கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியல்வாதத்தின் மொழியியல் சிக்கலும் அதன் விளைவுகளும்!

Loading

1920களின் தொடக்கத்தில் பகுப்பாய்வுப் புலனறிவாதம் (Logical Positivism) என்ற ஒரு கருத்தியல் உருவானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் ஐம்புலன்களால் அறிந்து நிரூபணம் செய்யப்படுபவை தவிர மற்ற அனைத்தும் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்றும், அதைப் பற்றி பேசுவதே பகுத்தறிவற்ற செயல்பாடு என்றும் அது கூறியது. வேகமான அறிவியல் வளர்ச்சி இக்கருத்தியலின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் காரணமாக அமைந்தது. பிறகு, அந்தக் கருத்தியலையே புலனறிவு கொண்டு அறிய முடியாத நிலையில், எப்படி அதை நாம் ஏற்பது என்ற வாதம் எழுந்தது. இந்தப் பின்னணியில், சுமார் 50 ஆண்டுகளில் அது கல்விப்புலங்களில் தன் செல்வாக்கை வெகுவாக இழந்தது. எனினும், அதன் எச்சம் இன்றும் அறிவியல்வாதம் (Scientism) எனும் வேடத்தில் பலரிடையே, குறிப்பாக நாத்திகவாதிகள் மத்தியில் வலம்வருகிறது.

அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படுவது மட்டும்தான் உண்மை என்பதுதான் அறிவியல்வாதம். ஆனால், இந்தக் கூற்றையே அறிவியல் ரீதியாக நிரூபிக்க இயலாது என்பதுதான் நிதர்சனம். அறிவியல்வாதிகள் உலகை கறுப்பு வெள்ளையாகக் காண்கிறார்கள். அதாவது, ஓர் ஓவியத்தைப் பார்த்தால் அதிலுள்ள வண்ணமயமான படத்தைக் கண்டு ரசிப்பதைவிட்டு, அந்த வண்ணங்கள் என்ன ரசாயனங்களிலிருந்து வந்தன எனச் சிந்திப்பதுடன், அந்த ஓவியத்தை ரசாயனங்களின் கலவையாகவே காண்கிறார்கள். படம் வரையப்பட்டது ரசாயன ஆய்வுக்காக அல்ல என்பதையோ, அதுவோர் அழகிய படம் என்பதையோ அவர்கள் விளங்கிக்கொள்வதே இல்லை. இப்படியான குறுகிய பார்வையும், உலகைப் பற்றிய குறுகிய புரிதலும் அவர்களின் மொழி குறித்த புரிதலையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

ஆம், மொழி எவ்வாறு செயல்படுகிறது என்றே அவர்களுக்குப் புரிவதில்லை. அறிவியலில் பயன்படுத்தப்படும் மொழியைப்போல நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொழியையும் அணுகுகின்றனர். உதாரணத்திற்கு, ஒரு மனிதர் போர்க்களத்தில் மிகவும் வீரத்துடன் போரிட்டு வென்றுவந்தால், அவரைச் சிலர் சிங்கம் என்று பாராட்டக்கூடும். ”நீங்கள் சொல்வது தவறு. அவர் சிங்கம் கிடையாது. சிங்கத்திற்கு நான்கு கால்கள் இருக்கும். அதுவொரு மிருகம். ஆனால் இவரொரு மனிதர்” என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்! அறிவியல்வாதிகளின் அணுகுமுறை சாட்சாத் இப்படித்தான் இருக்கும். (குர்ஆன் வசனங்களை எடுத்துக்கொண்டு, அதை அறிவியல்வாத நாத்திகர்கள் எப்படி அணுகுவார்கள் என்று கீழே விளக்கியுள்ளேன்.)

