நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

நபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – ஓவியர் மதுரை ரஃபீக் நேர்காணல்

Loading

நவீன ஓவியர் மதுரை ரஃபீக் அவர்கள், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியா முழுக்க நடந்துவரும் ஓவியக் கண்காட்சிகளில் பங்கெடுத்து வருபவர். அதைத் தவிர்த்து அமெரிக்கா, ஃபிரான்ஸ், பெரு, போலந்து முதலான உலகின் கடைக்கோடி மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்படும் ஓவிய நிகழ்வுகளிலும், நம் நாட்டின் சார்பாக அனுப்பப்பட்ட ஓவியங்களில் இவர் வரைந்தவையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளது. நம் பெருநகரிலிருந்து வெளியாகும் ஆங்கில தினசரிகள் பலவும் இவரின் ஓவியங்களை முழுப் பக்கத்துக்கு வெளியிட்டு வந்துள்ளன. தலைசிறந்த புகைப்படக் கலைஞரான இவர், ’சித்திரக்காரனின் குறிப்புகள்’ என்ற பெயரில் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தப்லீக் அமைப்பின் அழைப்புப் பணியில் ஈடுபாடு கொண்டவர். 2015 ஏப்ரல் மாதம் சமநிலைச் சமுதாயம் இதழுக்கு அவர் அளித்த பேட்டி இது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டுக்கடங்காத கூட்டம். இடித்தபடியும் உரசிக்கொண்டும் சென்றுகொண்டிருந்த ஜன நெரிசலை விட்டு ஒதுங்கி, புல்வெளியில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். மடிக்கப்பட்ட தினசரித் தாளை விரித்துப்போட்டு, சூரிய மறைவின் பின்புலத்தில் (அந்திமாலை – மக்ரிப்) தொழ அமர்ந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு. அமர்ந்தபடியே சட்டென, ‘ரஃபீக் பாய் நீங்கதானா?’ என மகிழ்ச்சியுடன் அழைத்தோம். நரைமுடியுடன் ஏறெடுக்கும் தலை; மிருதுவான கைகுலுக்கல்; பல வருடப் பழக்கம்போல… சூஃபிகளின் உடல் மொழியில் ‘ஆம்’ என்கிறார்.

கொலேஜ் வகை ஓவிய மேதை! பிள்ளைகளின் எதிர்காலம், பணிச் சூழல் என்பதற்காகவே சென்னையில் குடியேறினாலும், ‘மதுரையைச் சுற்றிய கழுதை, வேறு எங்கும் நிலை கொள்ளாது’ என்கிற பழமொழியையும் தனக்கு உதாரணமாக அவரே கூறிச் சிரிக்கிறார். சந்தியா பதிப்பகம், புத்தகம் பேசுது, தமிழ் இந்து, தினகரன் பொங்கல் மலர், Indian Express, Times of India என தினசரி நாளேடுகளின் ஞாயிறு பதிப்புகளில் அடுத்தடுத்து வந்த பதிவுகள் இவர் மீது சிறிய வெளிச்சம் பாய்ச்சின.

அவரது ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து…’ நாவலைப் படித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பல பக்கங்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் இந்தப் பிரதிக்குக் கூடுதல் ஈர்ப்பை அளிப்பதாக உள்ளது; அதில் வரும் சுந்தர், காளி, சான் பாபு, சையது என சிறுவர்களின் பார்வையிலிருந்து இரண்டாயிரம் வருட மதுரையின் மனவுலகம் பிடித்திருந்தது என்றேன்.

மதுரை பெரிய கோபுரம், நாயக்கர் மஹால் அரண்மனை, பத்துத் தூண் மண்டபம், பிரம்மாண்டமாய் நிற்கும் ஐயனார் போன்றவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்துப் பார்த்துப் பழகி வளர்ந்தவர் ஓவியர் ரஃபீக். மதுரையின் பழைமையும் பாரம்பர்யமும் இவரின் கொலாஜ் ஓவியங்களில் தோற்றம் கொள்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி வாழும் உருது பேசும் மக்களின் வாழ்க்கையை ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ என்ற நவீன நாவலாகப் பதிவுசெய்துள்ளார்.

ஓவியக்கலையை எங்கேனும் முறையாகக் கற்றுக்கொண்டீர்களா? பள்ளி நாட்களில் சாக்பீஸ் கொண்டு எழுதப் பழகும் முன்பே, பென்சிலைக்கொண்டு ரஃப் நோட்புக்கில் வரையப் பழகியதாக ’சித்திரக்காரன் இம்ரான்’ பேசுகிறாரே. ஓவியர், புகைப்படக் கலைஞர், நாவலாசிரியர் என வெவ்வேறு வடிவங்களின் மீதான உங்கள் ஆர்வத்தின் தொடக்கப்புள்ளியென ஏதும் உண்டா?

