பேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”
[இமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து மொழிபெயர்த்து தந்திருக்கிறேன்]
காட்சி 1
மனித சாரத்தை அதன் கீழ்நிலையிலிருந்து வானவரின் தூய்மை நிலைக்கு உயர்த்தும் ஒரு வழிகாட்டியே ‘பேரின்ப ரசவாதம்’.
அதிகமதிகம் இறைவனை அறிதலின் ஊடாக இந்நிலைமாற்றம் நிகழ்கிறது. எனினும், இறைவனை அறியத் தொடங்கு முன் மனிதன் தன்னை அறிந்துகொள்ள வேண்டும்.
காட்சி 2
தன்னை அறிதலானது மனிதனின் இருவேறு ஆக்கக் கூறுகளைப் புரிந்து கொள்வதிலிருந்து துவங்குகிறது:
- உடல்
- உள்ளம் (அல்லது குறிப்பாகச் சொல்வதானால், அது ஆன்மிக உள்ளம் பற்றிய புரிதலாகும்).
காட்சி 3
உள்ளத்தை புரிந்து கொள்வதில் ஐந்து படிநிலைகள் உள்ளன:
முதலில், அதன் இருப்பை அங்கீகரிக்க வேண்டும்.
அடுத்து, இறைவனைப் பற்றிய அறிவின் மூலமே உள்ளம் மகிழ்ச்சியை எய்துகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இறைவன் பற்றிய அறிவைப் பெற, அவனது படைப்பு பற்றிய அறிவு அவசியம்.
காட்சி 4
உடலை ஒரு இராஜ்ஜியமாகக் கொள்ளலாம். அங்கங்களும் உறுப்புகளும் அதன் பணியாட்கள்… இச்சை அதன் தண்டல்காரர்… கோபம் அதன் காவலதிகாரி… அறிவு அதன் பிரதம மந்திரி…உள்ளமே அதன் அரசன்.
கோபத்திற்கும் இச்சைக்கும் அடிமையாவதா?அல்லது ஆன்மீகப் பரிபூரணத்தை அடைந்து கொள்வதற்கான வாகனமாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதா? என்பவற்றுக்கு இடையிலான நிலையான ஆன்மீகப் போராட்டத்தில் உடல் சிக்குண்டுள்ளது.
உள்ளம் அறிவுக்கு ஆலோசகனாகச் செயற்பட்டு, கோபத்தையும் இச்சையையும் கட்டுக்குள் வைக்கும்போது, மகிழ்ச்சிக்கான பாதையை அணுகுவது சாத்தியமாகிறது.
இதற்கு மாறாக, அறிவானது கோபத்திடமும் இச்சையிடமும் சிறைபடுமெனில் இராஜ்ஜியம் தரிசாகி, உள்ளம் நாசமடைகின்றது.
காட்சி 5
அறிந்து கொள்ளுங்கள்:
* இச்சையும் கோபமும் உடலை போஷித்துப் பாதுகாக்கவென படைக்கப்பட்ட பணியாட்கள்.
* உடல் என்பது புலன்களை சுமப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட பணியாள்.
* புலன்கள் என்பன அறிவைத் திரட்டவும், அறிவுக்கு சேவகம் புரியவும் படைக்கப்பட்டவை.
* அறிவு உள்ளத்தின் விளக்காக படைக்கப்பட்டுள்ளது; அதன் ஒளியைக் கொண்டே உள்ளம் தெய்வீகப் பிரசன்னத்தை காண்கிறது. இவ்வகையில், அறிவென்பது உள்ளத்தின் பணியாள் எனலாம்.
* உள்ளம் தெய்வீகப் பிரசன்னத்தின் பேரழகை கண்ணுறும் சாட்சியாகப் படைக்கபட்டுள்ளது என்ற வகையில் அதன் பணியாளாக இருக்கிறது.
காட்சி 6
உள்ளத்தின் குணங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
1. ஆத்திரம், அழிவு, கொலை என்பவற்றில் மகிழ்ச்சி காணும் காட்டுமிராண்டிக் குணம்.