இப்னு தைமிய்யா (றஹ்) ஒரு மொழியியல் தத்துவத்தை முன்வைக்கிறார். மொழியிலுள்ள வார்த்தைகள் தனித்து வரும்போது அவற்றுக்குப் பொருளே கிடையாது; வார்த்தைகளுக்கான அர்த்தம் அந்த வார்த்தைப் பயன்படுத்தப்படும் சூழமைவைப் பொறுத்தே தோன்றுகிறது என்பது அவரது மொழியியல் தத்துவம். இதை நாம் சூழமைவுசார் மொழியியல் கோட்பாடு எனலாம். இதுபோல, சூழமைவை ஆராய்வது ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செயலன்று. உலூமுல் குர்ஆன் துறையில் அஸ்பாபுந்நுஸூல் என்னும் கிளைத்துறை உள்ளது. அதில் எந்தத் திருவசனம் எப்போது இறக்கப்பட்டது, ஏன் இறக்கப்பட்டது என்பதைப் பற்றி ஆராயப்படும். இவ்வாறு ஆராய்வதன் வழியாக நாம் எந்த தருணத்தில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை அமல்படுத்த வேண்டும், அதிலிருந்து என்ன சட்டதிட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும் என்பன அறியப்படுகிறது.

இவ்வாறு சூழமைவைப் புறக்கணித்து அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் அல்லது அறிவியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பது, அதனடிப்படையில் அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வது, அந்தச் சட்டகத்துக்குள் அடைக்க முடியாதவற்றை பொய் என்றோ தவறு என்றோ தீர்ப்பளிப்பது முதலானவை அறிவியல்வாதிகளிடம் உள்ள அடிப்படைப் பிரச்னைகளாகும்.

இதைப் புரிந்துகொள்ள குர்ஆனிலிருக்கும் துல்கர்னைன் கதையை எடுத்துக்கொள்வோம்:

”நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து, வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது விருப்பப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம். அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்தபொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார்…” (திருக்குர்ஆன் 18:84-86)

இங்கு துல்கர்னைன் அவர்களின் பார்வையை, அவர் கண்டதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். மேலும், இந்த வசனங்களில் நமக்கு இரு முக்கியமான படிப்பினைகள் உள்ளன.

  1. ஒருவேளை ”துல்கர்னைன்” என்று வசனத்துக்கு முன்னோ, பின்னோ குறிப்பிடாமல் ”அவர்” என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தால் அது யாரைக் குறிப்பிடுகிறது என்றே பலருக்கும் தெரிந்திருக்காது. மேலே, 84ம் வசனத்திலிருந்து தொடங்கி குறிப்பிடப்பட்டுள்ளது; அவரது பெயரோ 83ம் வசனத்தில் உள்ளது. இவ்வாறு ஒரு வாக்கியத்தை அதன் சூழமைவிலிருந்து பிரித்தெடுப்பதால், சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் மாற்றமடைகின்றன அல்லது அழிந்துவிடுகின்றன.
  2. மொழிபெயர்பாளர், ‘போல்’ என்பதை குறிப்பிடாமல் இருந்தாலும், சூரியன் சேற்றுக் கடலில் மறைகிறது என்றும், அது அவர் கண்ட காட்சி மட்டுமன்றி உண்மையிலேயே அவ்வாறுதான் உள்ளது என்றும் யாரும் அர்த்தம் கொள்ளமாட்டார்கள். ஆனால், அறிவியல்வாத நாத்திகவாதிகள் அவ்வாறுதான் அர்த்தம் கொள்கிறார்கள்.

மேற்கூறிய வசனத்தை வைத்துக்கொண்டு, ”குர்ஆனில் சூரியன் சேற்றில் மறைவதாக உள்ளது. அறிவியலின்படி அது தவறு” என்பதாக சில அறிவியல்வாத நாத்திகவாதிகள் கருதுகின்றனர். அவர்கள் மனத்தில் பல அனுமானங்கள் புதைந்துள்ளன. அவற்றிலிருந்து இரண்டைச் சொல்கிறேன்:

  1. அறிவியலைக் கொண்டு உண்மைநிலையை அறிந்துகொள்ள இயலும்.
  2. அறிவியல் கோட்பாடுகள் உண்மைநிலையை நமக்கு விளக்குகின்றன.

