இஸ்லாம் Vs. நவீனத்துவம் (4)
மனித உள்ளுணர்வு
பல்வேறு விஷயங்களில் பெரும்பாலான மக்கள் பொது ஏற்பு கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம் மனிதன் இயல்பாகக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுதான். அது தர்க்கத்துக்கும் அனுபவவாதத்துக்கும்கூட ஓர் அடிப்படையாக விளங்குகிறது.
முரண்படா கொள்கை என்பது தர்க்கத்தின் ஆதாரமான கருத்தாக்கமாகும். உதாரணத்துக்கு, என் கையிலுள்ள புத்தகத்தின் அட்டை கறுப்பு நிறம் என்றும், கறுப்பு நிறமல்ல என்றும் சொன்னால், அதில் முரண்பாடு உள்ளது. இரண்டுமே சரியான பதிலாக இருக்க முடியாது. ஆக, அதில் தர்க்கப் பிழை இருக்கிறது. சரி, உங்களிடம் ஒருவர் இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது, இரண்டுமே சரிதானே என்று கேட்டால், எப்படி அவருக்கு யதார்த்தத்தை விளக்குவீர்கள். அவரை மனப்பிறழ்வு கொண்டவர் என்றல்லவா நினைப்பீர்கள்? காரணம், இயல்பாக மனிதர்கள் சிந்திக்கும் விதத்தில் அவர் சிந்திக்கவில்லை என்பதால்.
தர்க்கத்தைப் போன்றே அனுபவவாதத்துக்குள்ளும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது. குழந்தைகளுக்கு மொழியை எப்படி கற்பிப்பீர்கள்? ஒரு பொருளைக் காட்டி அது இன்னது என்று சொல்லிக்கொடுப்பீர்கள் அல்லவா? ஆள்காட்டி விரலைக் கொண்டு ஒன்றைக் காட்டித் தந்தால் குழந்தை அதை சரியாக இனங்கண்டுகொள்கிறது. அதாவது, எதை நோக்கி விரலை நீட்டுகிறோமோ அதை குழந்தை பார்க்கிறது. உங்களின் அந்தச் செய்கை ஒரு சொல்லற்ற மொழி. விரலை நீட்டும் திசையில் பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கவில்லை. அது தன்னியல்பாக அந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
நான் சொல்ல வருவது, குழந்தைகள் பிறக்கும்போதே அடிப்படையான உள்ளுணர்வைக் கொண்டுள்ளார்கள் என்பதையே. குழந்தைகளை காலிப் பலகைபோல் நாம் பார்க்க வேண்டியதில்லை என்றும், பல்வேறு மொழிகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படைகளுக்கு மத்தியில் ஒப்புமைகள் காணப்படுவதாகவும் கூறுவார் நோம் சோம்ஸ்கி. இதையே உலகளாவிய பொது விதி (The Universal Grammar) என்று அவர் கோட்பாட்டாக்கம் செய்தார்.
ஒரு குழந்தை எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், யாருடனும் தொடர்பாட அனுமதிக்கப்படாமல் ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிறுவனாக அதை மீட்கும்போது அவனால் மொழியையே புரிந்துகொள்ள முடியவில்லை. பேச்சுப் பயிற்சி கொடுத்தாலும் அவனால் அதை உள்வாங்க முடியவில்லை. அந்த ஆற்றலையே அவன் இழந்துவிட்டிருந்தான். ஆக, மனிதர்கள் இயல்பாகக் கொண்டுள்ள ஆற்றல் எவ்வகையிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது அது போய்விடுகிறது.
எதிலெல்லாம் உள்ளுணர்வு தொழிற்படுகிறது?
- அறிவார்ந்த / தர்க்க ரீதியான உள்ளுணர்வு
- புலனறிவாத உள்ளுணர்வு
- அறம்சார்ந்த உள்ளுணர்வு
- அழகியல் சார்ந்த உள்ளுணர்வு
- கருத்தியல் சார்ந்த உள்ளுணர்வு
இப்படி உள்ளுணர்வு பலதரப்பட்ட வகைகளில் தொழிற்படுகிறது. ஃபித்றாவையும் தனியாக இத்துடன் இணைத்துக்கொள்ளலாம். இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவை அனைத்தும் மனிதர்களிடம் உள்ளார்ந்து இருப்பதாலேயே இவை யாவும் அகவயமானவை என்றும், ஒருவருக்கொருவர் மாறுபடும் என்றும் கொள்ள முடியாது. தர்க்கத்துக்கு நாம் பார்த்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என் கையிலுள்ள புத்தகத்தின் கறுப்பு நிற அட்டையை ஒருவர் கறுப்பு நிறமல்ல என்று சொல்ல முடியாது அல்லவா? ஆக, தர்க்கத்திலும் புலனறிவாதத்திலும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
ஒரு தந்தை தன் இரு மகன்களில் ஒருவருக்கு பத்து சாக்லேட்டுகளும், இன்னொருவருக்கு ஒரு சாக்லேட்டும் கொடுத்தால், ஒருவர் அது அநீதமானது என்று தந்தையிடம் வாதிடுவார் அல்லவா? அதுகூட உள்ளுணர்விலிருந்து வருவதுதான். இதுபோல், இயற்கையை விஞ்சிய சக்தி இருக்கிறது, வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்பனவற்றையெல்லாம் மனித மனம் ஏற்கும்.
