daniel haqiqatjou liberalism tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (2)

Loading

(முதல் பகுதியை வாசிக்க)

பொன்விதி பற்றி இஸ்லாம் VS. நவீனத்துவம் பாடநெறியில் நான் விவரித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த விதி தாராளவாதச் சிந்தனையிலிருந்து வருவதே. சமூகத்தில் அதற்கு இன்று பெரும் ஏற்பு நிலவுகிறது. பொதுவாகவே தாராளவாதம் இப்படியான உள்ளடக்கமற்ற, மேற்போக்கான பல கருத்தாக்கங்களை பலமானவை என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது. நடைமுறைக்கு அவையெல்லாம் ஒத்துவராதவை. உண்மையில், தாராளவாதம் ஓர் அஸ்திவாரமற்ற கட்டடம். அதன் கருத்தாக்கங்களுள் முதன்மையானவற்றை ஒவ்வொன்றாக நம்மால் கட்டுடைக்க முடியும்.

தீங்குக் கொள்கையை (Harm Principle) எடுத்துக்கொள்ளுங்கள். அது அறம் சார்ந்த வழிகாட்டலை வழங்குவதாக தாராளவாதம் வாதிடுகிறது. பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதையும் நாம் செய்யலாம் என்பதே தீங்குக் கொள்கையின் சாரம். “ஒரு சிவில் சமூகத்தின் ஏதேனுமோர் அங்கத்தவர் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக இருந்தால் அது பிறருக்கு அவரால் தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்காகவே இருக்க வேண்டும்” என்பார் நவீனச் சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில் (On Liberty, 1859). இதையொத்த கருத்தையே ஜான் ழாக், இம்மானுவேல் கான்ட் உள்ளிட்டோரும் முன்வைத்தார்கள்.

அறம்சார் விதிமுறைகள் தீங்கு விளைவிப்பதோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எனவே, சரி – தவறுகளை தீங்குக் கொள்கையைக் கொண்டு மட்டுமே வரையறுத்துவிட முடியாது. எவையெல்லாம் தீங்கு விளைவிப்பவை என்பதேகூட ஒவ்வொருவரின் சிந்தனைச் சட்டகத்தைப் பொருத்து மாறுபடக்கூடியதுதான். உதாரணத்துக்கு, மேற்கத்திய பெண்ணியவாதிகள் கட்டற்ற பாலியல் சுதந்திரம் கோருகிறார்கள். அது அவசியமான ஒன்று என்கிறார்கள். ஆனால், அது பாதகமான விளைவுகளையும் தீங்குகளையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வாதத்துக்காக நவீன சிந்தனைச் சட்டகத்தை, குறிப்பாக தீங்குக் கொள்கையை, நாமும் ஏற்பதாக வைத்துக்கொள்வோம். விபச்சாரத்தால் ஏராளமான தீங்குகள் உண்டாகின்றனவே. தாராளவாதச் சமூகத்தில் அதை எதிர்க்க அனுமதிக்கப்படுவோமா? அதில் ஆன்மிக ரீதியான தீங்குகளும் இருக்கின்றன. என்றாலும், அதை நவீனத்துவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். அதைத் தாண்டி, தனிமனித அளவில், குடும்ப அளவில், சமூக அளவில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையாவது அவர்கள் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?

விபச்சாரத்தால் ஏற்படும் தீங்குகளுள் ஒன்று, தந்தையில்லாமல் வளரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது. அதன் எதிரொலியாக, குழந்தை வளர்ப்பில் தீவிரமான சிக்கல்கள் உருவாகின்றன. பிள்ளைகளுக்கு நடத்தையில் பிரச்னை இருப்பது தொடங்கி, அவர்களிடையே மன அழுத்தம், போதைப் பொருள் பயன்பாடு, பள்ளியை பாதியில் நிறுத்துதல், தற்கொலை போன்றவை அதிகரிப்பதுவரை பல்வேறு விதத்தில் சிக்கல்கள் பரிணமிக்கின்றன. சமூகத்துக்கும் இதனால் பெருங்கேடு உண்டாகிறது. மேற்குலகில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைக் கொண்டே இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுகிறேன்.

தந்தையில்லாமல் குழந்தைகள் வளர்வதிலுள்ள பிரச்னைகளை ஏற்கும் மேற்குலக அறிவுஜீவிகள், அதைத் தடுக்க கருக்கொலையை ஊக்குவிக்கிறார்கள். இதுவொரு தீர்வா?

இஸ்லாம் சரியான வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது. பாலியல் நடத்தையில் கட்டுப்பாடுகள் விதித்தல், பாலினக் கலப்பை ஊக்குவிக்காமல் இருபாலருக்குமான தொடர்பாடலை மட்டுப்படுத்துதல், ஹிஜாபை வலியுறுத்துதல், விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனைகள் வழங்குதல் முதலானவற்றின் மூலம் ஆரோக்கியமான சமூக அமைப்பை அது ஏற்படுத்துகிறது.

தொடரும்…

(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (2)”

Leave a Comment