கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

CAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

Loading

ஜனவரி 16, 2020 அன்று அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியதன் காணொளி

இப்படித்தான் அந்த வன்முறை ஆரம்பித்தது. ஜேஎன்யூவில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. முதலில், அவர்கள் போராட்டக்காரர்களை விரட்ட காவலர்களை அனுப்பினார்கள். காவலர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகவே, ஏபிவிபியைச் சேர்ந்த நபர்கள் அங்கே வந்தார்கள். அடிதடி நடந்தது. முதலில் ஏபிவிபி தாக்கியது, அடுத்த நாள் இடதுசாரிகள் தாக்கினார்கள். சுமார் 100 அடியாட்கள் ஜேஎன்யூவுக்கு வந்த சமயம், தற்செயலாக நான் அப்போதுதான் 25 நாட்களுக்குப் பின் ஷாஹீன் பாக்கிலிருந்து ஜேஎன்யூவுக்குத் திரும்பி வந்திருந்தேன். சரியாக அப்போது மாலை 5 மணி. அப்போது அங்கு சண்டை நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே நுழைந்தபோது 3-4 அடியாட்கள் தம் கைகளில் இரும்புக் கம்பிகளுடன் நிற்பதைப் பார்த்தேன். அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். ஆனால், இன்னும் நூறு அடியாட்கள் அங்கே வந்துகொண்டிருந்தது எனக்கு எப்படித் தெரியும்? ஒரு மணி நேரத்துக்குள் அவர்கள் அங்கே வந்துவிட்டார்கள்.

சற்று தொலைவிலிருந்த வேறொரு விடுதியில் நாங்கள் இருந்தோம். நாங்கள் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அந்தக் கும்பல் தன் வேலையை ஏற்கனவே முடித்திருந்தது. நாங்கள் அங்கு வந்தது 7:30 மணிக்கு. அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது சுமார் 6 மணியிலிருந்து. பல்கலையின் பிரதான நுழைவாயில் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததை நாங்கள் பார்த்தோம். சாலைகள் காலியாக இருந்தன; ஒருவரையும் காண முடியவில்லை. காவல்துறை அதிகாரிகள் 6 மணிக்கே வாயிலை தம் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அவர்கள்தாம் அந்த வன்முறைக் கும்பலை உள்ளே வர அனுமதித்திருக்கிறார்கள்.

நாங்கள் மீண்டும் விடுதிக்குத் திரும்பத் தொடங்கினோம். இருசக்கர வாகனங்களில் சுமார் 60-70 பேர் எங்களை நெருங்கினார்கள். நாங்கள் வெறும் ஐந்தாறு பேர் மட்டுமே. அந்தக் கும்பலிலிருந்த அனைவரும் தடிகள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றை வைத்திருந்தனர். அவர்களோடு இரு காவல் அதிகாரிகளும் துணையிருந்தனர். அங்கிருந்து இடத்தைக் காலி செய்யுமாறு அவர்கள் கூறவே, நாங்கள் பின்புறமாகச் சென்றுவிட்டோம். நாங்கள் அதிகமான ஆட்களுடன் திரும்பி ஓடிவந்த நேரத்தில், 150-200 போலீசார் எங்களை நோக்கி வருவதைக் கண்டோம். போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர்களை அவர்கள் சுற்றிவளைத்தனர், மற்றவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர். காஷ்மீரிகளின், குறிப்பாக முஸ்லிம்களின் விடுதி அறைகள் இலக்காக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டன. பல்வேறு மாணவர்கள் அவர்களது பால்கனியிலிருந்து குதித்தோடிவிட்டனர்.

சிபிஎம் வன்முறைப் போக்கு கொண்ட கட்சியாக இருந்து வந்திருக்கிறது எனும் உண்மையை நான் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகவே அது வன்முறைப் போக்குடனேயே இருந்திருக்கிறது. அது ஏபிவிபி போலவே மக்களைத் தாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை இரண்டுமே தீவிரமான வன்முறைக் கட்சிகள். நான் இடதுசாரிகள் பற்றி பிறகு பேசுகிறேன், ஆனால் சிபிஎம் வன்முறைக் கட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வங்காளத்திலும் கேரளாவிலும் அதன் வரலாற்றை நீங்கள் அறிய முடியும். அவர்கள் ஒரு கும்பலைச் சேர்ப்பதன் மூலமே தம் வீரத்தைக் காட்டுவார்கள். நேற்றுகூட ஏதோ செய்துவிட்டார்கள் என்று சொல்லி ஒரு மூன்று பேரை போட்டு அடித்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? புகாரளிக்கும் வழிமுறை இருக்கிறது, எல்லா விஷயத்தையும் செய்ய அதற்கே உரிய வழிமுறை இருக்கிறது.

அதேபோல், சண்டையிடுவதென்றால் இறுதிவரை நின்று சண்டையிடுங்கள். உங்கள் சண்டைக்கான நேரம் வரும்போது காணாமல் போய்விடாதீர்கள். உங்கள் செயல்களுக்கான சுமையை பிற மாணவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகம் தாக்குதலுக்குள்ளாகிறது என்றால் நீங்கள் சுவர்போல அங்கு நிற்கவேண்டும். ஆனால், இதற்கு மாறாக அனைவரும் காணாமல் போய்விட்டனர். இந்த விஷயம் மிக முக்கியமானது, குறித்து வைக்கப்படவேண்டியது. அவர்களால் பொதுவான மாணவர்கள் தாக்கப்பட்டனர், மாணவர்களின் மண்டைகள் உடைக்கப்பட்டன. ஜேஎன்யூ மாணவர் தலைவி அய்ஷ் கோஷ் மட்டுமே துணிவுடன் தலைமை தாங்கி நின்று சூழலை எதிர்கொண்டார். மீதமுள்ள போராளிகள் எங்கும் தென்படவில்லை. 7 மணி முதல் நான் அங்கு நின்றிருந்தேன், எனக்குத் தெரிந்தவரை இதுதான் நடந்தது.

இந்தியாவிலுள்ள இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் வரலாறு

இப்போது இடதுசாரிகள்பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன். நமக்கு அவர்களிடம் இரண்டு வகையான பிரச்னைகள் உள்ளன. இஸ்லாத்தில் மன்ஹஜ் (சாராம்சமானது), மஸ்லக் (பெயரளவிலானது) எனும் கருதுகோள்கள் உண்டு. அஹ்லே ஹதீத் என்பது சாராம்சமாகவோ அல்லது பெயரளவிலோ இருக்கலாம். அதாவது, நீங்கள் ஹதீதை எல்லா நேரங்களிலும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக்கொள்ளலாம் அல்லது அதை இன்னும் முறையாக ஆய்ந்தறிந்து சூழமைவுக்கு ஏற்றார்போல் பொருள்கொள்ளலாம். நிறுவனங்களும் கூட சாராம்சமானவையாகவோ பெயரளவிலானவையாகவோ இருக்க முடியும். தனிநபர்களும்கூட எழுதப்பட்டவை எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோராக இருக்கலாம், அல்லது காரணங்களையும் சூழமைவையும் புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொண்டோராக இருக்கலாம்.

தனிநபர்களைப் பொறுத்தவரை அவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களோடு அமர்ந்து அவர்களின் கண்ணோட்டத்தைக் குறித்து விவாதிப்பது உங்களுக்குச் சாத்தியப்படும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் ஆவணமாகின்றவைதாம். ஒரு கட்சியின் செயல்பாட்டை வைத்து அது எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறோம். அதுபோலவே ஒரு நபர் தன்னை கம்யூனிஸ்ட் என்று வாதிடலாம், அவருடனான உரையாடல் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கும். ஒருவர் தன்னை சிபிஎம் உறுப்பினர் என்று கோரினால் அவருடனான உரையாடல் வேறு மாதிரிதான் இருக்கும்.

வரலாற்று ரீதியாகவே சிபிஎம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்திருக்கிறது. கருத்தியல் விவாதம் ஒருபக்கம் இருக்கட்டும், இது அரசியல் வரலாறு சார்ந்தது, கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அது என்ன செய்தது என்பது தொடர்பானது. அவர்கள் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லை; அவர்களை வறுமையில் உழலவிட்டார்கள். அனைத்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும் பொதுப் பட்டியலில் கணக்கிடப்பட்டார்கள். 2010க்குப் பின்னரே சில விளிம்புநிலை முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவொரு எளிய அரசியல் புரிதல். இடஒதுக்கீடுக்கு எதிராகவே இவர்கள் இருந்துவந்துள்ளார்கள். நான் ஐஐடி பம்பாயில் படித்தேன். மண்டல் ஆணையம் நடைமுறைப்படுத்தப்படும் முன்பு 600 மாணவர்கள் இருக்கும் இடத்தில் ஐந்து அல்லது ஆறு முஸ்லிம்களே இருந்தார்கள். மண்டல் ஆணையம் நடைமுறைக்கு வந்த பிறகு அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக, அதாவது 15ஆக உயர்ந்தது. இவ்வளவு பெரிய மாற்றத்தை அந்த ஆணையம்தான் ஏற்படுத்தியது.

உங்களுக்கு நினைவிருக்குமானால் இடதுசாரிக் கட்சிகள் அதற்கும்கூட எதிராகவே இருந்தார்கள். இடதுசாரிகளோ காங்கிரஸோ, இரு கட்சிகளுமே கடந்த 70 ஆண்டு கால வரலாற்று ஓட்டத்தில் உங்களோடு எந்தப் புள்ளியிலும் நின்றதில்லை. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சில தனிநபர்கள் நல்லவர்களாக இருக்கலாம், நம் மீது அனுதாபம்கொண்டோராக இருக்கலாம். ஆனால் ஒரு அமைப்புரீதியான சக்தியாக அவர்கள் எப்போதும் நம் பாதையை அடைத்துநிற்பவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். நம்மை அவர்கள் முன்னேறவிட்டதே இல்லை. இதுதான் அரசியல் வரலாறு.

