கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை

Loading

மெளலானா சையித் அபுல் அஃலா மௌதூதி இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாமிய அறிஞர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அபார ஆற்றலையும், இஸ்லாத்திற்கான அவரின் பாரிய பங்களிப்புகளையும் கருத்தில் கொண்டு அவரை ஓர் இமாம் என்றும் முஜத்தித் என்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வர்ணித்துள்ளனர். இஸ்லாமியப் பணிகளுக்கான மன்னர் பைஸல் உலகப் பரிசு மௌலானாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேற்கத்திய இலட்சியவாதங்களும் பிற உலகாயதக் கொள்கைகளும் இஸ்லாத்திற்குப் பெரும் சவாலாக அமைந்ததொரு காலத்தில், அவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடித்தவர்களுள் சிறப்பிடம் பெறுபவர் மௌலானா மௌதூதி என்றால் அது மிகையில்லை. இன்னொருபுறம், இஸ்லாமிய உலகில் போற்றப்படும் அளவுக்கு தூற்றப்படும் ஒருவராகவும் மௌலானா விளங்குகின்றார். ஆம், தற்காலத்தில் மௌலானா மௌதூதியைப் போன்று மிகவும் கொடூரமாக சாடப்படும் மற்றோர் இஸ்லாமிய அறிஞர் இல்லை எனலாம்.

பொதுவாக, மௌலானா மௌதூதி முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளாலும் விமர்சிக்கப்பட்டவர் என்றே கூறவேண்டும். ஒவ்வொரு சிந்தனைப் பிரிவும் தத்தமது கண்ணோட்டங்களில் நின்று அவர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்தன. அந்தப் போக்கு இப்போதும் முற்றுப்பெறவில்லை.

மௌலானா மௌதூதியை விமர்சித்தவர்களுள் பெரும்பான்மையினர் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்களாவர். உண்மையில் மௌலானா அரபு நாட்டு அறிஞர்களால் மிகக் குறைவாகவே விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆயினும், அண்மைக்காலமாக அரபு நாட்டிலுள்ள ஸலஃபிச சிந்தனை கொண்ட அறிஞர்கள் மௌலானாவைக் குறைகாண முற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அவர்களுள் நாஸிருத்தீன் அல்பானியும் அவரது சிந்தனைப் போக்கை ஆதரிப்பவர்களும் குறிப்பிடத்தக்க தரப்பினராவர்.

தமிழகம், இலங்கை முதலான தமிழ் உலகிலும் மௌலானாவின் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் பலர் உள்ளனர். பொதுவாக இவர்களின் விமர்சனங்கள் சில உருது அறிஞர்களின் நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகவே காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் எழுதப்பட்ட நூல்கள் ஏராளம். அந்த வகையில், சிறியதும் பெரியதுமாக 110 நூல்கள் காணக் கிடைப்பதாக ஸலாஹுத் தீன் மக்பூல் அஹ்மது குறிப்பிடுகின்றார். (1)

மெளலானா மெளதூதி பற்றிய குற்றச்சாட்டுகளுள் பிரதானமானவற்றை பின்வருமாறு பட்டியலிட்டுக் காண்பிக்க முடியும்:

 1. மௌலானா இஸ்லாத்தையும் அரபு
  மொழியையும் முறையாகக் கற்காதவராக இருந்தார்.
 2. ஸஹாபாக்களைக் குறைகண்டார்.
 3. இமாம்களைப் புறக்கணித்தார்.
 4. ஸுன்னாவுக்கெதிரான நிலைப்பாடுகளைக்
  கொண்டிருந்தார்.
 5. குர்ஆனுக்கு சொந்த விளக்கமளித்தார்.
 6. இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியிலான விளக்கம் கொடுத்தார்.
 7. நபிமார்களின் இஸ்மத்தில் குறைகண்டார்.
 8. தஜ்ஜாலின் வருகையை மறுத்தார்.
 9. கழா கத்ரை மறுத்தார்.
 10. தஸவ்வுஃபைச் சாடினார்.
 11. ஆன்மிகத்துறைக்கு முக்கியத்துவம்
  கொடுக்கவில்லை.
 12. மேற்குலக கருத்துகளை சுவீகரித்துக்கொண்டார்.
 13. ஸஹீஹுல் புஹாரியை அவமதித்தார்.
 14. ஃபிக்ஹு ரீதியாக தனது நூல்களினூடே பிழையான ஃபத்வாக்களை வழங்கினார்.
 15. ஷரீஆவின் பிரயோகங்கள் பலவற்றுக்குப் பிழையான விளக்கங்கள் தந்தார்.

மௌலானா மௌதூதி மீது முன்வைக்கப்பட்ட இத்தகைய அவதூறுகளுக்கு காலத்துக்குக் காலம் பல அறிஞர்களால் மறுப்புகள் வழங்கப்பட்டு, அவை நூலுருவிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகையில் வெளிவந்த நூல்களில் பின்வருபவை குறிப்பிடத்தக்கவையாகும்.

 • ரத்தே பித்னதீ மௌதூதிய்யத் (உருது) – டாக்டர் ஸெய்யித் அன்வர் அலி
 • திராலா இல்மிய்யா வில் இஃதிராழாத் அலா
  அஷ்ஷெய்கில் மௌதூதி (அரபு) – முப்தி முஹம்மது யூஸுப்
 • இஸ்லாத்தின் பார்வையில் யார் குழப்பவாதி – எஸ்.எம். மன்சூர்
 • குறைமதியும் குழப்பமும் – எஸ்.எம். மன்சூர்.

