கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)

Loading

(முந்தைய பகுதியை வாசிக்க)

பகுத்தறிவும் இறை வெளிப்பாடும்

கடந்த காலத்திலும் தற்காலத்தைப் போன்று முஸ்லிம்களிடையே பல குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இன்று நவீனத்துவம் வகிக்கும் இடத்தை முற்காலத்தில் கிரேக்கத் தத்துவம் வகித்தது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கிரேக்கத் தத்துவவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சம் நிலையானது, தொடக்கமும் முடிவுமற்றது என்றனர். அதற்கு சில அடிப்படைகளையும் முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வானியலாளர் எட்வின் ஹபிள் போன்றோரின் தலையீட்டுக்கு முன்புவரை இந்தக் கருத்தமைவுதான் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தது. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நான்கு தலைமுறைகளுக்குள்ளாகவே முஸ்லிம் உலகில் இது அறிமுகமாகிவிட்டது. தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலானோரை அநேகர் கற்க முற்பட்டார்கள். சிலர் அதை இஸ்லாத்துடன் குழப்பிக்கொள்ளும்போது வழிகேட்டுக்கு அது காரணமாக அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் சூழலும் உருவானது.

உலகம் நிலையானது என்ற கருத்துக்கு முரணாய், இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததாக திருமறை கூறுகிறது: “வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்” (திருக்குர்ஆன் 2:117). இப்படி உலகத்துக்கு தொடக்கம் இருப்பதுபோல் அழிவும் முடிவும் இருப்பதாக இறைவன் தெளிவுப்படுத்தியிருக்கிறான். ஆனால் அன்றைக்கு இது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப்பட்டது. கிரேக்கத் தத்துவவியலாளர்களின் கருத்து உண்மை என்று கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில், முஸ்லிம்களுள் ஒரு சாரார் இறை வசனங்களையே நிராகரித்தார்கள். மற்றொரு சாரார், ‘குர்ஆன் மனிதகுலம் அழியும் என்று சொல்கிறதே தவிர உலகம் அழியும் என்று சொல்லவில்லை’, ‘மறுமைநாள் குறித்த வசனங்களெல்லாம் வெறும் உருவகங்கள் (Metaphors) மட்டுமே’ என்பன போன்ற மாற்று விளக்கங்களை அந்த வசனங்களுக்குக் கொடுக்க முற்பட்டார்கள்.

இன்றும் இதுபோல்தான் நடக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலுக்குத் தக்க இஸ்லாத்தை உருமாற்ற சிலர் எத்தனிக்கிறார்கள். உதாரணத்துக்கு, பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், மதவாதிகள் அதில் கருத்துரைக்க உரிமையில்லை என்றெல்லாம் நவீனச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டோர் கூக்குரலெழுப்புவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தக் கருத்துதான் இன்றைக்கு அறிவுக்குப் பொருத்தமானதாகவும், பண்பாடானதாகவும் கொள்ளப்படுகிறது. பெண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று குர்ஆன் கூறுவதை பெண்களின் தேர்வுச் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் எதிரானதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே, குர்ஆன் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கானது என்றும், மற்ற பெண்களுக்கு அது பொருந்தாது என்றும் நவீனத்துவர்கள் கோருவதுண்டு.

பகுத்தறிவு, பொது ஏற்பு பெற்றுள்ள பண்பாடு ஆகியவற்றுக்கு இறை வெளிப்பாடு (Revelation) பொருத்தமற்றதாகத் தோன்றினால் என்ன செய்யலாம்? உண்மையிலேயே இதுவொரு பெரிய கேள்வி. இது தொடர்பாக பன்னெடுங்காலமாய் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.

இவ்விஷயத்தில் நமக்கு முன் உள்ள பிரதான தெரிவுகள்:

  1. பகுத்தறிவு, இறை வெளிப்பாடு ஆகிய இரண்டையுமே ஏற்றுக்கொள்வது
  2. இரண்டையுமே நிராகரிப்பது
  3. அறிவுக்கு முக்கியத்துவம் தந்து இறை வெளிப்பாட்டை அர்த்தப்படுத்துவது/ நிராகரிப்பது
  4. இறை வெளிப்பாட்டை ஏற்று, அறிவு சொல்வதை நிராகரிப்பது

முதல் நிலைப்பாடு தர்க்க ரீதியாகவே சாத்தியமற்றது. என் கையிலுள்ள பேனா என்ன நிறம் என்ற கேள்விக்கு ஒருவர் நீல நிறம் என்றும், மற்றொருவர் நீல நிறம் இல்லை என்றும் சொன்னால், இவ்விரண்டையுமே நாம் சரி என ஏற்க முடியாது. அதுபோல, பிரபஞ்சத்துக்குத் தொடக்கம் உண்டா அல்லது அது நிலையானதா எனக் கேட்டால் ஏதேனும் ஒன்றையே நாம் பதிலாகச் சொல்ல முடியும். இரண்டையுமே சரிகாண முடியாது. மேற்குறிப்பிட்டுள்ள இரண்டாவது நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதே ரகம்தான். இரு கருத்துகளையும் நிராகரிப்பதும் தர்க்க ரீதியாக சாத்தியமற்றதே.

