தலித்கள் ஏன் சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும்?
[“தலித் வாய்ஸ்” இதழாசிரியர் வி.டி. ராஜ்சேகர் தலித் இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் தலித், முஸ்லிம் உறவுகள் குறித்தும் யோகிந்தர் சிக்கந்துடன் மேற்கொண்ட உரையாடலின் தொகுப்பு இது. 15 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியானதை அதன் முக்கியத்துவம் கருதி மொழிபெயர்த்துள்ளோம்]
கே: தலித் இயக்கங்கள் சாதி ஒழிப்பையும், சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுபெறுவதையும் இலக்காகக் கொள்வதற்குப் பதிலாக சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் வாதிடுகிறீர்களே. இதன் மூலம் என்ன சொல்ல விழைகிறீர்கள்?
ப: நான் ஒன்றும் புது கருத்தாக்கத்தை முன்வைக்கவில்லை. இந்திய சாதி அமைப்பின் பரிமாணங்கள் பற்றிய என் புரிதலின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதியும் ஓர் அடையாளம். சாதி அடையாளங்களைக் கூர்மைப்படுத்தாமல் இங்குள்ள சாதி ஒடுக்குமுறையை முறியடிக்க முடியாது. இப்படி சொந்த சாதி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் எங்களைப் போன்றோர் சாதியத்தை ஊக்குவிப்பதாய் பார்ப்பன மேட்டுக்குடியினர் வாதிடுகின்றனர். சிலபோது அவர்கள் இப்படி சாதி ஒழியவேண்டும் என்று பாசாங்கு காட்டுவார்கள். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ‘கீழ்’ சாதியினரின் அடையாளங்களை மறக்கவும் கைவிடவும் சொல்வார்கள். ஆனால், தங்களின் சுய சாதி அடையாளத்தையும் மேலாதிக்கத்தையும் அவர்கள் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.
‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்? நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்?
ஆஃப்ரோ அமெரிக்கர்களைப் பாருங்கள். அவர்கள் வெள்ளையின மேலாதிக்கத்துக்கு எப்படி சவால் விடுகிறார்கள்? தங்களின் கறுப்புநிற அடையாளத்தை கைவிடுவதன் வழியாகவா? இல்லை. அதை வலியுறுத்துவதன் வாயிலாகவும், தாங்கள் கறுப்பர்கள் எனும் பெருமிதத்தை ஊட்டுவதன் வழியாகவும்தான். இதே வழிமுறையைத்தான் இந்திய தலித் இயக்கங்களும் கடைப்பிடிக்க முயல்கிறோம். சாதிக்கும் அதன் ஒடுக்குமுறைக்கும் எதிராக நம் சாதி அடையாளங்களை வலுப்படுத்த எத்தனிக்கிறோம். அதேபோல, நாம் தலித் என்பதில் பெருமிதம் கொள்ளவும் வேண்டும். ஆம், சமார்கள், மாலாக்கள், யாதவர்கள் எனப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தவேண்டும். பார்ப்பன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நம் போராட்ட வரலாறு, நமது வரலாற்றுப் பங்களிப்பு போன்றவற்றை மீட்டெடுக்க வேண்டும். மாயாவதி கூட அதைத்தான் செய்ய முயற்சிக்கிறார். பேரணி உரைகளை அவர் இப்படித் தொடங்குகிறார்: “Mai Chamari Hoon, Mai Tumhari Hoon” (நான் ஒரு சமார். நான் உங்களுடையவள்)
எந்தவொரு சமூகம் தன் கடந்த காலத்தையும் அடையாளத்தையும் தொலைக்கிறதோ அது நிச்சயம் அடிமைநிலைக்குத் தள்ளப்படும். எனவேதான் தலித்களை இந்து அடையாளத்துக்குள் உள்ளடக்க பார்ப்பன மேட்டுக்குடிகள் விரும்புகின்றனர். தலித்கள் தங்களைத் தாங்களே வெறுக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். இதைத் தானே பார்ப்பன வேதங்களெல்லாம் அவர்களுக்கு போதிக்கின்றன. பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராக நம் அடையாளங்களையும் பெருமிதங்களையும் உயர்த்திப் பிடிப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
கே: ஒவ்வொரு தலித் சாதியின் அடையாளத்தையும் கூர்மையடையச் செய்தால் அது ஒட்டுமொத்தமாக தலித் இயக்கத்தை பலவீனப்படுத்தாதா?
