தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)

[‘ததப்புருல் குர்ஆன்’ என்ற தனது திருக்குர்ஆன் விரிவுரைக்கு மௌலானா அமீன் அஹ்சன் இஸ்லாஹி எழுதிய விரிவான முன்னுரையின் மொழிபெயர்ப்பை ஏழு பகுதிகளாக இங்கு வெளியிடுகிறோம். அதில் முதற்பகுதி இதோ]

இந்த நூலிற்கு முன்னுரை ஏதும் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. நெடு நாட்களுக்கு முன் ‘ததப்புருல் குர்ஆன்’ என்னும் பெயரில் ஒரு நூலை எழுதியிருந்தேன். மூன்று நான்கு பதிப்புகள் வெளியாகிவிட்டன. என்னுடைய குர்ஆனின் விரிவுரைக்கு முன்னுரையாக அமையும் என்னும் நோக்கத்தில்தான் அந்நூலை நான் எழுதியிருந்தேன். விரிவுரை முற்றுப்பெற்ற பின், அந்நூலை இணைத்துவிடலாம் என்றிருந்தேன் அதற்காக அந்நூலை சரிபார்த்தபோது ஒருசில குறைபாடுகள் அதில் உறுத்திக் கொண்டு தெரிந்தன. சில இடங்களில் தேவையில்லாமல் விளக்கம் நீண்டுவிட்டிருந்தது. ஆகையால், அந்நூலை விரிவுரைக்கான முன்னுரையாக அப்படியே இணைப்பது நியாயமானதாக அமையாது எனத் தோன்றியது. ஆகையால், முக்கியமான பல பணிகள் இருப்பினும் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த முன்னுரையை எழுதுவதற்காக எழுதுகோளை எடுக்க நேர்ந்தது, இறைவனின் கிருபையால்…

(1) இந்த விரிவுரையின் நோக்கமும் குர்ஆனைப் புரிந்துணர்வதற்கான வழிவகைகளும்

எல்லாவகையான விருப்பு வெறுப்புகள், குழுவாதம், கொள்கைச் சார்பு போன்றவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி ஒவ்வொரு இறைவசனத்தையும் உண்மையிலேயே அதில் என்ன பொருள் கூறப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவும் புரிய வைப்பதற்காகவும் அணுக வேண்டும். உளப்பூர்வமான ஈடுபாட்டோடு இதற்காக முழுமையாக முயற்சிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இந்தக் குர்ஆன் விரிவுரையை எழுதுவதற்குத் தூண்டுகோளாக எனக்கு அமைந்தது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் குர்ஆனை புரிந்துணர்வதற்கான வழிவகைகளாக குர்ஆனில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதோ, குர்ஆனில் எது கூறப்பட்டுள்ளதோ அதற்கே நான் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். எடுத்துக்காட்டாக குர்ஆனின் மொழி, குர்ஆனின் கட்டமைப்பு, குர்ஆன் எடுத்தியம்புகின்ற உவமானங்கள் எடுத்துக்காட்டுகள் சான்றுகள் போன்றன. அதனை அடுத்து குர்ஆனுக்கு வெளியில் உள்ளவை. உதாரணமாக நபிமொழிகள், இஸ்லாமிய வரலாறு, குர்ஆனுக்கு முன்பாக இறக்கியருளப்பட்ட இறைவேதங்கள் இன்னபிற விரிவுரை நூற்கள். தேவைப்பட்ட இடங்களில் இவற்றிலிருந்தும் நான் பயன்பெற்றுள்ளேன் என்றாலும் குர்ஆனுக்குள் இருக்கின்ற வழிவகைகளை முதன்மைப்படுத்தி அவற்றைப் பின் தொடர்பவையாகத்தான் இவற்றை நான் ஆக்கியுள்ளேன். குர்ஆனின் சொற்களிலிருந்தும் குர்ஆனின் வார்த்தை வாக்கியக் கட்டமைப்புகளிலிருந்தும் குர்ஆன் கூறுகின்ற உதாரணங்கள், உவமை, உவமானங்கள் போன்றவற்றிலிருந்து தெளிவாகின்ற விஷயத்தையும் நான் எடுத்துக் கொண்டுள்ளேன். இவற்றுக்கு எதிராகவோ நேர்மாற்றமானதாகவோ ஏதேனும் ஒரு விஷயம் தென்பட்டால் அதனுடைய எடை மதிப்பு, முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அதனை எடைபோட்டுள்ளேன். மார்க்க அடிப்படையிலும் அறிவடிப்படையிலும் உண்மையிலேயே முக்கியத்துவம் பெற்ற கருத்தாக அவை அமைந்திருப்பின் சரியான விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தி அதனைப் புரிந்து கொள்ளவும் முறையான ஒழுங்கில் அதனை ஏற்றுக்கொள்ளவும் முயற்சி செய்துள்ளேன். அதற்குப் பதிலாக அந்த அளவுக்கு மதிப்புடையதாக அந்தக் கருத்து இல்லாமல் சாதாரணமாக போகிறபோக்கில் சொல்லப்பட்டிருந்தால் அதனைக் கண்டு கொள்ளாமல் தவிர்த்து விட்டிருக்கிறேன். தேவையில்லாமல் அதற்குப் பின்னால் மனதை ஈடுபடுத்தவில்லை