கருத்தியல் விவாதங்கள் தனியானவை. அவர்களின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பழமையானது, அருங்காட்சியகத்தில் வைக்கத் தகுந்தது. அவர்களின் புரிதலுமேகூட ரொம்பவும் பழமையானது, நம்மோடு அவர்களால் பேசக்கூட முடியாது. அதுபற்றி நாம் பிறகு பேசுவோம். தற்சமயம் நம் நட்பு சக்திகளையும் எதிரிகளையும் அடையாளம் காண்பதுபோன்ற மிக அவசரமான விவகாரங்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது.

ஆதரவுக்கான நிபந்தனைகள்

தற்போது இன்னொரு விஷயத்தை நாம் டெல்லியில் முயற்சிக்கப் போகிறோம். பாருங்கள், நாமெல்லாம் ஆய்வு மாணவர்கள். நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிமல்லாத நபரையாவது கூட்டிவர முடியும். அது ஒவ்வொரு ஆய்வு மாணவரின் மீதுமான பொறுப்பு. டெல்லியில் நாம் 500 முஸ்லிம் ஆய்வு மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை உருவாக்கி, அவசரத் தேவை எழும்பட்சத்தில் 500 இந்துக்கள் நம்முடைய துணைக்குவருவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். நாம் டெல்லியில் நமது வாழ்நாளையே கழித்துள்ளோம், குறைந்தது இதைச் செய்யும் அளவுக்காவது நாம் பணியாற்றியிருக்கிறோம். நம்முடைய பிரச்னைக்காக நம்முடைய நிபந்தனைகளின் அடிப்படையில் 500 முஸ்லிம்களையும் 500 முஸ்லிமல்லாதோரையும் வீதிக்கு அழைத்து வருவதாக நம்முடைய முயற்சி அமையவேண்டும். நாம் ஒவ்வொருவரும் தலா ஒரு இந்துவையேனும் நம்முடைய நிபந்தனைகளின் பேரில் அழைத்துவர முடியும்தானே?

நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நாம் நம்மை மதவாத முத்திரையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதை மட்டுமே விரும்புவதாக இருந்தால், உண்மையில் அம்முத்திரை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், போலீசாரின் மிருகத்தனமான நடவடிக்கைதான் இங்கு விஷயம். தனியாக போலீசாரால் கடும் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிவரும் என்பதுதான் விஷயம். மதவாத முத்திரை எனும் அம்சம்பற்றி டெல்லியில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது என்பதே நான் இதைச் சொல்லிக்காட்டக் காரணம்.

நம்முடன் சேர்ந்து நாரே தக்பீர் சொல்கிற, நம்முடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நம்மோடு நிற்கிற முஸ்லிமல்லாதோர் கூட்டமொன்றை டெல்லியில் ஒருங்கிணைப்பதே நம்முடைய முயற்சி. நம் நிபந்தனைகளை அவர்கள் ஏற்கவில்லையென்றால் அவர்கள் நம்மையும் நம் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம். இதைத்தான் கடந்த 70 ஆண்டுகளாக அவர்கள் செய்து வந்துள்ளார்கள். முஸ்லிமல்லாதோரிடம் நாம் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அவர்கள் நம்மீது அனுதாபம் கொள்வதாக இருந்தால் நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் நம்முடன் நிற்கவேண்டும். அவர்களால் அது முடியவில்லையென்றால் அவர்கள் நம் அனுதாபிகள் அல்லர்.

பிஹாரில் கன்னையா குமார் / அஸ்ஸாமை முடக்குதல்

பிஹாரின் உதாரணத்தைத் தருகிறேன். ஏராளமான பேரணிகள் அங்கே நடந்தன. தினந்தினம் பெரிய பேரணிகள் நடைபெற்றன. கன்னையா குமார் முன்னிலையில் நடந்த பேரணியைப் பாருங்கள். 5 லட்சம் பேர் அதில் பங்கேற்றார்கள். அதன் பிரச்னை இதுதான், முன்பே நான் இதைச் சுட்டிக்காட்டியிருந்தேன், நம்மிடம் அதே 5 லட்சம் பேர் ஒருங்கிணைந்திருந்தால் வடகிழக்கை இந்தியாவிலிருந்து துண்டித்திருக்கலாம், நிரந்திரமாக இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு மாதத்துக்காவது. பாதைகள் அனைத்திலும் பெரியளவுக்கு கற்கூளங்களை கொட்டி நிரப்ப நம்மால் முடியும், அதை அப்புறப்படுத்தவே அவர்களுக்கு ஒரு மாதம் பிடிக்கும். அஸ்ஸாமையும் இந்தியாவையும் துண்டிப்பது நமது கடமை. அப்போதுதான் அவர்கள் நமக்குச் செவிசாய்ப்பார்கள்.

அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்களின் நிலைபற்றி உங்களுக்குத் தெரியும்; சிஏஏ அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு கூட்டுப் படுகொலை அங்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வங்காளிகள் எல்லோரையும் — இந்து, முஸ்லிம் வேறுபாடின்றி — அவர்கள் படுகொலை செய்துவிட்டார்கள் என்ற செய்தி நம்மை வந்தடையப் போகிறது. அஸ்ஸாமுக்கு நாம் உதவ நினைத்தால், இங்கிருந்து அஸ்ஸாமுக்குச் செல்லும் பாதைகளை மூடுவதன் மூலம் இங்கிருந்து ராணுவமும் தளவாடங்களும் அங்கு செல்வதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அது நம்மால் முடியும். ஏனெனில் (வடகிழக்கு மாநிலங்களை எஞ்சிய இந்தியாவுடன் இணைக்கும்) Chicken’s Neck corridor முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பகுதியாகும்.

கன்னையா போன்ற அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்? மக்களை இன்குலாப் கோஷங்கள் முழக்கமிட வைப்பார்கள், சில புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள், பிறகு அங்கிருந்து கிளம்பிவிடுவார்கள். கைத்தட்டுகள் நம்முடையவை, முகம் அவர்களுடையது. இன்றுவரை அவர்களால் ஆக்கப்பூர்வமான ஒரு விஷயமும் நடந்ததாக வரலாறில்லை. ஆம், ஒரேயொரு ஆக்கபூர்வமான விஷயம்கூட நடந்ததில்லை. இதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். வெகுமக்கள் கோபமாக இருக்கிறார்களென்றால், அந்தக் கோபத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டியது அரசியலர்கள், ஆய்வாளர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் மீது கடமையாகும். புகைப்படம் எடுத்துக் களித்திருப்பதில் அதை வீணடிக்கக்கூடாது.

வெகுமக்களை உணர்வூட்டுதல்

இன்னொரு விஷயத்தையும் நான் புரிந்துகொண்டேன். வெகுமக்களை உணர்வூட்டுவதற்கான வழிவகைகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தியத் தேசத்தின் சன்னதியில் (altar) வழிபடுவோரின் கட்டுப்பாட்டிலேயே அவை இருக்கின்றன. இடதுசாரிகளும் சரி, காங்கிரசும் சரி இந்த விஷயத்தில் சமளவு குற்றவாளிகளே. முஸ்லிம் ஆய்வாளர்களின் ஒரு குழுவை நாம் உருவாக்கினால் அவை நம் கட்டுக்குள் வரும்; அதில் நாம் தேசியவாதியா, இல்லையா என்றெல்லாம் விவாதித்துக்கொண்டிருக்க மாட்டோம். வெளியுலகுக்குக் காட்ட வேண்டுமென்பதற்காக, ’இந்தியாவில் இன்றுள்ள நிலைமைகளை’ கருத்தில்கொண்டு கொஞ்சம் நாட்களுக்கு நாம் வாய்மூடி இருக்கவேண்டும் என்பதும்; இன்றைய அல்லது நாளைய நிலைமைகளுக்கு ஒத்துவராது என்பதற்காக நாம் சில தளங்களில் சில விஷயங்களைப் பேசத் தேவையில்லை என்பதும் சரிதான். அதற்காக, நாளை என்பதற்கு 10 வருடங்களுக்குப் பிறகு என்று பொருளில்லை. நான் பேசுவது அன்றாட விஷயங்கள்பற்றி.

ஆய்வு மாணவர்களாகிய நாம் இந்திய அரசியல் சாசனம், அமைப்புமுறை ஆகியவற்றின் விஷயத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்பதில் தெளிவோடிருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் நம்மால் முன்னேறிச் செல்ல முடியும். இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. தயைகூர்ந்து நீங்கள் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும். வெகுமக்கள் வீதிகளில் நிற்கிறார்கள், அவர்கள் நமக்குச் செவிசாய்க்கத் தயாராகவுள்ளார்கள்.