இவற்றுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ‘அல்ஹஸனாத்’ மாதப் பத்திரிகையும் மௌலானாவுக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது மறுப்புகளை வழங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (2)

பொதுவாக மௌலானா மீது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களைப் பார்க்கையில், அவற்றுள் பெரும்பாலானவை ஆதாரமற்றவையாக அமைந்துள்ளன; சில குறுகிய மனப்பான்மையின் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளன. மறுபக்கம், ஷரீஆ பற்றிய விசாலமான கண்ணோட்டம் இல்லாததால் மௌலானாவின் சில நிலைப்பாடுகளை தவறு கண்டோரும் உண்டு. மௌலானாவின் ஆக்கங்களை நேரடியாக வாசிக்காமல் அவை பற்றி எழுதப்பட்ட விமர்சனங்களை மாத்திரம் அறிந்து, அவரைக் குற்றஞ்சாட்டியவர்களும் உண்டு. தமிழ் உலக விமர்சகர்கள் பெரும்பாலும் இப்பிரிவில் அடக்கப்பட வேண்டியவர்களாவர்.

மௌலானாவுக்கெதிரான விமர்சனங்களைப் பற்றி டில்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.ஏ. ஷோஸ் பின்வருமாறு கூறுகிறார்:
”மௌலானா மௌதூதி (றஹ்) அவர்களை விமர்சிக்கக்கூடாது என்பதல்ல என் கருத்து. அவரும் விமர்சனத்திற்குரியவரே. ஆனால், விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும் விருப்பு வெறுப்பின்றியும் காழ்ப்புணர்ச்சியின்றியும் அமைதல் வேண்டும்.

விமர்சனம் என்பதன் பொருள் ஒருவரின் குற்றம் குறைகளை மாத்திரம் எடுத்துக் கூறுவதல்ல. அவர் செய்துள்ள மகத்தான சேவைகளையும் மிகைப்படுத்தாது எடுத்துக் கூறுவதுமாகும்.

மௌலானா மௌதூதி அவர்களை விமர்சிக்கப் புகுந்த சிலர் ஒரு பக்கத்தின் எல்லைகளையும் மீறிச்சென்று தப்பும் தவறுமான விமர்சனங்களைச் செய்ய முற்பட்டனர். அவர்கள் மௌலானாவின் கருத்துகளில் சிலவற்றை தனியாகப் பிரித்தெடுத்து அவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்தனர்.” (3)

உண்மையில் மௌலானாவை விமர்சித்தவர்களுள் பெரும்பாலானோர் பேராசிரியர் ஷோஸ் குறிப்பிடுவது போல அத்துமீறியவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுள் பலர் மௌலானாவைப் பண்பாடற்ற முறையில் விமர்சித்துள்ளதுடன், அவரை வழிகேடர், வழிகெடுப்பவர், பெரும்பாவி, குழப்பவாதி என்றெல்லாம் காட்டமாக சாடியுள்ளனர். சிலர் ‘காஃபிர்’ என்றும் கூறத் தயங்கவில்லை.

மௌலானாவுடன் அடிப்படையான சில விடயங்களில் முரண்பட்டபோதிலும் அவரின் பணிகளையும் பங்களிப்புகளையும் மதித்து அவரைப் நாகரிகத்துடன் விமர்சித்த ஓரிரு அறிஞர்களும் உள்ளனர். இவர்களுக்கு உதாரணமாக மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வியையும் மௌலானா மன்சூர் நுஃமானியையும் குறிப்பிடலாம். மேலும், ஆரம்ப காலத்தில் மௌலானாவுடன் இணைந்து செயற்பட்டு, பின் அவர்களுடன் சில விடயங்களில் முரண்பட்ட மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹியும் மௌலானாவின் மகிமையை ஏற்கத் தவறியவரல்ல.

இஸ்லாமிய உலகின் பெரும்பெரும் அறிஞர்கள், குறிப்பாக அறபுலக மேதைகள் மௌலானாவைக் குறைகாணாதது மாத்திரமன்றி, அவருக்கும் அவரின் கருத்துகளுக்கும் பூரண அங்கீகாரம் வழங்கி வரவேற்பது அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளின் வலுவின்மையைக் காட்டுகின்றது. டாக்டர் யூஸுஃப் அல்-கர்ளாவி போன்ற மேதைகள் மௌலானாவை இமாம் என்றும் முஜத்தித் என்றும் வர்ணிக்கின்றனர்.

”மௌலானா மௌதூதி அவர்கள் இமாம் கஸ்ஸாலி, இப்னு தைமிய்யா போன்ற இஸ்லாமிய தத்துவஞானிகளின் வரிசையில் வைத்து நோக்கத்தக்கவர்” என இஸ்லாமிய உலகின் பிரபல சட்டமேதை முஸ்தபா அஹ்மது ஸர்கா குறிப்பிடுகின்றார். (4)

‘ஃபீ ழிலாவில் குர்ஆன்’ போன்ற இஸ்லாமிய அறிவுக் கருவூலங்களில்கூட மௌலானாவின் கருத்துகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அரபு, இஸ்லாமிய உலகில் மௌலானாவுக்குள்ள அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பற்றி அவரை எதிர்ப்பவர்கள் (இந்திய உபகண்ட உலமாக்கள்) ஒரு வித்தியாசமான கருத்தை முன்வைக்கின்றனர். அறபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மௌலானாவின் நூல்களில் சர்ச்சைக்குரிய பகுதிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பதே அவர்கள் கூறும் நியாயமாகும்!

