கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை

Loading

[கடந்த கால் நூற்றாண்டாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் குறித்து ஆய்வுகளைச் செய்துவரும் ஜாஃப்ரிலோ. இந்தியவியல் குறித்த மிக முக்கியமான ஆய்வாளர்களுள் ஒருவர். அவருடன் காணொளிக் காட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நீண்ட உரையாடலின் சில பகுதிகளை எனது மொழியில் இங்கு சுருக்கித் தருகிறேன். மகாத்மா காந்தியின் ஒரு கூற்றுடன் தொடங்குகிறது அவரது உரை. இது அவரது முழு உரை அல்ல. எனது குறிப்புகளுடன் ‘எடிட்’ பண்ணப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பவை என் குறிப்புகள்.]

சுதந்திரத்திற்குப் பிந்தைய முஸ்லிம்களின் நிலை

“ஒரு தேசத்தின் பெருமை என்பது அந்த நாட்டிலுள்ள ஆக பலவீனமான மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது” – காந்தி அடிகள்

மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20 சதம் இருந்தபோதும் விடுதலைக்குப் பிந்திய இந்தியாவில் IAS, IPS பதவிகள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எதிலும் அவர்களின் எண்ணிக்கைக்குப் பொருத்தமான அளவில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெற்றதில்லை. வெறும் 8% நகர்ப்புற முஸ்லிம்கள்தான் மாத ஊதியம் பெறும் பணியாளர்களாக உள்ளனர் (தேசிய சராசரி 21%). 61% முஸ்லிம்கள் சுய வேலைவாய்ப்புகள், வணிகம் மற்றும் கைவினைத் தொழில்களிலேயே உள்ளனர். அவர்கள் மாத வருமானம் பெறும் ஊழியர்களாக இல்லாதது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களில் அவர்கள் போதிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயம் சாராத, முறையான மாத ஊதியம் பெறும் பணிகளில் உள்ள முஸ்லிம்கள் 5% மட்டுமே; இந்துக்கள் 22.16%. ஆனால், தனியார் துறைகளில் மாத ஊதியம் பெறும் முஸ்லிம்கள் 19.70%; இந்துக்கள் 22.16%.

(ஆக தனியார் துறையைக் காட்டிலும் அரசுத்துறை முஸ்லிம்களுக்கு வேலை கொடுப்பதில் பின்தங்கியுள்ளது. காங்கிரஸ் அரசு ஏதோ முஸ்லிம்களை மட்டும் ஊட்டி வளர்த்துவிட்டதாக (pampering) சங்கிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு வழக்கம்போல ஒரு மோசடி வேலை என்பதற்கு இன்னொரு நிரூபணம் இது.)

1980க்குப் பின் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டே போகிறது.

1980ம் ஆண்டில் 49 எம்.பிக்கள் (9%); 2014ம் ஆண்டில் 21 எம்.பிக்கள் (4%); 2019ல் வெறும் 5%. மேற்கு வங்கத்தில் மட்டும்தான் ஓரளவு மக்கள் தொகையும், சட்டமன்றப் பிரதிநிதித்துவமும் ஒன்றாக உள்ளது. மக்கள் தொகை 25.2%. எம்எல்ஏக்கள் 20%. ஆனால் மே.வங்கத்தில் முஸ்லிம்கள் மத்தியில் வறுமை மிக அதிகம்.

(முதல் முதலில் முஸ்லிம் எம்.பிக்களே இல்லாத ஒரு கட்சி மத்தியில் அரசாள்வது இப்போதுதான். பாஜக மட்டுமல்ல இப்போது எல்லா அரசியல் கட்சிகளுமே நாடாளுமன்றம், சட்டமன்றம், கட்சித் தலைமை ஆகியவற்றில் முஸ்லிம்களை ஒதுக்கும் நிலை உள்ளது. கூட்டணி சேர்ந்தாலோ, ஏதோ முஸ்லிம்கள் செறிவாக உள்ள தொகுதிகளாக இருந்தாலோ அங்குதான் இப்போது முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர். கட்சிப் பதவிகளைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களுக்கான கட்சி அமைப்புகள் இருந்தால் அதில் மட்டுமே அவர்கள் அமர்த்தப்படுவர். – அ.மா)

பிறப்புச் சான்றிதழ் இல்லாத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை முஸ்லிம்களில் அதிகம். SC, ST, OBCக்கள் மத்தியிலும் அது உண்டு.

