கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலக குடியாட்சி தினம்: ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் – அ.மார்க்ஸ்

இன்று உலக குடியாட்சி தினம் (International Democracy Day). மனிதகுலம் அரசை உருவாக்கி அதற்குள் வாழ நேர்ந்த இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் எத்தனையோ வகையான ஆட்சிகளைக் கண்டுள்ளது என்றாலும், இவற்றுள் ஒப்பீட்டளவில் சிறந்த ஆட்சி முறையாக ஜனநாயகம்தான் உள்ளது என்பேன். இதிலும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருக்கின்றன என்றபோதிலும், இதைவிடச் சிறந்த மாற்று இருப்பதாகத் தெரியவில்லை.
புரட்சிகரமான நோக்கங்களுடனும் உள்ளடக்கங்களுடனும் உருவான சோசலிச நாடுகள் இறுதியில் மக்களாலேயே தூக்கியெறியப்பட்டன என்றால், அவை பெயரளவிலும் ஜனநாயகத்தை ஏற்காமல் தம்மைப் “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்” என அழைத்துக்கொண்டு, ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததுதான் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. சர்வாதிகாரம் என்றால் அது பாட்டாளி வர்க்கத்தினுடையதாய் இருந்தாலென்ன, முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருந்தாலென்ன! சர்வாதிகாரம் சர்வாதிகாரம்தானே. மக்கள் அரசிலிருந்து அந்நியப்படுவது அதில் தவிர்க்க இயலாததுதானே. இன்று லத்தீன் அமெரிக்க சோசலிச நாடுகள் பலவும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் எனும் கருத்தைத் தூக்கியெரிந்துவிட்டு ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு முடிவுகட்டியுள்ளன.

ஜனநாயகம் என்பது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. முதன்மையாக அதுவொரு தத்துவார்த்தச் சிந்தனை. பிளேட்டொ, தூசிடைடிஸ் தொடங்கி கார்ல் மார்க்ஸ், ஹென்ரி டேவிட் தோரோ, ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெஃபர்சன், சோரென் கீர்கேகார்ட், தாமஸ் ஹாப்ஸ், எட்மன்ட் பர்க் எனப் பலரும் ஜனநாயகம் குறித்து ஆழமாகப் பேசியுள்ளனர். வால்ட் விட்மன், எட்கார் ஆலன் போ போன்ற படைப்பளிகளும் இதில் அடக்கம்.
பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம்.

இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன. ”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” என ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.

அரசியல் சிறுபான்மையில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் மாறிமாறி வருவது சாத்தியம். இலங்கையில் சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பதுபோலவும், தமிழகத்தில் திமுக, அதிமுக போலவும் அரசியல் ரீதியான பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்கிற நிலை தேர்தலுக்குத் தேர்தல் மாறலாம். ஆனால் மொழி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பன அப்படி மாறக்கூடியவை அல்ல. இந்தியாவில் முஸ்லிம்களும், இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு இனத்தவரும் இப்படி என்றென்றைக்குமே சிறுபான்மையாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் குறித்து மீண்டும் இறுதியில் பேசுவோம். அதேபோலத்தான் கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல் என்பதையும் நாம் நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கருத்தொருமிப்பை எப்போதுமே புனிதமாகக் கருத வேண்டியதில்லை.

ஜனநாயகத்தில் கருத்தொருமிப்பைப் போலவே கருத்து வேறுபாடுகளும் முக்கியம். வால்ட் விட்மன் சொல்வதுபோல, ஜனநாயகத்தின் அடிப்படையே ஒவ்வொன்றுக்கும் ஒரு மறுதலை உள்ளது என்பதை ஏற்பதுதான். ஏற்பது என்பதன் பொருள் ஜனநாயகத்தில் அதற்கும் ஒரு இடமுண்டு என்பதுதான். பெரும்பான்மையின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்ட கருத்துகளை எள்ளிநகையாடுவது என்பதோ அதற்கு இடமே இல்லை என்று மறுப்பதற்கோ ஜனநாயகத்தில் இடமில்லை.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதிலும் பல ஆழமான பிரச்னைகள் உள்ளன. ஜனநாயகத்தில் குடிமக்கள் எல்லோருமே ஆட்சிபீடத்தில் அமர இயலாது. மக்கள் தமது பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்ய முடியும். பிரதிநிதிகளால் அமைக்கப்படும் இந்த அரசு எப்போதும் ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசின் அதிகாரம் மக்களிடமிருந்தே வருகிறது என்பதுதான் அது. அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் தனிநபர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதை அரசு அங்கீகரிக்கும்போதே அதுவொரு சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.

அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் தனிநபர்களை, அதாவது குடிமக்களை அந்த அதிகாரத்தைக் கையளித்தவர்களாக ஏற்று அணுகுவதற்கான ஒரே பொறியமைவாக இருப்பது அரசியல் சட்டம்தான். அது குடிமக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குகிறது. அதை நடைமுறைப்படுத்தும் கருவியாக நிர்வாகமும் (Executive), அந்நிலை கெடும்போது அதை வெளிக்கொணர்பவையாக ஊடகங்களும் (Media), தட்டிக்கேட்கும் நிறுவனமாக நீதிமன்றமும் (Judiciary) ஜனநாயகத்தில் பாத்திரங்கள் வகிக்கின்றன என்பது கோட்பாடு. ஆனால், நடைமுறை அப்படியாக இருந்ததே இல்லை. ஜனநாயக அரசுகள் “அரசின் காரணங்களுக்காக” (Raison D’etat) எனச் சொல்லி, எந்தக் கணத்திலும் “நெருக்கடி நிலை” (State of Exception) அறிவித்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தம் கைவசம் எப்போதும் வைத்துள்ளன. ரோமப் பேரரசிலேயே “இயூஷியம்” என்கிற பெயரில் நெருக்கடி நிலை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு தன் கையில் வைத்திருந்தது என்பார் பிரெஞ்சுச் சிந்தனையாளர் ஜியார்ஜியோ அகம்பன்.

ஆக, வழக்கமான அரசியல் சட்டத்தின் மூலம் ஆளுகை சாத்தியமில்லை எனக் கூறி ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யப்படும்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இந்நிலையில், நீதிமன்றம் தலையிட்டு உண்மையிலேயே அரசியல் சட்ட ஆளுகை சாத்தியமில்லையா எனச் சொல்ல வேண்டும். ஆனால், நீதிமன்றங்கள் அப்படிச் சொல்வதில்லை. அரசுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமை உள்ளது எனக் கூறி அதை நியாப்படுத்துவதையே உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நாடுகளில் பார்க்கிறோம். இந்த நோக்கில் அரசியல் சட்டம் வழங்கும் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் கறுப்புச் சட்டங்களையும் அரசுகள் உருவாக்கி வைத்துக்கொள்கின்றன. அந்த வகையில், கிட்டத்தட்ட இன்றைய அரசுகள் எல்லாமே ஜனநாயகம் என்கிற நிலையைத்தாண்டி ”நெருக்கடி நிலை அரசுகளாகவே” உள்ளன என்பார் ஜியார்ஜியோ அகம்பன்.

இரண்டு

யாரும் இன்னொருவரைப் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலாது என நவீன தத்துவச் சிந்தனையாளர்கள் கூறுவர். ஆனால், மக்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலும் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன இன்றைய ஜனநாயக அரசுகள். இந்தியாவில் இதை ஓர் அரசியல் பிரச்னையாக்கினார் டாக்டர் அம்பேத்கர். சட்டமியற்றும் மன்றங்களில் தலித் பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18% ஒதுக்கீட்டை அரசு அளித்தபோது, அது போதாது, அந்த 18% மக்களும் தலித்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் (Separate Electorate) என்றார் அவர். எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக இருந்து தாம் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாதவர்களாக இந்தியாவில் முஸ்லிம்களும் தலித்களும் உள்ளனர். இலங்கையில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களின் விளைவாக அந்த வாய்ப்பை அங்குள்ள சில பகுதிகளில் இனி முஸ்லிம்களும் தமிழர்களும் இழக்க நேரிடலாம்.

