கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் மக்கள் தொகை: பொதுப்புத்தியை அச்சுறுத்தும் கட்டுக்கதையும் நிதர்சனமும்

Loading

இந்து வலதுசாரி அரசாங்கங்கள், அதன் ஆதரவாளர்கள், பல மையநீரோட்ட ஊடகங்கள் முஸ்லிம் மக்கள் தொகை கிடுகிடுவென உயர்வதாக சர்ச்சைக்குரிய வகையில் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருக்கின்றன. சமூக வலைத்தளம் தொட்டு பல்வேறு தளங்களில் சிறுபான்மை முஸ்லிம்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்வதுடன், டஜன் கணக்கில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதாக வெறுப்புப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களின் எண்ணிக்கையை இப்படி திட்டமிட்டு உயர்த்தி இந்திய மக்கள் தொகை வீதத்தையே மாற்றியமைக்க சதி செய்கிறார்கள் என்பதாக ‘பெரும்பான்மைச்’ சமூகத்திடம் பயத்தை விதைக்கிறார்கள். சமீபத்தில்கூட அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சட்டமன்றத்தில் பேசுகையில், 1000 இளைஞர்களைக் கொண்டு “பாப்புலேஷன் ஆர்மி” உருவாக்கி, முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் “விழிப்புணர்வை” ஏற்படுத்தயிருப்பதாகவும், அது கருத்தடை மருந்துகளை முஸ்லிம்களிடையே விநியோகிக்கும் என்றும் விஷம் கக்கினார்.

இந்த முஸ்லிம் எதிர்ப்புக் கதையாடலை இன்னும் உக்கிரமாக்கும் விதமாக, முஸ்லிம்கள் பத்திலிருந்து பன்னிரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வதாகவும், இந்துக்களிடம் இரண்டு குழந்தைகள் மட்டுமே போதும் என்று சொல்லப்படுவதாகவும் ஹரியானாவில் தீவிர வலதுசாரி அமைப்பான கர்னி சேனா கூறியது. இதேபோல், தீவிர இந்து தேசியவாத அமைப்பான ஆர்எஸ்எஸ், முஸ்லிம் மக்கள் தொகை உயர்வது முஸ்லிம் ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியாவை ஒரு புதிய பாகிஸ்தானாக மாற்றும் திட்டமே என்று கூறியது. முன்பு உ.பி.யில் மக்கள் தொகை கொள்கையை வகுக்க இருப்பதாக யோகி ஆதித்யநாத் அரசு சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்துத்துவ வட்டாரத்திலிருந்து விஹெச்பி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு உ.பி.யில் நடைபெறவுள்ள தேர்தலை மையப்படுத்தியே இந்தப் பேச்சு மேலுக்கு வருவதாய் அரசியல் விமர்சகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்து வலதுசாரி சக்திகள் வாக்காளர்களை துருவப்படுத்தும் (polarize) நோக்கிலேயே இப்படியான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. வேலை வாய்ப்பின்மை, கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி முதலானவையே இந்தியா முன்னுள்ள மிகப்பெரும் சவால் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் மீதே அனைத்து பழிக்குற்றச்சாட்டுகளையும் சுமத்தும் தம் பழைய தந்திரத்தையே அவர்கள் கையிலெடுக்கிறார்கள். ஆதரவாளர்களைத் தங்கள் கட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்துப் பெரும்பான்மைச் சமூகத்தின் “மற்றமைக்கு” எதிராய் அவர்கள் “போர் தொடுக்க” அல்லது குறைந்தபட்சம் போர் தொடுப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. 2019 பொதுத் தேர்தலின்போது, என் உறவினர் ஒருவரிடம் எதற்காக காவிக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டேன். அப்போதுதான் “முஸ்லிம்களை தண்டிக்க” முடியும் என்பதாக பதில் தந்தார்.

முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருகுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலதுசாரிகள் கட்டமைக்கும் கதையாடல்கள் தம் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டை மற்றுமொருமுறை பறைசாற்றுவதற்காகவே முன்வைக்கப்படுகிறது. மேலும், உண்மையின் அடிப்படையிலிருந்து முன்வைக்கப்படும் வாதங்கள் கண்டுகொள்ளப்படாததுடன், வகுப்புவாதப் பிரச்சாரம் மக்களிடம் மிக எளிதில் எடுபடும். இருந்தபோதிலும், இந்துத்துவர்கள் பரப்பும் பொய்யையும் புனைவையும் உடனடியாக உண்மைகளையும் ஆதாரங்களையும் கொண்டு கட்டுடைக்க வேண்டியிருக்கிறது.

S.Y.குறைஷியின் The Population Myth நூல்

முதலாவது கட்டுக்கதை, முஸ்லிம் ஆண்கள் நான்கு மனைவிகளை மணம் முடித்துக்கொண்டு நிறைய குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகச் சொல்வது. மேலும், அதைக் குர்ஆன் அங்கீகரிப்பதாகவும், முஸ்லிம் தனியார் சட்டம் அதைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். அரசின் அறிக்கைகளே புலப்படுத்துவது என்னவென்றால், பிற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் மத்தியில் பலதாரமணம் குறைவு என்பதைத்தான். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y.குறைஷி எழுதியுள்ள The Population Myth: Islam, Family Planning and Politics in India என்ற நூலில் இந்த வாதத்தைக் குறிப்பிட்டுக்காட்டுகிறார்: “இந்தியாவிலுள்ள எல்லாச் சமூகங்களும் பலதாரமணம் புரியக்கூடியவைதாம். உண்மையில் முஸ்லிம்களிடம் அவை குறைவு.”

