கட்டுரைகள் 

முஹம்மது அபூ ஸஹ்றா – ஓர் அறிமுகம்

Loading

[மெல்லினம் வெளியீடாக பிரசுரமான ‘இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்’ நூலின் ஆசிரியர் முஹம்மது அபூ ஸஹ்றா பற்றி ஒரு அறிமுகத்தை கீழே தந்துள்ளேன். ‘அறப் நியூஸ்’ செய்திப் பத்திரிகையில் ‘Scholar of renown: Muhammad Abu Zahrah’ என்ற தலைப்பில் ஆதில் சலாஹி எழுதிய குறிப்புகளையும், International Institute of Advanced Islamic Studies (IIAIS) தலைவர் முஹம்மது ஹாஷிம் கமாலி எழுதிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும் தழுவியே இவ்வறிமுகம் ஆக்கப்பட்டுள்ளது.]

14311274_1221880024520353_8393092689320517303_o

தனக்கென்று தனித்துவமான புலமைத்துவ மரபொன்றை விட்டுச் சென்ற இருபதாம் நூற்றாண்டு அறிஞர்களில் மிக முக்கியமான ஒருவர் முஹம்மது அபூ ஸஹ்றா. அவர் வாழ்ந்த காலத்திலும் மரணத்திற்குப் பின்னரும், மாபெரும் சர்வதேச அங்கீகாரத்தை அது அவருக்கு உருவாக்கித் தந்துள்ளது.

முஹம்மது இப்னு அஹ்மது இப்னு முஸ்தஃபா அபூ ஸஹ்றா, 1898 மார்ச் 29 அன்று கீழ்எகிப்தின் பிராந்திய தலைநகர்களுள் ஒன்றான அல்-மஹல்லா அல்-குப்றாவில் பாரம்பரியம் மிக்கதொரு குடும்பத்தில் பிறந்தார். சிறுவன் முஹம்மது அபூ ஸஹ்றா குர்ஆனைக் கற்றுத் தரும் இளஞ்சிறார் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின், ஆயிரமாண்டுப் பாரம்பரியம் வாய்ந்த அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பெறும் துவக்கநிலை பள்ளியில் சேர்ந்து தன் கல்வியைத் தொடர்ந்தார். உயர்நிலை பள்ளிக்கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் 1913-ல் தாண்டாவின் அஹ்மதீ மஸ்ஜிதோடு இணைந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.

அவருடைய இயல்பான புத்திக்கூர்மையும் இஸ்லாமியக் கற்கைகளிலான மெய்யான ஆர்வமும் அவரை அங்கு பிரகாசிக்கச் செய்தன. அவர் தன்னுடைய சகாக்களிடமும் ஆசிரியர்களிடம் பரந்த நன்மதிப்பை வென்றெடுத்தார். 1916-ல் இஸ்லாமிய நீதிபதிகளுக்கான நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் முதல் தரத்தினராய்த் தெரிவானது எவருக்கும் ஆச்சர்யம் தரவில்லை. விண்ணப்பித்திருந்தோரில் அநேகர் இவரைக் காட்டிலும் வயதில் பல்லாண்டு மூத்தவர்கள்; வெவ்வேறு பள்ளிகளில் நெடுங்காலமாய் கல்வி கற்றவர்கள்.

பட்டம் பெற்றதற்குப் பிறகு அவர் நீதிபதி பதவியை தேர்ந்தெடுக்கவில்லை. ஷரீஆ துறை ஆய்வுகளின் பால் அவருக்கிருந்த தீராத ஆர்வம் அவரை கல்விப் பணியின் பக்கமே செலுத்தியது. முதலில் அல்-அஸ்ஹரின் உசூல் அல்-தீன் துறையிலும், பிறகு சட்டத்துறையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலாவது, இஸ்லாமியச் சிந்தனையில் தனித்துறை பயிற்சிக்கானது. இரண்டாவது, பல்கலைக்கழக மட்டத்திலான வழமையான சட்டத்துறை. இத்துறையில் அபூ ஸஹ்றாவின் தனித்துறை பயிற்சியானது இஸ்லாமிய சட்டம் என்பதாக இருந்தது என்பதைத் தனியே கூறவேண்டியதில்லை. கல்வித் துறையிலான அவரது முன்னேற்றம் அவரை 1958-ல் இஸ்லாமியச் சட்டத்துறை தலைவராகவும் ஷரீஆ பேராசிரியராகவும் உயர்த்தியது.