2. உண்ணுதல், உறங்குதல், புணருதல் என்பவற்றில் மகிழ்ச்சியை நாடும் மிருக குணம்.
3. தீமை, துரோகம், மோசடி என்பவற்றால் செழித்து வளரும் சாத்தானிய குணம்.
4. தெய்வீகப் பிரசன்னத்தைக் குறித்த ஆழ்ந்த சிந்தனையின் ஊடாக மகிழ்ச்சி தேடும் வானவர் குணம்.
ஆன்ம மகிழ்ச்சியை அடைய வேண்டுமெனில், உள்ளத்தின் வானவர் குணமானது மேற்கூறிய காட்டுமிராண்டி, மிருக, சாத்தானிய குணங்களை மிகைத்து மேலோங்க வேண்டும்.
காட்சி 7
இப்போது நீங்கள் உள்ளத்தின் குணங்களை அறிந்து கொண்டீர்கள். உள்ளத்தின் மேன்மைதான் மனிதர்களை மிருக நிலையிலிருந்து உயர்த்துகிறது என்பதையும் அறிக.
அறிவின் ஊடாக வரும் மேன்மை இரு தரத்திலானது:
– ஐம்புலன்கள் எனும் கதவின் வழியாக உள்ளம் திரட்டிக் கொள்ளும் மேன்மை அதிலொன்று; கலை மற்றும் அறிவியல்களை கற்பது போன்றவற்றைச் சொல்லலாம்.
– வானுலகம், தெய்வீக உதிப்புகள் என்பவற்றுக்கான கதவின் வழியாக உள்ளம் நேரடியாகத் திரட்டிக் கொள்ளும் மேன்மை மற்றது.
காட்சி 8
உள்ளத்தை ஒரு கிணறாகவும் அறிவை அதிலுள்ள தண்ணீராகவும் பாவித்துக் கொள்ளலாம்.
ஐம்புலன்களும் அக்கிணற்றை நிரப்பும் சுனைகளாக உள்ளன.
கிணற்றின் அடிப்பகுதியில் புழுதி படிந்திருக்கிறது.
அதற்கும் கீழே ஒரு தூய ஊற்று உள்ளது.
அதனை – அதாவது, தெய்வீக ஊற்றினை- அப்புழுதி ஒரு திரை போல் மறைத்துக் கொண்டுள்ளது.
உள்ளத்தை கீழுள்ள தூய நீரால் நிரப்ப வேண்டுமெனில், முதலில் சுனைகளைத் தடுத்து நிறுத்தி தண்ணீரைக் காலி செய்ய வேண்டும்.
பின்பு, கிணற்றின் அடிபாகத்திலுள்ள புழுதியை தூர்வாற வேண்டும்.
ஆன்மாவை நெறிப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் கடுமுனைப்பின் மூலம் இது சாதிக்கப்படுகிறது.
அதன் பிறகே, வற்றாத அறிவின் ஊற்றிலிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் நீரினால் உள்ளம் நிரம்பும்.
காட்சி 9
உண்மையில் உலக மாந்தர்கள் குறையுடையோராகவும் பலவீனராகவும் உள்ளனர்.
உடலின் கீழ்நிலைக் குணங்களை அறிவுக்குக் கீழடங்கச் செய்வதற்காக உள்ளம் விடாமல் போராடிக் கொண்டுள்ளது.
இறைவனைப் பற்றிய அறிவின் மூலமாகவும், அதன் திறவுகோலான தன்னைப் பற்றிய, உள்ளத்தைப் பற்றிய, அதன் மேன்மையைப் பற்றிய அறிவின் மூலமாகவுமே இது சாத்தியமாகும்.
அதுவே மனிதனை மிருக நிலையிலிருந்து வானவர் நிலைக்கு உயர்த்தும்.
‘பேரின்ப ரசவாதத்தின்’ ஆரம்பமும் அதுவே.
-நிறைவு-