படித்து மேல்நிலை அடையும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு சமூகம் வலுவாக இருக்க வேண்டுமானால் படித்த இளைஞர்கள் (elites) அதிகம் இருக்க வேண்டும் என்பர்.

(முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி பெறுவது அதிகரித்தாலும் அவர்கள் உயர் பதவிகளில் இருப்பது குறைவு. படித்தாலும் இந்த ஊரில் வேலை கிடைக்கப்போவதில்லை எனும் எண்ணம் முஸ்லிம் இளைஞர்களை ஏதேனும் ஒரு டிகிரி பெற்றுக்கொண்டு ஏதேனும் ஒரு வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றுவிடலாம் என்கிற கோணத்திலேயே சிந்திக்க வைக்கிறது. – அ.மா)

எதையும் ’பீட்’ பண்ணும் இந்துத்துவா உத்தி!

கிட்டத்தட்ட இஸ்ரேல் போல இந்தியா ஆகிறது. ஒரு காலத்தில் இட்சாக் ராபின் (Yitzhak Rabin) போன்ற தொழிற்கட்சித் தலைவர்கள் கூட இஸ்ரேலில் பிரதமராக முடிந்தது. ஏரியல் ஷரோனுக்குப் பிறகு எல்லாம் மாறிவிட்டது. இப்போது அங்கு அப்படியான ஓரளவு தாராளவாதம் என்பதெற்கெல்லாம் இடமே இல்லை. சமூகங்களுக்கிடையே எக்காரணம் கொண்டும் அமைதி நிலவக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. சாதாரண உரையாடலே “பாதுகாப்பு” தொடர்பானதாக மாற்றப்படுகிறது. தனித்தனிச் சமூகங்களாகப் பிரித்து நிறுத்துவதே (polarization) அரசியலின் முக்கியப் பணியாகிறது. நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசினால் முறைகேடான (illegitimate) நபர்.

இங்கு “இந்துத்துவாதான் இந்துயிசம்”, “இந்து தேசியம்தான் இந்திய தேசியம்” என்கிற நிலை உருவாகிவிட்டது. “மற்றது குறித்த அச்சம்” (fear of the other) எங்கும் விரவிக் கிடக்கிறது. மற்றதைக் கண்டு அச்சம், பாகிஸ்தானைக் கண்டு அச்சம், இஸ்லாமைக் கண்டு அச்சம். நீங்கள் இப்படியான உரையாடலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டால் you are considered illegitimate.

சரி. இதை எதிர்கொள்ள என்னதான் வழி? இப்படியான “அடையாள அரசியலுக்கு” பதிலாக, தகுதியான சமூகப் பொருளாதாரப் பிரச்னை interest based socio – economic issues எதையும் வைக்க முடியுமா?

இல்லை. மிகக் கடினம்.

இன்றைய தேர்தல் அரசியல் என்பதே முஸ்லிம்களை ‘நாம்-அல்லாதவர்களாக’ மற்றமைப் படுத்துவதுதான் (otherisation of Muslims). உன் அடையாளத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்கிற ரீதியில், நீ முஸ்லிம் வெறுப்புப் பேச்சை அவிழ்ப்பதன் ஊடாக நீ உன்னவர்களாக வரையறுப்பவர்களை ஒருங்குதிரட்டிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை மற்றவர்களாக்குவதுதான் இன்றைய தேர்தல் அரசியல்!

தாங்கள் (முஸ்லிம் ஆட்சி முதலிய –அ.மா) வரலாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற அச்சம் இந்துக்களுக்கு உண்டு. உலகளாவிய கிலாஃபத் இயக்கம் முதலியன ஆர்எஸ்எஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இப்படியான அணிதிரட்டலில் பலனடைகிறோம் என்றால், அதை அவர்களும் செய்வார்கள்தானே. செய்கிறார்கள். எல்லா அம்சங்களிலும் (பாபர் மசூதி தொடங்கி) அது நடக்கிறது. ஆங்காங்கு வன்முறைகள். கலவரங்கள் இன்னொரு பக்கம். எல்லாவற்றையும் தங்களின் ‘தேர்தல் போர்த் தந்திரம்’ (electoral strategy) என்பதாக முன்வைத்து அவர்கள் மேலே மேலே செல்கின்றனர்.