அபூ ஸஹ்றாவின் ஆசிரியர்களில் முக்கியமானோராக அப்துல் வஹ்ஹாப் கல்லாஃப், ஷெய்க் அலீ அல்-கஃபீஃப் , அப்துல் அஸீஸ் அல்-குலி போன்றோரை குறிப்பிடலாம்.

அறுபது வயதினராய் ஆனபோது கற்பித்தலில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகும் கூட 1962-ல் அல்-அஸ்ஹரின் ஆய்வுக் கழகத்தில் இணைந்து பணியைத் தொடர்ந்தார். ஷெய்குல் அஸ்ஹர் ஷெய்க் அப்துல் ஹலீம் மஹ்மூது அவர்கள் ஷெய்க் அபூ ஸஹ்றா பற்றி கூறும்போது, “ஆய்வுக் கழகத்தில் எந்தவொரு பிரச்சினையாயினும் நாங்கள் முஹம்மது அபூ ஸஹ்றா அவர்களை அணுகி, குறித்த விவகாரத்தில் அவருடைய அபிப்பிராயத்தை கேட்டுப் பெறுவோம்” என்கிறார். ஒவ்வொரு விவகாரங்களிலும் அவருடைய பார்வை தீர்க்கமானதாக இருந்தது மட்டுமின்றி, அவர் தனது நிலைப்பாடுகளில் தளராத உறுதியுடன் நிற்பவராகவும் இருந்தார்.

குர்ஆனை மனனம் செய்வதே தனது துவக்கநிலை கல்வியாக அமைந்ததென அபூ ஸஹ்றா குறிப்பிடுகிறார். இளம் பிராயத்தினராய் இருந்தபோதே அவர் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்தார். அப்பிராயத்திலேயே இரு தனித்தன்மைகள் அவரில் எடுப்பாய் தென்பட்டன. முதலாவது, சுதந்திரச் சிந்தனை; “பிடிவாதம் பிடித்தவன்” என்பதாக பிறர் அவரை அழைத்திட இது காரணமாயிற்று. இரண்டாவது, அனைத்து மட்டங்களிலுமான எதேச்சதிகாரப் போக்கின் மீது அவருக்கிருந்த வெறுப்பு. அவரது பருவமெய்தலுக்குப் பிந்தைய வாழ்விலும் இத்தனித்தன்மைகள் அவரில் தொடர்ந்து பிரதிபலித்தன. வலுமிக்க எதிர்ப்பு வரினும், தான் எதை சத்தியம் என்று நம்பினாரோ அதற்காக எழுந்து நிற்கும் துணிச்சலை இவை அவருக்கு வழங்கின.

சமூகத்தில் செல்வாக்கு பெற்றோர், அதிகாரத்தில் இருப்போர் ஆகியோரிடம் அபூ ஸஹ்றா எப்போதும் ஒரு தொலைவை பேணி வந்தார். சர்வாதிகார ஆட்சியை வன்மையாக எதிர்ப்பவராகவும், கலந்தாலோசனை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சட்டத்தின் ஆட்சியை வலுவாக ஆதரிப்பவராகவும் இருந்தார். ஜமால் அப்துன் நாசர் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினரை மிக மோசமாக நடத்தியதை ஷெய்க் அபூ ஸஹ்றா விமர்சித்த காரணத்தால், அவர் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார். இதனால் அவருடைய பணி வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் பாதிப்புற்றது. அதே போல் ஹதீஸின் அதிகாரத்தை குறைவுபடுத்திய லிபியாவின் கத்தாஃபியை விமர்சித்தார். எகிப்து அதிபர் அன்வர் சதாத்தின் மனைவி ஜிஹான் சதாத் அரசியல் விவகாரங்களில் அத்துமீறி மூக்கை நுழைத்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஷெய்க் அபூ ஸஹ்றா அதிபருக்கு உபதேசம் செய்தார்.