இனி, மௌலானாவுக்கெதிராக முன்வைக்கப்பட்ட, மேலே பட்டியலிட்டுக் காட்டிய குற்றச்சாட்டுகள் குறித்து அலசுவோம்.

1. மௌலானாவின் அறபி மொழியறிவும் இஸ்லாமியக் கல்விஞானமும்

மௌலானாவுக்கெதிரான விமர்சனங்களுள் அவர் போதிய அறபி மொழியறிவைப் பெற்றவரல்ல; இஸ்லாமியக் கல்வியை முறையாகக் கற்றவரல்ல என்ற குற்றச்சாட்டு பிரதான இடத்தைப் பெறுகின்றது. உண்மையில், ஆழமான கருத்துகளைக் கொண்ட மௌலானாவின் ஆக்கங்களே இக்குற்றச்சாட்டுக்குப் போதிய மறுப்பாகும். மேலும், இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற அறிஞர்கள் மௌலானாவை அங்கீகரித்துள்ளதும், அவரை ஒரு பெரும் அறிஞராக ஏற்று தமது நூல்களில் அவற்றை மேற்கோள் காட்டியுள்ளதும் இவ்விமர்சனம் அபத்தமானது என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

இக்வானுல் முஸ்லிமீன் அறிஞர்கள் தங்களின் இயக்க ஊழியர்களுக்கு வாசிப்புக்காக சிபாரிசு செய்துள்ள நூல்களில் மௌலானாவின் ஆக்கங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. மேலும், இவரின் நூல்கள் பல உலக நாடுகளில் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடப் புத்தகங்களாகவும் அமைந்துள்ளன. ’தப்ஹீமுல் குர்ஆன்’ என்ற திருக்குர்ஆன் விரிவுரை மௌலானாவின் ஆழமான அரபு மொழி ஞானத்திற்கும் பரந்த இஸ்லாமிய அறிவுக்கும் இன்னுமொரு சான்றாக விளங்குகின்றது.

மௌலானா ஒரு பொதுவான அறிஞராக இருந்தபோதிலும் பாரம்பரிய மத்ரஸா ஒன்றில் கற்று பட்டம் பெற்ற (ஸனத் பெற்ற) ஓர் ஆலிமல்ல என்ற கருத்தும் நிராகரிக்கத்தக்கதாகும். மௌலானா 1916ம் ஆண்டு தனது 13ம் வயதில் அவுரங்காபாத்தில் மத்ரஸா ஃபௌகானிய்யா மஷ்ரகிய்யா எனுமிடத்தில் கற்று மௌலவி சான்றிதழ் பெற்றார். 1926ம் ஆண்டு தனது 22ம் வயதில் டில்லியிலுள்ள தாருல் உலூம் பதஹ்பூரி எனும் அறபி மத்ரஸாவில் மௌலானா முஹம்மது ஷரீபுல்லாகான் அவர்களிடம் படித்து ஸனது பெற்றார். 1927ம் ஆண்டு தனது 23ம் வயதில் டில்லியில் அமைந்த மத்ரஸா ஆலிய்யா அறபிய்யா என்ற அறபிக் கல்லூரியில் மௌலானா அஷ்பாகுர் றஹ்மான் காந்தலாவி அவர்களிடம் ஹதீஸ், ஃபிக்ஹு முதலியன பயின்று மேலுமொரு சான்றிதழ் பெற்றார். 1928ல் இதே மத்ரஸாவில் ஜாமிஉத் திர்மிதி, மு.அத்தா மாலிக் ஆகிய இரண்டு ஹதீஸ் கிரந்தங்களையும் கற்று மற்றுமொரு சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். (5)

2. ஸஹாபாக்கள், இமாம்கள் பற்றிய மௌலானாவின் நிலைப்பாடு

மௌலானா தன் ஆக்கங்களுக்கூடாக ஸஹாபாக்களைச் சாடியுள்ளார்; குறிப்பாக உஸ்மான் (ரழி) அவர்களை இழிவுபடுத்தியுள்ளார் என முஹம்மது யூஸுஃப் அல் பின்னூரி உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர். மௌலானாவின் ‘அல்-கிலாஃபா வல் முல்க்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனமும் நியாயமான ஒன்றாகத் தோன்றவில்லை.

உண்மையில் மௌலானா எந்தவொரு ஸஹாபியையும் நபித்தோழர் என்ற வகையில் குறைகண்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஒரு வரலாற்றாசிரியராக நின்று ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் என்ற வகையில் ஸஹாபாக்களுள் சிலரை விமர்சித்துள்ளார் என்பதே உண்மையாகும். இவ்விடயத்தில் மௌலானா ஏனைய வரலாற்றாசிரியர்களிலிருந்து வேறுபடுபவராகவும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்த பலரும் ஸஹாபாக்கள் பலரை விமர்சித்துள்ளதைக் காணலாம்.

உதாரணமாக, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான டாக்டர் அஹ்மது ஷலபி, ஹஸன் இப்றாஹீம் முதலானோரின்
நூல்களை எடுத்து நோக்கும்போது இவ்வுண்மையைப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் மொழியில் வெளிவந்துள்ள இஸ்லாமிய நாகரிகம், வரலாறு தொடர்பான நூல்களிலும் இக்கண்ணோட்டத்தில் பல ஸஹாபாக்கள் விமர்சிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும். மௌலானாவை இது விடயத்தில் குறைகூறும் பலர், விமர்சனத்தையும் அவமதித்தலையும் பிரித்து விளங்கிக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.

