காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி!

Loading

முன்னாள் டச்சு அரசியல்வாதியான அயான் ஹிர்சி அலி சோமாலியாவைப் பூர்விகமாகக் கொண்டவர். இப்போது அமெரிக்காவில் புகழ்பெற்ற இஸ்லாமிய வெறுப்பாளராக வலம் வருகிறார். கடந்த 2007ல் அவரின் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு, அமெரிக்காவில் மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் ஒடுக்கப்படும் பெண்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொண்டு, கள்ளத்தனமாகவும் விஷமத்தனமாகவும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டுள்ளது.

ஹிர்சி அலி தன் முஸ்லிம் விரோத, அரசியல் சாசன விரோதப் பேச்சுகளுக்காக அவப்புகழ் பெற்றவர்.

“இஸ்லாத்துடன் போர் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம் என்று நினைக்கிறேன்”, “(இஸ்லாம்) முறியடிக்கப்பட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளிய அம்மணி, முஸ்லிம்களை தனியே பாகுபடுத்தி நடத்துவதை சட்டபூர்வமாக்கும் வண்ணம் யு.எஸ். அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று பரிந்துரைத்து இப்படிச் சொன்னார்: “இங்கே அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட சமயத்தில் ஒரு முஸ்லிம் பள்ளிக்கூடமும் இல்லை. அப்போது ஜிஹாதிகளும் இல்லை.”

மேலும் இஸ்லாத்தை “சாவை பூஜிக்கும் சூன்யவாதச் சித்தாந்தம்” என்றும் அது “கொலைகளை சட்டபூர்வமாக்குகின்றது” என்றும் கூறுபவர்.

இப்படியான பேச்சுகளுக்காகவே 2014ல் அமெரிக்காவின் பிராண்டைஸ் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கவிருந்த கௌரவப் பட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஹிர்சி அலியின் கடந்த கால கருத்துகள் சில பல்கலைக்கழகத்தின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு ஒத்துவராததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

அயான் ஹிர்சி அலியுடைய போக்கின் அபாயத்தைச் சுட்டிக்காட்டியும் கண்டித்தும் முஸ்லிம் பெண்கள் சிலர் பேசிய யூடியூப் காணொளியின் தமிழாக்கம் இங்கே:

 

“நீங்கள் எங்களுக்காகப் பேசவில்லை.

ஆம், நீங்கள் எங்களின் குரலும் அல்ல. எங்களின் நேச சக்தியும் அல்ல.

ஏனெனில், எங்கள் உயிர்களின் மீதும் சுதந்திரத்தின் மீதும் உங்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை.

நீங்கள் முஸ்லிம் பெண்களைப் பகுத்தறிவற்றவர்கள், ஆணாதிக்கத்துக்கு அடிபணிபவர்கள், அடிமைகள், மூளை இல்லாதவர்கள் என்றெல்லாம் சாரம்சப்படுத்துவதிலேயே முனைப்பாகச் செயல்படுவர். எங்களை ஒடுக்குபவர்களின் கருத்துகளையே சர்வ சாதாரணமாகத் திரும்பச் சொல்பவர். அப்படியிருக்க, நீங்கள் எப்படி எங்கள் விடுதலைக்கான குரலாய் ஆகமுடியும்?

பரஸ்பர புரிதல், ஆதரவு, சுதந்திரம் முதலானவற்றை வெளிப்படுத்தும் மொழியல்ல உங்களுடையது. மாறாக, ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் பொழியும் மொழி. வெள்ளையின ஆதிக்கத்தின் மொழி. போர்களையும், படையெடுப்புகளையும், இனப்படுகொலைகளையும் நியாயப்படுத்தும் மொழி உங்களுடையது.

நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.

மேடைகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பெரும் செலவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் உங்கள் பேச்சைக் கேட்க மக்கள் பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உங்கள் பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத்தான் நீங்களும் அவர்களுக்குத் தந்து வருகிறீர்கள்.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களெல்லாம் உங்களை “அதிதீவிரவாதி” என்கின்றன; கல்வியாளர்களும் துறைசார் வல்லுநர்களும் உங்களுடைய கூற்றை மீண்டும் மீண்டும் பொய்யென நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்; உங்களுடைய கூட்டாளிகளெல்லாம் வெள்ளையினத் தேசியவாதிகளாகவும் தீவிர வலதுசாரிகளாகவுமே இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் கூட, நீங்கள் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் அதே கூப்பாட்டை பேசச் சொல்லிக் கேட்பது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்துவதே இல்லை போலும். ஏனெனில் ஒரு காலனியாதிக்கவாதிக்கு தன் கருத்தியலை கூவிக்கூவி விற்பனை செய்யும் முகவர்களை விடத் திருப்தியளிக்கக் கூடியவர் யாராக இருக்க முடியும்!

முஸ்லிம்கள் குறைகளேயற்றவர்கள் எனச் சொல்வதற்கில்லை. யாரும் அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் உங்களுடைய கதையாடல்கள் எங்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பவை அல்ல. அவற்றையெல்லாம் அழித்தொழிப்பதில் கவனம் குவிப்பவை.

எல்லாப் பெண்களையும் போலவே நாங்களும் ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் எதிர்த்து வருபவர்கள். எங்கள் அன்னையர்களையும் பாட்டிகளையும் போலவே நாங்களும் காலங்காலமாய் எங்களுடைய கலாச்சாரத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் எங்கள் கண்ணியத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் பாடுபடுபவர்கள்.

ஆனால் அது பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையில்லை. எங்களை வரலாறு இல்லாதவர்களாக, முகமற்றவர்களாக, அறியப்படாத அபலைகளாக, காட்டுமிராண்டித்தனமான மரபுகளில் இருந்து தப்பிக்கத் தெரியாதவர்களாகச் சித்தரிப்பதில்தான் உங்கள் வாழ்வாதாரம் தங்கியிருகிறது.

எங்களிடமுள்ள பன்மைத்தன்மையை உங்களின் வசதிக்குத்தக்க ஒருமுகப்படுத்தி, ஒருபடித்தானவர்களாய் எங்களை ஆக்கிவிடுகிறீர்கள். உண்மையில் இது “அறிவுஜீவித்துவம்” அல்ல. சோம்பேறித்தனம்.

மேலும், நீங்கள் ஊட்டும் வெறுப்பு எங்களைத் தினம் தினம் அபாயத்தில் தள்ளிக் கொண்டுள்ளது. அச்சத்தையும் அடக்குமுறையையும் வன்முறையும் அது ஏவுகிறது.

உங்களுடைய செயல்பாடு துணிச்சலானதோ முற்போக்கானதோ அல்ல. இது ஒரு பொய்ப் பிரச்சாரம். பொய்யை விற்பதெல்லாம் துணிச்சலில் சேராது.

துணிவு என்பது தொடர்ச்சியான எதிர்ப்புகளையும், பாகுபாடுகளையும், அழுத்தங்களையும் கொண்டு எங்களை அச்சமூட்டுகிற ஓர் உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.

உங்களைப் போன்றோர் ஒன்றிணைந்து உருவாக்கிய உலகம்தான் அது.”

மூலம்: Muslim women respond to Ayaan Hirsi Ali, a star of the global Islamophobia industry.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

Related posts

Leave a Comment