ஷாஹீன் பாக்கில் நான் மேடையில் ஏறி இரண்டு-மூன்று தடவை காங்கிரஸுக்கு எதிராகப் பேசினேன். கடந்த 20 நாட்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற பெயர்களைக்கூட நான் பயன்படுத்தவில்லை. மக்களுக்கு ஏற்கனவே அவர்களைப் பற்றி தெரியும். அவர்கள் வீதிகளில் நிற்கக் காரணம் பாஜக முஸ்லிம்களுக்கு எதிராக ஏதோ புதிதாகச் செய்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு சிஏஏ பற்றிகூட எதுவும் தெரியாது, அவர்களுள் பெரும்பாலானோர் என்ஆர்சி, சிஏஏ பற்றியெல்லாம் அறிந்தவர்களில்லை. நான் சொல்வது டெல்லியிலுள்ள மக்களைப் பற்றி. எனில், பிஹாரில் என்ன நிலைமை என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அங்கே வெகுமக்கள் வெறும் என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக வீதிகளில் நிற்கவில்லை; அவர்கள் சிஏஏவுக்கு எதிராகவும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் நாட்டையும் பாதுகாக்கவும் நிற்பதாக மக்கள் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். நாட்டைக் காப்பது ஒருபக்கம் இருக்கட்டும், முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டாலே பெரிய விஷயம். ஏனெனில், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டாலே, இயல்பாக அது நாட்டையும் பாதுகாத்ததாக அமைந்துவிடும். ஒருவேளை நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லையென்றால், பிறகு இந்த நாடும் நாசமாகிவிடும். முஸ்லிம்களால் ஒருங்கிணைந்த முறையில் வினையாற்ற முடியவில்லையென்றால் அங்கு ஒருங்கமைவற்ற எதிர்வினைதான் நிகழும். அவ்வாறு நிகழும்பட்சத்தில் இந்த நாடு தாங்காது. நம் எல்லோருக்கும் இது நன்கு தெரியும்.

முஸ்லிம்கள் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்ள முடிந்தால், அவர்களால் நாட்டையும் பாதுகாக்க முடியும். நம்மிடம் அந்த அளவுக்கு ஆற்றல் இருக்கிறது. வீதிகளில் வெகுமக்கள் நான்காவது கியரில் உள்ளார்கள், நாமும் அதுபோலவே நான்காவது கியரில் செல்லவேண்டும். கல்வி வளாகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதைக் காட்டிலும் நாம் வெகுமக்களை விழிப்படையச் செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். நாம் என்ஆர்சி, சிஏஏ பற்றி பேசுகிறோமென்றால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியக் குடியுரிமையின் முழு வரலாற்றையே சொல்லலாம், எதிரி சொத்துச் சட்டம் (Enemy Property Act) பற்றியும், மக்கள் எப்படி துரத்தியடிக்கப்பட்டார்கள், எப்படி படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது பற்றியும் நெல்லிப் படுகொலை பற்றியும் பேசலாம். மொத்த வரலாற்றையும் நாம் அவர்களிடம் சொல்லவேண்டும்.

யாரும் அவர்களிடம் போய் இதையெல்லாம் சொல்லப் போவதில்லை. நெல்லிப் படுகொலையைச் செய்தவர்கள் நிச்சயம் அவர்களுக்கு அதுகுறித்துச் சொல்லமாட்டார்கள். இந்திரா காந்தி போன்றோர் அந்தப் படுகொலையைப் பற்றி வாய்திறக்கமாட்டார்கள். நாம்தான் அதையெல்லாம் சொல்லவேண்டும். மக்கள் அதைக் கேட்கத் தயாராகவுள்ளார்கள். ஷாஹீன் பாக்கில் இதை நான் கவனித்தேன். நான் காங்கிரஸ், காந்திக்கு எதிராக பேசும்போது அவர்கள் செவிசாய்த்தார்கள். அதுகுறித்த விவரங்களையும் வினவினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமில்லை. மேடையிலிருந்து வெகு சீக்கிரமே நான் கீழிறக்கப்பட்டிருப்பேன். ஷாஹீன் பாக்கில்கூட என்னை மேடையிலிருந்து கீழிறக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் நான் மீண்டும்மீண்டும் மேடை ஏறினேன். சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னிடம் இருந்தன, அவற்றை அவர்களிடம் நான் சொல்லப் போனேன்.

மக்கள் உங்களிடமும் வருவார்கள்; ஏனென்றால் அவர்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். எந்தக் கட்சியும் தமக்கு உதவவில்லை என்பதை இறுதியில் அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இது சிஏஏவின் கதையல்ல, இதுவொரு நெடுந்துரோகத்தின் கதை. சிலர் ஆறு மாதங்கள் என்கிறார்கள், சிலர் ஆறு வருடங்கள் என்கிறார்கள், சிலர் அறுபது ஆண்டுகள் என்கிறார்கள். நிச்சயம் இது வெறுமனே சிஏஏ பற்றியது அல்ல. தெருக்களில் வாழ்ந்த இந்த ஒரு மாதத்தில் நான் இதைத்தான் புரிந்துகொண்டேன். அந்தக் கோபம் வெறும் சிஏஏவுக்கு எதிரானதல்ல, எழுபது ஆண்டுகளாகத் தொடரும் இந்தத் துரோகம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் எனக் கேள்வி கேட்பது பற்றியது. இதுவொரு நல்ல வாய்ப்பு. அவர்களின் ஒடுக்குமுறை அதிகரித்திருக்கிறது என்றால், இணைய வசதி வந்ததிலிருந்து நம்முடைய எதிர்வினையும் அதற்குத் தக்கவாறே அதிகரித்திருக்கிறது. முன்பு இது நடந்திருக்க முடியாது. முன்பு எதையாவது அச்சிலேற்ற வேண்டுமென்றால் நாம் அனுமதி பெற வேண்டியிருந்தது; ஆனால் இப்போதோ இணையதளங்களிலிருந்து விஷயங்களை நீக்குவதற்கு அவர்கள்தான் அனுமதி பெறவேண்டியிருக்கிறது.

நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு விஷயம் என்னவென்றால், நாம் சிஏஏ விவகாரத்தைப் பயன்படுத்தி 1951ல் இருந்து குடியுரிமை வரலாற்றைச் சொல்லலாம். இரண்டாவது, காஷ்மீர், ஜாமியா அல்லது அலிகர் போன்ற இடங்களில் நடந்த போலீஸ் ஒடுக்குமுறை பற்றியும், இராணுவ ஒடுக்குமுறை பற்றியும் பேசலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி PAC (Provincial Armed Constabulary) குறித்த மொத்த வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துரைக்கலாம். சிஏஏவைப் பயன்படுத்தி குடியுரிமை குறித்தும் பேசலாம். தற்போதைய போலீஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு 70 ஆண்டு கால அரச வன்முறை குறித்தும் பேசலாம். ஜம்மு, ஹாஷிம்புரா, முராதாபாத் அல்லது நெல்லி போன்றவற்றிலிருந்து அதைத் தொடங்கலாம். ஆயிரக்கணக்கான தொடக்கப் புள்ளிகள் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியும்.

இந்தியாவிலேயே வன்முறையால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று அலிகர். இங்கு நடந்த அளவுக்கு வேறெந்த கிராமத்திலும் நகரத்திலும் வன்முறை நடந்திருக்காது. துண்டுப் பிரசுரம், காணொளி தயாரித்து மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு இது நமக்கொரு வாய்ப்பு. அலிகரிலிருந்து 1,000 மாணவர்கள், ஜாமியாவிலிருந்து 1,000 மாணவர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்தால் இந்தியாவின் எல்லாக் குடும்பத்திலும் அவர்களால் நம் செய்திகளைக் கொண்டு போய் சேர்க்க முடியும். மாணவர்கள் தமக்குத்தாமே கல்வியூட்டிக்கொள்வதும், பிறகு மற்றவர்களுக்குக் கல்வியூட்டுவதும் அவசியம். பல்கலைக்கழக வளாகங்களில் அமர்ந்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. நீங்கள் வளாகங்களில் 3 பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே நேரத்தில் பொதுமக்கள் 3,000 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட முடியும்.

நீங்கள் மக்களிடம் சென்று அவர்களின் ஓட்டுகளோ பணமோ உங்களுக்குத் தேவையில்லை எனச் சொல்லுங்கள், அவர்கள் உங்களுக்குச் செவிசாய்ப்பார்கள், இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நீங்கள் அவர்களிடம் எதுவும் கேட்டுச் செல்லவில்லை, என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்கிறீர்கள், அவர்கள் உங்களைத் திட்டவோ வெளியே போகச் சொல்லவோ கூடும். நீங்கள் மீண்டும்மீண்டும்அவர்களிடம் சென்றால் அவர்கள் திரும்பிவந்து உங்களுக்குக் காதுகொடுப்பார்கள். இந்திய அமைப்புமுறையால் சுயலாபம் அடையும் சிலரைத் தவிர! அப்படிப்பட்டவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கியே இருக்கவேண்டும். ஒதுங்கியிருப்பது மட்டுமின்றி அவர்களிடம் நீங்கள் கடுமையாகவே பேசவும் வேண்டும்.

எதிரியை அடையாளம் காண்பது – எல்லா முகாம்களையும் சேர்ந்த தேசியவாதிகள்

தேசியவாதத்தின் மொழியில் பேசுவோர் நமக்கு எதிரானவர்கள். அது தெளிவானது. எப்படி இது மக்களுக்கு விளங்காமல் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பதற்கே தகுதியில்லாத இந்த அரசின் சன்னதியில் வழிபடும்படி நம்மை அவர்கள் நிர்பந்திக்கிறார்கள். இந்த அரசு நம் மீது திணிக்கப்பட்ட ஓர் அரசாகும். அதன் முதுகெலும்பை முறிக்கவேண்டியது நம்முடைய கடமை. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும், இந்த அரசிடம் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் என்பதை உணர்வதே அதன் தொடக்கப்புள்ளி. நாம் சிக்கவைக்கப்பட்டிருப்பது ஐந்துவருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் சுழற்சிக்குள் அல்ல. நாம் சிக்கவைக்கப்பட்டிருப்பது 1950ல் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட ஓர் அமைப்புமுறைக்குள். யார் அதை இயக்குகிறார்கள் என்பது விஷயமில்லை.

