கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ்

Loading

கேரள முஸ்லிம்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான ‘மாப்பிளப் பாட்டுகள்’ தனித்துவமிக்க இலக்கிய மரபைக் கொண்டவையாகும். இவற்றின் சொல்நயத்திலும் இனிமையிலும் எல்லோருக்கும் ஈர்ப்பு உண்டு.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது அரங்குகளிலும் நடைபெறும் ‘மாப்பிளப் பாட்டு கலோல்ஸவங்கள்’ புகழ் பெற்றவை. இப்பாடல்கள் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மாப்பிள்ளை இலக்கியத்தையும் அதன் பண்பாட்டு மரபையும் பாதுகாப்பதில் ‘மாப்பிள்ளைமார்கள்’ முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

‘மாப்பிள’ என்பது கேரளத்தின் மலபார் பகுதி முஸ்லிம்களை மட்டுமன்றி பழைய திருக்கொச்சி சமஸ்தானத்தின் கிறிஸ்தவர்களில் ஒரு சாராரையும் குறிக்கின்றது. கிறிஸ்தவ மாப்பிள்ளைகளை ‘நஸ்றாணி மாப்பிள’ என்றும் கூறுவர். எனினும் பொதுவாக ‘மாப்பிள’ என்ற சொல் மலபார் முஸ்லிம்களின் அடையாளப் பெயராக உள்ளது. ‘மாப்பிள்ளை’ என்ற சொல் மருவி பேச்சுவழக்கில் ‘மாப்பிள’ என்று ஆனது.

அறபியர்களாலும் பாரசீகர்களாலும் கன்னியாகுமரிமுதல் மங்களூர்வரையிலான நிலப்பகுதி மலபார் என்று அழைக்கப்பட்டது. எனினும் ஆங்கிலேயர்கள் வடகேரளத்தின் பெரும்பகுதியையே மலபார் என்று குறிப்பிட்டனர். கன்னியாகுமரிமுதல் மங்களூர்வரை மாப்பிள்ளைப் பாட்டுக்களுக்கு முக்கிய இடமுண்டு என்றாலும் இதன் விளைநிலம் மலபார் ஆகும். மலபாருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக தமிழகத்தின் குளச்சல், தேங்காய்ப்பட்டினம் போன்ற ஊர்களிலும் தென்கர்நாடகக் கிராமங்களிலும் ஒருகாலத்தில் மாப்பிள்ளைக் கலைகளில் தேர்ச்சிபெற்ற ஆசான்கள் நிறைந்திருந்தனர்.

சோழமண்டலக் கடற்கரையை உடைய தமிழகத்தை ‘கடவு’ என்று பொருள்படும் ‘மஅபர்’ என்று அறபிகள் அழைத்ததைப் போன்று கேரளத்தை மலைத்தொடரும் கடற்கரையும் இணைந்தது என்ற பொருள்படும் ‘மலபார்’ என்று அழைத்தனர். மஅபர் கடற்கரைகளில் அறபிய-பாரசீகக் குடியேற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக ‘லிசானுல் அர்வி’ என்ற அறபுத்தமிழ் தோன்றியது போன்று மலபாரில் ‘மாப்பிள மலையாளம்’ என்ற அறபுமலையாளம் தோன்றியது. மலையாள மொழிக்கு தனிப்பட்ட எழுத்துரு இல்லாத காலகட்டத்தில் மாப்பிள்ளை முஸ்லிம்கள் அறபு எழுத்துருவைப் பயன்படுத்தி மலையாளத்தை எழுதினர். மாப்பிள்ளைப் பாட்டுகளின் மொழிநடை அறபுமலையாளமாகும்.

அறபுத்தமிழிலிருந்து அறபுமலையாளம் தோன்றியதா என்ற விவாதம் இப்பொழுதும் உண்டு. எனினும் அறபுத்தமிழ் காலத்தால் முந்தியது என்பதை அறபுமலையாள ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அறபுமலையாளத்தில் நீடித்துவந்த அறபுத்தமிழின் ஆதிக்கம், இரண்டு மொழிகளும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

மலபாரிலுள்ள மார்க்கக் கல்விசாலைகளில் முன்னர் தமிழை ஒரு முக்கிய மொழியாகப் பயிற்றுவிக்கும் நடைமுறையும் இருந்துவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளும் வழக்கம் மாப்பிள்ளைச் சமூகத்தில் பொதுவானதாக இருந்தது. தமிழ் பேசப்பட்ட சமூகத்திலிருந்து மலையாள மொழி உருப்பெற்றது போன்று முஸ்லிம் தமிழ் இலக்கியங்களிலிருந்தும் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தும் பாணர்களின் மரபிலிருந்தும் மாப்பிளப் பாட்டுகள் தோன்றின. இவ்விலக்கியங்களின் தமிழ் மரபை ஆய்வுசெய்த டாக்டர் பி.எ.அபூபக்கர் அவர்களும் பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு போன்றவர்களும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனர்.

மலையாள இலக்கிய வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக விளங்கும் மாப்பிள்ளை இலக்கியங்களின் தாய்வேர் தமிழ் என்றாலும் அவை முஸ்லிம் தமிழ் இலக்கியங்களை அடியொற்றியே உருவானது. தமிழ் முஸ்லிம் புலவர்கள் இதற்கு உறுதுணையாக இருந்தனர். ஆனால் அவர்கள் போற்றிவளர்த்துக் கொண்டாடிய இம்மரபு அழிந்துவிட்டது. இவ்வுறவு தொடர்ந்திருந்தால் மாப்பிள்ளை இலக்கியங்களின் தமிழ் மரபு பாதுகாக்கப்பட்டிருக்கும். மொழிவழி மாநிலங்கள் தோன்றிய பிறகு இந்தத் தொடர்பு முற்றாக அறுந்துவிட்டது எனலாம்.

ஒருகாலத்தில் சேரநாட்டின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் கோலோச்சிய தமிழ், அரசியல் காரணங்களாலும் சமஸ்கிருத ஆதிக்கத்தாலும் அங்கு செல்வாக்கை இழந்தது. இதன் காரணமாக இங்கு பேச்சுவழக்கிலிருந்த கொடுந்தமிழ் சுதந்திர மொழியாக உருவெடுத்து காலப்போக்கில் மலையாளமாக மாறியது.

மலையாளத்தின் மீது ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக மணிப்பிரவாள நூல்கள் தோன்றின. வைதீக மொழியான சமஸ்கிருதத்துடன் முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அறபியும் தமிழும் இவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தின. எனவேதான் மலையாள மொழியில் காணமுடியாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்கள் மாப்பிள்ளை இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மலையாள இலக்கியம் மணிப்பிரவாள மரபிலிருந்து தோன்றியிருக்க, மாப்பிள்ளை இலக்கியம் தமிழ் மரபிலிருந்து தோன்றியுள்ளது. மாப்பிள்ளைப் புலவர்கள் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி தமிழ்ப் புலவர்களிடமிருந்து செய்யுள் இயற்றும் விதிமுறைகளையும் கற்றனர்.

மலபார் முஸ்லிம்களும் அங்கிருந்த மார்க்க அறிஞர்களும் காயல்பட்டினம்,தேங்காய்ப்பட்டினம், கீழக்கரை போன்ற ஊர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் மாப்பிள்ளைமார்களின் பண்பாட்டில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. மாப்பிள்ளைப் பாட்டுக்களின் முடிசூடா மன்னன் என்று போற்றப்படும் மகாகவி மோயின்குட்டி வைத்தியர் காயல்பட்டினத்தில் சிலகாலம் தங்கியிருந்து முஸ்லிம் தமிழ்ப் புலவர்களிடம் பயின்றதாக எழுத்தாளரும் ஆய்வாளருமான முனைவர் ஹுசைன் ரந்தத்தாணி குறிப்பிடுகிறார். மோயின்குட்டி வைத்தியர் தமிழின் செய்யுள் அமைப்பில் பாடல்களை இயற்றுவதற்காக கம்பராமாயணம் பயின்றதாகவும் குறிப்புகள் உள்ளன. இவர் தமிழ், மலையாளம், அறபி, சமஸ்கிருதம், உருது போன்ற பல மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்தார்.

