கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)

Loading

மேற்கத்திய சக்திகள் உலகமெங்கும் தம் மேலாதிக்கத்தை நிறுவிய வரலாற்றையும், இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியத்துக்கு எதிரான போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றதையும் நாம் அறிவோம். வரலாற்றை ஆராய்ந்தால் காலனிய எதிர்ப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு முதன்மையான இடமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பாக பல அற்புதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

அந்த வகையில், காலனிய எதிர்ப்புப் போரில் பங்குகொண்ட முஸ்லிம்களின் தீரமிகு வரலாற்றைப் பதிவு செய்வதும், இளைய தலைமுறை வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதில் முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் தொகுத்தளிக்கப்படவுள்ளன. வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்துப் பயனடைய வேண்டும்.

குஞ்ஞாலி மரைக்காயரும் போர்ச்சுகீயர் எதிர்ப்பும்

கேரளாவின் பொன்னானியில் பிறந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவரின் முன்னோர்கள் சாமுத்திரி மன்னனிடம் தளபதிகளாக இருந்தவர்கள். இவரது இயற்பெயர் முஹம்மது. மன்னர் இவரை குஞ்ஞு அலி என்று அழைத்தார். பின்னாளில் அந்தப் பெயரே இவரின் குடும்பப் பெயரானது. அதுவே காலவோட்டத்தில் குஞ்ஞாலி ஆனது.

மன்னர் மனவிக்கிரமர் போர்ச்சுகீசியர்களின் கொடுமைகளை அடக்க இவரின் உதவியை நாடினார். இந்தப் பின்னணியில், இவர் கப்பல்கள் கட்டி, ஆயுதங்களைச் சேர்த்து, போர் வீரர்களைத் திரட்டி பொன்னானியில் போர்ச்சுகீசியர்களுடன் மோதினார். முதல் போரில் தோல்வி என்றாலும் போர்ச்சுகீசியர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தார்.

1510ல் மீண்டும் போர்ச்சுகீசியர்கள் அல்புகர்க் எனும் தளபதியின் தலைமையில் கள்ளிக்கோட்டையில் போரிட்டனர். அவர்களை எதிர்கொண்ட குஞ்ஞாலி மரைக்காயரின் குண்டு அந்தத் தளபதியின் காலில் பாய, மிரண்டோடினான் அல்புகர்க். கள்ளிக்கோட்டை காப்பாற்றப்பட்டது.

1521ல் வந்த போர்ச்சுகீசிய கவர்னர், இந்தியர்கள் இழிவான ஈனப்பிறவிகள் என்றும், தன் ஆணைக்கு அடிபணியும் அடிமைகள் என்றும் உரைத்தான். நான்காண்டுகள் கழித்து பொன்னானி துறைமுகத்தை வளைத்த போர்ச்சுகீசிய படை பலத்த அடிபட்டு பயந்து ஓடியது. ஆனால், அதே 1525ம் ஆண்டு, சரியாக அக்டோபர் 15ம் நாள் கள்ளிக்கோட்டையில் நடந்த போரில் கவர்னர் பலத்த காயமுற்றான். அந்தக் காயமே அவனின் உயிரைப் பறித்தது. சம்பயோ புதிய கவர்னராக வந்தான்.

மீண்டும் 1528ல் பர்கூரில் போர்ச்சுகீசியருடன் போர் நடந்தது. இந்தப் போரில் குஞ்ஞாலி மரைக்காயர் தோற்றார். என்றாலும், போர்ச்சுகீசியர்களுக்கு முன்னர் விளைவித்தது போன்றே பெருஞ்சேதத்தை விளைவித்தார். இதற்குப் பிறகு, செத்வாயில் போர்ச்சுகீசிய கப்பல்களைத் தாக்கி கடலில் மூழ்கடித்தார்.

ஒருகட்டத்தில் இலங்கையில் தளம் அமைத்து மலையாள வணிகர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர் போர்ச்சுகீசியர். அந்தச் சமயத்தில் இலங்கையை முற்றுகையிட்டு அவர்களை சரணடையச் செய்தார் குஞ்ஞாலி மரைக்காயர். அதன் பின்னர் தூத்துக்குடியிலும், வேதாளையிலும்கூட போர்கள் நடந்தன. அதிலும் போர்ச்சுகீசியர்களை அவர் விரட்டியடித்தார்.