நான் சொல்வதைத் தெளிவுபடுத்த ஓர் உதாரணம் தருகிறேன். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்த நீதிமன்றம், நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றைச் சற்று பார்க்கலாம். அப்போது உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் இருந்தன, ஆனால் உச்சநீதிமன்றம் லண்டனில் இருந்தது. இந்திய அரசாங்கம் எனும் நிர்வாகம் இங்கு இருந்தது, சட்டமன்றம் லண்டனில் இருந்தது. நீதித்துறை, நிர்வாகம் இரண்டுமே சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தைக் காட்டிலும் அதற்கு முன்பு குறைந்தளவே பக்கச்சார்பு கொண்டவையாக இருந்தன என்பதை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஓர் எதிரிச் சமூகம் முஸ்லிம்கள்மீது திணிக்கப்பட்டது. இதுவொரு முக்கிய அம்சம், இதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

நிர்வாகமும் நீதித்துறையும் 1950லிருந்தே நமக்கு எதிரியாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆங்கிலேயர்கள் நமக்கு அவ்வளவு பெரிய எதிரியாக இருக்கவில்லை. நான் கடைசி 50 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியைச் சொல்கிறேன். 1757க்குப் பிறகான பிரிட்டிஷார்பற்றி நான் பேசவில்லை. 1757முதல் 1857வரை அது கிழக்கிந்திய கம்பெனியாக இருந்தது. இந்திய அரசாங்கம் 1858க்குப் பிறகே உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அது மகாராணி மற்றும் பிரிட்டிஷ் சட்ட அவையின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. இதெல்லாம் கடைசி 100 ஆண்டுகளில்தாம். அதற்குள்ளும்கூட, அதாவது நான் 1890க்குப் பிறகான காலகட்டத்தைச் சொல்கிறேன், தொழில்மயமாக்கல் முழுமையாக நடைமுறைக்கு வந்து இந்தியா அவர்களின் சந்தையாக ஆன சமயம். பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி 60-70 ஆண்டுகள். முதலாம் உலகப் போருக்குப் பிறகு அவர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. உள்ளூர் முதலாளிகளுக்கு தொழிற்சாலை அமைப்பது போன்றவற்றுக்குச் சில வாய்ப்புகளை அவர்கள் தரவேண்டியிருந்தது. டாடாவுக்கு இரும்பு ஆலை தரப்பட்டது. மேற்கிந்தியாவில், பல்வேறு ஜவுளி ஆலைகள் திறக்கப்பட்டன. முதலாம் உலகப் போருக்குப் பிறகு, கப்பல்களைப் பயன்படுத்தி மக்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்த பொருட்களையும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு ஆங்கிலேயர்கள் சக்திமிக்கவர்களாக இல்லை. இம்மாதிரியான போதாமைகளை நீங்கள் வரலாற்றில் காணலாம்.

1905முதல் 1947வரையிலான கடைசி ஐம்பது ஆண்டுகளில், இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இல்லாத வகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களிடம் பாரபட்சமின்றி நடந்துகொண்டதை நீங்கள் பார்க்க முடியும். இந்த காலனித்துவ ஆட்சியைக் காட்டிலும் 1950களுக்குப் பிறகு வந்த ஆட்சி தெளிவாகவே தீவிரமான காலனித்துவ ஆட்சியாக இருந்தது. இதை நாம் தயக்கமின்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. நாம் சுதந்திரம் அடையவில்லை. நாம் ஒரு புதிதான, இன்னும் மோசமான அடிமைத்தனத்தில் சிக்கவைக்கப்பட்டோம். பெரிய நிலப்பிரபுக்கள், பெருவணிகர்கள் போன்ற சிலர் அதனால் பாதிக்கப்படவில்லை. அப்போது செல்வந்தர்களாக இருந்தவர்கள் இப்போதும் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் விரும்பினால் கனடா குடியுரிமை பெற முடியும். பணம் இருக்கும் நபர்களுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் அவர்கள் தங்களையும் தம் குடும்பங்களையும் பாதிப்பிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியும். ஆனால், வகுப்புவாதம் விஷயத்தில் அனைத்து மட்டத்திலும் உள்ள சாமானிய முஸ்லிம்கள், 1950க்குப் பிறகான காலகட்டத்தில் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளார்கள்.

நமது வழக்கமான பாணியில் சுதந்திரம் பற்றி நாம் பேசக்கூடாது. ஆய்வாளர்கள் இதுகுறித்தெல்லாம் தெளிவாகப் பேசினால் வெகுமக்கள் நம்மைப் பின்தொடர்வார்கள் அல்லது நம்மைக் கொன்றுபோடுவார்கள். அமைதியாக இருப்பதற்குப் பதிலாக இவ்விரு விளைவுகளுமே ஏற்புடையவைதாம். எனது பார்வையில், முன்னேறுவதற்கான திட்டம் என்பது நமது அறிவுஜீவிகளைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். அதில் காந்தி, தேசியம் முதலான எதற்கும் எந்தக் கரிசனமும் காட்டக்கூடாது. இவையெல்லாம் நமக்கு எதிரானவை என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பாசிசத் தலைவர் காந்திதான் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். யார் இந்த வகுப்புவாத அரசாங்கத்தை, ராம ராஜ்யத்தைக் கொண்டு வந்தது? யார் காங்கிரஸை இந்துக் கட்சியாக மாற்றியது? காந்திதான்.

மிதவாதத் தேசியமும் தீவிரவாதத் தேசியமும்

மிதவாதத் தேசியம், தீவிரவாதத் தேசியம் ஆகியவை தவறான வகைப்படுத்தல்கள். நாம் இவற்றைத் துகிலுரிக்க வேண்டியிருக்கிறது. மிதவாதிகள் யார்? ஜின்னா, கோகலே போன்றோர் மிதவாதத் தேசியவாதிகள். அவர்கள் என்ன சொன்னார்கள்? 3-4% ஆங்கிலேயர்களே படித்தவர்கள், இந்தியாவிலும் அதே நிலைமைதான் என்று கூறிய அவர்கள், இந்தியர்களுக்கு பிரிட்டிஷாரைவிட நன்றாக ஆங்கிலம் தெரியும் எனபதால் இந்தியர்கள் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொன்னார்கள். இதுதான் அவர்களின் தேசியவாதம், அதுதான் மிதவாதத் தேசியவாதம் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டனில் தாதாபாய் நௌரோஜி தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். அவர் இந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சம உரிமை கோரினார். லண்டனிலிருந்து இயக்கப்படுகிறது என்பதற்காக அவர் அந்த அமைப்புமுறையை எதிர்க்கவில்லை. பாரபட்சம் காட்டுவதாக அந்த அமைப்புமுறை இருந்தது என்பதற்காகவே அவர் எதிர்த்தார். இதுதான் மிதவாதத் தேசியவாதமாக இருந்தது.

தீவிரவாதத் தேசியம் என்பதென்ன? இது எங்கள் நிலம், இது இந்தியா, வெள்ளையர்கள் நம் எதிரிகள் என்று கூறுவது. உங்களுக்கு இன்னும் தெளிவான பார்வை வேண்டுமென்றால், சிலர் தோலக்குடன் “ஜெய் ஸ்ரீராம்”, “கோமாதா கீ ஜெய்” என முழங்கிக்கொண்டே வருகிறார்கள் என்று கொள்ளுங்கள். இது காந்தியின் தேசியவாதம். இது மிதவாதத் தேசியத்திலிருந்து பெரிதும் வேறுபட்டது. தீவிரவாதத் தேசியம் என்பது இந்து தேசியம். இந்து தேசியத்திற்கான விதை 1890லேயே இடப்பட்டுவிட்டது, எனினும் காந்தியின் வருகைக்குப் பிறகே அது கனி தரத் தொடங்கியது.

வரலாற்றை எழுதுதல்

அடுத்த விஷயம், வரலாற்றை எழுதுதல். நம் வரலாற்றை முழுவதுமாக பண்டிட்களே எழுதினார்கள். சில முஸ்லிம்களும் பண்டிட்களைப் போலவே சிந்திக்கிறார்கள். இர்ஃபான் ஹபீப் போன்ற சிலரும் அப்படித்தான். மத்திய கால வரலாறு சார்ந்து ஆய்வுசெய்துள்ள அவர், நவீன வரலாற்றில் தலையிடுவதும் அவசியம் எனக் கருதுகிறார். தேசியம், தேசியவாதம், திப்பு சுல்தான் மேலும் பல. நீங்கள் மத்திய கால வரலாற்றில் கைதேர்ந்தவர் என்றால் அதற்குள்ளாகவே நில்லுங்கள். அநேகமாக நீங்கள் அறிந்தும் இராத விஷயங்கள்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? அரசியல் அனுகூலத்துக்காகவோ, அல்லது காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும்போது அவர்களின் தயவைப் பெறுவதற்காகவோ இருக்கலாம். அவரைப் போன்ற அறிஞர்கள் இந்தியத் தேசியத்தை ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகத் தெளிவாக, வரலாற்று ரீதியாக அது மிகப்பெரிய பாசிசச் செயல்திட்டம். அதையொரு நல்ல விஷயமாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன். நமது வரலாறு பண்டிட்களால் எழுதப்பட்டது. நாம் நம்முடைய வரலாற்றை எழுதுவதற்கான நேரம் வந்துவிட்டது. வரலாற்றை எழுதக் கடின உழைப்பு தேவை, வெறும் மேம்போக்காக அதை நீங்கள் செய்துவிட முடியாது. அதுவொரு மதிப்புக்குரிய ஆய்வாக ஏற்றுக்கொள்ளப்பட அவர்கள் எழுதிய அதே விஷயத்தை அதைவிடப் பத்து மடங்கு அதிகமாக நீங்கள் ஆய்ந்தறிந்து எழுதவேண்டும்.