(இப்படியான தேர்தல் உத்தியில் சிறுபான்மையினர் தோற்றுப் போகிறார்கள். பேசாமல் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலையாவது பார்க்கலாமென்றால் கொரோனா புண்ணியத்தில் அதிலும் இப்போது தேக்கம். – அ.மா)

சரி மொழிவாரி மாநிலத் தேசியத்திற்குள் (linguistic nationalism) சிறுபான்மையினர் அடைக்கலமாக முடியுமா? உறுதியாக அது அவர்களுக்கு உதவாது. வேண்டுமானால் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் அது கொஞ்சம் வேலை செய்யலாம்.

இந்துத்துவா இன்று ஒரு புது அடையாளமாக உருவெடுத்துள்ளது. கம்யூனிஸ்டுகள் உட்பட இன்று அந்தத் திசையில் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளம் எல்லாமும் அந்தப் பக்கம் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது. (இதில் காங்கிரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. – அ.மா)

தலித் முஸ்லிம் கூட்டணி எப்படி உள்ளது?

ஆனால் இந்தியா ஒன்றும் இஸ்ரேல் மாதிரி ஒரு இன அடிப்படையிலான ஜனநாயகம் இல்லை. இன்னும் கூட அதுவொரு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைத்தான் கொண்டுள்ளது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். “இந்தியா ஒரு இன அடிப்படையிலான ஜனநாயகம் எனச் சட்டபூர்வமாக (de jure) அறிவிக்கவில்லை. ஆனால் நடைமுறையில் அது ஒரு இன அடிப்படையிலான ஜனநாயகமாக (de facto) இருக்கிறது”.

இப்படியான சூழலில் காங்கிரஸ் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கின்றனர். அசதுத்தீன் உவைசியின் AIMIM எனும் முஸ்லிம் அமைப்பும், பிரகாஷ் அம்பேத்கரின் தலித் கட்சியும் இம்முறை தங்களின் தேர்தல் பங்கேற்பின் மூலம் காங்கிரஸைத்தான் பலவீனப்படுத்தின. இவை காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி இரண்டையும் எதிர்த்து நின்றதால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (NCP) கிட்டத்தட்ட 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தன. (காங்கிரஸ் தோற்றதோடு முடியவில்லை. இன்னொரு பக்கம் பாஜகவை பலப்படுத்தத்தான் அது உதவியது. –அ.மா)

இது எளிதில் விடை காண இயலாத ஒரு சிக்கல்தான். இப்படியான சிக்கல்களை மாநில வாரியாகவும் தொகுதிவாரியாகவும் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான சூழலில் நமது முன்னுரிமை எவ்வாறு அமைய வேண்டும்? பாஜகவை வீழ்த்துவது என்பதற்கு நாம் யாரை ஆதரிக்க வேண்டும்? ஒருவேளை முஸ்லிம் வேட்பாளருக்கு நம் ஆதரவு இல்லாமல்கூடப் போகலாம்.

இப்போது பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் சூழல் மிக மோசமாக உள்ளது. இப்போது தலித்களும் முஸ்லிம்களும் அத்தனை அரசியல் நெருக்கத்துடன் இல்லை. தலித்களை ஈர்ப்பதற்கு இந்துத்துவம் தனது சமஸ்கிருத மயமாக்கல் கொள்கையை மிகத் தந்திரமாகப் பயன்படுத்துகிறது.

இட ஒதுக்கீடு என்பது கொஞ்சம் சிக்கலான ஒரு நடவடிக்கை. பல மாநிலங்களில் தலித்களுக்குள் பல உட்பிரிவுகள் உள்ளன. தேர்தலில் சில உட்சாதிகளே ஒதுக்கப்பட்ட எல்லா இடங்களையும் கைப்பற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அது வால்மீகிகள் போன்ற சில தலித் உட்பிரிவுகளுக்கு ஒன்றும் கிடைக்காத நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இப்படியான காரணங்களால் பகுஜன் சமாஜ் (BSP) கட்சியுடன் வால்மீகி போன்ற தலித் சாதியினர் முரண்படும்போது, இம்மாதிரி சிறு தலித் அமைப்புகள் பாஜக கூட்டணிக்குப் போய்விடுவதை நாம் பார்க்கிறோம். இம்மாதிரி நேரங்களில் முஸ்லிம்களுடன் இணைவது ஒரு தேர்வாக அமைவதில்லை. அடையாள (Identity) அடிப்படையில் அவர்கள் முஸ்லிம்களோடு சேர்ந்து நிற்பதற்குப் பதிலாக தன்நல (Interest) அடிப்படையில் அவர்கள் பா.ஜ.க உடன் சேந்துவிடுகின்றனர்.