மௌலானா ஸஹாபாக்களையும் அவர்களின் அந்தஸ்தையும் ஏற்று போற்றுபவராகவே இருந்துள்ளார். அவரின் நூல்களில், குறிப்பாக தஃப்ஹீமுல் குர்ஆன் விரிவுரையில் ஸஹாபாக்களின் கருத்துகளை பரவலாக மேற்கோள் காட்டியுள்ளதை நாம் அவதானிக்கலாம். மௌலானா இமாம்களை ஏற்பதில்லை, இகழ்கின்றார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டாகும். இதுவும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டுதான். மத்ஹபுகளில் தீவிர ஈடுபாடு கொண்டு அவற்றையே மார்க்கமாகக் கருதும் கடும்போக்காளர்களே இக்குற்றச்சாட்டை சுமத்தியவர்கள். மௌலானாவைப் பொறுத்தவரையில், இமாம்களையும் ஆரம்பகால ஸலஃபுஸ்ஸாலிஹீன்களையும் மிக உயர்ந்த நிலையில் வைத்தே அவர் அணுகினார்.

மௌலானா தனது ‘ரிஸாலத் தே தீனிய்யாத்’ எனும் நூலில், தீனும் ஷரீஅத்தும் எனும் அத்தியாயத்தில், இமாம்களின் சிறப்பையும் பணிகளையும் வெகுவாக விதந்துரைத்துள்ளார். ஒரு கட்டத்தில், ‘இமாம்களுக்குரிய நன்றிக் கடனிலிருந்து உலக முஸ்லிம்கள் ஒருபோதும் விடுபடவே முடியாது’ எனக் கூறுகின்றார். இதேபோல், தனது ‘தஜ்ததே இஹ்யாயே தீன்’ என்ற நூலில் நான்கு இமாம்களையும் அவர்கள் வாழ்ந்த காலத்து ‘முஜத்தித்கள்’ என்று வர்ணிக்கின்றார். குத்பா பேருரைகள், தொழுகையின் மொழி அரபு, தப்ஹீமுல் குர்ஆன், ரஸாஇல் வ மஸாஇல், இறுதி நபித்துவம் முதலான தன் நூல்களிலெல்லாம் இமாம்களின் வரையறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதையும் அவர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டியிருப்பதையும் பரவலாகக் காணலாம்.

குறித்த குற்றச்சாட்டுக்கு மௌலானா அளித்த ஒரு விளக்கம் பின்வருமாறு:

“நான் மார்க்கப் பெரியோர்கள் அனைவரையும் மதிக்கின்றேன். அவர்களுக்கு கண்ணியம் அளிக்கின்றேன். ஆனால் அவர்களை நான் வணங்குவதில்லை. இறை தூதர்களைத் தவிர மற்றவர்களை நான் பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்களென்று கருதவில்லை. மார்க்க அறிஞர்களின் கருத்துகளில் இறைமறைக்கும் நபிமொழிக்கும் இணக்கமாக உள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றேன், சரியென்று கூறுகின்றேன். எங்கு அவர்களின் கருத்துகள் குர்ஆன், ஸுன்னாவுக்கு இணக்கமாக இல்லையோ அதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றேன். இதனால் அவர்களை நான் கண்ணியப்படுத்துவதில்லை என்று பொருளாகிவிடாது.

இமாம் அபூ ஹனீஃபா (றஹ்) அவர்களின் மாணவர்களான இமாம் முஹம்மது, இமாம் அபூ யூஸுஃப் ஆகிய இருவரும் பல்வேறு விஷயங்களில் இமாம் அபூ ஹனீஃபா (றஹ்) அவர்களின் கருத்துகளுக்கு மாற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் இமாம் அபூஹனீஃபா அவர்களைக் கண்ணியப்படுத்தவில்லை என்றோ, அவர்களைவிட இவர்கள் மேன்மையானவர்கள் என்றோ பொருளாகிவிடாது.” (6)

இமாம்கள் பற்றிய மௌலானாவின் மற்றொரு கருத்து:

“பல்லாண்டுகால உழைப்பு, சிந்தனை, ஆராய்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு ஃபிக்ஹு சட்டங்களைத் தொகுத்தளித்த அறிஞர்களுக்குரிய நன்றிக் கடனிலிருந்து உலக முஸ்லிம்கள் ஒருபோதும் விடுபடவே முடியாது. அவர்களுடைய உழைப்பின் விளைவாகத்தான் இன்று கோடிக்கணக்கான முஸ்லிம்கள் சிரமமின்றி ஷரீஆவைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இறைவன், இறைதூதர்களின் கட்டளைகளைத் தெரிந்துகொள்வதில் எத்தகைய கஷ்டமும் இல்லாமல் உள்ளது.” (7)

உண்மையில் மௌலானா தீவிர மத்ஹப் வெறியராக இருக்கவில்லை. மத்ஹபுகளையும் மத்ஹபுகளின் இமாம்களையும் முற்றாக புறக்கணிப்பவராகவும் இருக்கவில்லை என்பதே உண்மை.

3. ஸுன்னா தொடர்பான மௌலானாவின் நிலைப்பாடு

மௌலானாவின் ஸுன்னா தொடர்பான சில நிலைப்பாடுகளும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு தொகுக்கலாம்.

அ. பகுத்தறிவுக்கும் ரசனைக்கும் ஏற்புடையதாக அமையாத ’ஆஹாத்’ வகையிலான ஹதீஸ்கள் ஸஹீஹானவையாக அமைந்திருந்த போதிலும் அவற்றை நிராகரித்தல்.

ஆ. குர்ஆனுடன் முரண்படும் மேற்குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல்.

இ. வரலாற்று உண்மைகளுடன் முரண்படும் குறித்த வகை ஹதீஸ்களை நிராகரித்தல்.