1937 அல்லது 1946ம் ஆண்டு நடந்த தேர்தல்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். நம்மில் யாருக்கும் அதன் முடிவுகள் நினைவிருக்காது. எத்தனை ஆண்கள் வாக்களித்தார்கள், எத்தனை பெண்கள் வாக்களித்தார்கள், எந்தக் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றன என்பதெல்லாம்கூட நமக்குத் தெரியாது. 1946ல் முஸ்லிம்கள் முஸ்லிம் லீகுக்கு வாக்களித்ததாக நமக்குச் சொல்லப்படும்; உடனே அதற்கு முன்பெல்லாம் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வந்தது போன்ற பிரம்மை நம்மிடம் உருவாகிவிடும். ஆனால் உண்மை என்னவென்றால் 1937ல்கூட முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை. உங்களுக்கு தேர்தல்பற்றி ஏதாவது தெரிந்திருக்குமென்றால், பிராந்தியக் கட்சிகளே எல்லா இடங்களிலும் வாக்குகளைப் பெற்றன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

வங்காளத்தில் கிரிஷாக் பிரஜா கட்சி எனும் விவசாயிக் கட்சி இருந்தது. பிஹாரில் முஸ்லிம் சுயாதீனக் கட்சி இருந்தது. முஸ்லிம் தேசியவாதக் கட்சி உ.பி.யில் இருந்தது. நிலச்சுவான்தார்களின் கட்சியாக பஞ்சாப்பில் யூனியனிஸ்ட் கட்சி இருந்தது. சிந்துப் பகுதியில் இத்திஹாத் கட்சி இருந்தது. (கான் அப்துல் கஃப்பார் கானின்) ஃகுதாயே கித்மத்கர் இயக்கத்தின் காரணமாக வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் மட்டுமே காங்கிரஸ் வாக்குகளைப் பெற்றது. 1937ல் பம்பாய், மத்ராஸ் ஆகிய இரண்டே மாகாணங்களில்தான் முஸ்லிம் லீக் வாக்குகள் பெற்றது. பம்பாய் ஜின்னாவின் சொந்தத் தொகுதி. மத்ராஸில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. 1946ல் மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்தன. இவையெல்லாம் சிறு விஷயங்கள், ஆனால் அவற்றைக் குறித்தெல்லாம் யாருக்கும் தெரியாது. முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை. பிறகு ஏன் காங்கிரஸை நாம் இன்று மதச்சார்பற்ற கட்சி என்கிறோம்? பிரிவினை நடக்கவில்லையென்றால் நாம் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கமாட்டோம், அதன் பின்னரும்கூட நாம் ஒரு கட்டாயத்தில்தான் அவர்களுக்கு வாக்களிக்க நேர்ந்தது. முஸ்லிம் லீக்கில் இருந்த அரசியல்வாதிகளும் காங்கிரஸிடம் சென்றுவிட்டதால் நமக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் பாகிஸ்தான் போக விரும்பவில்லை. வேலை எதுவுமின்றி அவர்கள் சும்மா உட்கார்ந்திருந்ததன் காரணமாகவே காங்கிரஸிடம் சென்றார்கள். அங்குதான் நட்புக்கும் பகைக்குமான பிரிகோடு குழம்பத் தொடங்கியது.

தேவ்பந்தி vs. பரேல்வி

விடுதலை இயக்கத்தில் தேவ்பந்தி உலமாக்களின் பாத்திரம்பற்றி நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1890க்கு முன்பு அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். உலமாக்களும் பிரிட்டிஷாரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டார்கள். பிரிட்டிஷார் அவர்களைச் சிறைக்கு அனுப்புவது, சித்திரவதை செய்வது, சுட்டுக்கொல்வது போன்றவற்றைச் செய்தார்கள். இப்போது என் சொந்த ஆய்விலிருந்து சிலவற்றைச் சொல்கிறேன். 1890க்குப் பிறகு அதே உலமாக்கள் எல்லா இடங்களிலும் முஸ்லிம்களைத் தாக்குதலுக்குள்ளாக்கிய இந்து அமைப்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு பிரிட்டிஷாரிடம் சென்று கெஞ்சலானார்கள். ஐம்பது ஆண்டுகள் ஏற்படுத்திய மாற்றத்தைப் பாருங்கள். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய அதே உலமாக்கள் இப்போது பிரிட்டிஷாரின் உதவியைக் கோரலாயினர். பிரிட்டிஷாரை தம்முடைய மிகப்பெரும் எதிரியாகக் கருதியவர்கள் 30-40 ஆண்டுகால இடைவெளியில் யார் தம்முடைய உண்மையான எதிரி என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதை அப்போதைய செய்தி அறிக்கைகளில் உங்களால் காண முடியும். உ.பி.யிலுள்ள கர்முக்தேஷ்வரில் பொருட்காட்சி நடப்பது வழக்கம். 1946ல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அங்கே கொல்லப்பட்டார்கள். 1928ல் கூட ஒரு நூறு, நூற்றி ஐம்பது முஸ்லிம்களின் கடைகள் அங்கே கொளுத்தப்பட்டன; அப்போது நாலைந்து முஸ்லிம்கள் அந்தப் பொருட்காட்சியில் வைத்துக் கொல்லப்பட்டனர், இன்னும் சிலர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லப்பட்டனர். அதைப் பற்றி ‘அல்ஜம்மியத்’ பத்திரிகையில் தலையங்கம் வெளியாகியிருந்தது. இந்துக்கள் நடத்தும் பொருட்காட்சிகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டாமென்றும், முஸ்லிம்கள் நடத்தும் பொருட்காட்சிகளிலிருந்து இந்துக்களை விலக்கிவைக்கும்படியும் பலமுறை முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அத்தலையங்கம் குறிப்பிட்டிருந்தது. தேர்தல்களில் பொதுத் தொகுதிமுறைதான் வேண்டுமெனக் கோரிக் கொண்டிருந்த கட்சியால் ஒரு பொருட்காட்சியைக்கூட பொதுவாக நடத்த முடியவில்லை. அப்படியான மோசமான நிலைமைதான் 1928ல் இருந்தது. மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற அச்சத்தால் ஒன்றிணைந்து பொருட்காட்சியை நடத்தக்கூட முடியாமல் அவர்கள் இருந்தார்கள்.

தேச விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்தி உலமாக்களின் பங்கு காங்கிரஸால் பெருமளவுக்கு ஊதிப்பெருக்கப்பட்டது. அதில் பெரும் பகுதி கிலாஃபத் இயக்க காலத்தைச் சார்ந்தது என்பது உண்மை. ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவில் எழுதப்பட்ட வரலாற்றில் பரேல்விகளின் பங்கு பற்றி பேசப்படவே இல்லை, அவர்கள் பிரிட்டிஷாருக்கு முகவர்களாக இருந்தார்கள் என ஒரே வாக்கியத்தில் பரேல்வி உலமாக்களை அவர்கள் கடந்து போய்விடுவார்கள். ஏன்? ஏனெனில், பரேல்விகள் காங்கிரஸுக்கு எதிராக இருந்தார்கள். எப்போதும் அவர்கள் அப்படித்தான் இருந்துவந்தார்கள், சுதந்திரம் கிடைக்கும்வரை அதே நிலைதான். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக இருக்கவில்லை. அவர்கள் சமூகத்துக்காக ஏராளம் செய்தார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், துண்டுப் பிரசுர விநியோகம், காவல் நிலையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது போன்றவற்றை அவர்கள் மேற்கொண்டனர். முஸ்லிம்கள் 1946ல் தாக்கப்பட்டபோது, அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவினார்கள். பிற இயக்கங்களும் கட்சிகளும் செய்த எல்லாவற்றையும் இவர்களும் செய்தார்கள். ஆனால், காங்கிரஸுக்கு எதிராக இருந்தார்கள் என்பதாலேயே அவர்கள் பிரிட்டிஷாரின் முகவர்கள் என்று சொல்லப்பட்டு வந்தார்கள்.

பசுப் பாதுகாப்பு

பசுப் பாதுகாப்பு விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது 1890க்குப் பிறகு படுமூர்க்கமாக போய்க்கொண்டிருந்தது. பெரிய தாக்குதல் ஒன்று ஆஸம்கருக்கு அருகில் நடந்தது. பஞ்சாப்பில் அதுவொரு நகர்ப்புற நிகழ்வுப்போக்கு; பிஹாரிலும் உ.பி.யிலும் அது கிராமப்புறங்களிலும் நிகழ்ந்தது. கிராமப்புர முஸ்லிம்களின் மக்கள் தொகை பற்றியும் எந்தெந்த பகுதிகளில் அவர்கள் உள்ளார்கள் என்பது பற்றியும் நம் சிந்தனையில் ஒரு வரைபடத்தை வைத்திருக்கவேண்டும். முஸ்லிம்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்தில் உள்ளனர். உ.பி.யை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அங்குள்ள நகர்ப்புற மக்கள் தொகையில் 30%க்கு மேற்பட்டோர் முஸ்லிம்கள். ஒட்டுமொத்தத் தொகையில் அவர்கள் வெறும் 18%தான். நான் சார்ந்த மாநிலமான பிஹாரில்கூட முஸ்லிம்கள் 7% கிராமப்புறத்திலும் 25% நகர்ப்புறத்திலும் வசிக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பாலும் நகர்ப்புற வாசிகள்தாம், சில இடங்களில் அவர்கள் கிராமங்களிலும் வசிக்கிறார்கள். பஞ்சாப்பில் முஸ்லிம்கள் பெரியளவில் கிராமப்புறங்களில் இருந்தார்கள், ஆனால் அது இந்தியாவிடமிருந்து பிரிக்கப்பட்டது. மேற்கு உ.பி.யிலும் கேரளாவில் சில இடங்களிலும் வங்காளம், அஸ்ஸாம் முதலானவற்றிலும் முஸ்லிம்கள் பெருமளவில் கிராமங்களில் வசித்தார்கள். வேறெந்த இடத்திலும் முஸ்லிம்கள் கிராமப்புற மக்களாக இல்லை. எங்கெல்லாம் கிராமப்புறத்தில் முஸ்லிம்கள் பெரியளவிலான எண்ணிக்கையில் இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களால் பசுப் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. நான் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். சுதந்திரத்துக்குப் பிறகு உலகம் மாறியது; அதற்கு முன்பாக முஸ்லிம்கள் செறிவாக இருந்த கிராமங்களில் அவர்களால் முஸ்லிம்களைத் தாக்குதலுக்குள்ளாக்க முடியவில்லை.

