கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபிக்க முடியுமா?

Loading

அறிவியல் சொல்வது மட்டுமே உண்மை என்று நம்புவது அறிவியல்வாதம் எனப்படுகிறது. இன்று நாத்திகர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ குருட்டுத்தனமாக இந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் எழுப்பும் அபத்தமான கேள்விகளுள் ஒன்று, இறைவன் இருக்கின்றான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்பது.

சில காலங்களுக்கு முன்புவரை யாரும் இறைவனின் இருப்பிற்கு அறிவியல் ஆதாரம் கோரியதில்லை. இப்படியான கேள்விகள் எழ முதல் காரணம், அறிவியல் பற்றிய புரிதலும், இறைவன் பற்றிய சரியான புரிதலும் இல்லாததே.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியலை எல்லாவற்றுக்கும் அளவுகோலாய்க் கருதுவோரிடம் அறிவியல் என்றால் என்னவென்று கேட்டால் அவர்கள் நிச்சயம் திணறிப்போய்விடுவார்கள். விஞ்ஞானிகள் எதைச் சொல்கிறார்களோ அதை அறிவியல் உண்மை என்று குருட்டுத்தனமாக ஏற்கும் அவர்கள், விஞ்ஞானி சொல்வது உண்மைதானா, அவர் ஏன் இவ்வாறு சொல்கிறார் என ஆராய்வதில்லை. சொல்லப்போனால், அவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பதுகூட இல்லை என்பதே உண்மை.

நம்மில் பலருக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் இவையெல்லாம்தான் அறிவியல் என்று தோன்றும். ஆம், இவையெல்லாம் அறிவியல் பாடங்களே. ஆனால், நாம் ஏன் இவற்றை மட்டும் அறிவியல் என்கிறோம்? மற்ற பாடங்களையும் மற்ற துறைகளையும் ஏன் அறிவியல் என அழைப்பதில்லை? இத்துறைகளிடம் உள்ள எந்தத் தன்மை இவற்றை அறிவியல் என்று அடையாளப்படுத்துகிறது?

அறிவியல்முறையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில முறைகளைக் கொண்டு அவதானித்து (Observe), அதில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு ஒரு கோட்பாடு முன்வைக்கப்படும். அந்தக் கோட்பாடு மூலம் எதிர்கால விளைவுகள் கணிக்கப்படும். உதாரணமாக, வானத்தைத் தொலைநோக்கியால் பார்க்கும்போது சில நட்சத்திரங்கள் விலகிச் செல்வதாகத் தெரிந்தது. இதை Red Shift என்பார்கள். இந்த அவதானத்தை அடிப்படையாகக் கொண்டு, மொத்த பிரபஞ்சமும் ஒரு கட்டத்தில் ஒரே புள்ளியில் இருந்திருக்கவேண்டும் என்றும், பிறகு அது வெடித்திருக்கவேண்டும் என்றும் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். அதுவே பெருவெடிப்புக் கொள்கை எனப்படுகிறது.

இதற்கு முன்பு Steady State Theory என்ற ஒன்று இருந்தது. ஆனால், அந்தக் கோட்பாட்டினால் சில வானியல் நிகழ்வுகளை விளக்க முடியாத காரணத்தால் அதைக் குப்பையில் எரிந்துவிட்டு பெருவெடிப்புக் கொள்கையை அறிவியலாளர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அறிவியல்வாதத்தை ஏன் குருட்டு நம்பிக்கை என்கிறோம்?

மேற்சொன்னதுபோன்று அவதானிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வுத் துறையை அறிவியல் எனக் கருதலாம். அறிவியலால் புலன்களுக்கு அப்பாற்பட்ட எதைப் பற்றியும் பேச முடியாது. அவ்வாறிருக்க அறிவியல் சொல்வது மட்டும்தான் உண்மை என்பது அறிவீனம்.

அறிவியலின் போதாமைகள்

1. இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதற்கு அறிவியல் ஆதாரம் கொடுக்க முடியாது.

2. அகநிலை உணர்வுகளை (First Person Subjective Experience) பற்றி அறிவியலால் பேச இயலாது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு லேசாக தலை வலிப்பதாகக் கொள்வோம். அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னாலே தவிர, உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுசேர்ந்தாலும், பல புது கருவிகளை உருவாக்கினாலும் கண்டுபிடிக்க இயலாது.

3. ஒழுக்கவியல் பற்றி அறிவியலால் பேச இயலாது. கொலை செய்வது தவறு என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்ன!

4. வரலாற்று நிகழ்வுகளையும் அறிவியலால் நிரூபிக்க இயலாது. உதாரணமாக, புகைப்படங்களும் காணொளிகளும் அறிவியல் ஆதாரங்கள் அல்ல; அதேபோல், வரலாற்றுக் குறிப்புகளும் அறிவியல் ஆதாரம் கிடையாது.

5. அறிவியல் ஆதாரமில்லாத எதுவும் உண்மையில்லை என்பதற்கு அறிவியல் ஆதாரம் கொடுக்க இயலாது. Logical Positivism என்ற ஓர் கருத்தாக்கம் 1900களில் இருந்தது. அறிவியல் சொல்வது மட்டுமே உண்மை என்பது அதன் கொள்கை. ஆனால், அந்தக் கொள்கை தன்னைத் தானே மறுக்கக் கூடியது (Self-Refuting) என்று நிரூபிக்கப்பட்ட பிறகு வீழ்ச்சியடைந்தது. [1]

இறைவன் யார்?

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தையும் இருப்பிலுள்ள அனைத்தையும் படைத்தவன். படைத்தவன் எப்போதும் படைக்கப்பட்ட பொருளுக்கு வெளியேதான் இருப்பான். ஒரு தச்சர் அவர் செய்யும் பலகையின் உள்ளே இருக்கமாட்டார். தச்சர் ரத்தம், சதையால் ஆனவர்; பலகையைப்போல மரத்தால் ஆனவர் அல்ல. இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், அந்தப் பலகைக்குள் இருக்கும் கரையான்கள், “தச்சன் என்று ஒருவன் இல்லவே இல்லை, நான் இந்தப் பலகை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன்” என்று சொன்னால் எப்படி இருக்குமோ அந்தக் கரையான்கள் போலத்தான் இந்த அறிவியல்வாத நாத்திகர்களும்.

மேற்கூறிய ஒப்புமையில், தச்சன் சதையால் ஆனவன், பலகை மரதால் ஆனது என்று கூறியுள்ளேன். எல்லா மதங்களும், இயற்கை இறையியலும் கடவுளை Immaterial Being என்றே குறிப்பிடுகின்றன. அதாவது, இறைவன் பருப்பொருட்களால் ஆனவன் கிடையாது என்கின்றன.

நீங்கள் இவ்வாறு கேட்கலாம், ஒருவர் வீடு கட்டியதால் அவர் அந்த வீட்டுக்குள் இருக்க முடியாதா என்று. சொல்லப்பட்ட கருத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவே மேற்கூறிய ஒப்புமை. எனினும் இந்தக் கேள்விக்கான மறுமொழி இதுதான்: வீடு கட்டியவர் வீட்டின் சுவருக்குள் இருக்க முடியாது, வீடு கட்டியவரை வீட்டின் சுவருக்குள் தேடுவது மடமை. ராக்கெட் செய்தவரை ராக்கெட் என்ஜின் உள்ளே தேடுவதும் அப்படியானதே.

ஆக, படைத்தவர் படைக்கப்பட்ட பொருளின் உள்ளே இருக்க இயலாது. அனைத்தையும் படைத்த இறைவன் அந்தப் படைப்புகளுக்கு வெளியே இருப்பவன். வெளியையும் (space) காலத்தையும் (time) கூட அவனே படைத்தான். எனவே, அவன் வெளிக்கு (space) அப்பால் இருப்பதால் இன்ன இடத்தில் அவன் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. [2]

நம் புலன்களால் நேரடியாக அறியக்கூடியவை பற்றித்தான் அறிவியலால் நேரடியாகப் பேச முடியும். மற்றவை அனைத்தும் கருதுகோள்களாகவே இருக்கும். நம் புலன்களை எவ்வளவு தொலைவுக்கு நாம் கொண்டு சென்றாலும் நம்மால் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்ல முடியாது. ஏனெனில், நம் புலன்களால் எட்டக்கூடியவை எல்லாம் பிரபஞ்சத்தின் எல்லைக் கோட்டுக்குள் வந்துவிடும். எனவே, நம் புலன்களால் எட்ட முடியாத பரிமாணத்திலுள்ள இறைவனை அறிவியலால் தொட இயலாது. இறைவனுக்கு அறிவியல் அத்தாட்சி கேட்பது ஓர் அபத்தமே அன்றி வேறில்லை!

அடிக்குறிப்புகள்:

[1] Logical Positivism பற்றி சற்று விரிவாக வாசிக்க பின்வரும் ஆக்கங்களைப் படிக்கலாம்.
(i) The rise and fall of logical positivism
(ii) Logical positivism
(iii) The philosophical weakness of logical positivism

[2] வெளி, காலம் என்றெல்லாம் எதுவும் கிடையாது என ஒரு மெய்யியல் கருத்து உண்டு. அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

மேலதிக வாசிப்புக்கு:

1. Philosophy Of Science, a very short Introduction – Samir Okasha

2. Understanding Philosophy Of Science – James Ladyman

3. What is Science – Sundar Sarukkai.

4. Science Unlimited, The Challenges of Scientism

Related posts

One Thought to “இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபிக்க முடியுமா?”

Leave a Comment