ப: அப்படியல்ல. நீண்டகால நோக்கில் பார்த்தால் தலித் சாதிகளுக்கு இடையேயான ஒற்றுமையைத்தான் அது உறுதிப்படுத்தும். தலித்கள் ஒரே வகையினர் அல்ல. நூற்றுக்கணக்கான தலித் சாதிகள் இங்கே உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனக்கான வரலாற்றையும் அடையாளத்தையும் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் யாரும் தங்களை தலித்தாக அடையாளப்படுத்துவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை ஒரு மாலா, மடிகா, சமார், ரவிதாசி என்றே கருதுகிறார்கள். தலித்கள் ஒருபடித்தானவர்கள் அல்லர் எனச் சொல்வதன் மூலம் ஒட்டுமொத்த தலித் அடையாளத்திலும் ஓர் உடைப்பு ஏற்பட்டுவிடும் என்பதாகக் கருதுவது தவறானது.
ஒவ்வொரு தலித் சாதியும் தங்களுக்குரிய பங்கை சமூகத்தில் பெறாவிட்டால் அவற்றுக்கு மத்தியிலான பிணைப்பை ஏற்படுத்த தலித் இயக்கத்தால் முடியாது என்பது எனது வாதம். பல்வேறு பற்சக்கரங்களையும் இணைப்புகளையும் கொண்ட ஒரு சக்கரத்தைப் போன்றது இது. ஒவ்வொரு பற்சக்கரமும் இணைப்பும் நன்கு எண்ணெய் விடப்பட்டாலேயொழிய அந்தச் சக்கரம் சுழன்று இயங்க முடியாது. எனது இந்தக் கருத்துக்கு சில தலித்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தலித் இயக்கத்தைப் பிளக்க நான் முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுவாக பிற தலித் சாதிகளை விடவும் இடஒதுக்கீடு போன்றவற்றில் அனுகூலமடையும் தலித் சாதிகளைச் சார்ந்தவர்களே இவர்கள். தலித்களை ஒருபடித்தானவர்கள் என வாதிடுவதன் ஊடாக பலவீனமான தலித்கள் அடையவேண்டிய பலன்களை இவர்கள்தான் தடுக்கிறார்கள்.
ஆந்திராவை எடுத்துக்கொள்வோம். அங்கே தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் மடிகாக்களை விட மாலாக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த தலித் அடையாளத்தின் பெயரால் இந்த அனுகூலங்கள் மாலாக்களுக்குக் கிடைப்பதை மடிகாக்கள் காண்கிறார்கள். நாம் “தலித் வாய்ஸ்” இதழில் மடிகாக்களின் கோரிக்கைகளை ஆதரித்தோம். அதற்கு மாலா சமூகத்து மேட்டுக்குடிகளிடம் கணிசமான அளவில் எதிர்ப்புகள்கூட கிளம்பின. என்னைப் பொறுத்தவரை, சாதி அடையாளத்துக்கு அழுத்தம் கொடுப்பதுதான் சிறிய, பலவீனமான தலித் சாதிகளுக்குச் சாதகமாக இருக்கும்.