உதாரணத்துக்கு, முஸாஃபர் நகரில் கிராமத்திலும் நகரத்திலும் சேர்த்து முஸ்லிம்கள் 50% இருந்தார்கள். அந்தப் பகுதிகளில் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்குமான சண்டை சரிநிகராக இருக்கும். அப்போது காவல்துறை நடுநிலையாக இருந்தது. உள்ளூரில் இரு சமூகங்களுக்குள் நடக்கும் மோதல்களில் பிரிட்டிஷாருக்குஅக்கறையில்லை. தங்களின் சர்வதேச விவகாரங்களுக்கு ஏற்ப யாரைக் கொல்வது, இந்துக்களையா அல்லது முஸ்லிம்களையா, என்றே அவர்கள் முடிவுசெய்தார்கள். விடுதலைக்கு முன்பு முஸ்லிம்கள் வெகு குறைவாக இருந்த பகுதிகளில்தான் அவர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. எங்கெல்லாம் முஸ்லிம்கள் 40 சதவிகிதமேனும் இருந்தார்களோ அங்கே அவர்களைத் தாக்க இந்துக்களுக்குத் துணிச்சல் இல்லை. இன்றும்கூட அரசு ஆதரவு இல்லையென்றால் அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்காது. அதன் காரணமாகத்தான் பிஏசி (Provincial Armed Constabulary) உருவாக்கப்பட்டது. மேற்கு உ.பி.யில் ஏன் பிஏசியின் பாத்திரம் முக்கியத்துவமிக்கது என்றால் முஸ்லிம்கள் செறிவாக அங்கே கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அந்த அளவுக்கு கிராமங்களில் முஸ்லிம்கள் இல்லையென்றால் அவர்கள் பிஏசியை உருவாக்கியிருக்க மாட்டார்கள்; வன்முறைக் கும்பல்கள் மூலமே தம் வேலையைக் கச்சிதமாக முடித்திருப்பார்கள். வன்முறை கும்பல்களால் காத்திரமாகச் செயல்பட முடியாத இடங்களில்தாம் காங்கிரஸ் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்களைக் கொன்றொழித்தது.

நான் சார்ந்த பிஹாரில் வன்முறைக் கும்பலே அவர்களுக்குப் போதுமானது. பத்தில் ஒரு கிராமத்தில் மட்டுமே முஸ்லிம்கள் இருப்பதால் அவர்கள் எங்கள்மீது தாக்குதல் தொடுப்பதை எளிதென்று நினைக்கிறார்கள். 1946ல் அவர்கள் எங்களைத் தாக்கியிருக்கிறார்கள், எப்போது நினைத்தாலும் அவர்கள் எங்களைத் தாக்க முடியும். ஆனால், மீரட்டில் அவர்களால் எங்களைக் கொல்ல முடியாது, அது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு பெரும் எண்ணிக்கையிலான அணிதிரட்டலை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் ஒரு சிவில் போர் போன்று இருக்க நேரிடும். பசுப்பாதுகாப்பு விவகாரம் நகரங்களில் தொடங்கியிருக்கலாம், ஆனால் அதன் ஆபத்தான விளைவை கிழக்கு உ.பி.யில் காணலாம். அங்கே முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லை. கிழக்கு உ.பி.க்குப் பிறகு அதன் கோரப் பக்கத்தை பிஹார், போஜ்பூர், தெற்கு பிஹார் முதலான பகுதிகளில் பார்க்க முடியும். அங்கிருந்து அது எல்லா இடங்களுக்கும் பரவியது.

பசுப் பாதுகாப்பு இயக்கம் தொடர்பில் மௌலானாக்களின் (அலீ சகோதரர்கள்) தலையீடு பற்றி இப்போது பார்ப்போம். அது கிலாஃபத் இயக்கத்திலிருந்து தொடங்கியது. கிலாஃபத் இயக்கத்துக்கு இந்துக்கள் உதவினால், பசுப் பாதுகாப்பு இயக்கத்துக்கு தாங்களும் உதவுவதாக மௌலானாக்கள் கூறினார்கள். இந்த சமரச முயற்சியை அக்காலத்தில் வெளியான ஏராளமான ஃபத்வாக்களில் நீங்கள் காணலாம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். ’பக்ரீத் பெருநாளுக்கு பசுவைப் பலியிடுவது அவசியமா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். நிச்சயமாக அதற்கான பதில், இல்லை என்பதாகவும் நீங்கள் எந்தப் பிராணியையும் பலியிடலாம் என்றும் வரும். ஆனால், அஹ்மது ரிழா கானிடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் கேள்வியையே பிழை என்றார். இந்துக்களின் அழுத்தத்திற்குப் பணிந்து பசுக்களை பலியிடாமல் இருக்கலாமா என்றால், முடியாது என்பதே பதில் என்று கூறிய அவர், உண்மையான பிரச்னையிலிருந்து மெளலானாக்கள் மக்களைத் திசைதிருப்பி குழப்பக் கூடாது என்றார். பசுவைத்தான் பலியிட வேண்டும் என்று கட்டாயமில்லை என்பதை ஏற்றுக்கொண்ட ரிழா கான், அதேசமயம் எதிரிச் சமூகத்தின் அழுத்தத்துக்குப் பணிந்து பசுவைப் பலியிடாமல் இருக்கவேண்டிய அவசியமும் நமக்கில்லை என்றார். அதன் காரணமாகவே அவர் பிரிட்டிஷ் முகவர் என்று தூற்றப்பட்டார். அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றாலும், பசுப் பாதுகாப்பு விவகாரத்தில் அவரின் அணுகுமுறையை நான் ஏற்கிறேன். அவர் நம்மை மற்றவர்களைப் போல சமரசம் செய்துகொள்ளுமாறு கோரவில்லை. மற்றவர்கள் என்று நான் குறிப்பிடுவோர் அனைவரின் பெயரும் இங்கு அவசியமற்றது. ஆனால், மெளலானா ஆஸாத், காஜா ஹசன் நிஸாமி போன்றோரையே நான் குறிப்பிடுகிறேன் என்பது நீங்கள் அறிந்ததே. இவர்கள் பசுப் பாதுகாப்பை முழுவதுமாக ஆதரித்தார்கள். அதுதான் இன்றைக்கு நஞ்சாக மாறியிருக்கிறது. அவர்கள் என்ன நினைத்தார்கள், அவர்களின் நோக்கமென்ன என்பது எனக்குத் தெரியாது. எனினும், அவர்கள் விட்ட பிழைகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்னொரு சுவாரஸ்மான விஷயம். பசுப் பாதுகாப்புபற்றி அஹ்மது ரிழா கான் தன்னுடைய ஃபத்வாவில் கூறுகிறார், ஒரு மனிதன் எந்தவொரு உணவையும் ஒரு வாரம் முழுக்கச் சாப்பிட்டால் அது அவனுக்கு சலிப்புத்தட்டிவிடும். அதற்குப் பிறகும் அவனை அதையே சாப்பிடுமாறு வற்புறுத்தினால் அவன் அந்த உணவை வெறுக்கத் தொடங்கிவிடுவான். ஆனால் மாட்டுக்கறியை ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க சலிக்காமல் சாப்பிடலாம். தாக்குதலுக்குள்ளான உழைக்கும் மக்களின் உணவு அது.

அவர்கள் 1890ல் நம் வீடுகளுக்குள் நுழைந்தார்கள்; நீண்ட காலம் ஆகிவிட்டது. அன்றிலிருந்து இன்றைக்குவரை 130 ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது அவர்கள் நம் வீடுகளுக்குள் புகுந்தார்கள் என்றால், அவர்களை வீட்டினுள் கொண்டுவந்தது யார்? காந்தி போன்றோர்தான். அவர்களுக்கு நமது மெளலானாக்கள் சிலரும் உதவினார்கள். இதையெல்லாம் நாம் புரிந்து வைத்திருப்பது அவசியம். இதன் காரணமாகவே பரேல்விகள் இந்திய வரலாற்று நூற்பக்கங்களில் இடம்பெறவில்லை. பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் என்கிற அளவில் அவர்கள் மிகச் சிறிய அளவில் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களின் அணுகுமுறை பசுப் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கடுமையாக இருந்ததே அதற்குக் காரணம்.