முஹம்மது அபூ ஸஹ்றா விளைவு வளமிக்கதோர் எழுத்தாளர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியிருக்கிறார். அவை இஸ்லாமிய சட்டம், திருக்குர்ஆன் விரிவுரை, இறையியல், ஹதீஸ் ஆய்வுகள், சமூகம், இலக்கியம் போன்ற துறைகள் சார்ந்தவை.

அவரது முதல் நூல், ‘உசூல் அல்-ஃகிதாபா’ (சொல்லாட்சிக் கோட்பாடுகள்) என்பதாக அமைந்தது. அதே போல் ‘தாரீக் அல்-ஜதல்’ (விவாதக் கலையின் வரலாறு), ‘தியானத் அல்-கதீமா’ (பண்டைய மதங்கள்), ‘முஹாதறாத் ஃபீ நஸ்ரானிய்யா’ (கிறிஸ்தவம் பற்றிய உரைகள்) போன்றவற்றை அவர் ஆரம்ப கட்டத்தில் எழுதிய நூல்கள் என்று சொல்லலாம்.

இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்தம் வாழ்நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றி மூன்று தொகுதிகளால் ஆன நீண்டதொரு வரலாற்று நூலையும் அவர் இயற்றியுள்ளார். திருக்குர்ஆன் ‘முடிந்தால் தன்னுடையது போன்ற சிறு பகுதியையேனும் தொகுத்துருவாக்குமாறு’ படைப்பினங்கள் அனைத்திற்கும் சவால் விடுத்திருக்கிறது. அத்தகைய திருக்குர்ஆனின் தனித்துவ பாணியினது தன்னிகரற்ற பண்புகளை சிறப்புற எடுத்துரைக்கும் ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார். திருக்குர்ஆனின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்த ஆழமானதொரு ஆய்வினை அவர் இந்நூலில் முன்வைக்கிறார். திருக்குர்ஆன் ஒரே கதையை பலமுறை திரும்பத் திரும்ப கூறிய போதிலும், ஒவ்வொரு முறையுமே அவற்றின் மீது வெவ்வேறு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் அதனை முற்றிலும் புதியதொன்றாக ஒலிக்கச் செய்கின்றமை பற்றிய ஆய்வு அவற்றுள் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் தோன்றிய பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக ஷெய்க் அபூ ஸஹ்றா எழுநூறு பக்கங்களை மிகைத்த ஒரு பெரும் நூலை (‘தாரீக் அல்-மதாஹிப்’) எழுதியுள்ளார். அதில் ஒரு அத்தியாயத்தை புதிதாய் தோன்றிய சிந்தனைப் பிரிவுகளான வஹ்ஹாபிய்யா, பஹாஇய்யா, காதியானிய்யா போன்றவற்றுக்காக ஒதுக்கியுள்ளார். வஹாபிசத்தின் நிறுவனர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் அவரின் பின்பற்றாளர்களும் சிந்தனையை பொறுத்தவரை இப்னு தைமிய்யாவினால் உணர்வூக்கம் பெற்றிருந்து உண்மை என்றாலும், நடைமுறையில் வரம்புமீறிய கடும்போக்கு கொண்டவர்களாக இருந்தார்கள் என்று ஷெய்க் அபூ ஸஹ்றா விமர்சிக்கிறார்.