பிறகு, அவருக்கு நேர்ந்த தோல்வி என்றால், 1538ல் கோவாவிலிருந்து பெரும் படையுடன் வந்த போர்ச்சுகீசியப் படையிடம்தான். தோற்றாலும் சரணடையவில்லை. அவரது இறுதிப் போர் இலங்கையில் நடந்தது. அதில் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் விடுதலைப் போரில் ஒரு தனிமனிதன் மாபெரும் படையைத் திரட்டி அந்நியனை எதிர்த்து நாட்டைக் காக்க களம் கண்டார் என்றால் அது முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர்தான்.

அவருக்குப் பிறகு இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் களமாடினார். அவர் கண்ணூரிலிருந்து போர்ச்சுகீசிய கப்பல்களைத் தாக்கி கடுஞ்சேதம் விளைவித்து தன் வீரத்தைப் பறைசாற்றியவர். கோவாவிலிருந்து டீலிமா தலைமையில் வந்த போர்ச்சுகீசிய கப்பல் படையையும் கலங்கடித்து வென்றவர். அதன்பின் வந்த டிமெல்லோ படுகாயமுற்று புறமுதுகிட்டு ஓடியது வரலாறு. அடுத்து, டான்மாஸ்கான் ஹாஸ் தலைமையில் வந்த படையும் தோல்வியுற்று பெரும் இழப்புடன் கோவா திரும்பியது. கடற்கொள்ளைக்காரன் டிமெல்லோ தலைமையில் வந்த படையும் 22 கப்பல்களை இழந்து விழுந்தடித்து விரண்டோடியது.

போர்ச்சுகீசியர் வந்து இறங்கிய 1498 முதல் 1600 வரை நான்கு கடற்படைத் தளபதிகள் மாறினர். கள்ளிக்கோட்டையில் 15 மன்னர்கள் மாறினர். பல மன்னர்கள் போர்ச்சுகீசியரின் மது, மாது மயக்கத்தில் நாட்டைக் காட்டிக் கொடுத்தனர். ஆனால், குஞ்ஞாலி மரைக்காயர் தலைமுறை அந்நியருக்கு எதிராகத் தீரமிகு போரை மேற்கொண்டது.

இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் பொன்னானியில் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். அங்கேயே அவருக்கு இறப்பும் நேர்ந்தது. அவரைத் தொடர்ந்து, அவரின் சகோதரர் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் பொன்னானி கோட்டையின் அதிபரானார். பொன்னானியிலிருந்த போர்ச்சுகீசியர்களின் கப்பல்களையும் பண்டக சாலைகளையும் தகர்த்து எறிந்ததன் மூலம் அண்ணனுக்குத் தம்பி சளைத்தவன் இல்லை என்று நிரூபித்தார். பொன்னானியில் இருந்த போர்ச்சுகீசியர்கள் அனைவரையும் விரட்டியடித்தார்.

இவரை நேருக்கு நேர் எதிர்க்கத் திராணியற்ற போர்ச்சுகீசியர்கள் தந்திரமாக ஒரு சதித் திட்டத்தைத் தீட்டினர். சாமுத்திரி மன்னனுக்கு ஆசை காட்டி தங்களது மாய வலையில் அவரை வீழ்த்தினர். நயவஞ்சகனாய் மாறிய சாமுத்திரி, போர்ச்சுகீசியருடன் சேர்த்துகொண்டு 1597ல் பொன்னானி கோட்டையை முற்றுகையிட்டான். போர்ச்சுகீசியர் படையில் 37 பெரிய போர்க் கப்பல்களும், 1500 போர் வீரர்களும் இருந்தனர். சாமுத்திரியின் படையில் 20,000 போர் வீரர்கள் இருந்தனர். இருந்தும் குஞ்ஞாலி மரைக்காயரை முறியடிக்க முடியவில்லை. அந்தப் போரில் 40 போர்ச்சுகீசியத் தளபதிகளை வீழ்த்தியது குஞ்ஞாலி மரைக்காயரின் படை.

கடைசியில், மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை சமாதானம் பேச அழைத்தான் சாமுத்திரி. சமாதானத்திற்கு வந்த அவரை, போர்ச்சுகீசியர்களைக் கொண்டு வஞ்சகமாய்க் கைது செய்ய வைத்தான். அவர் கோவா சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த சிப்பாய்ப் புரட்சியை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராகச் சொல்வது வழக்கம். ஆனால் அதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்னகத்தில் போர்ச்சுகீயருக்கு எதிரான போர் நடந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குஞ்ஞாலி மரைக்காயரின் வீர வரலாற்றையும் நாம் நினைவில் ஏந்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசு ஒரு கப்பலுக்கு குஞ்ஞாலி என்று பெயரிட்டது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

தொடரும்…

Related posts

Leave a Comment