சிறு வயதிலிருந்தே எறும்பு முதல் சிலந்தி வரை என் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. அவற்றை வரைய அடுப்புக் கரியைக் கொண்டு சுவர்களில் வரைந்தது இன்னும் நினைவில் உள்ளது. இளமையில் நான் இடதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்தேன். அப்போது விளையாட்டுகளில் பசங்க யாரும் என்னை தங்களுடன் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தனித்து விடப்படுவேன். பிறகு அனிச்சையாக இயற்கை காட்சிகளில் லயிக்கத் தொடங்கினேன். மரங்கள், செடி கொடிகள், சிறுசிறு பூச்சிகள், குட்டிப் பறவைகளைக் கவனிக்கத் துவங்கினேன்.

கோழிக்குஞ்சுகளையும் குருவிகளையும்தான் ஆரம்பத்தில் வரைந்ததாக நினைவு. அவற்றில் ஆகப் பழைய, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வரைந்ததொரு ஓவியத்தை என் மூத்த சகோதரி எடுத்துக்கொடுத்து இன்ப அதிர்ச்சியளித்தார். பிற்பாடு பதின்ம பருவம் கடந்து, வாலிப வயதில் ஓரளவு கேமராவைக் கையாள கற்றுக்கொண்டேன். இவ்விரண்டும் கலைவடிவின் இரு வேறு முகங்கள்.

மலரும் நினைவுகளை அசைபோட்டபோது உருவானதே என்னுள் இருந்த நாவலாசிரியன் அவதாரம். இம்ரான் கதாபாத்திரம் 80% என்னை மனதில் வைத்து எனது சுய அனுபவத்தைத்தான் அதில் பதிவுசெய்துள்ளேன். 1976ல் பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் சேரும்போது ஓவியத்துக்கென்று தனிக் கல்லூரி இருப்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓவியக்கல்லூரி இருப்பதையறிந்து முறையாக அங்கு சேர்ந்துகொள்ள விரும்பினேன். ஆனால், எனது தந்தையோ அது ‘தரித்திரம் பிடித்த தொழில்’ எனம்என்னை அங்கு படிக்க அனுப்பவில்லை. ஓவியத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது எனக் கேட்டார். அப்பா சமுதாயத்திற்கு பயந்தார் என நினைக்கிறேன்.

பிறகு நானே சுயமாக வரையப் பழகிக்கொண்டேன். என்னை நான் ஓவியனாக நிலைப்படுத்திக்கொண்ட பிறகு, எனது தந்தை தனது தவறை என்னிடம் அன்புடன் சொல்வார். ‘நான் உன்னை ஓவியக் கல்லூரியில் படிக்க அனுப்பிவைக்கவில்லையே’ என ஆதங்கப்படுவார். ஆனால், ஓவியம் வரைய எல்லா உபகரணங்களையும் அவர்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓவியக்கல்லூரியில் படிக்காவிட்டாலும், அங்குள்ள பேராசிரியர்களுடன் பழக்கப்படுத்திக்கொண்டேன். இருந்தாலும், ஓவியக்கல்லூரியில் படித்த ஓவியர்கள், சொந்த முயற்சியில் உருவான அசல் ஓவியர்கள் என்கிற பெரிய இடைவெளி தமிழகத்தில் இருக்கவே செய்கிறது.

ஓவியக் கல்லூரியில் படித்து முறையான பட்டம் பெறாத ஒரே காரணத்துக்காக எங்களைப் போன்றவர்களை மட்டம் தட்டவே செய்கிறார்கள். சில நேரங்களில் வேறு சில ஓவியர்களால் ஒதுக்கப்படவே செய்கிறேன். ஓவியக் கல்லூரியில் படித்து பட்டம்பெற்ற அனைவருமே ஓவியர்களாகிவிடுகிறார்களா? இல்லையே! ஓவியக்கல்லூரியில் சேர்ந்திருந்தால்கூட இவ்வளவு கற்றுக்கொண்டிருக்க முடியாது. ஓவியக் கல்லூரியில் முறைப்படியான பயிற்சியெடுக்காத குறையே உனது தீவிரமான செயல்பாட்டுக்கும் காரணமாகியுள்ளது என்று உற்சாகப்படுத்தி, பெரிய ஓவியர்கள் பேசி இருந்தாலும், ஓவியக் கல்லூரியில் படிக்காதது ஒரு குறையாகவே இப்போதும் மனதில் தேங்கி நிற்கிறது.

தாங்கள் வரைந்துள்ளதில் அதிகமாக இருப்பது மதுரையும் கோவில் காட்சிகளும்தான். இது எதேச்சையானதா?