ஈ. ஹதீஸ்கள் ஸஹீஹானவையாக இருந்தபோதிலும் அவை பரஸ்பரம் முரண்படும்போது அவற்றை நிராகரித்தல்.

எ. மேற்கண்ட கண்ணோட்டங்களின் அடிப்படையில் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ள சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரித்தல்.

இந்த விடயத்தில் அஹ்லே ஹதீஸ் அறிஞர்களே பண்பார்ந்த முறையில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள் எனலாம். (8)

ஸுன்னா தொடர்பாக தனது கருத்துகள் சிலவற்றை விளக்கி
மௌலானா எழுதிய ‘மஸ்லகுல் இஃதிதால்’ என்ற ஆய்வுக் கட்டுரை மிகவும் சர்ச்சைக்குரியதாகக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட மௌலானா மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் இவ்வாய்வுக் கட்டுரையிலிருந்து பெறப்பட்டவையாகும். இங்கு குறிப்பிடத்தக்க விடயம், ஸுன்னா தொடர்பாக மௌலானா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய உலகின் பல புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன என்பது.

குறிப்பாக, இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த உமர் கரீம் அல்-பத்னவி, ஷிப்லி நுஃமானி, அல்லாமா இக்பால், ஹமீதுத்தீன் ஃபராஹீ, ழபர் அஹ்மத் அத்தனாவி, அஹ்மத் ரிழா அல் பஜ்னூரி முதலானோரும், அரபுலகைச் சேர்ந்த முஹம்மத் ஸாஹித் அல் கௌஸரி, அப்துல் பத்தாஹ் அபூ குத்தா, ஸஈத் ரமழான் அல் பூதி, முஹம்மத் அல் கஸ்ஸாலி, யூஸுஃப் அல்-கர்ளாவி போன்றோரும் இந்த வகையில் விமர்சிக்கப்படுபவர்களாவர். இதே வகையான குற்றச்சாட்டுகள் மேற்கண்டோரின் வழியில் செல்லும் அறிஞர்களான பஹ்மி ஹுவைதி, முஹம்மத் பத்ஹி உஸ்மான், மஹ்மூத் அஷ்ஷர்காவி, முஹ்ஸின் அப்துல் ஹமீத், ஜமாலுத்தீன் அதிய்யா, அப்துல்லா அவ் அஸாரிகி, அஹ்மத் அபுல் மஜீத், முஹம்மத் அல் உஸ்ஸா, காவித் முஹம்மத் காலித், ஸக்கி நஜீப் முஹ்மூத் போன்றோர் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. (9)

ஸுன்னா தொடர்பான இந்த சர்ச்சை ஆஹாத்தான ஹதீஸ்களின் தர நிர்ணயம் சம்பந்தமாகத் தோன்றியதாகும். ஆரம்பகால இமாம்கள் மத்தியிலும் இது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் நிலவின. எனவே, ஸுன்னா தொடர்பான மௌலானா மௌதூதியின் நிலைப்பாடுகள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த முடிவுகளுக்கு முரணானதாக அமையவில்லை என்பது மாத்திரமல்ல, அவரின் கருத்துகளுக்குப் பின்னால் முற்கால, பிற்கால அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இந்த வகையில், இத்துறையில் மௌலானாவின் அபிப்பிராயங்களை வைத்து அவரை நிராகரிப்பது ஒரு பெரும் அறிஞர் சமூகத்தையே புறக்கணிப்பதாக அமைந்துவிடும்.

ஸுன்னாவைப் பற்றி மௌலானா தெரிவித்த சில ஆழமான கருத்துகளை சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் அவர் ஸுன்னாவை நிராகரிக்கின்றார் என்று அர்த்தமின்றி குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இவ்விடயத்தில் அஹ்லே ஹதீஸ் அறிஞர்கள் மிகவும் தெளிவுடன் நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஸுன்னா தொடர்பாக மௌலானாவுடன் முரண்பட்டபோதிலும் மௌலானா ஸுன்னாவை மறுப்பவர் என்று குற்றம் சாட்டவில்லை. மாறாக, அவர் ஸுன்னா பாதுகாப்புக்குச் செய்த பங்களிப்பைக்கூட பாராட்டியுள்ளனர்.

உதாரணமாக, ஸுன்னா தொடர்பாக மௌலானாவை விமர்சிக்கும் ஸலாஹுத்தீன் மக்பூல் அஹ்மத் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“ஷெய்க் மௌதூதி ஹதீஸ் மறுப்பவராக இருக்கவில்லை. ஒரு குதர்க்கவாதியே அவரை அவ்வாறு வர்ணிக்க முடியும். உண்மையில் அவர் ஸுன்னாவை ஏற்றவர் மாத்திரமன்றி அதனை நிராகரிப்பவர்களுக்கு தன் நூல்களினூடாக மறுப்பளித்தவருமாவார். இத்தகையவர்களுக்கு பதில் கொடுப்பதற்காக ‘அல் மகானதுத் தஷ்ரீஇய்யா லிஸ்ஸுன்னா’ (ஸுன்னாவின் சட்ட அந்தஸ்து) என்ற ஒரு தனி நூலையே அவர் எழுதியவராவார்.” (10)