கேரளத்தில் நடைபெற்ற மாப்பிள்ளைப் பாட்டு கவியரங்குகளில் முஸ்லிம் தமிழ் இலக்கியங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ‘இஸல் பூத்த கிராமம்’ என்று போற்றப்படும் கேரளத்தின் வடக்கெல்லையான காசர்கோடு மாவட்டத்தின் மொக்ரால் என்ற ஊரில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பாடல்களை அரங்கேற்றியுள்ளனர். தக்கலை பீர்முஹம்மது அப்பா, ஹம்ஸா புலவர் போன்றவர்கள் இங்கு பங்கெடுத்த கவியரங்குகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. கலைகளின் பிறப்பிடமான மொக்ரால் கிராமத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட மாப்பிள்ளைக் கவிஞர்கள் தோன்றியதற்கு தமிழ்ப் புலவர்கள் கொண்டிருந்த வலுவான தொடர்புகளும் காரணமாகும். ‘இஸல்’ கிராமமான இவ்வூர் புகழ் பெற்ற ‘பட்சிப் பாட்டுகள்’ என்ற பறவைப் பாட்டுக்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. தமிழின் இயல் என்பதன் பிறழ்வே மாப்பிள்ளை இலக்கியத்தில் ‘இஸல்’ என்று கூறப்படுகிறது.

தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஆரம்பத்தில் தங்கள் இலக்கியங்களை தமிழில் மட்டுமன்றி அறபுத்தமிழ் எழுத்துருவிலும் எழுதியுள்ளனர். இதனால் தமிழ் முறையாகக் கற்காத அறபுமலையாளம் தெரிந்த முஸ்லிம்களால் இவற்றை வாசிக்கமுடிந்தது. அறபுத்தமிழ் தெரிந்தவர்கள் அறபுமலையாள நூல்களை வாசித்து அதன் பொருளையும் விளங்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் இவற்றின் எழுத்துமுறை ஒரேமாதிரியாக இருந்து பின்னர் அச்சக வளர்ச்சியினால் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்களால் மாறுபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தென்கேரளாவில் கடந்த நூற்றாண்டுவரை அறபுத்தமிழுக்கு முக்கியத்துவம் இருந்துவந்தது. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்கேரளாவின் பெரும்பகுதி தமிழர் நிலமாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளை இலக்கியம் மலையாள இலக்கிய அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது. எனவே மலையாள இலக்கியமாக இதை ஒப்புக்கொள்ள மலையாள அறிஞர்கள் தயங்குகின்றனர். இலக்கிய வளம்கொண்ட மாப்பிள்ளை இலக்கியம், முஸ்லிம் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டிருப்பது மற்றொரு காரணமாகும். மலையாள இலக்கியம் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் மாப்பிள்ளைக் கவிஞர்கள் தமிழ்ப் புலவர்களிடமிருந்து பாடல்களை இயற்றும் விதிமுறைகளைக் கற்று புதிய இலக்கிய மரபை உருவாக்கினர். இது மாப்பிள்ளைப் பாட்டுகளுக்கான தனித்தன்மையை நிலைநிறுத்தியது.

தமிழ்ச் செய்யுள் அமைப்பிலுள்ள எதுகை, மோனை, இயைபு, அடி, தொடை போன்றவை மாப்பிள்ளைப் பாட்டில் கம்பி, கழுத்து, வால் கம்பி, வாலும்மல் கம்பி, சிற்றெழுத்து என்பவைகளாக அறியப்படுகின்றன. மகாகவி மோயின்குட்டி வைத்தியர் தன்னுடைய ஸலீகத் படைப்பாட்டின் துவக்கத்தில் இதைக் குறிப்பிடுகிறார்.

வகைகள் முதநூல் சிற்றெழுத்தும் கம்பி
வாலும் தலை சந்தம் கனிப்பும் தம்பி
சகல கவிராஜன் இதினை பார்ப்பீன்
தபீப் பயல் என் வாக்கனர்த்தம் தீர்ப்பீன்

மோயின்குட்டி வைத்தியர் கூறும் ‘முதநூல்’ என்பது ‘முதல் நூல்’ என்ற நூல் வகையாகும். நூல் என்பதை முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்று நன்னூல் வகைப்படுத்தியுள்ளது. “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல்” என்று தொல்காப்பியம் இயம்புகிறது.