மூன்றாவது நிலைப்பாடு, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் தந்து இறை வெளிப்பாட்டை அதனடிப்படையில் அர்த்தப்படுத்துவது. இந்நிலைப்பாடு இறை வாக்குகளை மறுப்பதற்கும் திரிப்பதற்கும்கூட வழிவகுத்திருக்கிறது என்பது உண்மைதான். எனினும், அநேக இஸ்லாமிய அறிஞர்கள் இந்நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். இறை வெளிப்பாட்டை ஏற்று பகுத்தறிவுக் கருத்தை நிராகரிக்கும் நான்காவது நிலைப்பாட்டுக்கும் சில முஸ்லிம் இறையியலாளர்கள் வந்துள்ளார்கள். ஆனால், இதுவொரு பிரச்னைக்குரிய நிலைப்பாடு என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஜி போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். இறை வெளிப்பாடு உண்மை என்பதை அறிவின் மூலமே இனங்காண முடிகிறது என்றும், அது அறிவுக்கு முரணாகாது என்றும் அவர்கள் வாதிட்டனர். மேலும், முன்னதை விட பின்னதற்கு அழுத்தம் தந்தால் அறிவு, இறை வெளிப்பாடு என இரண்டையுமே நழுவ விட வேண்டியிருக்கும் என்றனர்.

மற்றொரு தரப்பு அறிஞர்கள், மேற்கூறிய நான்கு நிலைப்பாடுகளையும் ஏற்காமல் வேறு விதமான நிலைப்பாடு தேவைப்படுவதாக வாதிடுகிறார்கள். இந்தப் பின்னணியில், அறிவும் இறை வெளிப்பாடும் ஒரே மூலத்திலிருந்து வருவதால் “உண்மையான” அறிவுசார் கருத்துகளும், “உண்மையான” இறை வெளிப்பாடும் ஒருபோதும் முரண்படாது என்ற நிலைப்பாடு கண்டடையப்படுகிறது.

இறைவன் மனிதனுக்கு அறிவை வழங்கியது மட்டுமின்றி, அதைப் பயன்படுத்தும்படியும் வலியுறுத்துகிறான். இறைவனை நிராகரிப்போர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அறிவை (அஃக்ல்) பயன்படுத்தி சிந்திக்கவில்லை என்பதை அவன் திருமறையில் தெளிவுப்படுத்துகிறான்.

முஸ்லிம் ஐயவாதம்

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மனித அறிவைக் கொண்டு அறியப்படும் கருத்துகளை முற்றுண்மையாகக் கொள்ள வேண்டியதில்லை என்பதே. அவற்றைக் கேள்விக்குள்ளாக்கவும், மறுவிசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். அதேசமயம், மிக வலுவாக நிலைப்பெற்றுள்ள கருத்துகளை மறுப்பதோ, அவற்றுக்கு சவால் விடுப்பதோ அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிரத்தையுடன்கூடிய உழைப்பு அவசியம். முற்காலத்தில் கிரேக்கத் தத்துவவியலாளர்கள் நிறுவிய கருத்தமைவுகளை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் காத்திரமாக எதிர்கொண்டார்கள்.

இன்றும் அதுபோன்ற செயல்முறைதான் தேவை. தற்காலத்தில் அறிவுக்குப் பொருந்தும் கருத்தாக்கமாக பிரபஞ்சம் பற்றிய அறிவியல் முடிவுகள், பெண்ணியக் கருத்துகள், நவீனத்துவ மதிப்பீடுகள் முதலானவை இருக்கின்றன. இவை இறை வெளிப்பாட்டுடன் முரண்படுவதாக வாதிடப்படுகிறது. ஆகவே, இச்சூழலில் நாம் ஒரு முஸ்லிம் ஐயவாதியாக இருக்க வேண்டியுள்ளது. அதாவது, நாம் உண்மையான இறை வெளிப்பாட்டை நமது அடிப்படையாக்கிக் கொண்டு, அறிவுசார் கருத்துகள் என கோரப்படுவனவற்றைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, இத்தனை ஆண்டுகால இஸ்லாமிய மரபில் எந்தவொரு சிந்தனைப் பள்ளியும், எந்தவோர் அறிஞரும் இரு ஆண்கள் பாலியல் உறவுகொள்வதை சரி என்றதில்லை. ஆனால் இன்றைக்கு ஒருசிலர் இதைத் தவறென்று சொல்வது பண்பாடற்றது என்றும், இதுவெல்லாம் அவரவர் விருப்பம் சம்பந்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். இவ்விஷயத்தில் பொதுக் கருத்தை முஸ்லிம்கள் விசாரணைக்குள்ளாக்க வேண்டும். இதேபோல், ஆதம் (அலை) படைக்கப்பட்டதாகச் சொல்வது அறிவியலுக்கு முரண் என்று வாதிடப்படுகிறது. மனிதகுலத் தோற்றம் பற்றியெல்லாம் இறைவனைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

இறை வெளிப்பாட்டை முறையாகக் கற்பதற்கு நம்மிடம் வலுவான அறிவுப் பாரம்பரியம் இருக்கிறது. ஏராளமான பேரறிஞர்களின் பங்களிப்புகள் இருக்கின்றன. நபிகளாரின் காலம் தொட்டு இன்றுவரை ஒரு பொதுவான அடிப்படைகளை நாம் கொண்டிருக்கிறோம். பன்னெடுங்காலமாக பல்வேறு அடிப்படையான விஷயங்களில் முஸ்லிம்களிடையே ஒருமித்த கருத்து இருந்து வருகிறது. எனவே, நாம் இஸ்லாமிய மரபில் உறுதியாக நிலைகொண்டு, அந்த மரபிலிருந்து சமகால விஷயங்கள் முரண்படுவதாகத் தோன்றினால் அவற்றில் நாம் ஓர் ஐயவாதியாகவே இருக்க வேண்டும். இந்தப் பின்னணியில்தான் “முஸ்லிம் ஐயவாதம்” (Muslim Skepticism) என்ற சொல்லாடலை நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)”

Leave a Comment