கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைச்சாலைகளில் மட்டும் இந்திய முஸ்லிம்களுக்குக் கூடுதல் ‘பிரதிநிதித்துவமா’?!

Loading

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் கடந்த ஆண்டு ஜனவரி 28ம் நாள் டெல்லி காவல்துறையால் சிறையிலடைக்கப்பட்டார். தொடக்கத்தில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநிலங்கள் அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவுசெய்திருந்தன. இந்தப் பின்னணியில் அவர் சிறை வைக்கப்பட்ட பின்னர், ஆள்தூக்கிச் சட்டமான UAPAவும் அவர் மீது போடப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

இந்த பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு குறித்து; இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, பாரபட்சம் குறித்து; மையநீரோட்ட மதச்சார்பற்றக் கட்சிகளின் சிக்கல்கள் குறித்தெல்லாம் ஷர்ஜீல் எழுதிய ஆக்கங்கள் அனைத்தும் காத்திரமான மாற்றுப் பார்வைகளை முன்வைக்கக்கூடியவை.

ஷர்ஜீல் சிறையிலடைக்கப்பட்டு இன்றோடு 400 நாட்கள் உருண்டோடிவிட்ட நிலையில், 2019 ஜூலை 3ம் நாள் முஸ்லிம் சிறைவாசிகள் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை இங்கு பகிரப்படுகிறது. ஷர்ஜீலுக்காகவும் அவரைப் போலவே இன்று அரசால் வேட்டையாடப்பட்டு சிறையிலிருக்கும் கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்காகவும் அயறாமல் குரல் எழுப்புவோம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கள் மக்கள் தொகையைக்காட்டிலும் மிக அதிகமான விழுக்காடு சிறைகளில் உள்ளார்கள். 1998ம் ஆண்டு தொடங்கி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறைச்சாலை குறித்த புள்ளிவிவரங்கள் சிறைவாசிகளின் சாதி, மதம் சார்ந்த அம்சங்களையும் உள்ளடக்கி பதிவுசெய்துவந்தன. மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதமுள்ள முஸ்லிம்கள் சிறைச்சாலையில் 20 சதவீதம் உள்ளார்கள் என்பதை அது எடுத்துக்காட்டியது. ஆனால், அப்படியான புள்ளிவிவரங்களை வெளியிடும் முறையை பாஜக அரசு ஒழித்துவிட்டது. அண்மையில் 2016ம் ஆண்டு வெளியான சிறை நிலவரம் குறித்த புள்ளிவிவர அறிக்கையில் அவை இடம்பெறவே இல்லை.

இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம்கள் தம் மக்கள் தொகை விழுக்காட்டைவிடவும் அதிமான அளவில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் எனும் உண்மையை நிறுவ நமக்குக் கிடைக்கின்ற 17 ஆண்டுகால தரவுகளே போதுமானவையாகும். மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற சில மாநிலங்களின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது.

இர்ஃபான் அஹ்மது, முஹம்மது ஸகரிய்யா சித்தீக் ஆகியோர் ‘Democracy in Jail’ எனும் தங்களின் முக்கியமான கட்டுரையில் இந்த 17 ஆண்டுகால தரவுகளின் சராசரியை முன்வைத்து, முஸ்லிம்கள் முதலான சிறுபான்மையினர், தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் தம் மக்கள் தொகை விழுக்காட்டைக்காட்டிலும் அதிமான அளவு இந்தியச் சிறைகளில் இருப்பதை விவாதிக்கின்றனர். மேலும், இதுகுறித்த சமூகவியல் பகுப்பாய்வை முன்வைக்கும் அவர்கள், அதன் பின்னுள்ள அமைப்பியல், அரசியல் காரணிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆக்கத்தில் இரு விஷயங்கள் இடம்பெறுகின்றன. 1) இந்திய அளவில் மற்றும் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க வீதம் வசிக்கும் மாநிலங்களின் 17 ஆண்டுகளுக்கான வருடாந்திர விளக்கப்படம், 2) இந்த ஆண்டுகளுக்கான தரவுகளை விசாரணைக் கைதிகள் (Undertrial) என்றும் தண்டனைக் கைதிகள் (Convicts) என்றும் பிரித்துக்காட்டுதல்.