(2) குர்ஆனைப் புரிந்துணர்வதற்கான அக வழிமுறைகள்

மேலே கூறப்பட்ட இவ்விரு வழிமுறைகளில் என்னுடைய இந்த விரிவுரையில் எந்தளவுக்கு இவை இரண்டையும் பயன்படுத்தியுள்ளேன் என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதலில் அக வழிமுறைகளைப் பற்றி சில விஷயங்களைக் காண்போம்.

குர்ஆனின் மொழி

குர்ஆனின் மொழி அரபியாகும். தூய்மை, புலமை இவ்விரு விதங்களிலும் அற்புதத்தின் உச்சியை அந்த அரபி தொட்டு நிற்கின்றது. அதற்கு நிகரான ஒரு மொழியைச் சொல்லும் தகுதி ஜின்களுக்கோ மனிதர்களுக்கோ இல்லை. அரபுக் கவிஞர்களில் எழுவர் புகழ் பெற்றவர்கள். ‘ஸபஃ முஅல்லக்கா’ என அவர்களது செய்யுள் தொகுப்பு அழைக்கப்படுகின்றது. லபீத் என்பார் அவர்களில் கடையானவர். ஒருமுறை அவருடைய ஒரு கவிதைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் உக்காஸ் சந்தையில் கூடியிருந்த அனைத்துக் கவிஞர்களும் அவருக்கு ஸஜ்தா செய்தார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவருடைய கவிதைகளை கஅபத்துல்லாஹ்வில் தொங்கவிட்டார்கள். பிற்காலத்தில் லபீத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். முஸ்லிமான பிறகு கவிதை யாப்பதை நிறுத்திவிட்டார். ஒட்டுமொத்த அரபுலகக் கவிஞர்களால் ஸஜ்தா செய்யப்பட்டவர், தன்னுடைய காலத்தில் கவிப்பேரரசராகத் திகழ்ந்தவர், அரபு மொழியின் நிகரற்ற புலமையும் இலக்கியச் செறிவும் வாய்க்கப்பெற்றவர் திடுதிப்பென்று கவிதை புனைவதை நிறுத்திவிட்டது அரபுக்களுக்கு வியப்பை அளித்தது.

தாங்கள் ஏன் கவிதையை நிறுத்திவிட்டீர்கள்? என ஒருமுறை அவரிடம் ஒருவர் விசாரித்தார். அதற்குப் பதிலாக -அ பஃதல் குர்ஆன்- குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகும் என்னால் கவிதையை எழுத முடியுமா? என்பதுதான் லபீதுடைய பதிலாக இருந்தது.