ஸுன்னாவின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதித்த (அல்லது மறுத்த) சர் சையித் அஹ்மத் கான், மௌலவி சிராஜ் அலி, அமீர் அவ் அப்துல்லாஹ் சந்தால்வி, அஹ்மத் தீன் அம்ரிட்ஸாரி, அஸ்லம் ஜெய்ராஜ் பூரி, சௌத்ரி குலாம் அஹ்மத் பர்வேஸ், கலிபா அப்துல் ஹகம், ஆளிப் அல் பய்ழி போன்றவர்களுக்கு தனது தர்ஜுமானுல் குர்ஆன் இதழ் மூலம் தக்க மறுப்பளித்த பெருமை மௌலானாவைச் சாரும். ‘மன்ஸபே ரிஸாலத்’ என்ற பெயரில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு ஸுன்னாவின் அவசியத்தை மௌலானா நிறுவினார். (11)

4. மௌலானாவின் குர்ஆன் விளக்கங்கள்

மௌலானாவின் குர்ஆன் விளக்கவுரையான தஃப்ஹீமுல் குர்ஆன் மீது பல விமர்சனங்கள் உண்டு. அவற்றில் மௌலானா குர்ஆனுக்கு சொந்த விளக்கம் சொல்லியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், இது உண்மைக்குப் புறம்பான ஒரு குற்றச்சாட்டாகும். தஃப்ஹீமை வாசிக்குமொருவர் எந்தளவு தூரம் ஸஹாபாக்கள், தாபிஈன்கள் உட்பட பிற்பட்ட இமாம்களின்
கருத்துகளை மேற்கோள் காட்டி மௌலானா தனது விளக்கங்களைத் தருகின்றார் என்பதை தெளிவாகக் கண்டுகொள்ள இயலும். தனக்கு முன்பு இத்துறையில் விளக்கங்கள் எழுதிய அறிஞர்களை மௌலானா மதிக்கத் தவறவில்லை.

மெளலானா தனது முன்னுரையில் குறிப்பிடும் ஒரு கருத்து பின்வருமாறு:

”திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில், கண்ணியமிக்க அறிஞர் பெருமக்கள் பலர் இத்துறையில் அரும் பணியாற்றியுள்ளனர். எனவே இவ்வழியில் எம் முயற்சி தேவையில்லை. சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்புத் தேவையை பாரசீக மொழியில் ஷாஹ் வலியுல்லாஹ் (றஹ்) அவர்களது மொழிபெயர்ப்பையும் உருதுவில் ஷாஹ் அப்துல் காதிர், ஷாஹ் ரஊபுத்தீன், மௌலானா மஹ்மூதுல் ஹஸன், அஷ்ரப் அலி தானவி, ஹாபிஸ் பத்ஹ் முஹம்மத் – ஜாலந்தரி (றஹ்) ஆகியோரின் மொழி பெயர்ப்புக்களும் மிகச் சிறந்த முறையில் நிறைவு செய்கின்றன. (12)

உண்மையில் தற்கால உலகின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்துள்ள இரு பெரும் தப்ஸீர்கள் என்று ஸையித் குத்ப் அவர்களின் ஃபீ ழிலாலில் குர்ஆன் உடன் மௌலானாவின் தஃப்ஹீமுல் குர்ஆன் கருதப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

5. இஸ்லாத்திற்கு அரசியல் ரீதியிலான விளக்கம்

மௌலானா மௌதூதி இஸ்லாத்தை அரசியல்மயப்படுத்தினார் என்றும் அவரின் விளக்கங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலேயே அமைந்தன என்றும் விமர்சனம் உண்டு. இவ்வாறு விமர்சித்தவர்களில் மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வியும் வஹீதுத்தீன் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் இவ்விடயம் பற்றி மௌலானாவுக்கு மறுப்பாக தனியான நூல்களை எழுதி வெளியிட்டனர். ’அத்தப்ஸீருஸ் ஸியாஸி லில் இஸ்லாம்’, ‘தீன் கீ வியாஸி தப்ஸீர்’ ஆகியன அவர்கள் எழுதிய இரு நூல்களாகும்.

இக்குற்றச்சாட்டை மறுத்து மௌலானாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி சவூதி அரேபிய அறிஞரான அஹ்மது முஹம்மது ஜமால் ஒரு தனி நூலை எழுதி வெளியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இஸ்லாமிய உலகில் இஸ்லாத்தின் பல துறைகளுக்கும் போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தபோதிலும் அரசியல் துறையானது நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்ததை அவதானித்த மௌலானா அதற்கு அழுத்தம் கொடுத்ததில் எத்தகைய தவறும் இருப்பதாகத் தெரியவில்லை .

எந்தவோர் அறிஞரும் தன் காலத்தின் தேவையை அறிந்து அதனைப் பூர்த்தி செய்வதே அவரிடம் எதிர்பார்க்கப்படும் பணியாகும். இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இமாம்களும் தத்தமது கால சவால்களையே எதிர்கொண்டார்கள். இந்த வகையில் மௌலானாவும் இஸ்லாமிய கிலாஃபத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தனது பிரதான குறிக்கோளாகக் கொண்டிருந்ததால் அரசியலுக்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் இஸ்லாத்தில் விடுபட்டுப் போன ஒரு ஸுன்னாவை- அடிப்படையை உயிர்ப்பிக்க அவர் முயன்றாரே தவிர, இதன் மூலம் சுய இலாபம் பெற நாடவில்லை.

