாவலாசிரியர்.

‘உங்களுக்குப் பணமும் சொத்தும் இலட்சியம் என்றால் எனக்கு மக்களும், அவர்களுக்கான சேவையும் இலட்சியம். நீங்கள் சம்பாதித்தவற்றை நீங்களும் ஒருக்காலும் கொண்டு செல்லப் போவதில்லை. பொருளாதாரத்தைக் கொண்டு அனைத்தையும் அளக்க முயலும் உங்களால் என் உள்ளம் நிம்மதியுடன் இருப்பதை ஒருக்காலும் புரிந்துகொள்ள முடியாது’ என்பதை உணர்த்த முயன்றதில் ஆசிரியர் வென்றுள்ளார்.

கசபத் என்ற அறபி வார்த்தைக்கு சம்பாத்தியம் எனப் பொருள். நாவலில் வரும் அபு சம்பாத்தியமாக உணர்வது உள்ளங்கையளவு நீரிலிருந்து, தான் அடைய விரும்பும் விடுதலையைத்தான்!

– M. முஹம்மது சேக் அன்சாரி
மாநிலத் தலைவர்
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு

Related posts

One Thought to “கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி”

Leave a Comment