இவ்வளவும் சொல்லக் காரணம் இருக்கிறது. நவீனத்துவம் மரபை ஏற்க மறுப்பது போன்றே உள்ளுணர்வு விஷயத்திலும் முரண்டுபிடிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வகையான உள்ளுணர்வின் முதல் இரண்டு அம்சங்கள் போக மற்ற அனைத்தையும் அது நிராகரிக்கிறது. தர்க்கம், புலனறிவாதம் சார்ந்த உள்ளுணர்வை ஏற்கும் நவீனத்துவம், மீதமுள்ளவற்றை கலாச்சாரமும், மதமும் திணித்ததாக வாதிடுகிறது.
அற உள்ளுணர்வைப் பொருத்தமட்டில், மேற்குலக நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் பயன்பாட்டுவாதத்தை (Utilitarianism) முன்வைக்கிறார்கள். அதாவது, வரைமுறையில்லாமல் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொண்டே இருப்பது, துன்பத்தை மட்டுப்படுத்துவது பயன்பாட்டுவாதத்தின் அடிப்படை. அதை மனித இயல்பின் ஓரங்கமாக இவர்கள் கொள்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் தாராளவாதம் சுதந்திரத்தின் எல்லையை விரிவாக்கிக்கொண்டே இருக்க வலியுறுத்துகிறது.
இறைத் தேடல், லட்சியத்துக்காக உயிர் துறத்தல், குடும்பத்துக்காகத் தியாகங்கள் புரிவது என்பனவற்றையெல்லாம் கலாச்சாரம் அல்லது மதம் சார்ந்த உருவாக்கம் என்று நவீனத்துவர்கள் கருதுகிறார்கள். மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டும், பெருக்கிக்கொண்டும் இருப்பதே மனிதனின் இயல்பு என்று கூறுவதன் மூலம் சமய மரபுகள் அர்த்தமற்றதாகிவிடுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோனதன் ஹெய்ட் என்ற சமூக உளவியலாளர், மேற்கத்தியர்கள் பலர் “WEIRD”-ஆக இருப்பதாய் அடையாளப்படுத்தினார். அதன் பொருள், மேற்கத்திய கல்வி பெற்ற தொழில்மயமான உயர்குடி ஜனநாயகவாதி (Western Educated Industrialized Rich Democratic) என்பது. அவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அற மதிப்பீடு சார்ந்த கேள்விகள் அதில் கேட்கப்பட்டன. அதிலொரு கேள்வி: இறந்த கோழியை உண்பதற்கு முன்பு அதனுடன் உடலுறவு வைத்துக்கொள்வது சரியா, தவறா?
இந்தக் கேள்விக்கு பல WEIRD வகையறாக்கள் சரி என்று பதிலளித்திருக்கிறார்கள். அவ்வாறு உடலுறவு கொள்வதால் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை, பயன்பாட்டுவாதத்துடனும் அது முரண்படவில்லை என்ற காரணத்தால் அதை அவர்கள் ஆதரித்திருக்கிறார்கள். ஆனால், இதே கேள்வியை மேற்கத்தியரல்லாத, ஏழைகளாக இருக்கின்ற, தொழில்மயமாகாத பகுதிகளைச் சார்ந்த மக்களிடம் கேட்டால் அந்தச் செயல் மிகவும் தவறானது என்று சட்டெனச் சொல்லிவிடுவார்கள். முஸ்லிம் சமூகத்தினரிடம் இதைக் கேட்டால், அந்தச் செயல் தன்னையும், தன் உணவையும், அதை வழங்கிய இறைவனையும் இழிவு செய்வதாக அவர்கள் கூறுவார்கள். இப்படி பலர் அதைத் தவறென்று சுட்டிக்காட்டுவதற்குப் பின்னால் இருப்பது உள்ளுணர்வுதான். அது பலமாக அனைவரிடமும் குடிகொண்டுள்ளது.
ஆனால், மேற்குலகில் அந்த உணர்வையே அழிக்கும் வகையில் மூளைச் சலவை செய்யப்படுகிறது. அதனால்தான் அங்குள்ள பலர் மேற்சொன்னது போன்று பதிலளித்திருக்கிறார்கள். புதிதாக சிலவற்றை நம் சிந்தனையில் திணிப்பது மட்டுமின்றி, ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளையும் உள்ளுணர்வையும் அழிப்பதும் மூளைச் சலவைதான் என்பதை நினைவில் கொள்க.
கொடுமை என்னவென்றால், இந்த மேற்கத்தியர்களைப் போல் நாம் சிந்திக்கவில்லை என்றால், நம்மை பின்தங்கியோராகவும், படிப்பறிவில்லாதோராகவும் அடையாளப்படுத்துவார்கள். உண்மையில், நவீனத்துவம் மனிதன் இயல்பாகக் கொண்டுள்ள உள்ளுணர்வை அழிக்கவும் உருக்குலைக்கவும் முயல்கிறது. அத்தோடு, அதன் கருத்தியல் மேலாதிக்கத்தை உலகில் நிறுவ முனைகிறது. இந்தப் பின்னணியில், இஸ்லாம் குறித்து பல குழப்பங்களும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு எழுகின்றன.
ஆக, நாம் எந்த சிந்தனைச் சட்டகத்தின் வழியாகச் சிந்திக்கிறோம் என்பது முக்கியமானது. அற மதிப்பீடுகள், மரபு, மொழி, உள்ளுணர்வு என எல்லாவற்றிலும் எப்படி நவீனத்துவக் கண்ணோட்டம் இஸ்லாத்திலிருந்து மாறுபடுகிறது என்பதையெல்லாம் நாம் இதுவரை பார்த்தோம். இனி, நவயுக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் இஸ்லாத்தைக் கற்க இந்தப் பாடநெறி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வஸ்ஸலாம்.
முற்றும்.
(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)