இப்பின்னணியை விளங்கிக்கொள்ளாதவர்கள் மௌலானாவின் நூல்களை வாசித்தால் சில சந்தர்ப்பங்களில் பிழையாக வழிநடாத்தப்பட இடமுண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.
மேலும், இக்கண்ணோட்டத்திலேயே மௌலானா ஆன்மிகத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. ஆயினும் மௌலானா ‘அல்- உஸுஸ் அல்- அஃக்லா கிய்யா லில் ஹறகதில் இஸ்லாமிய்யா’, ‘தத்கிறது அல்- துஆத்’ முதலான நூல்களை வாசித்தால் ‘இஃக்லாஸ் ‘ ‘இஹ்ஸான்’, ‘தஸ்கியா’ முதலான அம்சம்களுக்கு அவர் கொடுக்கும் அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஆன்மீகத்தை மௌலானா புறக்கணிக்காத போதிலும் வழிதவறிய ‘தஸவ்வுப் சார்ந்த கொள்கைகளைக் கண்டித் தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

6. நபிமார்கள் பற்றிய மௌலானாவின்
நிலைப்பாடு

மௌலானா நபிமார்களின் ’இஸ்மத்’தில் குறை காண்கின்றார் என்றும் இந்த வகையில் அவர்களின் புனிதத்துவத்திற்கு மாசு கற்பித்துள்ளார் என்றும் ஒரு விமர்சனம் உண்டு. உண்மையில், மௌலானா நபிமார்களின் இஸ்மத் எனும் பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையை மறுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவர்கள் பெற்றுள்ள இப்பண்பை மிகத் தெளிவாக தனது நூல்களுக்கூடாக அவர் விளக்கியுள்ளார்.

நபிமார்களின் வழிகாட்டலைப் பற்றிக் குறிப்பிடும்போது மெளலானா பின்வருமாறு சொல்கின்றார்:
”அது தவறு அல்லது குறை, மாற்றம் அல்லது திருத்தம் என்ற எதற்கும் இடமுள்ளது என்று நினைத்துப் பார்க்கவும் முடியாததாக விளங்கியது. இதனாலேயே அவர்களைக் கட்டாயம் பின்பற்றி நடக்கவேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகின்றது.” (13)

நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு பற்றி மௌலானா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
”துருவித் துருவி ஆராய்ந்தாலும் அந்த வாழ்வில் எத்தகைய சிறு களங்கமும் காணப்படுவதில்லை.” (14)

இவ்வாறு இஸ்மத் என்ற பண்பை நபிமார்களின் விடயத்தில் மௌலானா முழுமையாக ஏற்றுக்கொண்டபோதிலும், நபிமார்கள் தவறு செய்பவர்களா என்ற அம்சம் தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவை மௌலானாவை விமர்சித்தவர்களுக்கு புதுமையானவையாக அமைந்தாலும் இஸ்லாமிய உம்மத்துக்கு புதியவையல்ல. இக்கருத்துகள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ அகீதாவில் பாடநூல்களில் ஒன்றாக விளங்கும் ‘அல் – அகாஇதுன் னஸபீய்யா’ என்ற நூலுக்கான ஸஃதுத்தீன் அத்- தப்தாஸானி அவர்களின் விளக்கவுரையிலும், இமாம் குர்துபியின் ‘அல் -ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன்’ என்ற தப்ஸீரிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. (15)

இமாம் பஃக்ருத்தீன் அர்ராஸி அவர்கள் எழுதியுள்ள ’இஸ்மது அல்-அன்பியா’ என்ற நூல் மௌலானா மெளதூதியின் இஸ்மத் பற்றிய நிலைப்பாட்டுக்குச் சான்றாக அமைந்துள்ளதைக் காணலாம்.

7. கழா கத்ர் பற்றிய மௌலானாவின் நிலைப்பாடு

மௌலானா மெளதூதி கழா கத்ரை மறுக்கின்றார் என்பதும் அவர் மீது சுமத்தப்படும் மற்றொரு அபாண்டமான குற்றச்சாட்டாகும்.
மௌலானாவின் ரிஸாலத்தே தீனிய்யாத் எனும் நூலில் ஈமானின் அம்சங்கள் ஐந்தாக விளக்கப்பட்டுள்ளதை வைத்தே இவ்விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மௌலானா கழா கத்ர் பற்றிய தனது நிலைப்பாட்டை பின்வருமாறு விளக்குகின்றார்:
”ஈமானின் ஐந்து உள்ளிட்ட உட்பிரிவுகளை நான் விளக்கியிருக்கின்றேன். இந்தப் பிரிவுகள் திருமறை 2:285, 4:136 வசனங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. ஐயமின்றி, ஹதீஸில் ‘விதி’யும் ஈமானின் ஒரு பிரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த அடிப்படைப் பிரிவுகள் ஐந்துக்குப் பதிலாக ஆறாகக் கருதப்படும். ஆனால், ஆழ்ந்து நோக்கினால் ‘கத்ர்’- விதியின் மீது நம்பிக்கை அல்லாஹ்வின் மீது நம்பிக்கையின் ஓர் அங்கமாக இருப்பதைக் காணலாம். மேலும், இந்தக் கோட்பாடு இதே அந்தஸ்தில்தான் திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.

ஆகவே, விதி பற்றிய கோட்பாட்டை நான் ஏக தெய்வக் கொள்கை விளக்க உரையில் சேர்த்துள்ளேன். முற்றிலும் இது போலவே சில ஹதீஸ்களில் சொர்க்கம், நரகம், ஸிராத், மீஸான் ஆகியவை பற்றி தனித்தனி கோட்பாடுகளாகவும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், இவையாவும் மறுமை பற்றிய ஈமானின் அங்கங்களே ஆகும்.” (16)

உண்மையில் மௌலானா தனது நூலில் அல்லாஹ் பற்றிய விளக்கங்களின்போது அவனது விதிப்படியும் நாட்டப்படியும்தான் எல்லாம் நடைபெறுகின்றன என்ற கருத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதனைக் காணலாம். மேலும், கழா கத்ரைப் பற்றி மௌலானா ஒரு தனியான நூலையே எழுதியிருக்கின்றார். ’மஸ்அலா ஜப்ரே கத்ர்’ என்பது அந்நூலின் பெயராகும். கழா கத்ர் பற்றி ஒருவர் எழுப்பிய ஐயங்களுக்கு மௌலானா அளித்த நீண்டதொரு விளக்கமே இந்நூலாகும்.