மலையாள இலக்கியங்களில் இல்லாத இந்தச் செழுமையான தமிழ் மரபு பல ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழக ஸூஃபி அறிஞர்களின் நெருங்கிய தொடர்புகளும் இதற்குக் காரணமாக இருக்கிறது. வடமலபாரிலுள்ள இச்ச அப்துல் காதர் மஸ்தான் போன்ற ஸூஃபிக் கவிஞர்கள் அறபுமலையாளத்திலும் தமிழ் எழுத்துருவிலும் தங்களின் பாடல்களை எழுதியுள்ளனர். முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் ஸூஃபிகளாக இருப்பதுபோன்று ஆரம்பகால மாப்பிள்ளைப் புலவர்களும் ஸூஃபிகளாகவே இருக்கின்றனர். இப்புலவர்கள் இயற்றிய பாடல்களை தமிழின் துணையில்லாமல் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பாடல்களின் விருத்தங்களும் தமிழாக உள்ளது. மலையாள மொழி தமிழிலிருந்து தோன்றியது என்பதற்கு மாப்பிள்ளை இலக்கியம் சாட்சியாக உள்ளது.

மாப்பிள்ளை இலக்கியங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ‘முஹ்யித்தீன் மாலை’ கொல்ல வருடம் 782ல் (கி.பி.1607) கோழிக்கோடு காழியாக இருந்த காஜி முஹம்மது அவர்களால் இயற்றப்பட்டது. சிறந்த கவிஞரும் மார்க்க அறிஞருமான இவர் பல அறபி நூல்களையும் இயற்றியுள்ளார். மலையாள மொழியின் தந்தை என்று போற்றப்படும் துஞ்சத்து இராமானுஜ எழுத்தச்சனின் சமகாலத்தில் வாழ்ந்த இவர் தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இவர் இயற்றிய முஹ்யித்தீன் மாலையை தமிழ்ச்சுவை கொண்டது என்று கூறுவர். “அல்லாஹ் திருப்பேரும் துதியும் ஸலவாத்தும்
அதினால் துடங்குவான் அருள் செய்த வேதாம்பர்”
என்று முஹ்யித்தீன் மாலை துவங்குகிறது.

காஜி முஹம்மது அவர்களுக்குப் பிறகு பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தலைச்சேரியில் வாழ்ந்த குஞ்ஞாயின் முஸ்லியார் எழுதிய பாடல்களில் முஹ்யித்தீன் மாலையை விட தமிழின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர் ‘நூல் மாலை’, ‘நூல் மத்ஹு’, ‘கப்பப் பாட்டு’ (கப்பல் பாட்டு) முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவருடைய ‘நூல் மத்ஹு’ நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடியதாகும். இதில் எண்பது விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பதால் ‘நூல் மத்ஹு’ அறபுத்தமிழ் காவியமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் முன்னுரை தமிழ் நடையில் உள்ளது.

ஆதிதன் அருளினால் பெருமான் வந்து அண்டம் ஏழும் கடந்து அர்ஷின்னு முடிநின்றே முஹம்மது நபியை காண்பதுக்கு என்னில் ஆசைக்கடல் பொங்கும், அதினால் இம்மத்ஹு நூல் மாலை பணிவதுக்கு அல்லாஹ்வே தாரும் உன்துணை காப்பு

திங்கள் நிறந்தவர் திங்கள் திகந்தவர் திங்களில் வந்தவரே
எங்கும் எழுந்து அரபானவர் ஹாஷிம் இக்கிள ஆண்டவரே..

“திங்கள் (சந்திரன்) ஒளியால் நிறைந்த திங்கள் கிழமையன்று பிறந்து திங்கள் கிழமையன்று மறைந்தவரே! எங்கும் மதிப்பு மிக்க அறபு ஹாஷிம் கிளையில் ஆனவரே!” என்ற பொருளில் குஞ்ஞாயின் முஸ்லியார் பாடியுள்ளார்.

தடையாதுடன் சுவர்க்கம் திருக்காட்சையும்
தாஹா நபி கூட வழங்கு போற்றி
உடைய பெரியோனே எளிய என்றெ
உண்மை இரவு நீ கபூலாக்கு ஆமீன்.

“சுவர்க்கத்தையும் உன்னை காணும் (திருக்காட்சை) பாக்கியத்தையும் தாஹா நபி (ஸல்) அவர்களுடன் வழங்குவாயாக! பெரியோனே (அல்லாஹ்வே) எளியவனான என்னுடைய உண்மையான இறைஞ்சுதலை நீ கபூல் ஆக்குவாயாக, ஆமீன்!” என்ற பொருளில் பாடியுள்ளார்.