தன்னுடைய காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அரபு மொழியின் சிறப்பிற்கும் உயர்விற்கும் சின்னமாகத் திகழ்ந்த ஒரு பெரும் கவிஞரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், குர்ஆனின் இலக்கியச் செறிவுக்கு முன்னால் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு தலைகுனிந்துநின்ற ஒப்புதல் வாக்குமூலம். குர்ஆனுக்கு முன்னால் அவர் தலைகுனிந்து ஸஜ்தா நிலையில் நின்றுவிட்டார் என்றால் என்ன பொருள்? ஒட்டுமொத்த அரபு மொழியின் இலக்கியமும் புலமையும் குர்ஆனின் இலக்கியச் செறிவுக்கும் புலமைக்கும் முன்னால் தலைகுனிந்து மண்டியிட்டு விட்டது. இதற்குப் பிறகும் குர்ஆனுக்கு முன்னே நின்று விழிகளை உயர்த்திப்பார்க்கும் தைரியம் யாருக்கேனும் பிறக்குமோ?

இப்படிப்பட்ட உயர் சிறப்பையும் உயர் இடத்தையும் பெற்றுள்ள ஒரு மொழியை அளவிட்டுப் பார்க்க யாரேனும் விரும்பினால், அதனுடைய சிறப்பையும் புலமையையும் சுவைக்க ஆசைப்பட்டால் மொழிபெயர்ப்புகளையோ குர்ஆனின் விரிவுரையையோ அவர் வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தி அதை அடையமுடியாது. அவர் என்னதான் செய்ய வேண்டும்? எந்த மொழியில் அந்த நூல் இறக்கப்பட்டுள்ளதோ அந்த மொழியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மொழியின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது ஒன்றும் எளிய செயல் அல்ல! இயற்கையிலேயே அந்த மொழியின்மீது ஆர்வம் தோன்றவேண்டும். மொழி ரசனையோடு கடுமையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக் கணக்கில் அயராத முயற்சிகளில் ஈடுபட்டால்தான் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு மொழியின் மீது ஆர்வமும் ரசனையும் பிறக்கின்றன. அந்த மொழி அவருடைய தாய்மொழியாக அமைந்திருக்காவிட்டால் நிலைமை இதை விட கடுமையானதாக ஆகிவிடுகின்றது.

அரபி மொழி -அதிலும் குர்ஆன் இறக்கியருளப்பட்ட அரபி மொழியை- பொறுத்தவரை ஒரு சிக்கல் நிலவுகின்றது. இன்று உலகின் எந்த நிலப்பரப்பிலும் அந்த மொழி பேசப்படுவதில்லை. இன்று அரபுளாகட்டும் அரபுகள் அல்லாத அஜமிகளாட்டும் பேசுகின்ற, எழுதுகின்ற, படிக்கின்ற அரபி மொழி படிமங்கள், உத்திகள், பயன்படுத்துகின்ற முறைகள், தொனிகள், வார்த்தை நயம், உதாரணங்கள், பழமொழிகள், எடுத்துக்காட்டுகள் என எல்லா வகையிலும் குர்ஆன் கையாளுகின்ற மொழியிலிருந்து வெகுதூரம் வேறுபட்டுள்ளது. நம்முடைய அரபி மதரஸாக்களில் கற்பிக்கின்ற அரபி மொழியாவது அதிக பட்சம் கைலூபி, நஃப்கதுல் யமன் அல்லது ஹரீரி, முதனப்பி போன்றோரின் அரபியாக இருக்கின்றது. அரபுலகிலும் சிரியா எகிப்து போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள அரபி மொழியை அந்நாடுகளின் பத்திரிக்கை வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் அறியலாம். அது அரபி மொழிதான் எனினும் குர்ஆனின் அரபி மொழியைவிட வேறுபட்டது. இந்த அரபியைக் கற்பதால் குர்ஆனின் அரபி மீது பெரிதாக ஈடுபாடு ஒன்றும் தோன்றாது. இன்னும் சொல்லப் போனால் குர்ஆனிய அரபி மொழியின் ரசனையை இது குறைத்து விடும்.