மதுரையில் பிறந்தும், அதைச் சார்ந்து வளர்ந்து வாழ்ந்துவரும் என் போன்ற ஓவியர்கள் தம்மை அறியாமலேயே மதுரை சுற்றுச்சூழலை வரைந்திருக்கிறோம். அவ்வாறுதான் கோவில், குளம், அதையொட்டிய பண்பாட்டுக்கூறுகள், மரபுகள், சடங்குகள் என அனைத்தும் படைப்புகளில் வெளிப்படுகின்றன. இஸ்லாமியனாக இருந்தாலும் இந்தியக் கலாசார அம்சங்கள், பழக்க வழக்கங்களே ஓவியமாக வரும். காரணம், அங்குதான் என் வேர்கள் இருக்கின்றன; அதில் மறைக்க ஒன்றுமில்லை. மாமா, மச்சான், சியான், அப்பு என உறவுமுறைகள் சொல்லி அன்பு பாராட்டுவது நாட்டுபுறத் தமிழகத்தில் இன்றைக்கும் இயல்பான எதார்த்தம். இது இந்த மண்ணின்மாண்பு. எனது ஓவியங்களில் சித்திரங்கள் சிலைகள் போன்றவற்றை தொடக்கத்திலிருந்தே’Out of Focus’ ல் மறைமுகமாகவே வரைந்து வருகிறேன். என் ஓவியங்களில் பின்புலமாகவே உருவங்கள் மறைவாகவே இருக்கும். இதையொரு பாணியாகவே பின்பற்றி வருகிறேன்.

பரவலாக எல்லோருக்கும் நீங்கள் தெரிய வந்தது எப்போது?

1985ம் ஆண்டுக்குமுன் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அங்கு நடந்த ஓவியக்கண்காட்சியில் தோட்டாதரணியின் சிறிய ஓவியத்தைப் பார்த்தேன். அதனால் உந்தப்பெற்ற நான், மதுரை மஹால், ஏழுகடல் தெரு, பழைய கட்டடங்கள், மொட்டை கோபுர ஓவியங்களையெல்லாம் வரிசையாகவும் வேகமாகவும் வரைந்தகாலம் அது. அவற்றில் சிலவற்றை நண்பர்களின் தூண்டுதலின் பேரில் சென்னை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பி வைத்தபோது, பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது என்னைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.

ஓவியம், குறிப்பாக இசைத்துறை, இன்னபிற கலை வடிவங்கள் இஸ்லாமிய மரபில் அதிகமாக இல்லையே? கட்டடக் கலை, அரபு எழுத்தணிக்கலை என்பதைக் கடந்து, முஸ்லிம் ஓவிய மரபு ஏதும் உண்டா?

கலை என்பது குறிப்பிட்ட விதத்தை ஓர் ஒழுங்குடன் செய்வதுதான். இஸ்லாமிய வாழ்க்கை முறையும் அப்படித்தான். கலையின் நோக்கமும் இதுவென்பேன். பலரும் நினைப்பதுபோல, ஓவியம் மீதெல்லாம் இஸ்லாத்திற்கு வெறுப்பு கிடையாது. உயிருடன் உள்ள மாமனிதர்களைக் கடவுளாக மாற்றிக்கொண்ட நடைமுறைக்கு உலகம் முழுக்க எடுத்துக்காட்டுகள் உள்ளபடியால், அதன் ஆதாரச் சுருதியாக உள்ள உருவ வகைமைக்கும், அளவுக்கும், பயன் நோக்கிற்கும் ஏற்ப, உருவ மாதிரிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை, பூக்களைப் பார்த்து அதே மாதிரி வரைந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தாஜ்மஹாலைச் சொல்லலாம். மேலிருக்கும் Dome (மைய மண்டபத்தின் கூம்பு வடிவக் கூரை) மலரின் மொட்டாகவும், சுற்றியுள்ளவை இலையாகவும், மினாராக்கள் மல்லிகைக் கொடியாகவும் உருவகிக்கலாம்.

இஸ்லாமியக் கலையே அரூபத்திலிருந்து எடுத்ததுதான். முஸ்லிம் பெண்கள் இன்றைக்கும்கூட அமாணியும் ஆடைகளைப் பார்த்தீர்களேயானால் அசந்துபோகும் அளவுக்கு வசீகரம் கொண்டவை. உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் எவ்வளவு அழகு கொட்டிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் ஓவியமும் சிற்பமும்தான் அடிப்படை. அவ்வளவு ஏன் – மேலைநாடுகளில் உருவம் இல்லா ஓவியங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறது என்பேன். அரூப ஓவியங்களில்தான் நிறைய சவால்கள் இருக்கின்றன. கிரேக்கம், பாரசீகம் ஆகியவை இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்பே ஓவியம் உச்சக்கட்டத்திற்குச் சென்ற நாடுகள்.

ஓவியக் கலையிலும் இஸ்லாமியர்களின் பங்கு உலகின் மகத்தான சாதனைகளாகக் கொள்ளப்படவேண்டியவை. அதன் உச்சம்தான் முகலாய ஆட்சிக் காலம். அப்போதைய கலாச்சாரம், எழுதப்பட்ட நூல்கள், அணிந்துகொண்ட நகைகள், தரையின் மொசைக், கூடங்களின் துணி விரிப்புகள், தொங்கு விளக்குகள், உணவுப் பாத்திரங்கள், எழுத்து வடிவங்கள் என இவை அனைத்துமே ஓவியக் கலைகள்தானே. இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மக்கள் வரைந்த பாகாடி பெயிண்டிங்ஸ், அக்பர் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், துருக்கி போன்ற நாடுகளில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியன மேலிருந்து கீழே பார்க்கும் காட்சி அமைப்பில் (top angle) வரையப்பட்டன. இந்த முறை இறைநம்பிக்கை சார்ந்ததாக இருந்தது.