மாப்பிள்ளைப் பாட்டுகளுக்கு புதிய வடிவம் கொடுத்து மெருகேற்றியவர் மகாகவி மோயின்குட்டி வைத்தியர் ஆவார். இவர் இயற்றிய படைப்போர் (படைப்பாட்டு) காவியங்களையும் மற்ற கவிஞர்களின் படைப்போர் காவியங்களையும் ஆங்கிலேயர் தடைசெய்தனர். முஸ்லிம் தமிழ்க் கவிஞர்களின் படைப்போர் இலக்கியத்தை தழுவியே மலையாள முஸ்லிம் கவிஞர்கள் ‘படைப்பாட்டுகள்’ இயற்றினர். காலனியாதிக்கத்தை எதிர்க்கவேண்டும் என்ற சிந்தனையில் தோன்றியவையே படைப்போர் (படைப்பாட்டு) இலக்கியங்களாகும். மலபாரின் வீரம்செறிந்த வரலாற்றுக்குச் சொந்தமான இப்பாடல்களை உணர்ச்சிபொங்கப் பாடியவர்களாக மாப்பிள்ளைகள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர்.
மோயின்குட்டி வைத்தியரின் பதர் படைப்பாட்டிலிருந்து சில வரிகள் …

பதறுல் ஹுதா யாஸீன் அந்நபி (க்)ஹரஜாய் அந்நேரம்
வளர்க்கொடி மூன்றெண்ணம் கெட்டிடை அதிலுண்டெ
அப்யளு வர்ணமதாம் பின் ரண்டும் அஸ்வதும் ஆமே…

“பதறுல் ஹுதா வாகிய யாஸீன் நபி (ஸல்) அவர்கள் (பத்றுப் போருக்கு) புறப்பட்ட நேரத்தில் மூன்று கொடிகளைக் கொண்டுசென்றார்கள். அதில் ஒன்று வெண்ணிறக் (அப்யளு) கொடி. மற்ற இரண்டும் கருப்புக் (அஸ்வது) கொடிகள்.”

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய மாப்பிளப் பாட்டுகளில் படிப்படியாக தமிழும் அறபியும் செல்வாக்கை இழக்கத் தொடங்கின. மலையாள இலக்கியம் வளர்ச்சியடைந்தபோது மாப்பிள்ளைப் பாட்டுகளில் அதன் தாக்கம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் நடைமுறைப்படுத்திய நவீனக் கல்விமுறையால் அறபுத்தமிழ் செல்வாக்கை இழந்ததுபோன்று அறபுமலையாளமும் செல்வாக்கை இழந்ததும் மற்றொரு காரணமாகும். புகழ்பெற்ற ‘கத்துப் பாட்டுகள்’ (கடிதப் பாட்டுக்கள்) இதற்கு உதாரணமாக உள்ளது.

அபுதாபியில் உள்ளொரு எழுத்துப் பெட்டி
அன்னு துறன்னப்போழ் கத்து கிட்டி
என் ப்ரிய நீ நின்ற ஹ்ருதயம் பொட்டி
எழுதிய கத்து ஞான் கண்டு ஞெட்டி

“அபுதாபியில் உள்ள தபால் பெட்டியை அன்று திறந்தபோது உன் கடிதம் கிடைத்தது. எனக்குப் பிரியமான நீ இதயம் வெடித்து எழுதிய கடிதத்தைக் கண்டு நான் அதிர்ந்தேன்.”

மகாகவி மோயின்குட்டி வைத்தியர் பிறந்த மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி என்ற ஊரில், அவர் பெயரால் ஒரு நினைவிடத்தையும் ‘மாப்பிள கலா அக்கடமி’ என்ற ஆய்வு நிலையத்தையும் கேரள அரசு அமைத்துள்ளது. மாப்பிள்ளைக் கலைகளை வளர்க்கவும் ஆய்வுசெய்யவும் இந்த மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கலையையும் பண்பாட்டையும் ஊக்குவிக்க இதில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினருக்கு சிறப்புப் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.

(நன்றி: சமூக உயிரோட்டம், செப்டம்பர் 2020)

Related posts

Leave a Comment