அவரது நூல்களுள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்கள்தாம். அவை ஒவ்வொன்றையும் அவர் இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் வைத்திருந்த ஆழ்ந்த அன்பையும் மகத்தான மதிப்பையும் இவை பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில், இம்மாபெரும் அறிஞர்களின் ஆழ்ந்த இஸ்லாமிய புலமைத்துவம், அவர்கள் பாவித்த வெவ்வேறு முறைமைகள் ஆகியவற்றுக்கு உள்ளானதோர் அகப்பார்வையை இவை நமக்கு வழங்குகின்றன. அவர் இச்சரிதைகளை மிக விரிவானவையாக அமைத்திருப்பதால் அவ்வறிஞர்கள் மீதும், அவர்தம் புலமைத்துவம் மீதும் செல்வாக்கு செலுத்திய முக்கிய பொதுப் போக்குகளின் உண்மைச் சித்திரத்தை வரைவதை இவை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கின்றன. அதன் பிறகு, அவர்கள் பின்பற்றிய முறைமைகள் பற்றி கலந்துரைடுகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிற முக்கியமான கண்ணோட்டங்களையும் சுருக்கமாக குறிப்பிடுகிறார்.

அவருடைய பிற ஆக்கங்கள், இஸ்லாமிய சட்டத்துறையின் பரந்த வீச்சிலான தலைப்புகளை தழுவியனயாக அமைந்திருக்கின்றன. இவ்வாறு, சொத்துரிமை பற்றியதொரு நூல் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. மற்றுமொரு நூல், ஷியாப் பள்ளிகளுள் ஒன்றான ஜாஃபரிய்யா சட்டப் பள்ளியின் அடிப்படையில் சொத்துரிமை பற்றியது. இஸ்லாமிய சட்டத்தில் ‘குற்றம்’ என்பதன் தத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கென ஒரு முழு நூலையே ஒதுக்கியிருக்கிறார். மற்றுமொரு நூலை, தண்டனைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு ஒதுக்கியிருக்கிறார். தனிமனித-குடும்ப சட்டங்கள், திருமண ஒப்பந்தம், வக்ஃப், உடமைத்துவம், உடன்படிக்கைகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டை தழுவியனவாக அவருடைய பிற சட்டத்துறை ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன.

மதஒப்பீடு பற்றியும் அபூ ஸஹ்றா விரிவாக எழுதியிருக்கிறார். கிறித்தவம் குறித்து ஒரு நூல், பிற நம்பிக்கைகள் குறித்து ஒரு நூல் என இரு நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்க மற்றொரு நூல், இஸ்லாமிய ஃபிக்ஹின் முறைமைத்துவக் கோட்பாடுகள் பற்றிய பாடநூல். அதே போன்று, இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு, இஸ்லாமியச் சமூகத்தின் இயல்பு என சமூக விவகாரங்களை குறித்தும் அவர் நூல்கள் இயற்றியிருக்கிறார். இவ்வெளியிலான தனது மூன்றாவது நூலை, முஸ்லிம் சமுதாயத்தில் சமூகப் பாதுகாப்பு என்ற தலைப்பிற்காக ஒதுக்கியிருக்கிறார். அவரது நூற்தலைப்புகளை வெறுமனே வாசிப்பதே கூட அவரது புலமைத்துவம், அறிவுத்திறம் பற்றிய தெளிவை நமக்கு வழங்கப் போதுமானதாயிருக்கிறது.

முஹம்மது அபூ ஸஹ்றா பல தொகுதிகளாய் அமைந்த தனது திருக்குர்ஆன் விரிவுரையின் கடைசி தொகுதியை எழுதிக் கொண்டிருந்த நிலையில் 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் தனது வீட்டில் வைத்து இறைவனடி சேர்ந்தார். வல்ல நாயன் அவரின் பிழைகளை பொறுத்தருளி தனது எல்லையில்லா கருணையால் அவரை போர்த்திக் கொள்வானாக!

Related posts

Leave a Comment