கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (4)

Loading

சமத்துவம்

தாராளவாதத்தின் முக்கியமான கருத்தாக்கங்களுள் ஒன்று சமத்துவம். அது இஸ்லாத்திலும் பலமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இந்த விஷயத்தில் இவ்விரு கருத்தியல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. பொத்தாம் பொதுவாக சமத்துவம் என்று சொல்வதில் பொருளேதுமில்லை. ஒவ்வொரு சிந்தனைச் சட்டகத்துக்கும் தகுந்தாற்போல் சமத்துவத்துக்கான வரையறை மாறுபடும்.

பொதுவாக, இருவர் ஒரே குற்றத்தைச் செய்தால் அவர்களிடம் ஒரே அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பாரபட்ச நடவடிக்கைகள் கூடாது எனச் சொல்கிறோம் அல்லவா? அது மனித உள்ளுணர்விலுள்ள சமத்துவக் கண்ணோட்டத்திலிருந்து வருவதே. அதேவேளை, சமத்துவம் தொடர்பில் நுட்பமான பல அம்சங்கள் இருப்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

பீட்டர் வெஸ்டன் எழுதிய The Empty Idea of Equality என்ற நூலில் சமத்துவம் குறித்து விவாதிக்கும்போது, ஒரே தன்மையிலான விவகாரங்களை ஒரே விதமாகவும், விவகாரங்கள் வேறுபடும்போது அவற்றின் தன்மைக்குத் தகுந்த விதத்திலும் அணுக வேண்டும் எனும் பொருள்பட ஒரு கருத்தை முன்வைப்பார்.

உதாரணத்துக்கு, என் இரு பிள்ளைகளை நான் வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று கொள்வோம். அதிலொரு பிள்ளைக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்துவிட்டு, மற்றொரு பிள்ளைக்குக் கொடுக்கவில்லை. என்னிடம் இதற்கான காரணத்தைக் கேட்கையில், “எனக்குப் பிடித்த பிள்ளைக்குக் கொடுத்தேன்” என்று பதிலளித்தால், நான் இரு குழந்தைகளையும் சமமாக நடத்தாமல் பாரபட்சம் காட்டுகிறேன் என்பார்கள் அல்லவா? ஆனால், என் ஒரு குழந்தை இன்று நிறைய சாக்லேட் சாப்பிட்டுவிட்டதால் இவ்வாறு செய்தேன் என்றும், அதற்கு வேறு தின்பண்டம் வைத்திருக்கிறேன் என்றும் நான் சொன்னால் அந்தக் காரணத்தை அநேகர் ஏற்கக்கூடும். ஏனென்றால், என் அணுகுமுறை மாற்றத்துக்குக் காரணம் இந்த விவகாரத்தின் தன்மை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

சரி, ஒருவேளை என் இன்னொரு பிள்ளைக்கு சாக்லேட் கொடுக்காததற்குக் காரணம் அவன் இன்ன சேட்டை செய்தான் என்று நான் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்ளப்படும்? சிலர் இந்தக் காரணத்தை ஏற்கலாம். வேறு சிலர், “குழந்தை சேட்டை செய்தாலும் இப்படி உங்கள் அணுகுமுறை இருக்கக்கூடாது” என்று வாதிடலாம். அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்து இந்த பதில் மாறுபடும்.

சமத்துவம் விஷயத்தில் இந்த உதாரணத்தை ஓரளவு பொருத்திப் பார்க்கலாம். பாலினச் சமத்துவத்தை எடுத்துக்கொண்டால், இருபாலருக்கும் பல விவகாரங்களில் வெவ்வேறு விதிமுறைகளை இஸ்லாம் வழங்குகிறது. வெவ்வேறு உரிமைகளும் கடமைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை சமத்துவத்துக்கு விரோதமானதா, பெண்களுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் உடல், உளவியல் முதலானவற்றில் பெரும் வேறுபாடுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டே வேறுபட்ட அணுகுமுறை கைக்கொள்ளப்படுகிறது. அதேசமயம், இருபாலருக்குமிடையிலான வித்தியாசங்கள் பல விஷயங்களில் பொருட்படுத்தப்படுவதில்லை. தொழுகை, ஹஜ் முதலான ஆன்மிக விவகாரங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

நாம் இருபாலருக்கும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்வதை பெண்ணியவாதிகள் ஏற்க மாட்டார்கள். அப்படியான எந்த வித்தியாசமும் இல்லை என்றும், இருபாலருக்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை மேற்கொள்வது சமத்துவத்துக்கு எதிரானது என்றும் பொங்குவார்கள். அவர்களிடமுள்ள பிரச்னை மனித இயல்பை முற்றிலுமாக மறுத்து வாதிடுவதுதான். அது அவர்களின் கண்ணோட்டத்திலும் சிந்தனைச் சட்டகத்திலுமுள்ள பிரச்னை.

மதச்சார்பற்றவாதிகள் இஸ்லாமிய ஆட்சி மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் அதில் ஒரே அணுகுமுறை இல்லை என்பது. ஆனால், பிறப்பிடத்தை வைத்து மதச்சார்பற்ற அரசுகள் மக்களிடம் வேறுபாடு காட்டுவதை அவர்கள் நியாயப்படுத்துவார்கள். அமெரிக்காவிலேயே பிறந்த குடிமகனுக்கு ஒரு சட்டமும் அயலானுக்கு ஒரு சட்டமும் இருப்பதை சரிகாண்பார்கள். இதற்குக் காரணமும், அவர்களின் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே.

இன ரீதியான சமத்துவத்தை எடுத்துக்கொள்வோம். இஸ்ரேல் மதச்சார்பற்ற அரசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. மத்தியக் கிழக்கிலுள்ள ஒரே ஜனநாயக நாடு தாங்கள்தாம் என்கிறார்கள் இஸ்ரேலியர்கள். ஆனால், யூதர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இஸ்ரேலில் இன ரீதியான சட்டங்கள் இருக்கின்றன. மரபணு சோதனை அறிக்கையைக் கொடுத்து தங்களை யூத இனம் என நிரூபிக்க வேண்டிய தேவையையும் குடிமக்களிடம் அந்த அரசு ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இஸ்லாத்தில் இப்படியான இனவாதத்துக்கு அனுமதியில்லை.

ஆக, நான் முன்சொன்னதுபோல், சமத்துவம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதில் அர்த்தமில்லை. சிந்தனைச் சட்டகத்தைப் பொருத்து அது பொருள் கொள்ளப்பட வேண்டும். சமத்துவம், பொன்விதி, தீங்குக் கொள்கை, அரசையும் மதத்தையும் பிரித்தல், மதச்சுதந்திரம் என தாராளவாதம் முன்வைக்கும் கருத்தமைவுகள் யாவும் பலவீனமானவை. ஆனால், அவற்றை வலுவானவை போலவும், சிறந்த மாற்று எனவும் அது மக்களை நம்ப வைக்கிறது.

தொடரும்…

(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment