‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?
முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.
கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற ஒரு சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.
ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்தது (Apostate) ஆகக் காரணமென்ன?
நூலாசிரியர் முர்ததுகளின் வாழ்வைப் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்:
- முர்தது ஆவதற்கு முன்பு
- முர்தது ஆகும் தருணம்
- முர்தது ஆனதற்குப் பிறகு
ஒருவர் இஸ்லாத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டுமெனில், அவர் முர்தது ஆவதற்கு முந்தைய வாழ்வின் இறுதிப் பகுதியையும், முர்தது ஆகும் தருணத்தையும் கவனித்தால் போதும் என்று நினைக்கிறேன். அதேபோல், அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதற்கு அவர்களிடம் எழும் ஐயங்கள் (Doubts), உணர்வெழுச்சி (Emotions) ஆகிய இரு காரணங்களை சைமன் குறிப்பிடுகிறார். அவற்றில் அறிவுசார் ஐயங்களைவிடவும், உணர்வுகள் சார்ந்த விஷயங்கள் பிரதான காரணமாக இருக்கக்கூடும். நூலாசிரியரும் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் வேறு விதத்தில் அதைத்தான் சுட்டிக்காட்டுவதாகக் கருத முடிகிறது. இறுதியாக அதுகுறித்துப் பார்ப்போம்.
ஐயங்களின் மூன்று வகைகள்
- அறிதல்முறையிலிருந்து எழும் சந்தேகங்கள் (Epistemological)
- அறவிழுமியங்கள்சார் ஐயங்கள்
- வாழ்க்கை நடைமுறை சார்ந்த சந்தேகங்கள்
இறைவன் உள்ளானா, இறைவனின் இருப்பிற்கான சான்றுதான் என்ன, பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு குர்ஆனையும் இறைவனையும் பொய்யாக்குகிறதே, ஏன் மனிதர்கள் துயரை எதிர்கொள்கிறார்கள் போன்ற கேள்விகள் தொட்டு, விதி vs சுயாதீன சித்தம் (Free will) குறித்த கேள்விகள் வரை முர்ததுகளிடமுள்ள அறிதல்முறை சார்ந்த சந்தேகங்களாகக் குறிப்பிடலாம்.
ஏன் முஸ்லிம் பெண்கள் மட்டும் பர்தா அணியவேண்டும், முஸ்லிமல்லாதோர் ஏன் நரகத்துக்குச் செல்ல வேண்டும், நபிகளார் ஏன் பலதார மணம் புரிந்தார், பெண்கள் மட்டும் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்டிருக்கக் கூடாது முதலான கேள்விகளையும், தாராளவாத மதிப்பீடுகளுக்கு முரணாக இஸ்லாம் இருக்கிறதே என்ற ஐயம் போன்றவற்றையும் அறவிழுமியங்கள் சார்ந்த ஐயங்களுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அதேபோல், இஸ்லாம் தற்காலத்துக்குப் பொருந்தாது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் உருப்பெற்ற ஐயங்களை வாழ்க்கை நடைமுறை சார்ந்த சந்தேகங்கள் எனலாம்.
ஐயங்களுக்கு வித்திடும் காரணிகள் என்னென்ன?
1. தனிப்பட்ட அனுபவங்கள்
மன அழுத்தம், துயரம், கசப்பான அனுபவம், அறிதிறன் முரண்பாடு (Cognitive Dissonance) முதலானவை ஒருவர் இஸ்லாத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள வழியமைத்துக் கொடுக்கின்றன.
உதாரணமாக, திருமணத்துக்கு அப்பாலான உறவுகள் அல்லது ஓரினச் சேர்க்கை வழக்கம் இருக்கும் ஒருவருக்கு, அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதால் அவருக்கு அது மன அழுத்தத்தையும் குற்றவுணர்வையும் கொடுக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் அதற்கான இஸ்லாமியத் தீர்வை அறியாத நிலையில், அதைத் தன்னளவிலேயே நெறிப்படுத்திக்கொள்வது அல்லது அதற்கான வழிமுறைகளைத் தேடுவது என்பதற்குப் பதிலாக இஸ்லாத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு ஆளாகிறார். The Apostates நூலில் இரு முன்னாள் முஸ்லிம்களின் பதிவுகள் இந்த வகையில் அமைந்திருக்கின்றன.