கிலாஃபத்

இப்போது கிலாஃபத் பற்றி பேசுவோம். சுன்னீ முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹஸ்ரத் அலீயோடு கிலாஃபத் முற்றுபெற்றுவிட்டது நமக்குத் தெரியும். ஷீஆக்கள் அலீயை (ரலி) இமாமாக ஏற்றுக்கொள்வதால் அவர்களுக்கு கிலாஃபத் என்பதே கிடையாது. ஷீஆ, சுன்னீ இரு பிரிவினருக்குமே கிலாஃபத் இல்லையென்றால், முஸ்லிம்களின் அன்றைய இயக்கத்துக்கு ஏன் கிலாஃபத் எனப் பெயரிடப்பட்டது? இதுவொரு முக்கியமான இஸ்லாமியக் கேள்வி. துருக்கி உஸ்மானிய மன்னர் நமக்கு கலீஃபாவா? இல்லை. அவர் சில பகுதிகளுக்கு அரசராக இருந்தார், காலனித்துவச் சக்திகள் அவற்றின் மீது தாக்குதல் தொடுத்தன. அதனால் உஸ்மானிய மன்னரை நாம் ஆதரிக்க வேண்டியதானது. இதில் மதம் எங்கு வந்தது? ஏன் இதுவொரு இஸ்லாமிய விவகாரமாக்கப்பட்டது? அதை இஸ்லாமியப் பிரச்னையாக்கியது ஒரு முழுப் பொய். திப்பு சுல்தானின் கொலையும் உஸ்மானிய சுல்தானின் கொலையும் நமக்கு ஒன்றுதான். ஆனால், மத விவகாரமாக அதை மாற்றியும் முஸ்லிம் அரசரை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்று கூறியும் அப்போதும் நாம் ஏமாற்றவே பட்டோம். உண்மையில், காலனித்துவப் பிடியில் சிக்கிய ஒரு மக்கள் தொகுப்பு, அதே போன்று சிக்கியிருக்கும் மற்றொரு மக்கள் தொகுப்புக்குத் துணை நிற்கிறது என்பதுதான் இங்கு விஷயம். இவ்வாறு நடந்ததை அனுமதித்தவர்களின் நோக்கத்தை நாம் கேள்வி எழுப்ப முடியாமல் போகலாம். ஆனால் அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது நம்முடைய கடமை. இந்த விவகாரத்தில்கூட தேவ்பந்திகள், பரேல்விகள், ஷீஆக்கள் என்ற முக்கோணத்தை நாம் பார்க்க முடியும். சில தேவ்பந்திகள் அதை கிலாஃபத் இயக்கம் என்றழைத்தார்கள். ஷீஆக்கள் இதிலெல்லாம் ஈடுபாடு காட்டவில்லை. பரேல்விகளைப் பொறுத்தவரை, பிரிட்டிஷார் துருக்கி உஸ்மானியர்கள்மீது போர் தொடுத்திருப்பதாகவும் காலனித்துவச் சக்தியால் ஒடுக்கப்படுவதால் அவர்கள் உதவிசெய்யப்பட வேண்டியவர்கள் என்றும் நினைத்தார்கள். இதுதான் கிலாஃபத் இயக்கம் குறித்த முழுப் பார்வை.

நான் நெடுங்காலமாகப் பேசிவரும் விஷயம், நம்முடைய வரலாறு எழுதப்படவில்லை என்பது. அதை எழுதுவதற்கு இன்னும் 50 ஆண்டுகள் பிடிக்கலாம். அதுவும்கூட நாம் நம்முடைய வரலாற்றை எழுதவேண்டும் என்பதை இப்போதாவது உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். நாம் நம்முடைய வரலாற்றை எழுதவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளவில்லையென்றால், அது நிச்சயம் எழுதப்படாது. 500 ஆண்டுகள் கழித்து, காந்தியை அண்டிப் பிழைத்தவர்கள் எழுதியவையெல்லாம் வரலாற்று உண்மை என்றாகிவிடும். அது நமது தோல்வியாக இருக்கும். குறிப்பாக, படிப்பதாகவும் எழுதுவதாகவும் சொல்கின்ற, புத்தகங்களையும் செய்திப் பத்திரிகைகளையும் வாசிக்கின்ற, கருத்துகளைத் தெளிவுபடுத்துவது முதலானவற்றில் ஈடுபடுகின்ற ஆய்வாளர்களின் தோல்வியாக அது இருக்கும். வரலாற்று எழுதியல் குறித்த மாயையிலிருந்து நான் என்றோ மீண்டுவிட்டேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூல்களெல்லாம் பயனற்றவை என்பதை நான் புரிந்துகொண்டேன். பயனற்றவை மட்டுமல்ல, விஷம் தோய்ந்தவை என்பதையும்தான். ஆம், நம் குழந்தைப் பருவத்திலேயே ஒருசார்புக் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்ப்பதற்கு அவர்கள் நம் சிந்தனைகளை வார்த்தெடுத்துவிடுகிறார்கள்.

தொழுகை vs. பூஜை

ஜாமியாவில்கூட ’லா இலாஹா இல்லல்லாஹ்’ தொடர்பாகப் பெரிய சண்டையே நடந்தது. மக்கள் சாலைகளில் தொழுகையில் ஈடுபடப்போவதை அறிந்து சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் சில இந்துக்களை இது காயப்படுத்தும் என்றும் இந்துக்கள் வீதிகளில் பூஜை செய்வதில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். இதுவொரு முஸ்லிம் பல்கலைக்கழகம், அங்கு நீங்கள் தொழுகைகூட நடத்த முடியாது. தவிரவும், எந்த இந்து ஒரு நாளைக்கு ஐவேளை பூஜை செய்வார்? நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் தொழுகையும் ஒன்று. அதற்கு நெடுந்தூரம் செல்வது மிகவும் சிரமமானது, நேரமும் விரயமாகும் என்பதால் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கேயே தொழுகிறோம். அது நடைமுறைகளுள் ஒன்று. இந்துக்கள் ஐவேளை பூஜை நிகழ்த்த வேண்டியதில்லை. தொழுகை என்பது நம்மைப் பொறுத்தவரை வெகுமக்களோடு சம்பந்தப்பட்டது. இந்துக்களுக்கோ அது பூஜாரிகளுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது, அவர்கள் சார்பாக பூஜாரி அதை நடத்திக்கொள்ளலாம். ஆனால் தொழுகையை நாம் அனைவருமே நிறைவேற்றியாக வேண்டும். தொழுகையும் பூஜையும் ஒப்பிட முடியாதவை. தொழுகை அன்றாட வழக்கமாக இருப்பது. அதனால் நாம் நிற்கும் இடத்திலேயே அதை நடத்திக்கொள்வோம். அதற்காக ஏன் ஒவ்வொரு நாளும் ஐவேளையும் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்? நாம் எங்கு நிற்கிறோமோ அதுதான் நமக்கு பள்ளிவாசல். இதுவொரு பாரம்பரிய வழிமுறை. ஆனால் ஜாமியாவில் இந்த விஷயத்தில் ஒரு முறுகல் ஏற்பட்டது. சர்ச்சை வெடித்ததும் எங்களை அங்கே வரும்படி தொலைபேசியில் அழைப்பு வந்தது. எனினும் நாங்கள் அங்கே சென்று சேர்ந்த சமயம் பிரச்னை ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்தது. தொழுகை முன்பே நடந்து முடிந்து அது குறித்த விவாதத்தில் எல்லாரும் ஈடுபட்டிருந்தனர். ஒரு AISA உறுப்பினர் வந்து, நாங்கள் வகுப்புவாதத்தைப் பரப்புவதாகச் சொன்னார்.

ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜேசிசி)

இப்போது இவர்கள் உருவாக்கியிருக்கும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (Jamia Coordination Committee) இருக்கிறதல்லவா, அதன் சந்திப்புகளுக்கு நான் இருமுறை சென்றுவந்திருக்கிறேன். அவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஜேசிசி அனைவரையும் உள்ளடக்கும் தன்மையிலானது என்று சொல்லப்படுகிறது. “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிடுவோரைத் தவிர எல்லோரும் தங்கள் குழுவில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இதுதான் அவர்களின் உள்ளடக்கும் தன்மையின் இலட்சணம். “அல்லாஹு அக்பர்” முழக்கமிடும் நானூறு-ஐநூறு மாணவர்களைத் தவிர மற்றெல்லோரையும் அவர்கள் ஜேசிசியில் உள்ளடக்கியுள்ளார்கள். இது என்னவகை உள்ளடக்கும் தன்மை? அல்லாஹு அக்பர் குழுவையும் சேர்த்திருந்தால் அது அனைவரையும் உள்ளடக்குவதாக அமைந்திருக்கும். அந்தக் குழுவை வெறுத்துக்கொண்டே, தாம் அனைவரையும் சேர்த்துக்கொள்வதாக அவர்கள் சொல்லிக்கொள்கின்றனர். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அமானதுல்லாஹ்வுடனான சண்டையில் என் மைக் உடைந்தபோது, அல்லாஹு அக்பர் குழுவைச் சேர்ந்த மாணவர்களே இன்னொரு மைக்கை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்கள். ஜாமியா எந்தப் பங்களிப்பையும் செலுத்தவில்லை; வீதிகளில் இறங்கி வேலை செய்த இந்த மாணவர்களைத் தவிர. இவர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்கள். ஒரு பல்கலைக்கழகமாக ஜாமியா எந்தப் பங்களிப்பையும் தரவில்லை. கடந்த ஒரு மாதமாக நாங்கள் கவனித்து வருகிறோம். ஜேஎன்யூவின் நிலையும் இதேதான். அங்கே கட்டண உயர்வை எதிர்த்து நடந்த போராட்டங்கள் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வீதிக்கு வருமாறு நாங்கள் கடந்த 2 மாதங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்; ஆனால், அவர்கள் நகர்வதற்கே தயாரில்லை. ஜாமியா போராட்டத்திலும் இதேபோன்றதொரு சூழல்தான். ஒரு மாதமாக அவர்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்ன செய்தார்கள் அவர்கள்? கொஞ்சம் துண்டுப் பிரசுரங்களையும் போஸ்டர்களையும் வைத்துக்கொண்டு அவர்களின் இடத்துக்கு அருகிலேயே சாலையில் நிற்கிறார்கள். ஒரு மாதமாக அவர்கள் செய்தது இதைத்தான்.