கே: நீங்கள் சொல்வதுபோல சாதி அடையாளங்கள் வலுப்பெறுவது சாதி ஒடுக்குமுறையையும் படிநிலை கட்டமைப்பையும் உறுதிப்படுத்த மட்டுமே உதவும் என்பது சிலரின் வாதம். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: சாதி அதனளவில் நீடிப்பதற்காக இதை நான் கூறவில்லை. சாதி ரீதியிலான ஒடுக்குமுறைக்கு சவால் விடும் பொருட்டே இதைச் சொல்கிறேன். இந்திய சமூக உருவாக்கத்தில் சாதிகளே அடிநாதம். இந்த சமூகவியல் எதார்த்தத்தை நாம் ஏற்கவேண்டும். சொந்த சாதி அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ளும்படி கோருவதன் மூலம் நான் சொல்ல விழைவது, சாதிகளுக்கு இடையிலான உறவைத் தீர்மானிக்கும் அடிப்படை சக்தி முற்றிலுமாய் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே.
சாதி அடக்குமுறைக்கு மறுபெயர் இந்து மதம். ஆம், ஒவ்வொரு சாதிக்கும் மத்தியில் நிலவும் தொடர்புகளை அதன் சமூகப் படிநிலை கொள்கைகள்தான் வரையறுக்கின்றன. அதன்படி, பிராமணர்கள் மேல்மட்டத்திலும், தலித்கள் கீழும்தான் இருக்க முடியும். இந்த அமைப்புமுறையைக் கொட்டிக் கவிழ்க்கவேண்டும். சாதிகளுக்கு மத்தியிலான உறவு சமத்துவ சித்தாந்தத்தின் (egalitarianism) மேல் கட்டியெழுப்பப்பட வேண்டும். எல்லா சாதியினரும் சமமாகக் கருதப்படவும் தங்களின் எண்ணிக்கைக்கு உரிய அதிகாரத்தையும் வளத்தையும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.
அதன்படி, இந்திய மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் 3% வளங்களைத்தான் பெற்றிருக்க வேண்டும். அதுபோல மக்கள் தொகையில் 80% இருக்கும் ‘கீழ்’ சாதியினர் அதே அளவு வளங்களைக் கட்டுப்படுத்த அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலை இதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. 80% வளங்களை பார்ப்பனர்கள் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினரே வைத்திருக்கிறார்கள். இதற்கு இந்து மதம் அங்கீகாரத்தையும் புனித ஏற்பையும் வழங்கியிருக்கின்றது. அதனால்தான் இந்துமதத்தை அல்லது பார்ப்பன மதத்தை புனிதமாக்கப்பட்ட இனவாத வடிவம் என்று சொல்கிறோம்.
கே: இன்னொரு வாதம் ஒன்று சிலரால் முன்வைக்கப்படுகிறது. சாதி அடையாளங்கள் வலுப்பெருவதன் விளைவால் புதிய தலித் மேட்டுக்குடி வகுப்புகள் மேலெழுந்து, அவர்கள் ஒடுக்கப்படும் தலித்களுக்குப் பதிலாக தங்கள் தரப்பின் குரலாக மட்டுமே ஆகிவிடக்கூடும் என்கிறார்கள். இந்தக் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: அது ஒருவகையில் உண்மைதான். எல்லா தலித் சாதிகளுக்குள்ளும், குறிப்பாக எண்ணிக்கையில் அதிகமாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் உள்ள வட இந்திய சமார்கள் போன்ற சாதிகளில் சிறிய மேட்டுக்குடி வர்க்கம் உருப்பெற்றிருக்கும். வர்க்க பேதம், சுரண்டல், பாலின ரீதியிலான ஒடுக்கல் போன்ற பிரச்னைகள்கூட தலித்களுக்குள் இருக்கும். ஆனால், நாம் முழு கவனத்தையும் ஒருசேர குவிக்கவேண்டியது “அசல் முரண்பாட்டில்” தான். எனவே இங்கு பார்ப்பனிய மேலாதிக்கமும் அதன் ஒடுக்குமுறையும்தான் முதன்மையானது. இவற்றை வெற்றிகரமாகக் கையாண்டுவிட்டால் உள்ளுக்குள் இருக்கின்ற வர்க்கப் பிரிவுகள் அல்லது பாலின ஒடுக்குமுறை முதலான “சிறிய முரண்பாடுகளில்” கவனம் செலுத்தலாம்.