முஸ்லிம்கள் மத்தியில் உருவாகும் புதிய மத்தியதர வர்க்கம்

CAA எதிர்ப்புப் போராட்டம் சமீப கால வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. இதுவரை அரசியல் மயப்பட்டிராத மத்தியதர வர்க்கம் ஒன்று CAA எதிர்ப்புப் போரில் மைய நீரோட்டத்திற்கு (mainstream) வந்தது என்பது ஒரு மிக முக்கியமான திருப்பம். பெண்கள் இதில் மிக முக்கியப் பங்கை வகித்தனர். இளம் பெண்கள் மட்டுமல்ல எல்லா வயதினரும் இதில் முன்னணிக்கு வந்தனர். முஸ்லிம்கள் குறித்த ஒற்றைப் பார்வையை இது தகர்த்தெறிந்தது. முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி உள்ளமைக்கும் இது ஒரு சான்றாக அமைந்தது.

மத்தியதர வர்க்கம் இப்படி மேலெழுவது ஒரு நல்ல அடையாளம். அரசியல் ரீதியாக மட்டுமல்ல சமூக உறவுகள் எனும் வகையிலும் இப்படி எல்லா மட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் பங்கேற்றது ஒரு முக்கியத் திருப்பம். முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறு வர்க்கம், மொழி, இதர உட்பிரிவுகள், ஷியா, போரா என்பன போன்ற வேறுபாடுகள் என எல்லாவற்றையும் கடந்த ஒற்றுமை என்பது இந்தக் கட்டத்தில் மிகவும் நல்ல ஒன்று.

இன்றைய முஸ்லிம் பிரச்னைகளை எதிர்கொள்ள பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவது குறித்து

இப்போதைக்கு அது உசிதம் அல்ல. ஏற்கனவே என்ன நடந்துள்ளன என்பவற்றை எல்லாம் பார்க்க வேண்டும். ஐநா அவையின் மனித உரிமைகள் ஆணையரான மிஷெல் பேச்சலெட் ஜெரியா (Michelle Bachelet Jeria) இந்தப் பிரச்னைகளைக் கவனித்துக் கொண்டுள்ளார். எந்த ஒரு நீதிமன்றத்தைக் காட்டிலும் அவரை அணுகுவது எளிது. அதுதான் எதார்த்தமானதும் கூட.

இதர வெளிநாடுகளும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் உள்ளன. அமெரிக்க காங்கிரஸும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மத உரிமைகள் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆராய்ந்து கொண்டுதான் உள்ளது. அமெரிக்க ஜனநாயகத்தில் காங்கிரஸின் செயல்பாடுகளை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றமும் இந்தியாவில் நடப்பவற்றைக் கூர்மையாகக் பார்த்துக்கொண்டுள்ளது. சவூதி அரேபியா, UAE முதலிய முஸ்லிம் நாடுகளும் கவனிக்காமல் இல்லை. மோடி இவற்றுடன் நெருக்கம் காட்டிக்கொண்டிருப்பது உண்மைதான். பாகிஸ்தானுடன் அவை நெருங்கிவிடாமல் பார்த்துக்கொள்வதற்காகவும், இந்தியாவில் அவை முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த நெருக்கம் எல்லாம். ஆனால் ஜம்மு – காஷ்மீர் மீதான மோடி அரசின் நடவடிக்கையை UAE, IOC முதலியன வெளிப்படையாகக் கண்டித்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பன்னாட்டு ஊடகங்களும் இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கின்றன. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், எகனாமிஸ்ட் முதலான ஊடகங்கள் இதில் மிகவும் கரிசனத்துடன் உள்ளன.

Related posts

Leave a Comment