எவ்வளவு ஆற்றலை விரயமாக்கியிருக்கிறார்கள், போஸ்டர்களை யாரிடம் தொடர்ச்சியாகக் காண்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தினந்தினம் அந்தப் பக்கமாகச் செல்லும் அதே ஆட்களிடம்தான்! ஒரு மாதமாக ஒரே ஆட்களைப் பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் உள்ளது? மார்ஜினல் யூட்டிலிட்டி எனச் சொல்லப்படும் ஒன்றுண்டு. இரண்டு நாட்களுக்கு அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு அந்த வேலையைச் செய்தால் பரவாயில்லை; ஆனால், அதையே இப்போதுவரை செய்துகொண்டிருந்தால் எதை அடைய முடியும்? சொல்லப்போனால் அவர்கள் எந்தவொன்றையும் அடையவில்லை. பல்கலைக்கழகத்தில் 17,000 மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு 5,000 பேர் டெல்லி வீதிகளில் இறங்கினால் டெல்லியையே முடக்கிவிடலாம். வாக்குகளோ பணமோ வேண்டாம் எனச் சொல்லும் ஆய்வாளர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் குறைந்தபட்சம் 50 பேர் இருப்பார்கள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது, அதை நாமே உணர்ந்துள்ளோம். டெல்லியில் ஏதேனுமொரு சந்துக்குள் போனாலும் அங்குள்ள கடைக்காரரிடம் பேசத் தொடங்கிவிடுவேன். நான் ஜேஎன்யூவில் படிக்கும் முஸ்லிம் மாணவன் என்று சொல்வேன், கொஞ்சம் கொஞ்சமாக முப்பது பேர் திரண்டு என்னோடு பேசவும் நான் பேசுவதைக் கேட்கவும் வந்துவிடுவார்கள்.

ஆய்வாளர்களின் பொறுப்புகள்

நீங்கள் ஆய்வாளராக இருந்தால் நீங்கள் கல்வி வளாகத்தோடு தேங்கிவிடாமல் தெருக்களில் நிற்கவேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் கல்வி பெற்றவர் என்றால் வெகுமக்களையும் கல்வியூட்டுவது உங்கள் கடமை. ஜாமியா மாணவர்களின் நடத்தை எனக்கு திருப்திகரமாக இல்லை. அவர்களிடம் ஒரு திட்டமில்லை. மற்ற விஷயத்தைக்கூட விடுங்கள்; அவர்களிடம் மக்களுக்கு விழிப்பூட்டக்கூட திட்டமில்லை. பல்கலைக்கழக வளாகத்துக்குள் போராட உங்களுக்கு பெரியளவுக்கு தைரியம் தேவையில்லை. அதற்கு வெளியே போராட்டத்தைக் கொண்டு செல்லவே தைரியம் வேண்டும். தொடர்ந்து நான் ஜாமியா மாணவர்களிடம் பேச முயன்றுள்ளேன். சிலர் என் பேச்சுக்கு மதிப்பளித்து வளாகத்துக்கு வெளியே போனார்கள்.

போராட்டம் என்பது நம் ஆற்றல்கள், திறன்கள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி நடத்திப்படவேண்டும். நாம் ஆய்வாளர்கள், இளைஞர்கள். நம்மிடம் ஆற்றல் உள்ளது. நம்மால் ஓட முடியும், ஒருசில தடியடிகளைத் தாங்கிக்கொள்ள முடியும், கண்ணீர் புகைக்குண்டுகளை எதிர்கொள்ள முடியும், நீங்களேகூட நிறைய விஷயங்களைச் செய்துள்ளீர்கள், ஒரு சிவில் யுத்தமே இங்கு நடந்துள்ளது. நாம் துண்டுப் பிரசுரங்கள் எழுத முடியும், பேச முடியும், காணொளிகள் தயாரிக்க முடியும், வீடு வீடாகச் சென்று மக்களிடம் விவாதிக்க முடியும்.. நம்மால் இவை அனைத்தையும் செய்ய முடியும். ஒரு சாமானியனால் இவற்றைச் செய்ய முடியாது. சாமானியனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதுகூடத் தெரியாது. நம்மால் விவாதிக்க முடியும்; தெருக்களுக்குச் சென்று மக்களிடம் விவாதிப்பதும் விழிப்பூட்டுவதும் நம் வேலை.

இரண்டாவது நாம் செய்ய வேண்டியது, செயல்திட்டம் வகுப்பது. இந்தியா முழுமைக்கு ஒரே மாதிரி செயல்திட்டம் இருக்கப்போவதில்லை. எல்லா அருகமைப் பகுதிக்கும் அததற்கே உரிய திட்டமிடல் அவசியம். உதாரணத்திற்கு, ஷாஹீன் பாக்கில் உள்ள மக்கள் திரளை அந்தப் பகுதிக்கு அடுத்துள்ள நெடுங்சாலையை மறித்து அமர வைப்பது சாத்தியம். டெல்லியில் கடந்த சுமார் ஒரு மாதமாக நாம் இப்போது கலந்துரையாடிக்கொண்டிருக்கும் செயல்திட்டத்தை முன்னகர்த்திச் செல்லத் தயாராகவுள்ள பல்வேறு துறை சார்ந்த 300 ஆய்வாளர்கள் கொண்ட அணியாக நாம் ஒன்றுகூடியுள்ளோம். எங்களோடு சேர்ந்து பணியாற்றவேண்டியது உங்களின் பொறுப்பும்தான். அப்போதுதான் நிறைய யோசனைகள், உத்திகளெல்லாம் நமக்குக் கிடைக்கும். ஆனால், நாம் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தவே ஒன்றுகூடியுள்ளோம் எனும் கருத்தில் நாம் ஏகோபித்த நிலைப்பாட்டில் இருக்கவேண்டும். இது காங்கிரஸ், பாஜக சண்டையல்ல. வேறெந்த கட்சியின் சண்டையும் அல்ல. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் இந்த அரசுக்கும் அமைப்பு முறைக்கும் எதிராக நிகழ்த்தும் சண்டை. அறிவார்ந்தவர்களுக்கான ஒரு மையத்தை நாம் உருவாக்க வேண்டும். அதிலும் நீங்களெல்லாம் இணைய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் தத்தமது சக்திக்கு உட்பட்டு தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். சிலர் போஸ்டர் தயாரிக்கலாம், சிலர் கிராஃபிக் டிசைனராக இருக்கலாம்.. இப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான திறன்கள் உண்டு. இதுவொரு விஷயம்.

இரண்டாவது, இந்தியாவெங்கும் உள்ள சாமானிய மக்களை நாம் சென்றடைய வேண்டும். அலிகரிலிருந்து மேற்கு உ.பி. முழுக்க நம்மால் பணியாற்ற முடியும். அதேபோல் டெல்லியிலிருந்து, அதையொட்டி இருக்கின்ற முசாஃபர் நகர் முதலான பகுதிகளிலும் நாம் பணிபுரிய இயலும். டெல்லியிலிருந்து அலிகர் நெடுகிலும் பணியாற்றுவதற்குப் போதுமான இளைஞர்கள் நம்மிடம் உள்ளார்கள். அரசுக்கு அழுத்தம் தரும் வகையிலான செயலூக்கமுள்ள போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து பகுதிக்கும் தகுந்தவாறு பிரத்யேகமாக உத்திகளை நாம் வகுக்கவேண்டும். உதாரணத்துக்கு, டெல்லியின் ஒரு நெடுஞ்சாலையை நாம் மறித்துவிட்டோம். டெல்லியையும் உ.பி.யையும் ஒருங்கிணைக்கும் நான்கு நெடுஞ்சாலைகளுள் ஒன்றை நாம் மறித்துவிட்டால் பிற மூன்று சாலைகளிலும் நெரிசல் அதிகரிக்கும். அதிலும் ஒன்றை நாம் மறித்துவிட்டோம் என்றால் அது பெரியளவுக்கு பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, ஏதாவதொரு நாள் நாம் DNDயை (Delhi Noida Direct Flyway) மறித்தோமென்றால், அவர்கள் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். DND யாரும் இல்லாத நிலம், யாருமே அங்கு இருக்கமாட்டார்கள். நாம் என்ன செய்யலாம்? ஒரு காலைப் பொழுதில் நம்மில் 500 பேர் அங்கு சென்று அமர்ந்து காவல்துறையினரில் வருகைக்காகக் காத்திருக்கவேண்டும். பரபரப்பான நேரமான (peak hours) காலை 8 அல்லது 9 வாக்கில் அங்கே நாம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் காவல்துறையினரால்கூட அங்கு வந்துசேர முடியாது. மாலை வரை யாராலும் நம்மை அடைய முடியாது. அவர்கள் நம்மை வந்தடையும்போது நாம் கலைந்து சென்றுவிடலாம். டெல்லி இரண்டு நாட்களுக்கு முடங்கியே இருக்கும். இப்படியாக நாம் நன்கு சிந்தித்து களத்துக்கு ஏற்றவாறு உத்திகள் வகுக்கவேண்டும். இந்தியாவையே முடக்குவதற்குத் தேவையான ஆட்கள் நம்மிடம் உள்ளார்கள். இத்தோடு முடித்துக்கொள்ள விரும்புகிறேன். என் பேச்சுக்கு செவிமடுத்தமைக்கு மிக்க நன்றி.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

(மூலம்: What Was Sharjeel Imam Saying at AMU? Transcript & Translation)

Related posts

Leave a Comment