கே: சாதி அடையாளம் தொடர்பான உங்களின் கருத்தாக்கம் தலித் அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
ப: தலித்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதி அடையாளங்களைத் தற்காத்துக் கொள்வது அத்தியாவசியம் என்று கருதுகிறேன். சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். பாஜக வீழ்த்தப்பட்டதற்கு தலித் அடையாளம் இந்துத்துவத்துக்கு எதிர்நிலையில் நின்றதே காரணம். பாஜக ஒரு பார்ப்பன பாசிச கட்சி மட்டும்தான் என்பதை தலித்கள் பெருமளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான், தலித்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் அவர்களுக்கு தனியாக ஓர் அரசியல் கட்சி அவசியம் என்று கருதுகிறார்கள். ஏனெனில், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் ‘உயர்’ சாதி இந்து சிறுபான்மையினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகவே, தலித்-பகுஜன் இணைவு வலுப்பெறவேண்டும். அதற்கு, தம் சொந்த சாதி அடையாளங்களுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்.
கே: தலித்கள் பார்ப்பன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மதமாற்றம் அவசியம் என்கிறீர்கள். அதே வேளை, தலித்கள் பிற மதம் மாறினாலும் சாதி அடையாளங்கள் அவர்களை விட்டு அகல்வதில்லை என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மதமாற்றத்துக்கு என்ன சமூகப் பங்கு இருக்கிறது?
ப: ‘உயர்’ சாதி ஒடுக்குமுறையை முறியடிப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் மதமாற்றமே. இதைத்தான் தலித் புரட்சியின் தந்தை பாபாசாகிப் அம்பேத்கர் வலியுறுத்தினார். சமத்துவத்தைப் போதிக்கும் ஏதாவது ஒரு மதத்துக்கு மாறுவது தலித் விடுதலைக்கு தவிர்க்க முடியாத ஒன்று என அவர் மிகச் சரியாக வாதிட்டார். இந்து மதம் சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதில் சமத்துவமும் சுயமரியாதையும் சாத்தியமில்லை எனவும் கூறினார். இறுதியில் ஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்தில் போய் இணைந்துகொண்டார்.
பவுத்தம் தலித்களுக்கான மாற்றில் ஒன்று மட்டுமே. ஒரு நோய்க்கு பல மருந்துகள் இருக்கும். அதுபோல சாதியம் எனும் நோய்க்கான நிவாரணமாக தலித்கள் பவுத்தம், இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களுக்கும் போகலாம். அது அவர்களின் வட்டார நிலைமைகளைப் பொறுத்தது.
கே: ஆனால், இந்து அல்லாத பிற மதங்களுக்குச் சென்றாலும் ஒருவரின் சாதிக் கறை நீங்காதது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ப: பழங்குடி அல்லது இன அடையாளத்தைப் போல சாதியும் ஓர் அடையாளம். இயல்பாகவே அது மதமாற்றத்துக்குப் பின்னும் நீடிக்கக்கூடியதே. ஒருவரின் சாதி அடையாளம் முற்றாக காணாமல் போய்விடும் என்பது என் கருத்தல்ல. அது சாத்தியமும் அல்ல. சாதிப் பாகுபாடுகள் மதமாற்றத்துக்குப் பிறகும் தொடரவே செய்யும். எனினும், அதன் உக்கிரம் இந்து மதத்தை விடவும் கணிசமான அளவு கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் குறைவு. ஏனெனில் அவை சாதியை ஒருவர் மீது சுமத்துவதில்லை. கடுமையாக சமத்துவத்தை தன் சமூக அறமாக அவை கொண்டிருக்கின்றன. அதனால்தான் ஆயிரமாண்டுகளாக தலித்கள் தங்களின் சுயமரியாதையையும் சமூக அந்தஸ்தையும் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் தேடி வந்திருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தலித்களில் இருந்தும் இதர ‘கீழ்’ சாதியிலிருந்தும் மதம் மாறியவர்களே. சாதி அடக்குமுறைக்கு எதிரான புரட்சிகர சவால்கள் எல்லாம் அவர்களிடமிருந்தே வருகின்றன.
