காஷ்மீர்கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

குணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்!

Loading

1991ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் கஷ்மீரின் எல்லையோர மாவட்டமான குப்வாராவில் குணன், பொஷ்போரா ஆகிய கிராமங்களில் இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவத்தை பலரும் மறந்திருக்கக்கூடும். ஆனால் அந்த நாள் இரவை கஷ்மீரிகளால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது!

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளன்று இரவு 11 மணி வாக்கில், சோதனை நடத்துவதாகக் கூறி அந்த இரு கிராமங்களிலும் பல நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் நுழைந்து, விசாரணை எனும் பெயரில் அங்குள்ள ஆண்களையெல்லாம் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியே இழுத்துவந்து துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கியதோடு, பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குரூரம் அரங்கேறியது. அதில் கிட்டத்தட்ட 150 பெண்களும் 200 ஆண்களும் பாதிப்புக்குள்ளாகினர். பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டன; சிறுமிகள் உட்பட கருத்தரித்தனர்.

இந்தக் கோர நிகழ்வு தொடர்பாக ஐந்து கஷ்மீர் பெண்கள் எழுதி, ’உங்களுக்கு குணன் பொஷ்போராவை நினைவிருக்கிறதா?’ எனும் தலைப்பில் புத்தகமாக அதைத் தொகுத்துள்ளனர். 2012ல் டெல்லியில் மருத்துவ மாணவி ஜோதி சிங் பாலியல் வல்லுறவுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குணன் பொஷ்போரா சம்பவம் பற்றி கஷ்மீர் பெண்கள் எழுதிய இந்த நூல் 2016ம் ஆண்டு ஜைப்பூர் இலக்கிய விழாவில் வெளியானது. நூலாசிரியர்களுள் ஒருவரான நட்டாஷா ராதர் ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார், குணன் பொஷ்போரா சம்பவம் குறித்து கிராமத்து மக்கள் அளித்த புகாரை காவல்துறை பதிவுசெய்வதற்குக்கூட இரு வாரங்கள் எடுத்துக்கொண்டது என்று.

போதிய ஆதாரம் இல்லையென்று கூறி காவல்துறை 1991 அக்டோபரிலேயே இந்த வழக்கை ஊத்தி மூடிவிட்டது. அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினர். 2011ல் அது வெளியிட்ட அறிக்கையில் ராணுவம் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை கண்டறிந்ததோடு, குறைந்தபட்சம் 40 பேருக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென்று பரிந்துரைத்தது. ஆனால் அதுகூட அந்த மக்களுக்கு இன்றுவரை மறுக்கப்படுகிறது.

2013ம் ஆண்டு நட்டாஷா ராதர் உள்ளிட்ட 50 பெண்களைக் கொண்ட ஒரு குழு குணன் பொஷ்போரா வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. அப்போது அந்த குற்றச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கடந்தபின்னரும் ஜம்மு கஷ்மீர் காவல்துறை அந்த வழக்கை முறையாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது பிரச்னைக்குரியதாய் இருந்தது. இறுதியில், காவல்துறை அறிக்கையைச் சமர்ப்பித்தது.

விசாரணையைத் தொடர குப்வாரா துணை நீதிபதியிடம் உத்தரவைப் பெற்றனர் அந்தப் பெண்கள் குழுவினர். எனினும் காவல்துறை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புதிய மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அதில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைக்கு இணங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் விசாரணையை மீண்டும் தொடங்கவேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால், ராணுவத் தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகி அவற்றுக்கு தடையாணை பெற்றது.

2014ல் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு இந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. இன்னொரு பக்கம், 2016ல் இந்திய அரசு எல்லையற்ற அதிகாரத்தை ராணுவத்துக்கு வழங்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைச் (AFSPA) சுட்டிக்காட்டி, மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆயுதப்படை சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆணை பிறப்பிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இறுதியில், இழப்பீடு வழங்குவது, விசாரணையைத் தொடங்குவது ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றமும் தடையாணை வழங்கி பாதிக்கப்பட்ட கஷ்மீர் மக்களை வஞ்சித்தது.

குணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன. ஆனாலும் நீதிக்கான கஷ்மீரிகளின் போராட்டம் தொய்வின்றி தொடர்கிறது. அந்த வகையில், பிப்ரவரி 23ம் தேதியான இன்று கஷ்மீர் பெண்களின் போராட்ட நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment