நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திருமுகம்: ஈரானிய நாவல் அறிமுகம்

Loading

“ஒவ்வொருவருக்கும் இறைவனை நோக்கிய சாளாரமொன்று உள்ளது. அவர் கவலையடையும் போது அது திறக்கிறது; கவலை கடுமையாகும்போது அது இன்னும் அகலத் திறக்கிறது.”

– முஸ்தஃபா மஸ்தூர் (’திருமுகம்’ நாவலின் ஆசிரியர்)

The Frozen Rose எனும் ஈரானியக் குறும்படத்தை சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் பார்க்க நேர்ந்தது. எட்டு வயதான ஈரானிய கிராமத்துச் சிறுமி ஒருத்தி, எட்டாண்டுகளாய் (1980-88) தொடர்ந்தபடியிருந்த ஈரான்-ஈராக் யுத்தக்களத்தில் தனது தந்தையை இழந்துவிடுகிறாள். ஆனால், அதை ஏற்க மறுதலிக்கும் எண்ண உணர்வோடு, தினம்தினம் இரயில் நிலையத்துக்குப் பூங்கொத்தோடு சென்று தனது தந்தையை வரவேற்கக் காத்திருப்பதாக விரிவடையும் அக்குறும்படம்.

கடைசியில் உறைபனியில் உறைந்து தந்தையோடு கலந்துவிடும் அந்தப் பிஞ்சு ஆன்மா. மனதைப்போட்டு வாட்டி வதைக்கும் எண்ணவோட்டங்களை நம் மனத்துள் விதைத்துவிட்டுத் தன் வழியில் கடந்துசென்றுவிடும் அந்தப் படைப்பு.

இறை மீதான நம்பிக்கையின் தளர்வுகளுக்கான துவக்கப்புள்ளியாய் அது உருப்பெறும் முன்பே, தற்காலிக வாழ்க்கையின் பேறுகளைப் புறந்தள்ளி நிரந்தர வாழ்விற்கான உறுதிப்பாடு வழங்கப்பெற்றுள்ள ஒரு புதிய காலவெளியில் நம்மைப் புகுத்திவிடும் துவக்கமாய் அது அமைந்திருப்பதை எத்தனைப்பேர் அறிந்திருக்கிறோம்.

ஆன்மாவின் இறைத்தேடலும் நேசமும், நேசத்திற்கான நிரந்தர உரையாடலும் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றன எனலாம். பரந்துப்பட்ட இப்பிரபஞ்சவெளியில் ஒரு சிறு துளிதான் இம்மனித வாழ்வு. அவ்வாழ்வில் பேணப்பட வேண்டிய மாந்தநேயத்தையும் பரஸ்பர அன்பு விளம்பல்களையும்தான் மதக்கோட்பாடுகள் விவரித்துரைக்கின்றன. மனித மனங்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கான பதிலாகவும் இவையே அமையகின்றன. ஆன்மத் தேடலுக்கான நீள்பாதையை வகுத்துக்கொடுப்பதும் இக்கோட்பாடுகள்தாம்.

இவ்வாறிருக்க, சமீபத்தில் ஈரானிய நாவலாசிரியர் முஸ்தஃபா மஸ்தூர் ஃபார்சீ மொழியில் எழுதி, தமிழில் முனைவர் பீ.எம்.எம். இர்ஃபானால் மொழிபெயர்க்கப்பட்டு சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள திருமுகம் (Kiss the Lovely Face of the God) எனும் நாவல் வாசிக்கக் கிடைத்தது. இந்நாவல், எட்டு உலக மொழிகளில் சுமார் 2,50,000 வாசகர்களிடம் அச்சுப் பிரதியாகச் சென்றடைந்திருப்பது நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலை புனைவின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து, சந்தேகத்தையும் நம்பிக்கையையும் மையப்படுத்தி, காதலையும் தொலைதலையும் அதனூடகப் பிணைத்து, ஆன்மாவின் தேடல் எதுவென்பதை மனித மனங்களுக்குப் புரியவைக்கும் முயற்சியாகப் பயணப்படுகிறது இந்நாவல். பாரசீகப் பட்டுநூலால் நெய்யப்பட்ட திடமான படைப்பாய் இப்புனைவு உருவாகியிருப்பதை உணரமுடிகிறது. கடந்த எண்பதாண்டுகால ஈரானிய நாவல் வரலாற்றின் முதல் பத்து நாவலாசிரியர்களுள் ஒருவராக முஸ்தஃபா மஸ்தூரை இந்நாவல் நிறுவியுள்ளது. இறைமையும், இறைநேசமும், இறையுடனான உரையாடல்களும் ஆன்மாவின் இறைஞ்சுதலாய் இதில் பதிவாகியுள்ளன.

“மன உளைச்சலுக்கு ஆளான ஒரு பேராசிரியரின் தற்கொலை” குறித்து முனைவர்பட்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவ ஆய்வாளருக்கும், “நபி மூசாவுடன் இறைவனின் உரையாடல்” குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவிக்கும் இடையேயான காதலையும், அதனூடாக இறைமீது எழும் சந்தேகங்களும், அவற்றைக் களையும் விதமாக நடைபெறும் மனவிவாதங்களும், ஆன்மா குறித்தான புரிதல்களும், இவ்வுலக வாழ்விற்குப் பின்னான நிரந்தர மறுமை வாழ்வு குறித்தும் விரிவாகவும் அருமையாகவும் நாவல் பதிவுசெய்துள்ளது.

“மரணித்தவர்களைக் குளிப்பாட்டுபவர்கள் மரணித்தவர்களைப் பார்த்து பயப்பட மாட்டார்கள், மரணத்தைக் கண்டுதான் பயப்படுவர்கள்.”

“நான் இறந்தவர்களைக் குளிப்பாட்டுபவன் மட்டும்தான். அவர்களது சுவர்க்கத்துடனோ நரகத்துடனோ எனக்குத் தொடர்பில்லை.”

நம் அகவெளியின் ஆன்மக் கதவுகளைத் திறந்து இறைதரிசனத்தின் வெளிச்சக் கீற்றுகளை நம்முள் பரவச்செய்வதில் இப்புனைவு வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தேடல் மட்டுமே ஆன்மாவின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையாய் அமையும். ஆன்மத் தேடலின் இலக்கு எதுவென்பதைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் பாடமாகவே இப்புனைவு அமைந்துள்ளது.

ஈரானியக் கலை-இலக்கிய மரபோடான நமது முதற்பரிச்சயம் அநேகமாக திரைப்படங்களின் வாயிலாகவே தொடங்கியிருக்கும். மஜீத் மஜீதி போன்ற திரைப்பட இயக்குனர்களின் திரைக் காவியங்களான Children of Heaven, The Color of Paradise, The Song of Sparrows, The White Balloon, The Runner ஆகிய ஈரானியத் திரைப்படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்னும் நமது பார்வைக்கு வராத பல புதினங்களை நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.

அந்த வரிசையில், ’திருமுகம்’ எனும் ஈரானிய நாவலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சீர்மை பதிப்பகமும், தமிழாக்கம்செய்த முனைவர் பீ.எம்.எம்.இர்ஃபானும் நம் வாழ்த்துதலுக்குரியோர்.

(நன்றி: மக்கள் உரிமை)

Related posts

Leave a Comment