கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (3)

Loading

அறம்: இருவேறு கண்ணோட்டங்கள்

எது அறம், எது அறமல்ல என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதில் இஸ்லாமும் நவீனத்துவமும் முரண்படுகின்றன. சரி – தவறைப் பிரித்தறிய இரண்டுமே வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. சமூகம் முன்னேறும்போது அற மதிப்பீடுகள் புதிது புதிதாகக் கண்டடையப்படுவதாகவும், மதங்கள் தேங்கி நிற்பதாகவும் முற்போக்குவாதிகள் வாதிடுகின்றனர். நாம் முன்சென்ற தலைமுறையினரைவிட அறிவில் வளர்ச்சியடைந்துள்ளதால் அவர்கள் சரியென்று கருதிய பல விஷயங்கள் இன்று தவறாகியுள்ளன என்கிறார்கள்.

பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதை வேண்டுமானாலும் நீ செய்யலாம் எனும் கருத்தாக்கம் (No Harm Principle) இவர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொள்வது தவறல்ல எனும் நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதைத் தவறென்று சொல்வது குற்றப்படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தில் அற மதிப்பீடுகள் மாறிக்கொண்டே இருப்பவையல்ல, அவை நிலையானவை. நபிகளார் அவற்றைத் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஒரு பிரபல ஹதீஸை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். “வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நடைமுறையில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை. செயல்களில் கெட்டது (நபியின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத) பித்அத்கள். பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்”.

இஸ்லாமிய அறிஞர்கள் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மரபைக் கற்று இஸ்லாமியச் சிந்தனையை முறைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்களே அன்றி, புதிதாக எதையும் கண்டுபிடிக்கவோ புகுத்தவோ இல்லை. தற்காலத்தில் இஸ்லாத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்வோர் மரபிலிருந்து முற்றிலும் முரண்பட்டு நிலைப்பாடுகள் எடுப்பதைக் காண்கிறோம். அவற்றை நபியோ, அவர்களின் தோழர்களோ, மரபார்ந்த இஸ்லாமிய அறிஞர்களோ எடுத்திருக்க மட்டார்கள். இஸ்லாமியப் பிரதிகளை மனம் போன போக்கில் பொருள்கோடல் செய்ய முயல்வதன் விளைவு இது.

பிரதிகளுக்குப் பொருள் கொள்வது, அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது போன்றவற்றுக்கு பன்னெடுங்காலமாக ஒரு மரபுத் தொடர்ச்சி நம்மிடம் உள்ளது. அதிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொண்டு நூதனமான நிலைப்பாடுகளை எடுப்பது நம்மை வழிபிறழச் செய்யும்.

பொன்விதியும் இஸ்லாமிய அற மதிப்பீடுகளும்

“உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அதேபோல் மற்றவர்களையும் நடத்து” எனும் பொன்விதி நவயுக அறத்தின் முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. எல்லா மதங்களிலும் இது வலியுறுத்தப்படுவதாக பல போஸ்டர்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. உண்மையில் மேற்போக்கான, உள்ளடக்கமில்லாத வெற்றுத் தத்துவம் இது. இதைக் கொண்டு எந்த வழிகாட்டுதலையும் நாம் பெற முடியாது.

தனிமையில் இருப்பது ஒருவரின் விருப்பமாக இருக்கலாம். ஒருவருக்கு மது அருந்துவது விருப்பமாக இருக்கலாம். அவற்றையெல்லாம் மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல முனைந்தால் அது பிரச்னையைத்தான் தோற்றுவிக்கும். இல்லையா? ஒவ்வொருவர் மனத்திலும் தோன்றும் எண்ணங்களைக் கொண்டு அவர்களைச் செயல்படுமாறு கோருவது சரியான திசையில் மனிதர்களை வழிநடத்தாது. அது ஒருவகையான சுயவழிபாடு.

“உனக்கு விரும்புவதையே உன் சகோதரனுக்கும் விரும்பு” என்றொரு நபிமொழி உண்டு. அதையும் பொன்விதியையும் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. எது விரும்பத்தக்கது, எது விரும்பத்தகாதது என்பதை இறைவனே தீர்மானிக்கிறான். மன இச்சையால் வழிகாட்ட முடியாது என்பதையும் அவன் தெளிவுப்படுத்தியிருக்கிறான்.

“உங்களில் ஒருவர் நான் கொண்டு வந்ததை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாதவரை விசுவாசம் கொண்டவராக மாட்டார்” என்று நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள். இறைவன் விரும்பாததை ஒருவர் விரும்பினால்கூட அவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்பதை இதனூடாக நாம் விளங்கலாம். ஆக, இஸ்லாத்தின் இக்கருத்து பொன்விதியின் உள்ளடக்கமற்ற கருத்துக்கு முரணானதே.

நம் செயல்கள் மட்டுமின்றி, விருப்பங்கள்கூட இறை உவப்புக்கு விரோதமாக அமையக் கூடாது என்று வலியுறுத்துவதன் மூலம், நமது கல்பைத் தூய்மையாக அமைத்துக்கொள்ள இஸ்லாம் வழிகாட்டுகிறது. நோன்பு, தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளைக் கடைப்பிடிப்பது உளத்தூய்மையை நம்மிடையே ஏற்படுத்துவதோடு, செயல்களிலும் அது பிரதிபலிக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பின்வரும் ஹதீஸ் புகாரீயில் இடம்பெறுகிறது: “எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன்.”

அற்புதமான நபிமொழி இது. ஒருவரின் மனத்துக்கும் செயலுக்குமான தொடர்பை இது நமக்கு நன்கு உணர்த்துகிறது. இதுபோல், கல்புக்கும் அறிவுக்கும்கூட மிக நெருங்கிய தொடர்புண்டு. மனம் மாசுபட்டிருந்தால் அறிவைக் கொண்டு உண்மையையும் சத்தியத்தையும் இனங்காண முடியாமல் போகும். ஆக, இஸ்லாத்தில் அறத்துக்கும் கல்புக்கும் அறிவுக்கும் அனுக்கமான உறவுண்டு என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தொடரும்…

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “இஸ்லாம் Vs. நவீனத்துவம் (3)”

  1. […] பற்றி இஸ்லாம் VS. நவீனத்துவம் பாடநெறியில் நான் விவரித்தது […]

Leave a Comment