ஹரீரி, முத்தனப்பியின் மொழியிலோ எகிப்திலும் சிரியாவிலும் வெளியாகின்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் பயன்படுகின்ற மொழியிலோ குர்ஆன் இறக்கியருளப்பட வில்லை. மாறாக, இம்ரவுல் கைஸ், அம்ர் இப்னு குல்ஸும், ஜுஹைத், லபீத் போன்ற கவிஞர்கள் பயன்படுத்திய பழங்கால அரபியில் குஸ் இப்னு ஸாஇதா போன்ற உயர் தரத்திலான உரையாளர்கள் பயன்படுத்திய மொழியில் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகையால் குர்ஆன் மொழியின் அழகையும் இலக்கியச் செறிவையும் அற்புத நயத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஜாஹிலிய்யா காலத்து கவிஞர்கள், புலவர்கள், இலக்கிய வாதிகளின் மொழியை அவர்களிடம் காணப்பட்ட மொழிச் சிறப்பை மொழிக் குறைகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். மொழிப்புலமையில் குர்ஆனின் அரபி எந்தளவுக்கு சிறந்து விளங்குகின்றது, உயர்த்தரத்தின் சின்னமாகத் திகழுகின்றது போன்றவற்றை இந்த ரசனையை வளர்த்துக் கொள்ளாமல் யாரும் எடை போட இயலாது. அனைத்துப் புலவர்களும் இலக்கியவாதிகளும் நிரந்தரமாக செயலற்றுப்போய் விடச்செய்கின்ற அளவுக்கு எத்தகைய ஈர்ப்பை அது பெற்றிருந்தது என்பதை அவரால் புரிந்துணர முடியாது.

ஜாஹிலிய்யா காலத்து கவிஞர்களின், உரையாளர்களின், இலக்கியவாதிகளின் ஆக்கங்களில் பெரும்பகுதி காலவீழ்ச்சிக்குப் பலியாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. எனினும் நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான அளவு கைவசம் பெரும் களஞ்சியம் ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. முன்பொரு காலத்தில் காணப்படாத பல பெரும் பெரும் தொகுப்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதிப்பாகியிருக்கின்றன. அரபு மொழியை மிகச் சிறப்பாகத் தொகுத்துக் கூறுகின்ற அரபு கவிஞர்களின் பெரும் பெரும் தொகுப்புகள் இன்று காணக்கிடைக்கின்றன. சிதைந்த மொழியும் அதில் இருக்கத்தான் செய்கின்றது என்றாலும், அரபு மொழி ஆர்வத்தைப் பெற்றிருப்பவர்கள் எளிதாக தக்கதையும் தகாததையும் பிரித்து வேறுபடுத்திவிட முடியும். ஜாஹிலிய்யா காலத்தின் உரையாளர்களுடைய உரைவீச்சை வாசிக்க வேண்டுமென்றால் முன்பெல்லாம் ஜாஹிழ், முபர்ரத் மற்றும் இப்னு ஹுதைத் போன்றோரின் தொகுப்புகளைத் தேடிச்செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அவை தனியாகப் பிரித்து தொகுக்கப்பட்டுவிட்டன. ஆக, ஆர்வத்தை வளர்த்து முறைப்படுத்துவதற்குத் தேவையான எல்லா விஷயங்களும் இன்று எளி தாகக் கிடைக்கின்றன. குன்றா ஆர்வமும் அயரா உழைப்பும் மட்டும்தான் நமக்குத் தேவை.

நான் இந்த ஆர்வத்தைப் பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்வதற்காக இதையெல்லாம் உங்களுக்கு முன்னால் விவரிக்கிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். குர்ஆனின் மொழியின் உண்மை நிலை என்ன என்பதையும், அதனுடைய இலக்கியச் சிறப்பை உணரவும் மதிப்பிடவும் உண்மையான உரைகல் எது என்பதை உணர்த்துவதும்தான் உண்மையில் என்னுடைய நோக்கம். நான் என்ன செய்திருக்கிறேன் என்றால், இந்த குர்ஆனின் விரிவுரையை எழுதுவதற்கு முன்பாக என்னால் இயன்றவரைக்கும் எனக்குக் கிடைத்த எல்லா ஜாஹிலிய்யா இலக்கிய நூற்களையும் முழுமையாகப் படித்து வாசித்துவிட்டேன். குர்ஆனில் ஏதேனும் ஒரு இலக்கியச் சிக்கலை இலக்கணப் பிரச்சனையை மொழிப்பொருளைத் தீர்ப்பதற்காக ஏதேனும் ஒரு விதத்தில் உதவியாகத் திகழுகின்ற அனைத்தையும் படித்துவிட்டேன். இங்கே நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். நான் செய்தனவெல்லாம் முழுக்க முழுக்க நானாகச் செய்தது கிடையாது. மாறாக அதில் பெரும்பங்கு எனது ஆசிரியப் பெருந்தகை மௌலானா ஃபராஹி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையே சாரும். மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் வாசித்தார்கள். குர்ஆனின் விரிவுரைக்கு அவற்றில் தோதானது எது எனக் குறிப்பிட்டு அடையாளப்படுத்தினார்கள். அந்த விஷயங்களை முழுமையாக வாசித்துப் புரிந்துணர்ந்து கொண்டது மட்டும்தான் நான் செய்த செயல். குர்ஆனின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் குர்ஆனின் படிமங்களையும் உத்திகளையும் உவமானங்களையும் மதிப்பிடுவதிலும் மொழிச் செறிவையும் நுட்பங்களையும் தெளிந்து அறிவதிலும் அவற்றின் மூலமாக நான் பயனுற்றுள்ளேன்.