இந்தியாவில் தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டும் தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அதுவும் இல்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதியே இருந்தது. தாங்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யும் பிரதிநிதிகள் மட்டுமே தமக்கு உண்மையாக இருப்பர், தம்மை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்வர் என்றார் அம்பேத்கர். ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் நின்று எல்லோரும் வாக்களித்து ஒரு தலித்தோ, முஸ்லிமோ தேர்வு செய்யப்படும்போது அவர்கள் தமது மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்கமாட்டார்கள். மாறாக, தம்மை வேட்பாளராக நிறுத்திய கட்சிக்கு மட்டுமே அவர்கள் உண்மையாக இருப்பார்கள். இன்றைய இந்தியா இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஜனநாயக ஆளுகை எதிர்கொள்ளும் இன்னொரு முக்கியப் பிரச்னை இந்தப் ”பெரும்பான்மை” குறித்தது. 50 சதத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை நாம் பெறும்பான்மை என்கிறோம். இது இரண்டு நிலைகளில் நிறுவப்பட வேண்டும். முதலில், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுபவர்கள் 50% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அடுத்து, ஆட்சி அமைக்கும் கட்சி 50% உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அந்த 50% உறுப்பினர்களும் மொத்தத்தில் 50% வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் போட்டியிடுபவர்களுள் ”அதிக வாக்குகளைப் பெறுவோரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் முறையில்” (First Past The Post System) பொதுவாக 30ல் இருந்து 35% வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர். எனவே 65ல் இருந்து 70% வாக்காளர்களின் ஆதரவு இல்லாத ஒருவர் வெற்றி பெற்றவராக ஆகிறார். அதேபோல, 30% வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் 50 விழுக்காடுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. எடுத்துக்காட்டாகத் தற்போது இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள பாஜக வாங்கிய வாக்கு வீதம் 37%. ஆனால் அது 55% உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இது பெரும்பான்மையின் ஆட்சியா?

ஜனநாய நாடுகளில் வேறு சில தேர்வு முறைகள் பயன்படுத்தப்பட்டு, 50% வாக்குகள் பெற்றவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கும் நிலை உள்ளது. அவை ஓரளவு இந்தப் பிரச்னையில் நியாயம் செய்கின்றன எனலாம். நேபாளம், இலங்கை முதலான நாடுகளில் உள்ள விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (Proportional Representation) இந்தியாவிலுள்ள அதிக வாக்குகளைப் பெற்றோரை வெற்றி பெற்றோராக அறிவிக்கும் முறையைக்காட்டிலும் சிறந்தது.

மூன்று

ஒரு ஜனநாயக அரசில் மொழி, இன, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வாறு காக்ககப்படும்? பெரும்பான்மையின் அடிப்படையில் அதிகாரம் பெறும் அரசமைவில் எந்நாளும் பெரும்பான்மையாக ஆக இயலாதவர்களின் உரிமைகள் குறித்து சர்வதேசச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என ஒன்றிருந்தால் சிறுபான்மையும் இருக்கும். கருத்து ஒற்றுமை என்பதைப்போலவே கருத்து வேறுபாடும் முக்கியமானது என்றோம். சிறுபான்மையினர் நலனுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் ஜனநாயகத்தில் எப்போதும் உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு. இது அரசியல் சிறுபான்மைக்கு மட்டுமின்றி மொழி, மத, இனச் சிறுபான்மைக்கும் முழுமையாகப் பொருந்தும். ஜனநாயக அறத்தின் அடிப்படையில் மட்டுமின்றி, சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையிலும் இதுவே உண்மை.
மேக்கியவெலி சொல்வதுபோல, பெரும்பான்மை ஒன்றே ”உச்ச அதிகாரத்தின் உத்தரவாதமாக இருக்க முடியாது. அது கொடுங்கோன்மைக்கே வழி வகுக்கும்”. மொழி, மத, இனச் சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்கள் சிறுபான்மையராக இருக்கும் காரணத்திற்காகவே மறுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. அப்படி நடக்கும்போது ஜனநாயகம் பாசிசத்தின் எல்லைக்குள் நுழைகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டனை குறித்த உடன்பாடு (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, in 1948), ஐநா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்பாடு (International Covenant on Civil and Political Rights, 1966) ஆகியன சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தேசிய அரசுகள் புறக்கணிக்கலாகாது என்பதை வலியுறுத்துகின்றன. அத்துடன், சிறுபான்மையினர் தம் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றைக் கடைபிடிப்பது, பரப்புவது முதலியவற்றுக்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

20ம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் கூட்டணி நாடுகள் (Allied Powers) பல்வேறு சிறிய நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் சிறுபான்மையினர் உரிமைகள் விரிவாகப் பேசப்பட்டன. முதன்முதலில் போலந்துடன் போடப்பட்ட ”வெர்சைல்ஸின் சிறிய ஒப்பந்தத்தில்” (Little Treaty of Versailles) இது தொடங்கி வைக்கப்பட்டது. அப்போதிருந்த உலக நாடுகள் அவை (League of Nations), ”பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்ட மொழி, மதம், இனம் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராகக் கருதப்படுவர்” என வரையறுக்கப்பட்டது. அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் உயிரும் உரிமைகளும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதும் போலந்து ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டன. இவை மீறப்படும்போது, பாதிக்கப்பட்ட சிறுபான்மையர் உலக நாடுகளின் அவையிடம் புகாரளிக்கலாம். அது அவற்றை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

பிறகு, தொடர்ச்சியாகப் பல்வேறு ஒப்பந்தங்களிலும் சிறுபான்மையினர் குறித்த வரையறை விரிவாக்கப்பட்டதோடு, அவர்களின் கலாச்சார, பண்பாட்டு, கல்வி உரிமைகள் வற்புறுத்தப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் கடமையும் அரசுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. முன் குறிப்பிட்ட ஐநா ஒப்பந்தங்கள் இதில் முக்கியப் பங்கு வகித்தன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் 27ம் பிரிவுக்கு எஃப்.கார்டோ போடியாகோ அளித்த விளக்கத்தில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைந்து இருக்க வேண்டும் என்றொரு நிபந்தனை இருந்தது. அதுவும் பின்னர் கைவிடப்பட்டது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளியர் எண்ணிக்கையில் 54% இருந்தபோதிலும் அவர்கள் பிற வேறுபடுத்தல்களின் அடிப்படையில் சிறுபான்மையராகக் கருதப்படுவது சுட்டிக்காட்டப்பட்டு இந்த நிபந்தனை கைவிடப்பட்டது.

1995ல் உருவாக்கப்பட்ட தேசியச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உடன்பாடு (Framework Convention for the Protection of National Minorities) சிறுபான்மையினர் தம் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உள்ள உரிமைகள், இவற்றுக்குரிய அரசு கடப்பாடுகள், அந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டங்கள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான கருவிகள் ஆகியன குறித்து மிகத் துல்லியமான வரையறைகளை உருவாக்கியது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர சகிப்புத்தன்மையை வளர்த்தல், கலாச்சார உரையாடல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு நிறுவனங்கள் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இந்த உடன்பாட்டில் வற்புறுத்தப்பட்டது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, புரிதல், கூட்டுச்செயல்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அரசுக்குள்ள பொறுப்பை அது சுட்டிக்காட்டியது.
இதற்கான சட்டங்களை உருவாக்குதல் என்பதோடு அரசின் கடமைகள் முடிந்துவிடவில்லை; அதற்குரிய கொள்கைகளை உருவாக்குதல், மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளுதல் ஆகியனவும் அரசின் கடமைகள் எனவும் அந்த உடன்பாடு கூறியது.

மொழி, மதம், இன அடிப்படையிலான சிறுபான்மையினரின் (1) உயிர், உடமை, உரிமைகள் பாதுகாக்கப்படுதல் (2) அவர்கள் தம் பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைப் பேணுதல் மற்றும் பரப்புதல், (3) சமூகங்களுக்கிடையே பரஸ்பர நட்பு, மரியாதை ஆகியவை காக்கப்படுதல், (4) இவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களை இயற்றுதல் (5) இச்சட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளை அமைத்தல் ஆகியவற்றை சர்வதேச ஒப்பந்தங்கள் இன்றைய அரசுகளின் கடப்பாடுகளாக்குகின்றன. இவை மீறப்படும் பட்சத்தில், பாதிக்கப்படும் சிறுபான்மையினர் சர்வதேச அமைப்புகளில் புகாரளிக்கவும், சர்வதேச அமைப்புகள் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவதற்கும் இதன்மூலம் வழியமைத்துத்தரப்பட்டது. இவற்றை ஏற்று சாத்தியப்படுத்துபவையே உண்மையான பொருளில் ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.

Related posts

Leave a Comment