முஸ்லிம் ஆண்கள் நான்கு திருமணம் செய்ய முயற்சித்தாலும் அது சாத்தியமே இல்லை. ஏனெனில், இந்தியாவில் 933 பெண்களுக்கு 1000 ஆண்கள் என்ற பாலின விகிதம் இருக்கிறது. 4000 பெண்களுக்கு 1000 ஆண்கள் இருந்தால்தான் எல்லாரும் பலதாரமணம் செய்வது சாத்தியம்!

இரண்டாவது கட்டுக்கதை, முஸ்லிம் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரிப்பதோடு, கூடியவிரைவில் இந்தியாவில் இந்துக்களை சிறுபான்மையாக ஆக்கிவிட முயற்சிக்கிறார்கள் என்ற பிரச்சாரம். உண்மையில் மக்கள் தொகை வளர்ச்சி முஸ்லிம்களிடையே சரிந்துதான் வருகிறது. உதாரணத்துக்கு, 2001ல் 29 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 2011ல் 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்துக்களைவிட சற்று அது உயர்ந்திருந்திருந்தாலும்கூட சீக்கிரமே அது அவர்களின் வளர்ச்சி விகிதத்துக்கே வந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது.

மூன்றாவது கட்டுக்கதை, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் என்பது. இந்துக்களுடன் ஒப்பிடுகையில் சீக்கியர்கள் மிக அதிகமான அளவுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் முஸ்லிம்களுடன் இந்துக்களை ஒப்பிட்டால் அவ்வளவு ஒன்றும் முஸ்லிம்கள் பின்தங்கியில்லை என்பதையே S.Y.குறைஷியின் நூல் சுட்டிக்காட்டுகிறது. இந்த மாதிரி புள்ளிவிவரங்களை வைத்து, இந்துக்களைவிட சீக்கியர்கள் தேச நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியுமா என்ன!

நான்காவது கட்டுக்கதை, முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ளக் காரணம் அவர்களின் மதம்தான் என்ற வாதம். ஒருவேளை அப்படி இருந்தாலும்கூட அதற்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு? வருமானம், எழுத்தறிவு விகிதம், சுகாதார அணுகல் போன்ற மதம் கடந்த அம்சங்கள்தாம் இதில் பெரும்பங்காற்றுகின்றன. வட்டார விஷயங்கள்கூட இதில் பங்காற்ற முடியும். வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவிலும் கஷ்மீரிலும் ஏன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது என்பதை மதத்தைக் கொண்டு புரிந்துகொள்ள இயலுமா?

ஐந்தாவது கட்டுக்கதை, வேலை வாய்ப்பை உருவாக்குவது, சமூகநலத் திட்டங்களைத் தொடங்குவது ஆகிய அம்சங்களில் அரசாங்கங்கள் தோல்வியடைந்ததன் பின்னணியில் மக்கள் தொகை உயர்கிறது. 130 கோடி இந்தியர்களுக்கு வேலை கொடுப்பது சாத்தியமற்றது என்றால், அவர்களிடம் பெற்ற வரிப் பணம் எங்கே? ரிக்சா இழுப்பவர்கூட தனக்கு உணவுப் பொருட்களோ டூத் பேஸ்டோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ வாங்கும்போது வரி கட்டவேண்டியிருக்கிறது. இந்தியாவின் அதிகமான மக்கள் தொகைதான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளம் இருப்பதும், நுகர்வோருக்கான பெரும் சந்தை இங்கு இருப்பதும் அதிக மக்கள் தொகை இருப்பதன் விளைவு அல்லவா?

இறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புவது, மக்கள் தொகை உயர்வானது எந்நேரமும் தீங்கு விளைவிப்பதாய் மட்டும் இருப்பதில்லை என்பதையும் மதத்தோடு தொடர்புடையதாகவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம் முஸ்லிம்கள் 9.8ஆக இருந்தார்கள். 2011 கணக்கெடுப்பின்போது 14.2 சதவீதமானார்கள். அவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில தசாப்தங்களாக சரிந்து வருகிறது. கூடியவிரைவில் அது நிலையானதாக ஆகிவிடக்கூடும். அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் கலந்துரையாடவும், அதற்காகத் திட்டம் வகுக்கவும் செய்யலாமே அன்றி, இவ்விஷயத்தை மதம் சார்ந்து அணுகக் கூடாது. வாக்காளர்களைத் துண்டாடி, அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட கட்சியை வளர்ப்பதே முஸ்லிம் மக்கள் தொகை குறித்த வெறுப்புப் பேச்சுகளின் நோக்கமாகும். காலவோட்டத்தில் இதுவே சமூகத்தில் ஆழமாகப் படிந்துவிடுகிறது. எனவே, தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

(இந்தக் கட்டுரை மாத்யமம் இணையதளத்தில் Dr. அபய்குமார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.)

Related posts

Leave a Comment