கே: தலித், முஸ்லிம் ஒற்றுமைக்கு அதிக அழுத்தம் தருகிறீர்கள். ஆனால், சமீப காலத்தில் குஜராத்தில் நடந்த துயரச் சம்பவம் நம் மனத்தை விட்டும் அகலவில்லை. அங்கே முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தவர்களில் பெருமளவு தலித்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: சில பத்திரிகைகளில் வெளியாகியிருப்பது போல, ரயில் பெட்டியை எரித்தது இந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் சதிவேளையாகவே இருக்கும். இதை சாக்காகக் கொண்டே குஜராத் முஸ்லிம்களின் மீது கொடூரமான படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த நோக்கத்துக்காகவே தலித்களையும் பழங்குடிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். இப்படித்தான் மதக் கலவரத்தின் பெயரால் தொடர்ச்சியாக பல்வேறு இனப்படுகொலைகளை அவர்கள் நிகழ்த்துகின்றனர். இதற்காகவே தலித்கள், பழங்குடிகள் மத்தியில் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அவர்களை இந்துமயப்படுத்துவது, முஸ்லிம்கள் மீது கடுமையாக வெறுப்பு கொள்ள வைப்பது முதலானவற்றில் பெருமளவு வெற்றியும் ஈட்டியுள்ளனர். இப்படியாகத்தான் ‘உயர்’ சாதி மேட்டுக்குடிகள் தங்களின் சொந்த எதிரிகளான தலித்களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டிருக்கின்றன.
இதன் காரணமாகத்தான் தலித், முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இந்துத்துவமும் பார்ப்பனிய ஃபாசிசமும் வெறும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மட்டும் அடிமைப்படுத்த முனையவில்லை. மாறாக, ‘உயர்’ சாதி இந்துக்கள் தவிர்த்து தலித்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், பழங்குடிகள் என எல்லாத் தரப்பு மக்களையும் அடிமைப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனவேதான், ‘உயர்’ சாதி ஆதிக்கத்துக்கு எதிராக நாமெல்லாம் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகிறது.
கே: தலித், முஸ்லிம் ஒற்றுமை எனும் உங்கள் திட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்?
ப: தலித், முஸ்லிம் ஒருங்கிணைவு முஸ்லிம் வெகுமக்களால் அக்கறையுடன் வரவேற்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தலித் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஆனால், முஸ்லிம் மேட்டுக்குடிகள் (குறிப்பாக ஹரியானா, ம.பி. போன்ற வட இந்திய பின்புலமுள்ளவர்கள்) இதற்கு நேர்மாறாக நிற்கிறார்கள். தங்களின் தலைமைப் பொறுப்புக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம். அதே சமயம், வாய்ச் சவடாலாக தலித், முஸ்லிம் ஒற்றுமை கோஷம் எழுப்ப அவர்கள் தயங்குவதில்லை. அரசியல் தேர்வு என்று வரும்போது தங்களின் சொந்த நலன்களுக்காக காங்கிரஸ், பாஜக அல்லது ‘உயர்’ சாதி இந்துக்களால் வழிநடத்தப்படும் ஏதாவதொரு கட்சியுடன் கைகோர்த்துவிடுகிறார்கள்.
டெல்லி ஜமா பள்ளிவாசல் ஷாஹி இமாம் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த அவர் கடந்த தேர்தல்களில் பாஜக-வுக்கு ஆதரவாளராக மாறினார். அந்தக் கட்சிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களைக் கோரவும் அவர் தயங்கவில்லை. எனினும், முஸ்லிம் சமூகம் இப்போது பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளது. ஜமா பள்ளிவாசல் பகுதி முஸ்லிம்கள் இமாம் சொன்னதற்கு மாறாக காங்கிரசுக்கு வாக்களித்ததே இதற்கொரு சிறந்த உதாரணம். முஸ்லிம் வெகுமக்கள் அந்தச் சமுதாய மேட்டுக்குடி அரசியலின் மீது அவநம்பிக்கை கொள்வதோடு தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் முதலான ஒடுக்கப்பட்ட மக்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் கரம் கோர்க்கவுமே முனைகின்றனர்.
