daniel haqiqatjou liberalism tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (3)

Loading

(முந்தைய பகுதியை வாசிக்க)

அரசும் மதமும்

அரசையும் மதத்தையும் பிரிப்பது தாராளவாதத்தின் துணைக் கருத்தியலான மதச்சார்பின்மையின் அடிப்படையான கருத்தமைவாகும். அமெரிக்காவின் அரசியல் சாசனத்தின் ஆரம்பத்திலேயே மத நிர்மாணங்களுக்கு ஆதரவாகவோ, மதத்தைக் கடைப்பிடிப்பதற்கு எதிராகவோ சட்டம் இயற்றப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி அரசாங்கத்திலிருந்து சமயத்தை முற்றிலுமாக விலக்குவது இஸ்லாமிய ஆட்சிமுறையல்ல. சமூக மட்டத்திலும் அரசாங்கத்திலும் ஷரீஆவை அடிப்படையாகக் கொண்டதுதான் இஸ்லாமிய அரசு. அது முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதோரையும் இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்தும். நேர்வழிநின்ற கலீஃபாக்கள் காலம் தொட்டு முற்கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள்வரை இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

இஸ்லாம் மனிதகுலத்தின் நலனுக்கு சிறந்த வாழ்க்கைநெறி என்பதால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அதை அனைத்து மட்டங்களிலும் நிலைநாட்ட முனைந்ததுடன், அதைப் பிறர் ஏற்றுக்கொள்வதற்கான சூழலையும் உருவாக்கினர். அதுபோல, முஸ்லிம் உம்மத்தின் இம்மை, மறுமை நலனுக்கு முக்கியத்துவமளித்தனர்.

கட்டாய மதமாற்றம் என்ற ஒன்று இஸ்லாத்தில் கிடையாது. எனினும், இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாதோர் இஸ்லாமிய நியமங்களுக்கு உட்பட்டு வசித்தார்கள். இஸ்லாமிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிமல்லாதோரை இஸ்லாமிய நியமங்களுக்கு உட்பட்டு இருக்கச் செய்வது அநியாயம் என்று மதச்சார்பின்மைவாதிகள் சொல்லக்கூடும்.

எல்லாச் சட்டங்களுக்கும் பின்புலத்தில் ஒரு சிந்தனைச் சட்டகம் இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான, நடுநிலையான சிந்தனைச் சட்டகம் சாத்தியமற்றது. மதச்சார்பற்ற சட்டங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை என்று அவர்கள் வாதாடினாலும், அவற்றுக்கு நவீன சிந்தனைச் சட்டகம் ஆதாரமாக விளங்குவதை மறுக்க முடியாது.

அந்தச் சட்டகத்தின் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் வழியாக நவீனச் சிந்தனையும், அதற்குத் தோதுவான வாழ்வொழுங்கும் குடிமக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இதையெல்லாம் எவரேனும் எதிர்த்தால் அவர் சிறைவைக்கப்படவோ அபராதம் விதிக்கப்படவோ நேரிடும் அல்லவா? பிறகு எப்படி அவற்றுக்கு எந்தச் சார்பும் இல்லை என்றும், இன்னொருவர் நம்பிக்கையிலும் விருப்பத்திலும் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கூற முடியும்?

இன்றைக்கு பால்புதுமையினர் பற்றி பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படுகிறது. அது என் கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் ஒத்துவராது என்றும், என் பிள்ளைகளுக்கு அதைக் கற்பிக்க வேண்டாம் என்றும் பெற்றோரால் கோர முடியுமா? முடியாது. ஒருவரின் நம்பிக்கைகளும் கருத்தும் எதுவாக இருந்தாலும், அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு அவர் பணிய வைக்கப்படுகிறார். அரசின் முடிவுகள் எல்லாருக்கும் பொதுவானவை, அனைவருக்கும் நன்மை பயப்பவை என முன்னிறுத்தப்படுகின்றன.

மனிதகுலத்துக்கு எது சிறந்தது, எது நன்மை பயக்கும் என்பன யாருக்கு நன்கு தெரியும்? உலகைப் படைத்த இறைவனுக்கா அல்லது இந்த அரசியல்வாதிகளுக்கும் பெருநிறுவனங்களுக்குமா? யாருடைய அறிவை மனிதர்கள் சார்ந்திருப்பது சரி? நிச்சயமாக இறை வழிகாட்டுதல்கள்தாம் மனிதர்களுக்கு நன்மையையும் நிம்மதியையும் தரும் என்பதில் ஐயமில்லை.

அரசையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்றும், மதச்சார்பற்றதாக அரசை மாற்ற வேண்டும் என்றும் கோருவது அதனளவிலேயே குளறுபடியானது என்பதை நினைவில் கொள்க. ஏனெனில், மேலே சுட்டிக்காட்டியதுபோல எல்லாச் சட்டங்களுக்கும் பின்புலத்தில் ஒரு சிந்தனைச் சட்டகம் இருக்கிறது. அது பக்கச்சார்பானதுதான், நடுநிலையானது என்று எதுவுமில்லை.