முதலில் இந்தியாவின் மொத்த தரவுகளைப் பார்ப்போம்:

விசாரணைக் கைதிகளில் இந்த 17 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து 21-22 சதவீதத்தைவிட அதிகமாக சிறையில் இருந்துவந்துள்ளனர். அதேசமயம், தண்டனைக் கைதிகளில் முஸ்லிம்களின் வீதம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. 16ல் இருந்து 19 சதவீதம்வரை அது உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டுகளில் ஒட்டுமொத்த மக்கள் தொகை 13 முதல் 14 சதவீதம்வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்டதைவிடவும் மிக அதிகமான எண்ணிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்தத் தரவுகளில் முஸ்லிம்களின் சாதி ரீதியிலான விவரங்கள் பிரித்துக்காட்டப்படவில்லை என்றாலும், பஸ்மந்தா முஸ்லிம்களும் ஏழை முஸ்லிம்களும் அவர்கள் முஸ்லிம்களுக்குள் பலவீனமான பிரிவாக இருப்பதால், சட்ட ஆலோசனைகளோ அரசியல் ‘தொடர்புகளோ’ இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம்.

முஸ்லிம் மக்கள் தொகை வீதத்தைவிடவும் சிறைவாசிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்ற மாநிலங்களின் நிலையைப் பார்ப்போம்:

1. மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிராவின் நிலை ரொம்பவும் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 10-11 விழுக்காடு இருக்கும்போது, சிறைவாசிகளில் 30 விழுக்காடு இருக்கிறார்கள். அதிலும் முஸ்லிம்களுள் கைதுசெய்யப்பட்டவர்களின் வீதத்தைவிட மிகக் குறைவான அளவே தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் உள்ளது. அது 5 முதல் 10 விழுக்காடு வரையிலான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

2. குஜராத்

குஜராத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9-10 விழுக்காடு இருக்கும் நிலையில், சிறையில் அவர்கள் 20-30 விழுக்காடு உள்ளார்கள். குற்றம் நிரூபிக்கப்படுவோர் வீதமும் கைதுசெய்யப்படுவோர் வீதமும் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று பொருந்திப்போகிறது. அவை இரண்டும் பல்லாண்டுகளாக சுமார் 30 விழுக்காடாகவே இருந்துவருகிறது.

3. மேற்குவங்கம்

இந்தியாவிலேயே மேற்குவங்க சிறைச்சாலைகளில்தான் அதிகமான வெளிநாட்டு சிறைவாசிகள் உள்ளார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் வங்கதேசத்தையும் மியான்மரையும் சேர்ந்த முஸ்லிம்களே என்று நம்பப்படுகிறது. இது சிறைகளிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது; அங்கு தண்டனைக் கைதிகளும் விசாரணைக் கைதிகளும் சுமார் 50 விழுக்காடு இருக்கிறார்கள். வெளிநாட்டு சிறைவாசிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், அவர்களுள் 80 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்று கருதினாலும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

4. ராஜஸ்தான்

இங்கு 8-9 விழுக்காடு கொண்ட முஸ்லிம் மக்கள் தொகையில் 17-20 விழுக்காடு சிறைவாசிகள் முஸ்லிம்களாக உள்ளார்கள். தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் வீதம் கிட்டத்தட்ட சமம்தான்.

5. தமிழ்நாடு

இந்த விஷயத்தில் தமிழகத்தின் நிலையும் நமக்கு அதிர்ச்சியளிக்கவே செய்கிறது. சுமார் 6 விழுக்காடு முஸ்லிம் மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் தொடர்ந்து 15 விழுக்காடு சிறைவாசிகள் முஸ்லிம்களாக இருந்துவருகிறார்கள். இதுவே சில ஆண்டுகளில் 20 விழுக்காட்டையும் எட்டியிருக்கிறது. இந்த மாநிலத்தின் நிலைமை மேலும் ஆய்வுக்குரியது.

6. மத்தியப் பிரதேசம்

6-7 விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் 12-13 விழுக்காடு சிறைவாசிகள் முஸ்லிம்களாக உள்ளார்கள். தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

7. கர்நாடகா

கர்நாடகாவின் நிலை தனித்துவமாகத் தெரிகிறது. விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களின் விழுக்காட்டைவிடவும் தண்டனைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் விழுக்காடு மிக அதிகம். கிட்டத்தட்ட எல்லா ஆண்டும் இதே நிலைதான்.

8. ஜார்கண்ட்

அங்கு முஸ்லிம்கள் சுமார் 14 சதவீதம்; சிறைச்சாலையில் 20 சதவீதத்துக்கும் மேல்.