உள்ளபடியே நபிகள் நாயகம் அவர்கள் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான கிரியா ஊக்கியாகவே வினை புரிந்ததிருப்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. Miniature Painting நுண்கலையில் புதிய தனி பாணியொன்றைக் கட்டியமைத்தது முஸ்லிம்களே.

பிகாஸோ, டாவின்ஸி, வான்கா, டாலி போன்ற ஆளுமைகள் முஸ்லிம் உலகில் யாரேனும் உண்டா?

MF உசேன் ஓவியர்களின் முன்னோடி. அவருடைய ஆரம்பகால ஓவியங்களில் இந்துக் கோவில் சிற்பங்களை நிர்வாண நிலை என்ற கோட்பாட்டில் கோட்டோவியமாக வரைந்திருந்தார். அது பின்னாட்களில் பெரும் சர்ச்சையாகி, கடைசியில் அவர் நாட்டைவிட்டு வெளியேறும் சூழலில் போய் முடிந்தது துன்பவியல் நாடகமாகும். ஈரானின் அப்துஸ் ஸமத், சையத் அலி போன்ற எண்ணற்ற ஓவியர்கள் அந்தக் காலத்தில் இந்தியாவில் குடியேறினார்கள். Mushifiq, Kamal, Fazi போன்றோர் 17ம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை நினைக்கப்படுகின்ற ஓவியர்கள் ஆவர்.

ஆக, மரபுக்குள்ளேயும் சில நேரங்களில் அந்த விதிகளைக் கடந்தும் இஸ்லாமியர்களின் ஓவிய இயக்கம் தவிர்க்க முடியாத, புறக்கணிக்க முடியாத தொடர்ச்சியைக் கொண்டது. சமகாலத்தில் கேரளாவின் யூசுப் அரக்கல் மற்றும் மும்பை ஓவியர்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுவதை அதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.

எழுத்தை, கவிதையை, நாடகத்தை நம்பி வாழ முடியாத சூழலுள்ள தமிழகத்தில், ஓவியர்களின் நிலைமை எப்படி? கண்காட்சிகள் மூலம் போதுமான வருமானம் கிடைக்கும் என்றால் புதியவர்கள் வரக்கூடும் அல்லவா?

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் வசிக்கும் ஓவியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதே. நம்மிடம் இருக்கும் குழு மனப்பான்மை, சாதியம் போல் மாறிவிட்டதால் அவர்களும் தேங்கிவிட்டார்கள். சிறியதொரு பரிசு கிடைத்ததும் உலகின் பெரிய படைப்பாளியாகத் தன்னைத் தானே கருதியும், அதிலேயே திருப்தியும் அடைந்துகொள்வதே படைப்பு மனநிலைக்கு எதிரானது. மனிதனாகப் பிறந்துவிட்டோம்; தேடலை, அழகியலை, உண்மையை அறிவதும் அதைப் பிறருக்குப் புரியவைப்பதும், தன் ரசனையைப் பகிர்ந்துகொள்பவனே உண்மையான கலைஞன். வருமானம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். கலை படைப்புகள் வர்த்தக மதிப்புடையன அல்ல, பண்பாட்டு பெறுமதியுடையவை.

ஓவியராக உங்களைத் தகவமைத்துக்கொண்டு வணிக ரீதியாக தாக்குப்பிடிக்க முடிகிறதா?

முழுநேர ஓவியனாகத் தொடர்ந்து இயங்குவதற்கு இஸ்லாமியச் சமூகச் சூழலில் உள்ள பாரிய தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. சமரசம் இல்லாமல் இது சாத்தியமே இல்லையெனத் தோன்றுகிறது. இறைவனின் பெருங்கருணையால் என் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைத்தது. பிறகு குடும்பமும் அதிகமாக என்னைத் தொந்தரவு செய்யாமல் என் போக்கில் விட்டுவிட்டதால் ஓரளவுசமாளிக்க முடிந்தது. இப்பொழுது எனது மகனும், அமெரிக்காவிலுள்ள மகளும்கூட என்னை உற்சாகப்படுத்துவதும், ஆதரவாக இருப்பதும் கொடுப்பினை என்பேன். நம்மைப் புரிந்துகொள்ளாத உறவினர்களின் எதிர்ப்புகள், கேலிப் பேச்சுகள் இருக்கத்தான் செய்யும். நானும் அந்த வலிகளை எல்லாம் என் பின்னேவிட்டு, இவ்வளவு தூரம் தனியாளாக நடந்து வந்திருக்கிறேன்.

படைப்பூக்கம் குறித்து உங்கள் எண்ணம்? ஓவியர், கதாசிரியர் என்பதை தவிர்த்து வேறு ஏதும்?