மதச்சார்பற்ற அரசில் முஸ்லிம்கள்

மதச்சார்பற்ற அரசில் முஸ்லிம்கள் பூரண மதச் சுதந்திரத்துடன் வாழ்வதாகவும், இஸ்லாமிய ஆட்சியைவிட அதில் சிறுபான்மையினர் சிறப்பாக நடத்தப்படுவதாகவும் மதச்சார்பின்மைவாதிகள் கூறுகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

முழு மனித வாழ்வுக்கும் ஷரீஆ வழிகாட்டுகிறது. தனிநபரில் தொடங்கி, குடும்பம், சமூகம், உம்மத் என அதன் பரிமாணங்கள் விரிவடைகின்றன. எந்த மதச்சார்பற்ற அரசாவது அந்த வழிகாட்டுதல்களையெல்லாம் நடைமுறைப்படுத்த அனுமதிக்குமா?

காலனிய வரலாற்றில்கூட முஸ்லிம் குடும்பவியல் சட்டங்களுக்கு சிலபோது அங்கீகாரம் இருந்தது. திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் இஸ்லாமிய வழிகாட்டலை நீங்கள் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும், வணிகச் செயல்பாடுகள், இரு சமூகங்களுக்கு மத்தியிலான விவகாரங்கள், சமூகக் கொள்கைகள், சட்டம் இயற்றுதல், அரசாளுகை, வெளியுறவுக் கொள்கை என அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் காலனியவாதிகள் கூறினர். ஆனால், இக்காலத்தில் குடும்பவியல் சட்டங்களும் நவீன மதிப்பீடுகளுக்குத் தக்க உருமாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.

தனிநபர் கருத்துகளிலும்கூட அரசு குறுக்கீடு செய்கிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கற்பிக்கும் முறையை (Homeschooling) ஜெர்மனியில் தடை செய்கிறார்கள். ஒரு குழந்தை எதைக் கற்க வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானிக்கக் கூடாது அரசுதான் தீர்மானிக்கும் என்கிறார்கள். குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு “சுய முடிவு” எடுக்க அனுமதிக்கப்படுமாம்.

இன்றைய நிலவரம் எப்படி இருக்கிறது என்றால், ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் மக்களை அடைத்து, உங்களின் மதத்தை நீங்கள் விரும்பியபடி பின்பற்றிக்கொள்ளுங்கள் என்கிறது அரசு. அதாவது, ஒரு வரையறுக்கப்பட்ட வெளியைத் தந்து அதற்குள் சமயத்தைக் கடைப்பிடித்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. மேலும், அரசு வரைந்த வட்டத்தின் எல்லையையும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சுருக்கிக்கொண்டே போகிறது. கல்வித்திட்டம், ஹலால்/ கோசர் இறைச்சி, திருமணம் உள்ளிட்டவற்றில் தொடங்கி, தனிப்பட்ட நம்பிக்கைகளிலும் சிந்தனைகளிலும்கூட அரசு தலையிட்டு வருகிறது. நீங்கள் கொண்டுள்ள கருத்துகளை அரசு பிரச்னைக்குரியவையாகக் கருதினால் உங்களைக் கண்காணிக்கவும், கைது செய்து சிறையிலடைக்கவும், உங்கள் வாழ்க்கையையே நாசம் செய்யவும் அதற்கு அதிகாரம் இருக்கிறது இல்லையா? இது என்ன வகையான சுதந்திரம்?

மதச்சார்பற்றவாதிகளின் மற்றொரு வாதத்தை இங்கு சுட்டிக்காட்டல் தகும். மதங்களால்தாம் சமூகத்தில் சிக்கல்களும் மோதல்களும் வன்முறைகளும் உண்டாவதாகவும், அவற்றையெல்லாம் தவிர்க்கவே மதத்தை அரசிலிருந்து பிரிக்கக் கோருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது, எல்லா வகையான அடையாளங்களும் மோதலைத் தோற்றுவிக்க வல்லவைதாம். அவற்றையும் அரசிலிருந்து பிரிப்பீர்களா? வரலாற்றை ஆராய்ந்தால், இனம் சார்ந்த வேறுபாடுகள் பிரச்னைகளைத் தோற்றுவிப்பதில் முதன்மைப் பங்காற்றியிருப்பதை நாம் அறியலாம். அவை மோதல்களுக்கும் படுகொலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றன. அப்படியிருக்க, இன அடையாளங்கள் மேற்கில் கொண்டாடப்படுவது ஏன்?

கூடுதலாக இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி, தொடக்க கால இஸ்லாமிய வரலாற்றைப் பார்த்தால், வெள்ளையர்களைப் போல, ஹான் சீனர்களைப் போல அறபு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இன ரீதியான போர்கள் எதையும் முன்னெடுக்கவில்லை என்பதை நாம் விளங்கலாம். இஸ்லாத்துக்காகவே அவர்கள் போரிட்டிருக்கிறார்களே அன்றி அறபு இனத்துக்காக அல்ல.

தொடரும்…

(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment