இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு
பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் ப்ளாங்க் நிறுவனத்தில் சமயம் மற்றும் இனப் பன்மைத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் மூத்த ஆராய்ச்சியாளர். ஆஸ்திரேலியாவிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர், ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் அரசியல் மானுடவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். Islamism and Democracy in India, Religion as Critique ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க நூல்கள். 2019ம் ஆண்டு அவர் இணைத் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட The Algebra of Warfare-Welfare என்ற நூல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிகுறித்து மிக விரிவாக அலசியுள்ளது. 2015-2018 காலகட்டத்தில் அவர் Journal of Religious and Political Practice எனும் ஆய்விதழின் நிறுவன இணை ஆசிரியராகச் செயலாற்றியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்க ‘இந்து ஓரியண்டலிசம்’ என்கிற புதிய பதத்தையும் பயன்படுத்துகிறார்.
இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாகவே தற்போதைய சூழல் உருவாகியுள்ளதைக் குறிப்பிடுகிறார்.
இந்து ஓரியண்டலிசம் எனும் கருத்தாக்கத்தை தான் கண்டடைந்தது எப்படி என்று கூறும்போது சமூகவியல், மானுடவியல் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கிவந்த அனுபவங்களிலிருந்தும், முறையாக இந்திய மானுடவியல் வரலாற்றை ஆராய்ந்ததிலிருந்தும் அதனைப் பெற்றதாகச் சொல்கிறார் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது. அவரது உரையில், இந்து ஓரியண்டலிசம் எனும் சொல்லாடலை கண்டடைய பேரா. வாயில் ஹல்லாக்கின் சமீபத்திய நூல் ஒன்றும் தனக்கு உதவிபுரிந்ததாகக் குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட இணையக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது ஆற்றிய உரையைத் தொகுத்தளிக்க முயல்கிறது இந்த ஆக்கம்.
அடிப்படையான நான்கு வாதங்கள்
1. அறிவுக்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. வேறு வகையில் சொல்வதானால், ஒருபுறம் அறிவு அரசியலைப் பிறப்பிக்கிறது, மறுபுறம் அரசியல் அறிவைப் பிரசவிக்கிறது. அறிவு, அறிவுற்பத்தி, அரசியல் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த வகையில் பார்த்தால், இந்து ஓரியண்டலிசம் என்பது இந்திய அரசியலுக்கான அடித்தளமாக இருந்துவருகிறது. இன்று நேற்று அல்ல, பன்னெடுங்காலமாக!
2. இந்து ஓரியண்டலிசம் ஒரு நவீனக் கதையாடல். நவீன காலத்துக்கு முந்தைய மரபு, மொழி போன்றவற்றிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அதை நவீனமான ஒன்றாகவும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. ஓர் உண்மை என்னவென்றால் அது முழுமையாகவே ஒரு இந்திய நிகழ்வுப்போக்கு அல்ல; மேற்குலகுக்கு அது பெரிதும் கடன்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டிஷ் ஓரியண்டலிசத்துக்கும் ஜெர்மன் ஓரியண்டலிசத்துக்கும்.
3. இந்து ஓரியண்டலிசத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் என்பவற்றோடு மட்டும் சுருக்க முடியாது. வழக்கமான வகைப்படுத்தல்களான காங்கிரஸ் எதிர் பாஜக, ஆம் ஆத்மி எதிர் சிபிஐ/எம், காங்கிரஸ் எதிர் சிபிஐ/எம் போன்றவற்றைத் தாண்டி, கட்சி அரசியலுக்கு அப்பாலும் அது இயங்குகிறது. அதன் கூறுகளை காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம் முதலான கட்சிகள் அனைத்திலும் காணலாம்.
4. இந்து ஓரியண்டலிசம் கருத்துத் தளத்தில் மட்டுமின்றி அன்றாட வாழ்வின் எதார்த்தமாகவும் ஆகியிருக்கிறது. அதன் வெளிப்பாட்டை மொழி, உணவு, சினிமா, அரசியல், விளையாட்டு என எல்லாத் தளங்களிலும் அவதானிக்க முடிகிறது.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய மேற்கண்ட நான்கு வாதங்களையும் நிறுவுவதற்கு, (1) ஓரியண்டலிசம் என்றால் என்ன, (2) இந்து ஓரியண்டலிசம் என்றால் என்ன, (3) இந்து ஓரியண்டலிசம் முஸ்லிம்களை எப்படி அணுகுகிறது, (4) ஆதிவாசிகளை அது எப்படி அணுகுகிறது, (5) அதன் சமகால வெளிப்பாடுகள் எப்படியிருக்கிறது, (6) அன்றாட வாழ்வின் எதார்த்தமாக அது எப்படி இயங்குகிறது என்பவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஓரியண்டலிசம் என்றால் என்ன?
ஓரியண்டலிசம் எனும் எண்ணக்கரு புகழ்பெற்ற இலக்கிய விமர்சகரான எட்வர்ட் சைதுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் ஒன்று. இந்தச் சொல்லாடலை முதலில் பாவித்தது அவர் இல்லையென்றாலும், 1978ம் ஆண்டு அவர் எழுதிய Orientalism எனும் நூல் உலகப் பிரசித்திபெற்றது. மேற்கத்தியச் சக்திகள், குறிப்பாக 17ம் நூற்றாண்டு தொடங்கி, கிழக்கத்தியர்களை ஆய்ந்தறிய நிறைய துறைகளையும் அறிவமைப்பையும் வளர்த்தெடுத்தன. அறிவுக்கும் அதிகாரத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது எட்வர்ட் சைதின் முதன்மை வாதமாகும். அவர் கோட்பாட்டு ரீதியாக ஃபூக்கோவையும் கிராம்சியையும் சார்ந்திருந்தார்.
ஃபூக்கோ அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இருக்கும் அணுக்கமான உறவை தன் ஆக்கங்களில் படம்பிடித்துக் காட்டியவர். அறிவு ஓர் அப்பாவியல்ல என்பார் அவர். அவருடைய எண்ணக்கருவையும் கிராம்சியின் ஆதிக்கக் கோட்பாட்டையும் (Hegemony Theory) ஆதாரமாகத் தழுவிக்கொண்ட எட்வர்ட் சைத், ஓரியண்டலிசம் குறித்த தன் வாதத்தின் இருப்பையும் நடைமுறையையும் நிறுவினார். அதன் மூலம், ஓரியண்டலிசமானது காலனித்துவத்தின் ஓர் அறிவுக்கிளையாகச் செயல்பட்டதை அவர் தோலுரித்துக் காட்டினார்.
எப்படி இந்த ஓரியண்டலிசம் இயங்குகிறது என்றால், எதிர்மை மற்றும் இருமை எதிர்வுகளை அது உருவாக்குகிறது. உதாரணத்துக்கு, நவீனம் எதிர் பழமை, வளர்ச்சியடைந்த எதிர் பின்தங்கிய, ஆன்மிகம் எதிர் சடவாதம், உயிரோட்டமுள்ள எதிர் தேங்கிப்போன, நாகரிகமடைந்த எதிர் காட்டுமிராண்டித்தனமான என்று நீண்ட பட்டியலிடலாம்.
கிழக்குலகு பற்றி காலனித்துவம் இவ்வகையிலான கருத்துருவாக்கத்தைச் செய்திருந்தது. இந்த வகைப்பாடுகளைச் சுருக்கி, தன்னிலை (Self) எதிர் மற்றமை (Other) எனக் கூறலாம். தன்னிலை என்பது மேற்குலகையும், மற்றமை என்பது பல்வேறு கலாச்சாரங்களையும் சமயங்களையும் உள்ளடக்கிய கிழக்குலகையும் குறிக்கும் நிலையில், எட்வர்ட் சைதின் ஆக்கங்கள் இஸ்லாம் மீதும் மத்தியக் கிழக்கு நாடுகள் மீதும் கவனம் குவித்தன.
எதிர்மை மற்றும் இருமை எதிர்வுகள் கட்டமைக்கப்படுவதை விளக்க இந்திய உதாரணம் ஒன்றை இங்குச் சுட்டிக்காட்டல் தகும். முக்கியமான ஆளுமையாக அறியப்படும் விவேகானந்தர் முன்வைத்த கருத்தாக்கங்களுள் ஒன்று, கலப்புக் கலாச்சாரம் (Syncretic Culture). அதன் மூலம் இந்துக்களும் முஸ்லிம்களும் எவ்வாறு இந்நாட்டில் ஒன்றிணைந்த செயல்திட்டத்தை முன்னெடுப்பது என்று அவர் விளக்கினார். இரு சமயங்களையும் ஒன்றுபடுத்தும் புள்ளி வேண்டுமென்று கூறிய அவர், எவ்வகையில் அதைச் சாத்தியப்படுத்தச் சொல்கிறாரென்றால், இஸ்லாம் உடலாகவும் இந்து மதம் அதன் ஆன்மாவாகவும் இருக்கவேண்டும் என்கிறார். இதில் கவனிக்கவேண்டியது, உடலைவிட ஆன்மா உயர்ந்த நிலையிலிருப்பது என்பதைத்தான். இந்த இணைப்பாக்கத்தில்கூட ஒரு படிநிலையும் அதிகாரமும் செயல்படுவதை நாம் அவதானிக்கவேண்டும். விவேகானந்தர் பார்வையில், இந்து மதம் பழமையானது, அனைத்தையும்விட உயர்ந்தது; அதனால் இஸ்லாம் உடல் எனும் அளவுக்குத்தான் பங்காற்ற முடியும்.
எட்வர்ட் சைத் ஒரு தேர்ந்த இலக்கியத் திறனாய்வாளர் என்பதால் அவர் பனுவல்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினார். மேற்கத்தியச் சக்திகள் கிழக்கத்தியர்களை, அதிலும் குறிப்பாக மத்தியக் கிழக்கு மக்களை, தவறாகச் சித்தரிப்பதைக் கேள்விக்குள்ளாக்கினார். ஆனால், ஓரியண்டலிசம் என்பது இலக்கியப் பிரதிகளைத் தாண்டி, வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் செயல்படுகிறது. எட்வர்ட் சைதுடைய நூலின் போதாமைகளை விவாதித்து 2018ல் பேரா. வாயில் ஹல்லாக் எழுதியுள்ள மிக முக்கியமான புத்தகம் Restating Orientalism. எட்வர்ட் சைத் தன்னுடைய ஆக்கத்தில் ஐரோப்பியச் சக்திகள் மீது முதன்மையாகக் கவனம் செலுத்தியிருப்பார்; இறுதிப் பகுதியில் அமெரிக்க ஓரியண்டலிசம் பற்றியும் பேசியிருப்பார். அதை விமர்சனபூர்வமாக அணுகும் வாயில் ஹல்லாக், தனது புத்தகத்தில் ‘இஸ்ரேலிய ஓரியண்டலிசம்’ என்ற ஒன்று இன்றைக்கு இயங்கிவருவதைக் குறிப்பிடுகிறார். அதே பாணியில்தான் இங்கு இந்து ஓரியண்டலிசம் என்கிற பிரயோகம் கையாளப்படுகிறது.
இந்து ஓரியண்டலிசம் என்றால் என்ன?
இப்போது நிலவும் இந்துத்துவ நிகழ்வுப்போக்கை வெறுமனே தேர்தல் அரசியல் ரீதியில் பலர் அணுகுகின்றனர். இந்த ஆட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் ஆட்சிக்கும் அதன் அரசியலுக்கும் திரும்பவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு 2014 நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ணம் இன்னும் கூர்மையடைந்துள்ளது. இங்கு சிக்கல் என்னவென்றால், பலரும் சமகால அரசியலை தேர்தல் அரசியல் ரீதியில் மட்டும் அணுகி, அதற்கு அடித்தளமாக இருக்கும் அறிவமைப்பைக் கவனிக்கத் தவறுவதுதான். உண்மையில், அரசியல் என்பது இரண்டாம் பட்சமே; அதற்கு அடித்தளமாக இருக்கும் அறிவமைப்பே முதன்மையானது.
நாம் இந்த அணுகுமுறையைக் கைகொண்டால், இந்து ஓரியண்டலிசம் என்பது கட்சி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டும் செயல்படுகிறது என்பதை அறிய முடியும். மேலும், இந்து ஓரியண்டலிசம் சமீபத்தில் தோன்றியதும் அல்ல. இன்றைய நிகழ்வுப்போக்கானது கடந்த காலத்தின் நீட்சியே அன்றி வேறில்லை. இந்த வகையில் பார்த்தால், காந்தி, நேரு காலம் குறித்து நம்மில் பலர் கொண்டுள்ள பிம்பங்களும் கற்பனைகளும் கேள்விக்குறியாகும்.
நவீனத்துக்கு முந்தைய இந்தியாவில் ஓரியண்டலிசம்
மிக முக்கியமான ஆக்கமான எட்வர்ட் சைதின் ஓரியண்டலிசம் புத்தகத்துக்குப் பல்வேறு நேர்மறையான, எதிர்மறையான எதிர்வினைகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்தன. அதிலொன்று, இந்தியவியல் துறையை விமர்சனபூர்வமாக அணுகிய அமெரிக்க அறிஞர் ஷெல்டன் பொல்லாக் உடையது. வரலாற்று ரீதியில் பார்த்தால் இந்தியவியல் துறையானது மேற்குலகில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ஜெர்மனியில்; இந்தியாவிலும் அதற்கான பங்களிப்பு இருந்துவந்துள்ளது.
இந்தியவியல் என்பது இந்தியாவைப் பற்றி இந்துக் கருத்தமைவுக்குத் தக்க கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதிலும் நவீனகால இந்து மதத்தில் அது ஆர்வம்காட்டவில்லை. மாறாக, பழங்கால இந்து நாகரிகம், அதன் பழமைவாய்ந்த பிரதிகள் என அது கவனம் குவித்தது. அதன் காரணமாகவே இந்தியவியல் அறிஞர்கள் இயல்பாகவே சமஸ்கிருதத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் பழங்காலப் பிரதிகளில் கரிசனம்கொள்ளும் அளவுக்கு இந்துக்கள் எனப்படுவோரின் எதார்த்த வாழ்வில் அக்கறை செலுத்துவதில்லை.
எட்வர்ட் சைதுக்கு எதிர்வினையாற்றிய ஷெல்டன் பொல்லாக், நவீனத்துக்கு முந்தைய இந்து மரபிலும் அறிவுக்கும் அதிகாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார். சமஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்கவோர் அறிஞராக அவர் இருப்பதால் அது சார்ந்த பனுவல்களை ஆய்ந்தறிந்து, இந்து மரபு எழுத்தறிவையும் அறிவையும் எப்படி உயர்சாதியினரின் தனியுடமையாகவும் சூத்திரர்களுக்கு அவற்றை எட்டாக்கனியாகவும் ஆக்கியிருந்தது என்பதை விளக்குகிறார். இதன் மூலம் அங்கே நிலவிய அறிவுக்கும் ஆதிக்கத்துக்குமான உறவை எடுத்துக்காட்டுகிறார். அதைத் தொடர்ந்து இந்து மரபு என்ன மாதிரியான இருமை எதிர்வுகளைக் கட்டமைக்கிறது என்றும் பொல்லாக் விவரிக்கிறார். அவற்றுள் ஆரியர் எதிர் ஆரியரல்லாதார், ஆரியர் எதிர் மிலேச்சர் போன்றவை சில உதாரணங்கள். அசூரர், சண்டாளர் போன்ற பதங்களும் மற்றமையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
பூர்வகுடி ஓரியண்டலிசம் (Indigenous Orientalism), இந்திய ஓரியண்டலிசம் ஆகிய சொல்லாடல்களை பொல்லாக் பாவித்திருக்கிறார். அதையே இங்கு இந்து ஓரியண்டலிசம் எனக் குறிப்பிடுவதாக இர்ஃபான் அஹ்மது சொல்கிறார். ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, இந்து ஓரியண்டலிசம் நவீனகாலத்துக்கு முந்தைய மரபு, மொழி போன்றவற்றிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அதை நவீனமான ஒன்றாகவும் நாம் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். பொல்லாக்கிலிருந்து இர்ஃபான் அஹ்மது வேறுபடும் புள்ளி என்னவென்றால், நவீனத்துக்கு முந்தைய இந்திய வரலாறு, பண்பாடு ஆகியவை சார்ந்த அறிஞர் பொல்லாக். ஆனால், இர்ஃபான் அஹ்மது அயலுறவுக் கொள்கை, ஜனநாயகம், தேசியவாதம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவர் அவை தொடர்பாகவும் கவனம் செலுத்துகிறார்.
சரி, இந்து ஓரியண்டலிசத்தின் வரைவிலக்கணம்தான் என்ன? நாம் எதையுமே வரையறுத்துக் கூற முடியாது என்பார் நீட்சே. அதுவொருபுறமிருக்க, இந்து ஓரியண்டலிசத்துக்கு ஒரு வரையறையளிக்க வேண்டுமென்றால் பின்வருமாறு அதைக் குறிப்பிடலாம். இந்து ஓரியண்டலிசம் என்பது ஒரு கருத்தியல் செயல்திட்டம். அது இந்து மதத்தையும் இந்தியாவையும் ஒன்றாக்குவதோடு, அதையே இந்தச் சமூகத்தையும் பண்பாட்டையும் அதிகாரத்தையும் ஒன்றிணைக்கும் அஸ்திவாரமாகவும் நிலைநிறுத்துகிறது.
நினைவில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம், நிச்சயமாக இந்து ஓரியண்டலிசமானது தேசியவாதத்தால் பலமாகத் தாக்கம்பெற்றுள்ளது என்றாலும், அது அத்தோடு நின்றுவிடாமல், அகண்ட பாரதம் என்கிற ரீதியில் தென் ஆசியப் பிராந்திய அளவிலான கோணத்தையும் சர்வதேசக் கோணத்தையும் கொண்டுள்ளது என்பதுதான்.
இந்து ஓரியண்டலிசமும் முஸ்லிம்களும்
முன்பு சுட்டிக்காட்டியதுபோல, மேற்குலக ஓரியண்டலிஸ்டுகள் இந்தியவியல் வழியாக இந்தியாவை ஆய்ந்தறிந்தனர். ஆகவே, இந்துக்கள், இந்தியச் சமூகம், பண்பாடு ஆகியன குறித்த மேற்கத்தியச் சித்தரிப்பானது எதிர்மறையானதாய் இருந்தது. ஒருபடித்தானதாக, மற்றமையைக் கட்டமைப்பதாக அந்தச் சித்தரிப்பு அமைந்திருந்தது என்றாலும், இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்ட விதத்தில் அது இருக்கவில்லை.
ஒரு பக்கம், இந்தியாவை பாம்புகளையும் யானைகளையும் வழிபடும் பூமி, மூடநம்பிக்கைகள் மலிந்துக்கிடக்கும் நிலம், மக்களெல்லாம் பிற்போக்கானவர்கள் என்கிற வகையில் மேற்குலகச் சித்தரிப்பு இருந்தது. இன்னொரு பக்கம், மேற்கத்தியர்கள் சடவாதத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதற்கு மாறாக இந்தியர்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள் என்பதுபோன்ற நேர்மறையான கண்ணோட்டமும் இருந்தது. இந்து ஓரியண்டலிசம் என்ன செய்ததென்றால், தன் சொந்தச் செயல்திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் மேற்கத்திய ஓரியண்டலிஸ்டுகளின் கதையாடல்களை மட்டும் உள்ளீர்த்துக்கொண்டது. இந்தத் தந்திரோபாயச் செயலை நாம் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
1757ம் ஆண்டு மன்னர் சிராஜுத் தவ்லா வெள்ளையர்களால் வீழ்த்தப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். அந்தப் போரில் ஈடுபட்ட சிப்பாயான வில்லியம் வாட்ஸ் ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் பொருள்பட எழுதுகிறார்: “இருவேறு தேசியங்கள் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபடுகின்றன. அவர்களின் நிறம், மொழிகள், நடத்தைகள், மதம் எல்லாமும். முகலாயர்கள் ஆடம்பர விரும்பிகளாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் கடுமையானர்களாகவும் மிகுந்த பேராசை பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களைக்காட்டிலும் பூர்வகுடி இந்தியர்கள் உழைப்பாளிகள், மென்மையானர்கள், பணிவானவர்கள், மூடநம்பிக்கையாளர்கள். இவர்களின் பொறாமைக் குணமும் சந்தேகக் குணமும் மூர்களிடம் (முஸ்லிம்களிடம்) இவர்களை அடிமையாக்கியது.”
இந்தியச் சமூகம் குறித்த வில்லியம் வாட்ஸின் சித்தரிப்பு இரு கூறுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, முஸ்லிம்களும் இந்துக்களும் இருவேறு தேசியங்கள் என்றும்; இந்துக்கள் உண்மையான பூர்வகுடிகள் (ஆதிவாசிகள் பற்றி பேசும்போது இந்த அம்சம் குறித்து சற்று விளக்கமாகக் காண்போம்), முஸ்லிம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றும் வரையறுக்கிறார். இரண்டாவது, முஸ்லிம்களை ஒடுக்குமுறையாளர்கள், ரத்த வெறிப்பிடித்தவர்கள், வன்முறையாளர்கள் என்பதாக சாரம்சப்படுத்தும் வில்லியம் வாட்ஸ், இந்துக்களுக்கு மென்மையானவர்கள், பணிவானவர்கள், மூடநம்பிக்கையாளர்கள் எனும் சித்திரத்தைத் தருகிறார்.
முஸ்லிம்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று இங்கு கூறுவதன் மூலம் இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரிவினை உண்டாக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதையே நாம் பிரித்தாளும் சூழ்ச்சி என்கிறோம். இங்கு கவனிக்கவேண்டியது, பிரிவினையை ஏற்படுத்தும்முன் அவர்கள் மக்களை ஒருகுறிப்பிட்ட வகையில் வரையறை செய்கிறார்கள் என்பதுதான். முஸ்லிம்கள் யார், இந்துக்கள் யார் என்பதையெல்லாம் வரையறுத்து, அதனடிப்படையிலேயே வெள்ளையர்கள் தம் காய்நகர்த்தல்களை முன்னெடுத்திருக்கிறார்கள். ஆகவே, இங்கு ‘பிரித்தாள்வது’ (Divide & Rule) என்பதை மற்றொரு வகையில் ‘வரையறுப்பதன் மூலம் ஆள்வது’ (Define & Rule) என்றும் சொல்லலாம். பின்னதின் பெயரில் ஒரு குறுநூலை மஹ்மூது மம்தானி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
2014ல் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், அவர்களின் ஆட்சியானது 1200 ஆண்டுகால அடிமைத்தனம் (குலாமி) என்று முழங்கினார். அவர் நேரடியாக இஸ்லாம், முஸ்லிம்கள் என்றெல்லாம் குறிப்பிடவில்லை என்றாலும், முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக் காலத்தையே அவர் அவ்வாறு சூசகமாகக் குறிப்பிட்டார் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. இதை வெறுமனே மோடியின் கருத்தாக நாம் சுருக்கிப் பார்க்க முடியாது. முஸ்லிம்களை எதிர்முனையில் நிறுத்தும் நோக்கில் இப்படி வரலாற்றை அணுகும் போக்கு இப்போது உருவானதல்ல. இதற்கொரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. மேற்குறிப்பிட்ட வில்லியம் வாட்ஸ் போன்ற ஓரியண்டலிஸ்டுகளுக்கு இப்படியான கருத்துருவாக்கத்தில் பெரும் பங்கிருக்கிறது.
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் ராஜாராம் மோகன் ராய் முஸ்லிம்களை அந்நியர்கள் என்றே சொல்வார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவர் பிரிட்டிஷ் ஆட்சியை உற்சாகத்துடன் ஆதரித்தார். முஸ்லிம் மன்னர்களிடமிருந்து இந்துக்களை பிரிட்டிஷார் மீட்டார்கள் என்றுகூட அவர் சொன்னார். காலனித்துவத்தை ஆதரிப்பது தேசத் துரோகம் என்று இன்றைக்குச் சொல்வோர், அந்த அளவுகோலின்படி ராஜாராம் மோகன் ராயையும் தேசத் துரோகி என்றே சொல்லவேண்டியிருக்கும் அல்லவா?
இதேபோன்ற வரலாற்று நோக்கை இந்திய மானுடவியல் துறை அறிஞர்களிடமும் பரவலாகக் காண முடியும். மராத்திய பிராமணரான இராவதி கார்வே முதல் பெண் மானுடவியலாளராக அறியப்படுபவர். அவரிடமும் இதே துறைசார் அறிஞர்களான ஷ்யாமா சரண் துபே, யோகேந்திர சிங் தொடங்கி பிரஞ்சு அறிஞர் லேவி ஸ்ட்ராஸ் வரை பலரிடமும் இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்து மேற்குறிப்பிட்டது போன்ற சித்திரமே வெளிப்படுகிறது.
இந்து ஓரியண்டலிசமும் ஆதிவாசிகளும்
முஸ்லிம்களை அணுகும் விதத்துக்கு முரணாக இந்து ஓரியண்டலிசம் ஆதிவாசிகளை அணுகியது. முஸ்லிம்களை அந்நியர் என்று வரையறுத்த அதேவேளை ஆதிவாசிகளை பூர்வகுடிகள் என்று வரையறுத்தது. மேலும், உயர் சாதியினர் தங்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பெருமிதத்துடன் கோரலாயினர். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியப் படையெடுப்பு மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது எனும் வரலாற்றுக் குறிப்புகளை நீங்கள் படித்திருக்கக்கூடும்.
ஜெர்மன் ஓரியண்டலிஸ்டாகவும் இந்தியவியலைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராகவும் அறியப்படும் மாக்ஸ் முல்லர் 19ம் நூற்றாண்டில் ஆரிய இனம் எனும் கருதுகோளை முன்வைத்ததும் அதை உயர் சாதி இந்துக்கள் வரித்துக்கொண்டதும் இங்கே நினைவுகூரத்தக்கது. அதீத பிரிட்டிஷ் மோகம் கொண்ட எழுத்தாளரும் இஸ்லாம் வெறுப்பாளருமான நீரத் சி. சவுத்ரியும் பாலகங்காதர திலகர் போன்ற சாதி இந்துக்களும் தங்களை ஆரியர் என்றே கோரினர். எங்கள் உண்மையான தாய் நிலம் தெற்கு ரஷ்யா என்றுகூட நீரத் சவுத்ரி கூறினார்.
ஆனால் இப்போது நடப்பது என்னவெனில், இந்த விஷயங்களையெல்லாம் தலைகீழாகக் கவிழ்க்க இந்துத்துவ அறிவுஜீவி வட்டாரங்கள் முயற்சிக்கின்றன. அதாவது, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகளே என்று அவை வாதிட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ், பாஜக தரப்பினர் ஆதிவாசிகளை வனவாசி என்று கூறுகின்றனர். ஏனெனில், ஆதிவாசி எனும் பதம் அதனளவிலேயே ஆதிக் குடிகள் எனும் அர்த்தம் தருவதால், வனத்தில் வசிப்பவர்கள் என்று அர்த்தம் தரும் வனவாசி என்பதையே அவர்கள் விரும்பிப் பிரயோகிக்கின்றனர்.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு பட்டியல் சமூகத்தினர் இந்துக்களா, இல்லையா என்பது குறித்த பெரிய விவாதமெல்லாம் நடந்தது. ஆனால் இப்போது தலித்களும், ஆதிவாசிகளும் இந்துக்கள் என்றே கணக்கிலெடுக்கப்படுவதை நாம் அறிவோம். முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிட்டிஷாரால் 1871ல் எடுக்கப்பட்டபோதும், அதைத் தொடர்ந்து 1911 வரையிலும் ஆதிவாசிகள் ஆதி மதத்தினர் (Primitive Religion) என்றே தனியாக வகைப்படுத்தப்பட்டார்கள். 1921 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அந்தச் சொல்லாடலுக்குப் பதிலீடாக பழங்குடி மதம் (Tribal Religion) என்று குறிப்பிடப்பட்டது. இதுவே 1941 வரையிலும் தொடர்ந்தது. ஆனால், இந்தியா சுதந்திரமடைந்து முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1951ல் நடந்தபோது ஆதிவாசிகள் தனியாக வகைப்படுத்தப்படாமல் இந்துக்கள் எனும் பெருந்தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.
ஆதிவாசிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட பல்வேறு மானுடவியலாளர்களும் சமய அறிஞர்களும் அவர்களை இந்துக்கள் இல்லையென்றும், Animism, Naturism போன்ற சொல்லாக்கங்களால் அவர்களின் மதத்தைக் குறிக்க முடியும் என்றும் கூறுவர். கடைசியாக நடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆதிவாசிகள் சுமார் 8 சதவீதத்துக்கு மேல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியச் சமூவியல்/ மானுடவியலின் தந்தை என அறியப்படும் ஜி.எஸ். குரியே நாடு சுதந்திரமடைவதற்கு சற்று முன்னர், 1943ல் The Aborigines -“So-called” – and Their Future என்றொரு புத்தகத்தை எழுதினார். அதில் பழங்குடிகளை “பின்தங்கிய இந்துக்கள்” என்று குறிப்பிட்டார். ஓரியண்டலிஸ்டுகள் நாகரிகமானவர்கள் எதிர் நாகரிகமற்றவர்கள், பின்தங்கியவர்கள் எதிர் முன்னேறியவர்கள் என்று இருமைகளைக் கட்டமைப்பது போன்றதுதான் இவ்வாறு அவர்களைச் சுட்டுவதும். அவர்களின் வாழ்க்கைமுறை பின்தங்கியுள்ளதாகச் சொல்வதன் பொருள் அவர்கள் முன்னேறவேண்டியுள்ளது என்பதுதான்.
அந்த முன்னேற்றம் எப்படியிருக்கவேண்டும் என்பது அடுத்து எழும் வினா. குரியே, டி.என். மஜும்தார், நிர்மல் குமார் போஸ் முதலான மானுடவியலாளர்கள் பழங்குடிகளை இந்திய மையநீரோட்டத்தில் கலக்கவேண்டும் என்று வாதிட்டனர். இந்திய மையநீரோட்டமென்று இவர்கள் குறிப்பிடுவது இந்துத்தன்மையிலானது. பழங்குடிகளின் பண்பாட்டை பொதுநீரோட்டத்துடன் கரையச்செய்வதை ”Integration” (ஒருங்கிணைப்பு) என்ற மென்மையான வார்த்தையால் நியாயப்படுத்தினார் நேரு.
பண்பாட்டு ரீதியில் ஆதிவாசிகளை இந்துமயப்படுத்தும் முயற்சி தொடர்ச்சியாக நடந்துவந்துள்ளது. உதாரணத்துக்கு, ஒடிசாவிலுள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் (KISS) ஆதிவாசிகளைக் கல்வியூட்டுவதாகவும் முன்னேற்றுவதாகவும் சொல்லிக்கொண்டு அவர்களை இந்துமயப்படுத்துகிறது. தங்கும் வசதியுள்ள இந்த நிறுவனத்தில் 30,000க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதை நிறுவியவர் அச்சுத சமந்தா எனும் ஓர் இந்து அரசியல்வாதியாவார். ஆதிவாசிகளை இந்துமயப்படுத்த சில தந்திரங்களை இந்நிறுவனம் கையாள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, தீபாவளியை ஆதிவாசிகள் கொண்டாடுவதில்லை; ஆனால், இங்கு அது அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேபோல், கல்விக் கடவுள் எனச் சொல்லப்படும் சரஸ்வதி தேவி பழங்குடிகளின் பண்பாட்டு மரபில் கடவுளாகவே கருதப்படவில்லை. ஆனால், இங்கு சரஸ்வதியை வணங்கும் வழக்கம் கொண்டுவரப்படுகிறது. இப்படித்தான் இந்துமயப்படுத்துதல் அரங்கேறுகிறது.
பழங்குடிகளுக்குச் சொந்தமான மொழிகள் பல இருக்கின்றன. அவையெல்லாம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன என்பது குறித்து ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.
ஆர்எஸ்எஸ் நீண்ட காலமாக இந்த மக்களிடம் வேலை செய்துகொண்டிருக்கிறது. வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பையும் அது வைத்திருக்கிறது. விளைவாக, பல ஆதிவாசிகள் இந்துதத்துவர்களாக ஆவதுடன், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான திட்டமிடப்பட்ட வன்முறைகளிலும் அவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள்.
இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள்
இலக்கியம், சினிமா, வெளியுறவுக்கொள்கை, அரசியல் முதலான எல்லாக் களங்களிலும் இந்து ஓரியண்டலிசம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இங்கே ஒவ்வொன்றாக கழுகுப் பார்வையில் நோக்குவோம்.
1. காங்கிரஸ்காரரும் இந்தி எழுத்தாளருமான பச்சன் ஷர்மா உக்ரா (பி.1900) தன்பாலினச் சேர்க்கையை ஒழுக்கக்கேடானது என்று எதிர்த்தார். அது இந்திய மக்களின் பழக்கம் கிடையாது என்று வாதிட்ட அவர், நாட்டுக்கு வெளியிலிருந்து முஸ்லிம்களால் அது கொண்டுவரப்பட்டது என்றார். உருதுக் கவிதைகளை அவரின் வாதத்துக்குத் துணையாக மேற்கோள் காட்டினார்.
இதேபோல், இந்து ஓரியண்டலிசத்தின் சில கூறுகள் வெளிப்படும் இலக்கியப் படைப்பாக அரவிந்த் அடிகாவின் புக்கர் பரிசுபெற்ற The White Tiger (2008) நாவலைச் சொல்லலாம். அது சமீபத்தில் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. மேலும், மேகா மஜும்தாரின் A Burning (2020) நாவலையும் இந்த வரிசையில் குறிப்பிடுதல் தகும்.
2. சினிமாவைப் பொறுத்தவரை, 90களுக்குப் பிறகு திரைப்படங்களில் முஸ்லிம் கதாப்பாத்திரத்தை வில்லனாகச் சித்தரிக்கும் சூழல் அதிகமாக நிலவியபோதிலும், அதற்கெல்லாம் முன்பே முஸ்லிம்களை மற்றமையாக்கும் பல படங்கள் வந்துள்ளன. முஸ்லிம்களை தீவிரவாதியாகவும் விலை மாதுவாகவும் சில இயக்குநர்கள் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.
மற்றொரு குறிப்பிடத்த அம்சம், இந்தியத் திரைப்பட ஆய்வுத்துறையில் ”Muslim social” படங்கள் எனும் பிரிவு இருக்கிறது. அதில் முஸ்லிம் சமூகம், பண்பாடு சார்ந்த படங்கள் வகைப்படுத்தப்படுகின்றன (முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சித்திரத்தைத் தரும் பல படங்கள் அதில் குவிந்துள்ளன என்பது தனிக்கதை). இங்கு கவனிக்கவேண்டியது ”Hindu social” என்று திரைப்படங்கள் வகைப்படுத்தப்படவில்லை என்பது. தர்க்க ரீதியில் பார்த்தால் அவ்வாறு ஒரு வகைப்பாடு இருந்திருக்கவேண்டும் அல்லவா? ஏன் இல்லை? ஏனெனில், அவையெல்லாம் இந்த தேசிய மையநீரோட்டத்தில் இயைந்ததாகவும் முஸ்லிம்கள் தொடர்பான படங்கள் அதிலிருந்து வேறுபட்டவையாகவும் கணக்கிலெடுக்கப்படுகின்றன.
3. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு தேச அரசுகள் தங்களை ஒரு நாகரிக அரசுகளாகவும் (Civilizational State) முன்னிறுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சாமுவேல் பி. ஹண்டிங்டனின் நாகரிகங்களின் மோதல் புத்தகம் வெளிவந்த பிறகே இந்தப் போக்கு மேலோங்கியது. தாய்லாந்து, இந்தோனேஷியா (குறிப்பாக பாலி) போன்ற நாடுகளில் இந்துக் கலாச்சார தாக்கம் இருப்பதால், இதுபோன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்துப் பண்பாட்டை ஏற்றுமதி செய்வதன் மூலம் வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு புது அடித்தளம் உருவாகும் என்று கருதப்படுகிறது.
4. குடியுரிமைச் சட்டம், கும்பல் படுகொலைகள், கஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம், லவ் ஜிஹாத் சட்டம் என்று பல தளங்களிலும் இந்தியாவில் இந்து ஓரியண்டலிசத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.
5. நீதித்துறையில் அதன் வெளிப்பாட்டுக்கு பாபர் மஸ்ஜித் தீர்ப்பு ஒரு வலுவான உதாரணம். அதேபோல், சமீபத்தில்கூட இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் கலப்புத் திருமணம் குறித்த தீர்ப்பில் முஸ்லிம்களைக் கடுமையாகச் சாடியிருந்தது.
6. காட்சி, ஒலி ரீதியில்கூட இந்து ஓரியண்டலிசம் எவ்வாறு தலையீட்டை நிகழ்த்துகிறது என்பதும் கவனிக்கவேண்டிய அம்சமாகும். டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தரப் பிரதேச அரசு சார்பாக அயோத்தி ராமர் கோவில்போல வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஒன்று மைதானத்தில் உலா வந்தது. ஊடகங்களெல்லாம் அதன் பக்கம் வெகுவாக கவனம் ஈர்த்தன. அந்த ஊர்திக்கு அரசு முதல் பரிசை வழங்கி கவுரவித்தது.
அதேபோல், இந்து ஓரியண்டலிசத்தின் ஒலி சார்ந்த தலையீட்டினை இங்கு தொழுகை அழைப்புக்குத் தடை கோரப்படுவதன் வாயிலாக உணர முடியும். அதற்குச் சொல்லப்படும் ஒலி மாசு எனும் காரணம் இந்துக் கீர்த்தனைகள் பாடப்படுவதற்கு ஏன் சொல்லப்படுவதில்லை என்று இங்கு கேள்வி எழுகின்றது. எவற்றுக்கெல்லாம் இங்கு பொது ஏற்பு கிடைக்கிறது, எவை பிரச்னைக்குரியதாய் கருதப்படுகின்றன என்பதிலுள்ள அரசியல் சிந்திக்கத் தக்கது.
இந்து ஓரியண்டலிசமும் இஸ்லாமோ ஃபோபியாவும்
இந்து ஓரியண்டலிசமும் இஸ்லாமோ ஃபோபியாவும் இணையும் புள்ளியை விவரிக்க சில உதாரணங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
1. ’இந்துத் தாலிபான்கள்’ எனும் சொல்லாடலை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் (2018 பிப்ரவரியில் காலச்சுவடு இதழ்கூட பெரும்பான்மை தாலிபானியம் என்று குறிப்பிட்டு தலையங்கம் எழுதியிருந்தது). இந்துக்களிடையே சகிப்பின்மை வெளிப்படும்போது அதில் தொடர்புடையவர்கள் இந்துத் தாலிபான்கள் எனக் குறிப்பிடப்படுகிறார்கள். அவ்வாறு சொல்வோருக்கு சில முன்னெண்ணங்கள் உள்ளன. இந்து மதம் பழமையானது, தாராளத்தன்மையுள்ளது, இஸ்லாம் அதனளவிலேயே சகிப்புத்தன்மையற்றது என்ற மனச்சாய்வுள்ள இவர்கள், இந்துக்கள் எனப்படுவோரிடமிருந்து எதிர்மறையான விஷயங்கள் வெளிப்பட்டாலும் சுயவிசாரணையின்றி அதையும் இஸ்லாம், முஸ்லிம்கள் சார்ந்த குறியீடுகளோடு தொடர்புபடுத்த எத்தனிக்கின்றனர்.
2. கொரோனா ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை மேலெழுந்தபோது, மோடி அரசின் கொள்கை முடிவை விமர்சித்த காங்கிரஸ் கட்சி, அதை ’துக்ளகி ஃபர்மான்’ என்றது. தான்தோன்றித்தனமாக விடுக்கப்படும் ஆணைகளை இச்சொல் குறிக்கும். முஸ்லிம் மன்னர்களை இப்படி உதாரணமே காட்டக்கூடாது என்பதல்ல; மாறாக, அவர்களைத் தவிர இதற்கு முன்பு இந்திய நிலப்பரப்பை ஆட்சிசெய்த எந்த மன்னரையும் முன்னுதாரணம் காட்ட முடியாதா என்பதே கேள்வி.
3. ராகுல் காந்தியைக் குறித்து மோடி பேசுகையில் ’ஷேஹ்ஸாதா’ என்று சுட்டினார். இளவரசன் எனும் பொருள்படும் அந்தச் சொல்லுக்குப் பதிலாக யுவராஜ் என்பதை அவர் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், வேண்டுமென்றே ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தும் நோக்கில் அவ்வாறு கூறினார் மோடி.
4. பிரஞ்சு அரசியல் அறிவியலாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரிலோவின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மோடி ஆட்சியை ’சுல்தானிச ஆட்சி’ என்கிறார். மோடி அதிகாரத்தைக் குவிப்பது, தன்னிச்சையாகச் செயல்படுவது போன்றவற்றைச் சுட்ட அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். ஜெர்மன் சமூகவியலாளர் மாக்ஸ் வெபர், சிந்திக்காமல் செயல்படும் முறையைக் குறிக்க இதே சொல்லைக் கையாண்டுள்ளார். ஓரியண்டலிஸ்டான இவர், இஸ்லாம், முஸ்லிம்களைத் தாண்டி இந்து மரபு உள்ளிட்ட பல விஷயங்களை எழுதியுள்ளார். ஓர் ஆய்வாளர் என்ற வகையில் ஜாஃப்ரில்லோவுக்கு இவரைத் தெரிந்திருக்கும். அவர் தெரிந்தோ தெரியாமலோ இந்த ’சுல்தானிச’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அன்றாட வாழ்வின் யதார்த்தமாக இந்து ஓரியண்டலிசம்
கருத்துத் தளத்தைத் தாண்டி அன்றாட வாழ்வின் யதார்த்தமாகவும் இந்து ஓரியண்டலிசம் உள்ளது. உணவுப் பண்பாட்டை எடுத்துக்கொண்டால், சமஸ்கிருதத்தில் சாத்விக உணவு என்றும் சாத்விக அல்லாத உணவு என்றும் சொல்லப்படுவதுண்டு. இதே பொறிமுறைதான் இன்றைக்கு Veg எதிர் Non-Veg என்பதிலும் இயங்குகிறது. Meat எதிர் Non-Meat, Rice vs Non-Rice என்றும் அதை வகைப்படுத்தலாம், அல்லவா? ஆனால் ஏன் ஒரே மாதிரியான வகைப்பாடு நடைமுறையில் உள்ளது? முன்கூறிய எதிர்மைக்கு ஒரு கருத்தியல், மத அடித்தளம் உள்ளதுதான் அதற்குக் காரணம். அதுவே பொது ஏற்பைப்பெற்று மிக இயல்பான ஒன்றாக ஆகியுள்ளது.
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கின்ற பகுதிகளை Muslim ’dominated’ areas என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், Hindu ‘dominated’ எனும் சொல்லாக்கத்தை கேள்விப்படுவது அரிது. சமீபத்தில், புகழ்பெற்ற தி கார்டியன் இதழ்கூட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தை முஸ்லிம் பெரும்பான்மைப் பல்கலைக்கழகம் என்று எழுதியிருந்தது. இதே அளவுகோலில் பார்த்தால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தையும் இந்துப் பெரும்பான்மை பல்கலைக்கழகம் என்று சொல்லவேண்டியிருக்கும், அல்லவா? பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைக்கூட கார்டியன் இதழ் இவ்வாறு அழைக்குமா என்பது கேள்விக்குறிதான். இங்கு விஷயம் என்னவென்றால், எது இயல்பாக்கம் பெற்றுள்ளது? பொதுநீரோட்டத்துடன் இயைந்த ஒன்றாக எது பார்க்கப்படுகிறது? எது அதற்கெல்லாம் வெளியே நிறுத்தப்படுகிறது என்பதுதான்.
லோக்னிதி – CSDS மேற்கொண்ட ஆய்வில் 50 சதவீத போலீஸ் அதிகாரிகள் முஸ்லிம்களை இயல்பாகவே குற்றத்தில் ஈடுபடுவதற்கான நாட்டம் கொண்டவர்களாகக் கருதுகிறார்கள் என்பது தெரியவந்தது. மற்றமையாக முஸ்லிம்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இப்படி இந்து ஓரியண்டலிசமானது இச்சமூகத்தின் அடித்தளமாகவும் இயக்கவிசையாகவும் பல காலமாகச் செயல்பட்டு, எல்லா மட்டங்களிலும் அது நீக்கமற ஊடுபாவியிருக்கிறது. லிபரல், முற்போக்குத் தளங்களிலும்கூட அதன் இருப்பையும் வெளிப்பாட்டையும் நாம் காணலாம். அதைச் சரியாக இனங்காணும்போது மட்டுமே தற்போது நிலவும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும்.
மூலம்: Faces of Hindu Orientalism