மனிதனாகப் பிறந்தவன் ஒருநாள் இறந்துபோவது நிச்சயம். தான் வாழ்ந்த பூமி, உலகம், மக்கள், இயற்கை ஆகிய கலவைகளின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக உள்ளான். படைப்பு என்பது தனிமனித உள்ளுதிப்பு. கதை, கவிதை, எழுத்து, இசை, நடனம், ஓவியம் எதுவானாலும் அதன் விந்தையான, அபூர்வமான வெளிப்பாடே கலையாக மாறுகிறது. நாம் விலங்குகள் அல்ல; உயர்நிலை மனிதர்கள். எனவே, நமது வாழ்வியல் சிந்தனை போக்கு, அன்பு, பாசம், காதல், நேயம் அனைத்தும் குழைந்து முகிழ்க்கும்போது, அது கொண்டாடப்படும் கலையாக மாறுகிறது. இறந்த பின்பும்தான் வாழ்ந்த வாழ்வின் தடயத்தை விட்டு செல்பவனே கலைஞன்.

குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருந்த தாத்தாக்களும் தாலாட்டுப் பாடி தூங்கவைத்த பாட்டிமார்களும் குறைந்துவருவதுதான் நமது நாடு கற்பனை வறட்சியில் சிக்கி இருக்கக் காரணம். கற்பனைதான் படைப்பூக்க உயிர்நாடி.

தமிழகத்தில் ஓவியர்களுக்கான மையம் எது? சினிமா துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

சென்னை சோழ மண்டல ஓவிய கிராமம் போன்று தமிழகத்தில் பெரிய அளவில் வேறு ஏதுமில்லை. மதுரை சித்ரா ஸ்டுடியோ, வெங்கடசாமி, பெருமாள், திரு. நாராயணன் இப்படி சிலர் இருந்தனர். நானேகூட தனிப்பட்ட முறையில் ஓவியக்கூடமெல்லாம் வைத்திருந்தேன். மின்சாரம், வாடகை தொடர்ந்து கொடுத்துவர வசதியில்லை. மேலும், நீண்டகாலம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் சடங்காகவும் மாறிப்போகும். அதில் சில ஓவியர்கள் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வேறு தொழில் பார்க்கச் சென்றுவிட்டதை விதியின் விளையாட்டென்பேன். பல்வேறு இலக்கியச் சந்திப்புகளுக்கான மையமாக இருந்த அது, கலைந்து போனதில் எனக்கும் வருத்தம்தான். எத்தனையோ ஓவியர்கள் அதை இப்பொழுதும் உணர்வுபூர்வமான சொந்த இழப்பாகவே கருதுகின்றனர்.

1970-80களில் புதிய சினிமாபாணி இங்கு உருவானது. இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோர் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்ப டத்தினார்கள். நிவாஸ், அசோக்குமார் போன்ற கேமராமேன்களால் சினிமா என்னை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது. எனது தாயார் புற்றுநோயால் அகால மரணம் அடைந்தபோது, மதுரையை விட்டு வெளியேறிச் செல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், சென்னையில் எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏ.வி.எம். தயாரித்த ‘முரட்டுக்காளை’ போன்ற வணிக ரீதியிலான படங்கள் என்னைக் குழப்பத்தில் தள்ளின. சென்னையில் ஓய்வு கிடைத்த நேரங்களில் எல்லாம் அமெரிக்கத் தூதரக நூலகத்துக்குச் சென்று புது ஓவிய வகை, ஓவியக்கொள்கை சம்பந்தமான நூல்களைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் கூடிக்கொண்டேபோனது.

எங்களூரில் சிறு வயதிலிருந்தே நான் பார்த்து வந்திருந்த ரஷீத் பாய், கலை, தாஸ் போன்றவர்கள் நல்லதொரு ஆர்டிஸ்ட்கள். சினிமா பேனர், கடைகளுக்கான பெயர் பலகைகளில் எழுதியும், ஓவியங்களை வரைந்தும் வந்த அம்மாதிரியானவர்களை நவீன கம்ப்யூட்டர் துரத்தியடித்துவிட்டனவே?

தட்டச்சு இயந்திரம் வந்தபோது குமாஸ்தாக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் எல்லாம் இந்தியாவில் நடந்துள்ளது. கேமரா வந்தபோது மகாராஜாக்களையும் பண்ணையார்களையும் படமாக வரையும் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் உடனே அப்படியேவா ஏற்றுக்கொண்டார்கள்? கணினி வந்த புதிதில் அதை வங்கிகளில் பயன்படுத்தவேண்டும் என அரசு கட்டளையிட்டபோதும்கூட தொழிற்சங்கங்கள் எதிர்த்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே!

எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு வந்தாலும், கேமரா, டைப்ரைட்டர், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எதுவாக இருந்தாலும், அவற்றை இயக்கவும், அதைக்கொண்டு உச்சபட்சமாகப் பயன்படுத்துவது மனித மூளையாகத்தான் உள்ளது. மாட்டு வண்டியோட்டிகள், சைக்கிள் கை ரிக்க்ஷா, பிற்பாடு ஆட்டோ ரிக்ஷா என மனித சமூக இயக்கம் முன்னோக்கியே செல்லும். நடப்பதெல்லாம் நன்மை; இறுதியில் நன்மையே விளையும் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கையுண்டு. நானொரு Optimist.

ஓவியத்துறை முன்னோடிகளுடன் உங்களுக்குள்ள உறவு, அதன் நெகிழ்வான அம்சம் ஏதேனும்?

ஓவியத்துறையின் தமிழக மேதைகள் அனைவருடனும் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். ஓவிய கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் மனம் திறந்து என்னைப் பாராட்டுவார். இந்திரன், அல்போன்சா, ஆர்.பி. பாஸ்கரன், தனபால் இப்படி எல்லோரையும் தெரியும். ஆதிமூலம், தக்ஷ்ணாமூர்த்தி, விஸ்வம் போன்ற பெரிய ஓவியர்கள் எல்லோரும் என் மீது அன்பு கொண்டவர்கள்.

கற்கால குகை ஓவியங்கள் என்றெல்லாம் நாளேடுகள், தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எப்படி அந்த ஓவியங்கள் தாக்குப்பிடிக்கின்றன?

கற்கால குகை ஓவியக்கலைஞர்கள் இயற்கையாகவே கிடைத்த பொருட்களான மரக்கரி, சுண்ணாம்பு, தைலம், மூலிகைகளைக் குழைத்து சிவப்பு சில்லுக் கற்களை அரைத்து வரைந்திருக்கக்கூடுமென்று ஆய்வுகள் காட்டுகின்றன. குகைகளில் சூரிய வெளிச்சம் போதுமான அளவுக்குப்படுவதில்லை. அதுவும் இந்தக் கலைப் படைப்புகள் தப்பியதற்குக் காரணமாகும்.

சமணர்கள், பௌத்தர்கள், சித்தர்கள், சூஃபிகள் அவரவர் சமய நம்பிக்கையிலான ஆன்மிகத் தேடல்களைக் கடந்தும் இன்றுவரையில் மறைந்தும் மறையாமல் நம் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதற்கு, கலையியக்கம் மட்டுமே காரணம் என்பேன். இயற்கை என்னமோ கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறது. ஆனால், நவீன மனிதன் Tourist என்ற படியே பயணித்த காலடித் தடங்கள் எல்லாமே கலைப் படைப்புகளை அழித்தும், வன வளங்களைச் சூறையாடியும், விலங்குகளின் சமநிலை விகிதத்தை சீர்குலைத்தும் வந்திருக்கிறான்.

எனக்குக் கேட்கத் தோன்றாத, ஆனால் வாசகர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் விஷயங்கள் ஏதாவது?

ஓவியக் கலைக்கூடம் சென்று சுற்றி வாருங்கள் என வாசகர்களை அழைக்கிறேன். ஒரு பார்வையாளன் எடுத்தவுடனே ஒரு நவீன ஓவியத்திற்குள் நுழைய முடியாது. அதற்குப் பரிச்சயம் வேண்டும். நாம் எப்படி ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறோமோ, அப்படி ஓவியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நவீன ஓவியம் என்பது தனிமனித வெளிப்பாடுதான் என்றாலும், அந்த ஓவியனை, ஓவியத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு ஒரு காலகட்டத்தில் அந்த ஓவியத்தைப்பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

ஜனரஞ்சகமான பாடலை ரசிக்க இசை நிபுணத்துவம் ஒன்றும் அவசியமில்லை. பாரம்பரிய சாஸ்திரிய சங் கதம் என்றால் அதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும். அதற்கு நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜேசுதாஸாக மாற வேண்டிய கட்டாயமில்லை என்பதைப் போலத்தான் ஓவியமும். நல்லதொரு இசை நம்மை மயங்க வைக்கும், தாளம் போடச்செய்யும்; ஓவியமும் அப்படித்தான்.

‘சித்திரக்காரனின் குறிப்பு’ நாவலின் இறுதியில், வெளிச்சம் வெளியில் இல்லை என இரண்டாம் பாகத்தில் அது தொடர்ந்து செல்வதாக முடித்திருப்பீர்கள். உங்கள் மேசையறையிலும் அதன் சில அத்தியாயங்களைக் காண முடிந்தது. அதை எப்போது முடிப்பதாக எண்ணம்?

இந்தக் கதையின் கரு, ‘பாட்டி மருத்துவம்’ போன்ற பாரம்பரிய மரபு வைத்திய முறையை Magical Realism (மாய எதார்த்தவாதம்) நடையில் எழுதி வருகிறேன். நீண்ட நாவலான அதை எழுதி முடிக்க இன்னும் 6 மாதங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.

கி.ராஜநாராயணன் ஆரம்பித்து வைத்த வட்டார மொழி வழக்கு, உருது மொழியை வீட்டில் பேசிக்கொண்டு வீதியில் தமிழைப் பேசிய பிளவுபட்ட மனநிலையை மிகச் சரியாக பதிவுசெய்த கலைஞர் நீங்கள். அதைப் பற்றி?

தமிழர்களின் மத்தியில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட எங்கள் குடும்பம் இருந்தது. அதனால் குழந்தைப் பருவத்திலேயே மொழியின் நெளிவுசுளிவுகள் பிடிபடத் தொடங்கியது. மனித மூளை மகத்தானது; அதன் வேலைதிறன் அசாதாரணமானது. இன்னும் எத்தனையோ விஷயங்களை அது கற்றுக்கொண்டே இருக்கும். சென்னையில் வசிக்கும் தெற்கத்தி மக்கள் பலரும் என் தமிழ் உச்சரிப்பைக் கண்டுகொண்டு ‘மதுரைக்காரரா’ எனக் கேட்கும்போது மனம் மகிழும். கவிக்கோ அப்துல் ரஹ்மான், கதாசிரி யர் எஸ். அர்ஷியா எனப் பலரும் உருது பேசும் தமிழ் முஸ்லிம்கள்தான். இவர்களைத் தொடர்ந்து இனிமேலும் பலர் எதிர்காலத்தில் வரக்கூடும்.

பொதுச் சமூகம் உங்களை எப்படி நடத்தியது?

கலைஞானமுள்ள அனைவரும் என் ரசிகர்களே. அழகியல் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்க்கத்தான் செய்யும். முஸ்லிம்கள் பெரிய அளவில் என்னைக் கொண்டாடவில்லை என்கிற மனக்குறை இருப்பினும், இஸ்லாமிய இயக்கவாதிகளின் எந்த அலைக்கழிப்புக்கும் நான் உள்ளாகவில்லை என்பதே பெரிய விஷயம். பொதுச் சமூகமோ என்னை ஊக்குவித்தது; பாராட்டி உற்சாகப்படுத்தியது. நானும் சாதி, மதம் பாராமல் நிறைய இளைஞர்கள் உருவாக என்னால் முடிந்தவரை உதவினேன். மதுரையில் உருவான திரு. பாபு, லோகு, சரவணன், அப்பாஸ், சையது, ராமச்சந்திரன், பாலாஜி போன்ற சிறந்த கலைஞர்கள் இன்று உலகம் முழுக்க பேரோடும் புகழோடும் உள்ளனர்.

‘ரபீக் ஆர்ட் கேலரி’யில் பத்து வருடங்கள் தனியொரு ஆளாக நானே என் சொந்த செலவில் பரிசோதனை முயற்சிகளைச் செய்தேன். 1990களின் மத்தியிலிருந்தே என் ஓவியங்கள் போலந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்த பன்னாட்டு ஓவியக்கண்காட்சியில் இடம்பெற்றன. நமது கலைக்கூடத்தில் கவிதை, இலக்கியம், புதிய சினிமா போன்றவற்றை அரங்கக் கூட்டமாக நடத்த அனுமதித்ததன் மூலம் எங்களின் வட்டம் விரிவடைய ஆரம்பித்தது.

சுரதா, மு.மேத்தா, சுந்தர்காளி, எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, இந்திரஜித் போன்ற பலரும் அடிக்கடி அங்கு வருவர். சென்னையிலிருந்து தனபால், கிருஷ்ணராவ், அல்போன்ஸா , மகி, பிரபு, ராமச்சந்திரன், பாலாஜி, டாக்டர் துரைசிங்கம் மற்றும் கே.சி. முருகேசன் போன்றவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. தனிநபர் கண்காட்சிகளும் நடந்தன. இவ்வாறாக… ஓவியர்களான எங்களுக்கு வாசிப்பு என்பதன் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தோம்.

உங்களின் ஓவியம், நாவல் மற்றும் புகைப்படத் தொகுப்பில் கனவுலக மீட்டுருவாக்கம் முன்னும் பின்னுமாக ஊடாடுகிறது, சரியா? மேலும், இக்கலை மீதான உங்களின் ஆர்வத் தின் தொடக்கப் புள்ளியென ஏதும் உண்டா?

1990களுக்குப் பிறகு நவீன ஓவியர்களின் வாழ்க்கை பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டோம். அந்த முன்னோடிகளின் மாதிரிப் படைப்புகள் எல்லாவற்றிலுமே கனவு என்கிற அம்சம் இருப்பதைக் காண முடிந்தது. அது உள்மனதில் ஊசலாடும் வண்ணத் தொகுப்பு; வரையும்போது காட்சிப்படிமங்களாக உணர முடியும். கதை, கவிதை, பாடல், இசை, நடனம், சினிமா இவையனைத்துமே Conscious மற்றும் sub-Conscious மனநிலையில் உருவாகக்கூடியவை. கனவுகளின் தாக்கம் எனது ஓவியங்களில் குவியும்பொழுது அதன் ரசனை தூக்கலாக வரும்.

சிறுவனாக இருந்தபோதே ஓவிய ஈடுபாடு, அதன் மீதான ஆர்வம் என்னோடு தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் துரைசிங்கம் அவர்களுடன் 1982க்குப் பிறகு அறிமுகம் ஏற்பட்டது. அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராகச் சேர்ந்திருந்தார். முதல் சந்திப்பு இரண்டு மணி நேரங்கள் நீடித்தது. அவர் என்னுள் பாரிய தாக்கம் செலுத்தியவராக மாறினார். அவரது நடை, உடை மிகவும் வித்தியாசமானவை. அவருடைய தங்கும் விடுதி அறையே கலைக்கூடமாக, ஓவியர்களின் புகலிடமாக இருந்தது. அவருடனான என் முதல் சந்திப்பும், அதற்குப் பிறகு அவர் பேசிய பலதும் இன்னும் நினைவில் உள்ளது.