இவ்விரு அனுமானங்களைப் பற்றியும், இந்த அனுமானங்கள் ஏன் உண்மையில்லை என்பது பற்றியும் பிரத்யேகமாக எழுத முயற்சிக்கிறேன்.

இவர்கள் இந்த அணுகுமுறையை தங்கள் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் சூழ்நிலைகளிலும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மை. அன்றாடம் நாம் அறிவியலுக்கு மாற்றமான கண்ணோட்டத்தில்தான் பேசிக்கொண்டுள்ளோம் (அறிவியல்வாத நாத்திகர்கள் உட்பட). இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சூரியன் உதிக்கும் இடம், சூரியன் அஸ்தமிக்கும் இடம் (Sun Set Point / Sun Rise Point) என்றெல்லாம் கன்னியாகுமரியில் உள்ளது. அங்கு சென்று சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை மக்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்குள்ள அறிவியல்வாத நாத்திகவாதிகளும் இந்த அழகிய நிகழ்வைக் கண்டிருப்பார்கள் என்று நம்பலாம். ஆனால் யாரேனும், ”இதற்குப் பெயர் Sun Set Point என்று வைக்கக்கூடாது, ஏனெனில் சூரியன் அஸ்தமிப்பதில்லை. அது அங்கேதான் உள்ளது. நம் உலகம் சுற்றுவதால் நமக்கு அவ்வாறு தோன்றுகிறது” என்று பாடம் நடத்தினால், சிலர் “ஆமாங்க அது எங்களுக்கும் தெரியும்” என்று கூறி கடந்து செல்லக்கூடும்; வேறு சிலர் மனநோயாளியாகக்கூட அவரைப் பார்க்கக்கூடும்.

நம் அன்றாட உரையாடலில், ”எனக்கு ஆயிரெத்தெட்டு பிரச்னை இருக்கு” என்போம். இதன் அர்த்தம் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன என்றாகுமே தவிர, நான் உண்மையில் விரல் விட்டு எண்ணி ஆயிரெத்தெட்டு என்று சொல்கிறேன் என்றாகாது. இது அனைவரும் அறிந்த மிகச் சாதாரணமான உண்மை. இதுவே ஒரு கணக்குப் பாடத்தின்போது ஆயிரத்தெட்டு என்று ஆசிரியருக்கு விடையளித்தால், அதன் பொருள் நிறைய என்று யாரும் விளங்கிக்கொள்ளமாட்டார்கள். கணக்கு புதிருக்கான விடையாகவே அதைக் கொள்வார்கள்.

அறிவியல்வாத நாத்திகர்களின் இஸ்லாத்திற்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் இந்தக் குறுகிய நோக்கிலிருந்தே தோற்றம் பெறுகின்றன. குர்ஆன் ஒரு குறிப்பிட்ட துறைசார் (எ.கா. அறிவியல்துறை) புத்தகம் அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமானது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களிடமும் அதைக் கொண்டே அல்லாஹ் உரையாடினான். நம்மிடமும் அதைக் கொண்டே உரையாடுகிறான். ஆயிரமாண்டுக்குப் பிறகு மனிதர்கள் வாழ்ந்தாலும் அதைக் கொண்டே உரையாடுவான். ஏனெனில், அவன் எல்லாக் காலகட்டத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் ஏற்றாற்போல்தான் அதை அனுப்பியுள்ளான்.

ஆகவே, ஒருவர் அறிவியல்வாத கண்ணாடியை மாட்டிக்கொண்டு குர்ஆனையும் இஸ்லாத்தையும் அணுகினால் குர்ஆனின், இஸ்லாத்தின் உண்மையை அறிந்துகொள்ளவே இயலாது. இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட எதையுமே அறிந்துகொள்ள இயலாது. அவர்களின் குறுகிய பார்வையை, கடிவாளத்தைக் கழட்டிவிட்டு பார்த்தால்தான், இன்ஷா அல்லாஹ் அவர்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வழியேற்படும்.

Related posts

Leave a Comment