விதி ஒரு விளக்கம் என்ற பெயரில் மௌலானாவின் ஒரு சிறு நூல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
மேலும், மௌலானா ஈமானின் அம்சங்களை ஐந்தாகக் குறிப்பிட்டிருப்பதும் வினோதமான ஒரு விடயமல்ல.

உதாரணமாக, ஸஹீஹூல் புகாரியில் ஈமான் பற்றிய அத்தியாயத்தில் ஈமானின் ருகூன்கள் ஆறு என்று குறிப்பிடும் ஒரு ஹதீஸேனும் காணப்படுவதில்லை. ஸஹீஹ் முஸ்லிம் உட்பட ஏனைய கிரந்தங்களில் ஈமானின் அம்சங்கள் ஆறு, ஏழு, நான்கு, இரண்டு என்றெல்லாம் குறிப்பிடும் வித்தியாசமான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன. ஷாபிஈ மத்ஹபின் பிரதான பாட நூலாகவும் ஃபத்வா நூலாகவும் கருதப்படும் பத்ஹூல் முஈனில் மதமாற்றம் பற்றிய பாடத்தில் ஈமானுக்குரிய அம்சங்கள் நான்கென்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். (17)

இதுவரை நாம் மௌலானாவுக்கெதிரான விமர்சனங்களுள் முக்கியமான சிலவற்றை எடுத்து நோக்கி, அவை ஒவ்வொன்றைப் பொறுத்தவரையிலும் மௌலானாவின் நிலைப்பாடு எவ்வளவு தூரம் நியாயமானது என்பதைச் சுருக்கமாக விளக்கினோம். இவ்விளக்கங்களிலிருந்து மௌலானா மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை என்பதையும் காழ்ப்புணர்ச்சி, அறியாமை, குறுகிய மனப்பான்மை, சிந்தனைக் குழப்பம் ஆகிய காரணங்களினாலேயே எழுந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு குறிப்பிடுவதால் மௌலானா தவறுகளே செய்யாத மனிதப் புனிதர் என்பது கருத்தல்ல. அவர் தனது நிலைப்பாடுகளில் சிலபோது சில தவறுகளைச் செய்திருக்க முடியும். அவரின் சில அபிப்ராயங்களை ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றதாகவும் இருக்க முடியும். (18)

ஆனால், அவரது எதிரிகள் குறிப்பிடுவது போன்று குஃப்ரையோ, பிஸ்கையோ அல்லது ழழாலத்தையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நிலைப்பாட்டையும் அவர் கொள்ளவில்லை என்பதே எமது தாழ்மையான கருத்தாகும்.

அல்லாஹூத் தஆலாவே யாவற்றையும் நன்கு அறிந்தவன்!

அடிக்குறிப்புக்கள்

 1. ஸலாஹூத்தீன் மக்பூல் அஹ்மது, மஜ்மஉல் புஹூஸில் இஸ்லாமிய்யா. அல்- இஸ்லாமிய்யா வெளியீடு (டில்லி), பக்.171
 2. அல் ஹஸனாத், ஏப்ரல் 1991, மே – ஜூன் 1991, ஜூலை – ஆகஸ்ட் 1991, செப்டம்பர் – அக்டோபர் 1991
 3. அல்ஹஸனாத், செப்டம்பர் – அக்டோபர் 1983 பக்.11
 4. ஸஹாபத் (உருது) சிறப்பிதழ் செப்.1979.
 5. மௌதூதி (1984) லாகூர் இஸ்லாமிய ஆய்வு மையம் வெளியீடு.
 6. தர்ஜூமாலுல் குர்ஆன் இதழ் – ஜூன் 1946
 7. மௌலானா மௌதூதி, இதுதான் இஸ்லாம் (1983) ப.206 – 208
 8. இவர்களுள் முஹம்மது இஸ்மாஈல் அஸ்ஸலபி, ஸலாஹூத்தீன் மக்பூல் அஹ்மது ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 9. ஸவாபிஃ பீ வஜ்ஹிஸ் ஸூன்னா கதீமன் வ ஹதீஸன் பக்.12
 10. மேற்படி நூல் பக். 89
 11. எஸ்.எம்.மன்சூர், குறைமதியும் குழப்பமும், அல் ஹிக்மா வெளியீடு பக்.20
 12. மௌலானா மௌதூதி தஃப்ஹீமுல் குர்ஆன் ஸூரா முன்னுரை பக்.2
 13. மௌலானா மௌதூதி, அல்ஹழாரத்துல் இஸ்லாமிய்யா: உஸூலுஹா வபாதிஉஹா, பக்.172
 14. மௌலானா மௌதூதி, இதுதான் இஸ்லாம் பக்.62
 15. அல்ஹஸனாத், ஜூலை – அகஸ்ட் 1991
 16. மௌலானா மௌதூதி, இதுதான் இஸ்லாம் (1986) பக்.172
 17. பத்ஹூல் முஈன், பாகம் 4, பக்.141
 18. உதாரணமாக, பெண்களின் முகமும் அவ்ரத் என்ற மௌலானாவின் கருத்து குறிப்பிடத்தக்கது.

நன்றி: இஸ்லாமியச் சிந்தனை ஆய்விதழ்.

Related posts

Leave a Comment