2. எதிர்மறையான சூழ்நிலைகளை எதிர்கொள்வது
எதிர்பாராத விதமாக இஸ்லாத்திற்கு மாற்றமான அல்லது எதிரான கருத்தாக்கங்களை, உலகநோக்கை எதிர்கொள்வது ஐயங்கள் உருவாகப் பிரதான காரணமாய் விளங்குகிறது. உதாரணத்துக்கு, பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பாடப் புத்தகங்களில் வருகிறதென்றால், சாமானியர்களுக்கு அதை சட்டென்று எதிர்கொள்ள இயலாத நிலை ஏற்படலாம். புதிய சூழ்நிலைகள் / மனிதர்கள் வழியாக தம்மிடம் உருவாகும் இப்படியான சந்தேகங்களுக்கும், தங்களுக்குள்ளேயே உதிக்கும் கேள்விகளுக்கும் விடைகாண தங்களால் இயலவில்லை என்றால், ஒரு கட்டத்தில் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
3. ஆன்மிகத்திலிருந்து அந்நியமாதல்
இறைவனாலும் மற்றனைவராலும் கைவிடப்பட்டது போல் உணர்வது அல்லது எண்ணிக்கொள்வது. இது மேலே கூறப்பட்ட காரணங்களின் விளைவுதான் என்றாலும், பிறகு தனியொரு வலுவான காரணியாக உருவெடுக்கிறது.
4. அரசியல் நிகழ்வுகள்
9/11 இரட்டை கோபுரத் தாக்குதல், அதன் விளைவாக ஏற்படும் சமூக – தனிமனித சிக்கல்கள், இஸ்லாமிய / முஸ்லிம் வெறுப்பு, கசப்பான அனுபவங்கள், உள நெருக்கடிகள் ஆகியவையும் சில காரணங்கள்.
5. ஐயங்களைக் களையும் முயற்சியில் தோல்வியடைதல்
தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்க்க இணையதளத்தை அணுகும்போது அவர்களுக்கு ஐயங்கள் பெருக அது காரணமாக அமைந்துவிடுகிறது. சில ஆலிம்களும் பெற்றோரும் திருப்திகரமான விளக்கங்கள் அளிக்கத் தவறுவது ஐயங்களை வலுப்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் சென்றடைந்த தவறான நிலைப்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ள, எந்த இஸ்லாமிய எதிர்ப்பு இணையதளங்கள் அல்லது நூல்களிலிருந்து அவர்களுக்குச் சந்தேகங்கள் எழுந்தனவோ அவற்றிடமே தஞ்சமடையும் நிலை ஏற்படுகிறது.
சில சமயங்களில் குர்ஆனை தாமாகப் படித்துப் புரிந்துகொள்ள முனைவதும் அவர்களிடையே பல கேள்விகளை எழுப்புகிறது. காரணம், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் கொள்கைகளின் முன்முடிவுகள், கற்பிதங்களால் குறுகிய பார்வையையும் மனப்பான்மையையும் கொண்டுள்ள அவர்களுக்கு குர்ஆனின் கருத்துகளை எப்படி உள்வாங்க முடியும்? கிண்ணத்திலுள்ள கலப்படமான நீரை அப்புறப்படுத்தாமல் சுத்தமான நீரைக் கொண்டு அதை நிரப்ப முடியுமா?
“…நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்…” (குர்ஆன் 35:08)
மேற்கூறிய காரணிகளைத் தாண்டி, ஆய்வில் பங்கேற்ற பலர் றமளான் மாதத்தில் முர்தது ஆனதாகக் குறிப்பிட்டிருந்தனர். றமளான் மாதம் நம் இருப்பின் யதார்த்தத்தை உணர்த்துவதாக, நம்முடைய பலவீனங்களையும், நாம் எப்போதும் இறைவனையும் இறைவனின் மற்ற படைப்புகளையும் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. நாம் மற்றொன்றைச் சார்ந்திருக்கிறோம் என்பதையும், இறைவனுக்கு அடிபணிவதையும் இவர்களின் அகங்காரம் ஏற்க மறுக்கிறது. மேலும், ஒரு ’முனாபிக்’கால் (நயவஞ்கனால்) நோன்பு நோற்க முடியாது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிய மறுத்து தனிமனிதச் சுதந்திரத்தை அவர்கள் உயர்த்திப் பிடிப்பது அவர்கள் முர்தது ஆவதற்கான முக்கியக் காரணமாகக் கொள்ள முடியும். The Apostate நூலும் இக்கருத்தையே உறுதி செய்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள காரணிகள் சைமன் கோட்டீயின் ஆய்வில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டவை மட்டுமே. இவை தவிர மற்ற காரணங்களும் இஸ்லாத்தைக் கைவிடுவதற்குப் பங்களிக்க முடியும்.
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
1. முர்ததுகள் ஆதிக்கக் கருத்தியல்களைக் கேள்விக்குட்படுத்தாமலும், எவ்வித விமர்சனமுமில்லாமலும் ஏற்கின்றனர். இவ்வாறு தாங்கள் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டதை உரைகல்லாகக் கொண்டு இஸ்லாத்தை அணுகுகின்றனர்.
2. அறிவியல்வாதத்தை விமர்சனமின்றி தழுவிக்கொண்டு இறைவனின் இருப்புக்கு நம்மிடம் அறிவியல் ஆதாரம் கேட்கின்றனர்.
3. தாராளவாதத்தைக் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய அறவிழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.
4. சிலர் நேரடியாகவே தங்களுக்குக் கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை வேண்டும் என்று இஸ்லாத்திலிருந்து வெளியேறுகின்றனர். வேறு சிலரோ இஸ்லாம் உண்மையாக இருந்தாலும் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றுள்ளனர். சிலர் இஸ்லாம் உண்மையாக இருக்கவேண்டும் நாங்கள் அதை ஏற்று வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்று சொன்னாலும், அவர்களுக்கு உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும் தாராளவாதம், அறிவியல்வாதம் போன்ற மதங்களை எதிர்க்கத் தெரியவில்லை.
முன்னாள் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பகுத்தறிவு, விமர்சனப் பார்வை, கேள்விக்குட்படுத்துதல் ஆகியவை அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான ஆயுதங்கள் மட்டுமே; மற்ற கருத்தியல்களை அவற்றைக் கொண்டு அவர்கள் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள்!
நாம் அனைவரும் சிறு வயது முதலே கல்விக்கூடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை, சமூக ஊடகம், செய்தி ஊடகம் என அனைத்தின் வழியாகவும் இஸ்லாத்துக்கு மாற்றமான வாழ்க்கைமுறைகள் போற்றப்படுவதையும், இஸ்லாத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூற்றுவதையுமே பார்த்து வளர்ந்துள்ளோம். ஆகவே, இஸ்லாத்தை விமர்சிப்பது எளிது, ஆதிக்கக் கருதியல்களைக் கேள்விக்குட்படுத்துவது அவ்வளவு எளிதன்று.
நாம் என்ன செய்ய வேண்டும்?
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஏறத்தாழ ஒரே மாதிரியான சமூக அறவிழுமியங்கள் இருந்துள்ளன. அப்போது முஸ்லிம் சமூகத்தில் இன்று இருப்பது போன்று இஸ்லாமிய எதிர்ப்பு இருந்திருக்காது என்றே கருதுகிறேன். இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான காரியங்களில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றாலும், அதை ஒரு தனிமனித உரிமையாக எவரும் முன்வைத்திருக்க மட்டார்கள். இஸ்லாத்தை விட்டு சிலர் வெளியேறியிருக்கக்கூடும் என்றாலும், அதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துப் பிரச்சாரம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதுள்ள பிரச்சாரப் பரப்பு மதமான நவநாத்திகமும், வல்லரசுகள் திணிக்கும் தாராளவாதமுமே அதையெல்லாம் இயக்கமயமாக்கியிருக்கின்றன.
நாம் என்ன செய்ய வேண்டுமென்பது குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமுக்கு எதிரான பல்வேறு கருத்தாக்கங்கள், குறிப்பாக ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல்களிலுள்ள குறைகள், முரண்கள், போதாமைகள் ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வை முஸ்லிம்களுக்குப் படிப்படியாக சிறு வயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மட்டுமின்றி, மக்களிடையே பரவலாகக் காணப்படும் அறிவியல்வாதம், தாராளவாதம், மூன்றாம் நான்காம் அலை பெண்ணியம் போன்ற கருத்தியல்களைக் கேள்விக்குட்படுத்தி விமர்சிக்க வேண்டும். இந்த வழிமுறையின் மூலம் இந்தக் கருத்தியல்களிலிருந்து தோன்றும் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
மேலும், இஸ்லாத்தை ஒரு முழுமையான உலகநோக்காக அறிமுகப்படுத்த வேண்டும். அரசியல், சட்டவியல், பொருளாதாரம், தனிமனித வாழ்வு, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது என்பதையும், இவற்றுக்கு அடித்தளமாக இருக்கும் இஸ்லாமிய இறையியல், மீவியற்பியல் (Metaphysics), அறிதல் கோட்பாடு, அறவியல் / ஒழுக்கவியல், வரலாறு போன்றவற்றையும், முழுவதுமாகவும் அதற்கான காரண காரியங்களுடனும் விளக்கி கற்பிக்கும்போது இஸ்லாத்தின் மகத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த முடியும்.
(முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல் பின்வரும் இணைப்பிலுள்ளது, அது நமக்கு உதவக்கூடும்: https://bit.ly/3EG7CAt)
முர்ததுகளிடம் முஸ்லிம்கள் விவாதம் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் வேளையில், அவர்களிடம் இஸ்லாம் உண்மை என்று நிறுவுவதற்கான ஆதாரங்களை எடுத்துரைப்பதை விட்டுவிட்டு, அவர்கள் ஏற்றிருக்கும் கருத்தியல்கள் என்னவென்று கண்டறிந்து அதைத் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டும். இல்லையென்றால் எப்போதும் நாம் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அவர்கள் மேன்மேலும் இறுமாப்புடன் நம்மை எதிர்கொள்ள அது வாய்ப்பளிக்கும் என்பது மனங்கொள்ளத்தக்கது.
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. (குர்ஆன் 2:26)