குறிப்பாக, வெறுமனே 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த உலகின் மாபெரும் ஓவியர் வின்சென்ட் வில்லியம் வாங்கா (VanGogh 1853-1890) பற்றியும், துரை பேசிக்கொண்டிருந்தபோது உயிருடன் இருந்த ஓவியர் டாலியையும், Sur-realisim, Modern Art என்பன பற்றியும் அலுப்புத் தட்டாமல் பேசுவார். துரைசிங்கத்தின் மர வேலைப்பாடுகள், சிற்பப் படைப்புகள் அற்புதமானவை. ஆக, கனவுகளை கலையார்வ தொடக்கப் புள்ளியாகவும், துரைசிங்கம் நட்பு அதற்கு நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களையெடுத்துப் போற்றிப் பாதுகாத்த தோழமையாகவும் பார்க்கிறேன்.

தமிழின் பண்பாட்டுத் தலைநகர் மதுரை. சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஒட்டியே வந்திருக்கும் ஐடி கம்பெனிகளால் கல் முளைத்த காடுகளில் புலம்பெயர்ந்த வாழ்க்கை. நடுத்தர வயதில் வேரோடு பிடுங்கி வேறொரு அந்நிய நிலத்தில் நட்ட உணர்வு தோன்றுகிறதா?

நகரமயமாதலின் வேதனையிது. இயற்கையோடு ஒட்டி வாழ கற்றுத்தரவேண்டும். கல்வி முறையில், சமூக அமைப்பில் மாற்றம் நிகழவேண்டும். கேளம்பாக்கம், கோவளம் செல்லும் பாதையில் அதிகாலையில் வெளிநாட்டுப் பறவைகள் இன்றைக்கும் வருகின்றன. ஒரு கலைஞனாக அவற்றைப் புகைப்படங்களாகவும் எடுத்து வைத்திருக்கிறேன். ஆக, இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் மீதமுள்ளன என்றே நம்புகிறேன். காண கண்களையும் கேட்க காதுகளையும் திறந்து வைத்திருந்தால் போதும்; வானம் வசப்படும்.

உங்களின் படைப்புகளில் – லெமூரியா மதுரையை கடற்கோளால் மூழ்கடித்தது- (லெமூரிய மதுரை கடற் கோளால் மூழ்கியது) போன்ற பாதி உண்மைகள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படுகின்றன. மனிதனுக்குள் இருக்கும் பழங்குடி மனம், தனக்கான வேர்களைக் கண்டடையும் பயணமாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

நிச்சயமாக! மனிதன் தன் வேர்களைக் காண்பதில் பேரார்வம் உள்ளவனாகவே இருக்கிறான். அது அடையாளங்களைக் கண்டடையும் தேடல். இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த பூமியில் தோன்றிய உயிரினங்களிலேயே மனிதனின் ஆயுட்காலமோ அதிகபட்சம் நூறு வயது. டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன. இருந்தபோதிலும், மனிதனின் இருப்புதான் நிலையான தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம், எந்த உயிர்களிடத்திலும் இல்லாத வேறு ஏதோ ஒன்று மனித இயல்பிலும், சிந்தனையிலும் தனித்ததாக, விசேஷமானதாக உள்ளது என்றே பொருளாகிறது அல்லவா?

வட்டார வழக்காக உருதுவும், வெளியில் தமிழுமான சிறுபான்மை மொழியினரான நீங்கள், பொதுச் சமூகத்துடன் பிணைக்கும் அல்லது பிரிக்கும் பிரதான அம்சமாக எதைப் பார்க்கிறீர்கள்?

பூந்தோட்டத்தில்லுள்ள மலர்களைப் போன்றே மனிதர்களும் விதவிதமானவர்கள். நமக்கு பரிச்சயப்படாத சமூக பண்பாட்டுக் கூறுகளைக் கண்டால் அதிகபட்சம் பார்வையாளனாக இருந்து வேடிக்கை பார்க்கலாம். விமர்சனமெல்லாம் செய்யக் கூடாது. சரி/தவறு என்று நம் கருத்தைத் தெரிவிக்கக் கூடாது. பூக்கள் முட்களுடன் இருக்கத்தான் செய்யும். சகிப்புத்தன்மையுடன் அதன் இருப்பை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். கோவில், திருச்சபை, பள்ளிவாசல் என எதையுமே பாரபட்சமுடன் பார்க்கக்கூடாது. திருக்குர்ஆன் அழகாகச் சொல்கிறது: ‘உன்மார்க்கம் உனக்கு; எனது மார்க்கம் எனக்கு!

சந்திப்பும் உரையாடலும்: ஆம்பூர் நதீம், சு.மு. அகமது

(நன்றி: சமநிலைச் சமுதாயம்)

Related posts

Leave a Comment