9. உத்திரப் பிரதேசம்

இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் உபி. மக்கள் தொகையில் சுமார் 18-19 சதவீதம். மொத்த தண்டனைக் கைதிகளில் 20 விழுக்காடு முஸ்லிம்களாக இருக்கிறார்கள். விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதைக்காட்டிலும் அதிகம்; தொடர்ச்சியாக சுமார் 25 விழுக்காடு அவர்கள் இருந்துவருகிறார்கள்.

இந்த விஷயத்தில் முஸ்லிம்களின் நிலை சற்று மேம்பட்டு இருக்கும் மூன்று மாநிலங்களைப் பார்ப்போம்:

10. கேரளா

அங்கு முஸ்லிம் மக்கள் தொகை 27 சதவீதம். சிறைச்சாலையில் அவர்கள் 27-32 சதவீதம்; தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் வீதமும் இதே அளவில்தான் உள்ளது.

11. அஸ்ஸாம்

மக்கள் தொகையில் 33-34 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட அஸ்ஸாமிலும் அதே வீதத்தில் சிறைவாசிகள் உள்ளார்கள். தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் வீதம் கிட்டத்தட்ட சமம்தான்.

12. பிஹார்

பிஹாரின் தரவுகள் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. 2002 முதல் 2015 வரை முஸ்லிம் தண்டனைக் கைதிகளின் சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகை வீதத்தைக்காட்டிலும் குறைவாய் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ளது. இந்த அம்சத்தைக் கொண்ட ஒரே மாநிலமாக பிஹார் இருப்பது தெரிகிறது.

அங்கு விசாரணைக் கைதிகளில் முஸ்லிம்களின் விழுக்காடு அதிகமாக இருந்தபோதிலும், அதுவும் 2002-2006 மற்றும் 2011-2015 ஆண்டுகளின் முஸ்லிம் மக்கள் தொகையின் அளவுக்கு (16-17 சதவீதம்) நெருக்கமாகவே உள்ளது. 2007-2010 காலகட்டத்தில் முஸ்லிம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது; அப்போது முஸ்லிம்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கைதுசெய்யப்பட்டார்கள். இருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் தண்டனை வழங்கப்பட்டோர் எண்ணிக்கை முஸ்லிம் மக்கள் தொகைக்குக் குறைவாகவே இருந்தது. இதன் கடைசி ஐந்தாண்டுகளில் தண்டனை வழங்கப்பட்ட சதவீதமும் விசாரணைக் கைதிகளின் சதவீதமும் முஸ்லிம் மக்கள் தொகைக்கு நெருக்கமாக இருந்துள்ளன.

சுருங்கக்கூறின், முஸ்லிம் மக்கள் தொகையைவிடவும் சிறைச்சாலைகளில் அவர்களின் சதவீதம் மிக அதிகமாக உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் தம் மக்கள் தொகை வீதத்தைவிடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

அஸ்ஸாம், கேரளா, பிஹார் (ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும்) ஆகிய மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளின் வீதமும் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை வீதமும் பொருந்திப்போகின்றன.

இரண்டாவதாக, தண்டனைக் கைதிகளைவிட விசாரணைக் கைதிகளாக சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகம், (தேசிய அளவிலான தரவுகளின்படி 5-6 விழுக்காடு அதிகம்). இந்நிலை உபி, மபி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது. பிஹாரில் 2006-2010 காலப்பிரிவில் இதுபோன்ற நிலைமை இருந்துள்ளது.

சிறைவாசிகளின் சமூகப் பின்புலத்தையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டுவந்த புள்ளிவிவரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் எவ்வாறு ஆகியுள்ளன என்பதை நம்மால் அறிய முடியாது; மோடி அரசு அவ்வாறு விவரங்களை வெளியிடுவதைக் கைவிட்டுவிட்டதால். தற்போது சிறைவாசிகளில் முஸ்லிம்களின் சதவீதம், குறிப்பாக விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் சதவீதம், குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கும் என்றால் அதில் வியப்பேதுமில்லை. இதுபோக, வகுப்புவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைவிட எளிதாகக் கைது செய்யப்படுவதையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

(மூலம்: Over Representation of Muslims in jail in most of Indian States: Here’s the State Wise Data, ஜூலை 3, 2019)

Related posts

Leave a Comment