கே: தலித், முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில் உலமாக்கள் மற்றும் சில இஸ்லாமியக் குழுக்களின் பங்களிப்பு என்ன? அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரையும் (தலித்கள் உட்பட) இஸ்லாத்தின் எதிரிகளாக வரையறுக்கிறார்கள் தானே?
ப: சில பிரிவு உலமாக்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் என்னிடம் அவர்கள் இதை வெளிப்படையாகக் கூறியதில்லை. தலித்களுக்கும் முஸ்லிம் வெகுமக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்ப இது ஒரு தடைக்கல் என்று நீங்கள் சொன்னால் நான் அதை ஏற்பேன்.
தனிப்பட்ட என் புரிதலின் அடிப்படையில் பார்த்தால், இஸ்லாத்தைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்வதால் விளையும் சிக்கல் இது என்பேன். என் குர்ஆன் வாசிப்பின்படி, இஸ்லாம் மத வேறுபாடின்றி எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடுமாறு முஸ்லிம்களை வேண்டுகின்றது. ஆனால், மக்களிடம் இருந்து விலக்கி நிறுத்தும் படியான இஸ்லாமியப் புரிதல்களை முன்னெடுக்கும் அமைப்புகள் சவூதி நிதி ஆதாரங்களைச் சார்ந்து இயங்குவன. சவுதிக்கு இதுபோன்ற சிதைக்கப்பட்ட இஸ்லாமியப் புரிதல்களைப் பரவலாக்குவதில் லாபம் இருக்கிறது. இன்றைய சவூதி ஒடுக்குமுறை ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளும் மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டு வைத்தே பிழைத்து வந்திருக்கிறார்கள். கத்தி மேல் நடப்பதாகவே அவர்களின் நிலைமை இருக்கின்றது. உள்நாட்டு எதிரிகளாலேயே அவர்கள் தூக்கி எரிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
முஸ்லிம் தலைவர்களும் உலமாக்களும் சாதி, பார்ப்பனியம், இந்தியச் சமூகத்தின் வரலாறு முதலானவை குறித்த மேலோட்டமான புரிதலையே கொண்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் தலித், முஸ்லிம் ஒற்றுமைக்கான தேவைகளை சரிவர விளங்கி ஊக்குவிப்பதில்லை. மேட்டிக்குடி முஸ்லிம்களின் மேலாதிக்கத்தை முறியடிக்க ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் தேவைகளை நாம் பேசும்போது, முஸ்லிம்களுக்குள் பிரிவினையைத் தூண்டுவதாக அந்தச் சமூகத்து மேட்டுக்குடியினரால் குற்றம் சாட்டப்படுகிறோம்.
இதையே தான் இந்துத்துவர்களும் வாதிடுகின்றனர். இந்துக்கள் மத்தியில் சாதி ரீதியிலான பிளவை நாங்கள் ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். தலித், முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவதற்குக்கூட மேட்டுக்குடி முஸ்லிம்கள் வரக்கூடும். ஆனால் தங்கள் சமூகத்துக்குள் இருக்கின்ற சாதி அடக்குமுறையை அவர்கள் விமர்சிக்கமாட்டார்கள். ‘உம்மா’ என்று ஒருமுகப்படுத்துவதை விசாரணைக்கு உட்படுத்தவும் மாட்டார்கள். அதே போல தங்களுக்குள் இருக்கின்ற சாதி, வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
மூலம்: ‘Dalit Voice’ Speaks Out
தமிழில்: நாகூர் ரிஸ்வான்.