மொழிதொடர்பான விஷயங்களை மட்டுமல்ல! மாறாக, அரபுக்களிடம் நல்லவையாகக் கருதப்பட்டது எவை? தீயவை- அல்லவையாகக் கருதப்பட்டவை எவை? அவர்களுடைய சமூக வாழ்வின் சிறப்பம்சங்கள், அவர்களுடைய சமூகத்தில் நிலவிய நன்மை தீமைக்கான அளவுகோள்கள், அவர்களுடைய பண்பாட்டு வாழ்க்கை, அரசியல் கோட்பாடுகள், அன்றாட வாழ்க்கை, அவர்களுடைய விருப்பங்கள் ஈடுபாடுகள் சமயப் பற்று, சமயச் சடங்குகள், இறைமைக் கோட்பாடுகள் என்றிவ்வாறாக அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்வதற்கும் அவர்களுடைய இலக்கியம் பெரும் துணைபுரிகின்றது. அந்தளவுக்கு வேறு எந்த விஷயத்திலும் நமக்குப் பயன்கிட்டுவதில்லை. குர்ஆனுடைய விளக்கங்களையும் செய்கைகளையும் குர்ஆன் எழுப்புகின்ற ஆட்சேபணைகளையும் குறியீடுகளையும் நன்முறையில் புரிந்துகொள்ள விளைபவர் மற்றவர்களுக்குப் புரியவைக்க ஆசைப்படுபவர் இந்த விஷயங்களை எல்லாம் நன்கு கற்றறிந்தாக வேண்டும். அவர்களுடைய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தொட்டுச்சென்றவாறு அவர்களிடம் காணப்படுகின்ற நன்மையான செயல்களை ஆர்வமூட்டி அவர்களிடம் நிலவிய தீயவற்றை அழிப்பதற்கு குர்ஆன் முயலுகின்றது. இப்படிப்பட்ட குறியீடுகள் சுட்டிக்காட்டல்கள் வழியில் ஆங்காங்கு நமக்குத் தென்படுகின்றன. அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் இஸ்லாமிய விளக்கங்களை இஸ்லாமியச் சொல்லாடல்களை மட்டும் தெரிந்து வைத்தால் போதாது. அத்தோடு ஜாஹிலிய்யா காலத்தில் அனாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் முழுமையாக அறிந்திருத்தல் அவசியம். இதை முழுமையாக உணர்வதற்காக ஒருசில உதாரணங்களை நான் இங்கு எடுத்துரைப்பது நலம். ஆனாலும் இந்த விரிவுரையில் இப்படிப்பட்ட உதாரணங்கள் ஆங்காங்கு வரும் என்பதால் இங்கு நான் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு நின்று விடுகிறேன்.

அரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது? அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள்? இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்!

இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளை, வாழ்க்கை ஒழுங்கு அறியாமல் கண்டபடி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தை இஸ்லாம் பாருலகின் பெருமைக்குரிய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது என அவர்கள் எடுத்துக்கூற விரும்பினார்கள். ஒரு விதத்தில் இது சரியான கருத்துதான் என்றாலும் இன்னொரு முக்கியமான கோணத்தை அவர்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள். உண்மையிலேயே அரபுக்கள் இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால் குர்ஆனைப் போன்ற உயர்தரத்திலான ஒரு நூலை எப்படிப் பெற்றிருப்பார்கள்? ஆரம்பத்திலேயே இந்தக் கேள்வி என்னுடைய மனதில் இருந்தது. ஆகையால் வரலாற்று நூற்களை முற்றிலும் தவிர்த்து விட்டு அரபு ஜாஹிலிய்யா காலத்து இலக்கியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய சித்திரத்தின் சிறப்பையும் குறைகளையும் கண்டறிய முயன்றேன். இந்த முயற்சியின் விளைவாக எனக்குக் கிடைத்த தகவல்கள் யாவற்றையும் இந்த விரிவுரையில் முழுமையாகப் பயன் படுத்தியிருக்கிறேன்.

இந்த விளக்கத்தின் மூலம் இன்னொரு விஷயம் தெளிவாகின்றது. மொழியை ஒரு குறுகிய அளவில் குறுகிய பொருளில் கையாளாமல் நான் பரந்து விரிந்த பொருளில் கையாண்டுள்ளேன். குர்ஆன் இறக்கியருளப்பட்ட உயர்தரத்திலான மொழியை முழுமையாகப் புரிந்து கொள்வதுதான் உண்மையிலேயே குர்ஆனை நன்கு உணர்வதற்கான சிறந்த வழி! இந்த ஆர்வத்தைத் பெறாதவர்கள் மொழி நூற்களை வெறுமனே புரட்டிப்பார்ப்பதன் மூலமாக குர்ஆனின் சிறப்புகளை ஒருபோதும் காண முடியாது. குர்ஆனின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எந்த அகராதியைப் பார்க்க வேண்டும் எனப் பெரும்பாலும் மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சிறந்த அகராதி ஒன்று கைவசம் இருந்தால் குர்ஆனின் சிக்கல்களை மிக எளிதில் தீர்த்து விடலாம் என்று அவர்கள் கருதுவதுதான் இந்தக் கேள்வியின் மூலம் நமக்கு விளங்க வருகின்றது. ஆனால், இந்த எண்ணம் முற்றிலும் தவறானதாகும். மொழி ஆர்வம் உடையவர்களுக்கு அகராதிகள் பயன்படுகின்றன என்பதென்னவோ உண்மைதான். ஆனால், மொழி ஆர்வம் அறவே இல்லாதவர்களுக்கு அகராதிகள் பயனில்லாத பொருட்கள் போன்றவை. என்னைப் பொருத்தவரை நான் லிஸானுல் அரப் நூலிலிருந்து பெரும் பயனை அடைந்துள்ளேன். காரணம், லிஸான் நூலின் ஆசிரியர் மொழிப்பயன்பாடுகள், சான்றுகள், எடுத்துக்காட்டுகள் போன்றவற்றின் மூலமாக ஒரு சொல்லின் பல்வேறு கோணங்களைச் சிறப்பாக விளக்குகிறார். இது மிகவும் பயனளிக்கின்றது. இந்த வகையில் லிஸான் மிகச் சிறப்பான நூலாகும் இந்த நோக்கத்திற் காக லிஸானை படிப்பது அவசியமாகும். ஒருசில இடங்களில் குர்ஆனின் ஒரு சொல்லை விளக்கும்போது மொழியியளாளர்களின் மேலதிக விளக்கங்களையும் அவர் பதிவு செய்கிறார். அவை ஒன்றும் அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. சாதாரணமாக வாசிப்பவர்கள் அதனைப் பெரும் விஷயமாக கருதுகிறார்கள். அடுத்ததாக இமாம் ராஹிப் உடைய ‘முஃப்ரதாத்’ நூலுக்குப் பலரும் பெருமதிப்பு அளிக்கிறார்கள். முழுக்க முழுக்க குர்ஆனின் அகராதி என்ற வகையில் அது பாராட்டப்பட வேண்டிய நூல்தான் என்றாலும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் எப்பொழுதெல்லாம் நான் அந்த அகராதியை அணுகினேனோ அப்போதெல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி

Related posts

Leave a Comment