‘ஃபெமோ நேஷனலிசம்’ என்றால் என்ன? – சாரா ஃபாரிஸ் நேர்காணல்
‘பெண் உரிமைகளின் பெயரால்: ஃபெமோ நேஷனலிசத்தின் எழுச்சி‘ எனும் தலைப்பிலான ஆர்வமூட்டும் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சாரா ஃபாரிஸ். அதில் வலதுசாரி தேசியவாதிகளும் நவதாராளவாதிகளும் சில பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவம் கோரும் முகமைகளைச் சேர்ந்தோரும் முஸ்லிம் ஆண்களைப் பூதாகரப்படுத்தும் நோக்கிலும், தங்கள் சொந்த அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காகவும் பெண் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராய்கிறார். இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே முரண்படுபவையாகத் தெரிந்தாலும், ஒரு புள்ளியில் இவை சந்தித்துக்கொள்வதில் முக்கியமானதொரு அரசியல்-பொருளாதாரப் பரிமாணம் இருப்பதாக அவர் வாதிடுகிறார்.
சரியான நேரத்தில் வெளிவந்த விரிவான புத்தகமான இது, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து முதலான நாடுகள் சார்ந்த ஆய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. தற்சமயம் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ்-ல் மூத்த சமூகவியல் விரிவுரையாளராக இருக்கும் ஃபாரிஸை அழைத்து, அவரின் புத்தகம் எழுப்பும் சில கேள்விகள் சம்பந்தமாக அறிய முயன்றேன். அவருடனான உரையாடலின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவமே இந்த ஆக்கம்.
பின்வரும் கேள்விகள் நிக்கீ செத்-ஸ்மித்துடையவை. பதில்கள் சாரா ஃபாரிஸுடையவை.
பெண்ணியவாதிகளும் ‘ஃபெமோ கிராட்டுகளும்’ (‘Femocrats’ – அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களும்) தம்முடைய அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக ”தமது விடுதலை அரசியலுக்குத் துரோகமிழைக்கின்றனர்,” “முஸ்லிம் ஆண்களை பூதாகரப்படுத்துவதற்காக வேண்டி பெண் உரிமைக் கோஷங்களை எழுப்புகின்றனர்” என்று உங்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறீர்கள். இது வேண்டுமென்றே செய்யப்படும் ஒன்றா, அல்லது இந்தப் பெண்களின் செயல்பாடுகள் பிறரால் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றனவா?
வலதுசாரி தேசியவாதிகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளில் பாலினச் சமத்துவம் சார்ந்த விவகாரங்களை தம் சொந்த நோக்கங்களுக்காகவும், ஆதரவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிரான்ஸின் நேஷனல் ரேலி கட்சித் தலைவர் மரீன் லெ பென் போன்ற வலதுசாரி தலைவர்கள் இத்தகையவர்களே. மரீன் லெ பென் உண்மையில் பெண் உரிமைகள் பற்றிக் கவலைப்படுபவரெல்லாம் இல்லை; முஸ்லிம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்கு இது ஒரு வழி, அவ்வளவுதான்.
ஃபெமோ நேஷனலிசத்தின் முகங்களுள் ஒன்று, பெண்ணியவாதத்தை தேசியவாதிகள் தமக்குப் பயன்படும் கருவியாக்கிக்கொள்வது. பெண்ணியவாதிகளில் ‘சிலர்’ — ஒரு சிறு எண்ணிக்கையினர் என்பதை நான் இங்கு அழுத்திச் சொல்ல விரும்புகிறேன் — பெண்களை ஒடுக்கும் மதம் என்று கூறி இஸ்லாமைத் தாக்குவது அதிகரித்திருக்கிறது.
பிரான்ஸில் புர்கினி (முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடை) தடை செய்யப்பட்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். உங்கள் நூல்கூட அதைக் குறித்து பேசுகிறது. அந்தத் தடையை ஆதரித்த பெண்ணியவாதிகள் யாவர்? நீங்கள் அத்தகையவர்களை ”ஃபெமோ நேஷனலிஸ்டுகள்” என்பதாகப் பார்க்கிறீர்களா?
நிறைய பெண்ணியவாதிகள் முகத்திரைத் தடையையும், புர்கினித் தடையையும் ஆதரித்தார்கள். அவர்களுள் எலிசபெத் பதின்டெர் (Elizabeth Badinter) போன்ற மிக நன்கு அறியப்பட்ட பெண்ணிய அறிவுஜீவிகளும், பெண் விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் நஜாத் வல்லாத் பெல்காசெம் (Najat Vallaud-Belkacem) போன்றோரும் நினைவுக்கு வருகின்றனர். நஜாத் ஒரு மைய-இடது பிரதிநிதி, சோசலிஸ்ட். அவர் இந்தத் தடை பொதுப் பள்ளிக்கூடங்களைத் தாண்டி, வேலை பார்க்கும் இடங்கள் முதலானவற்றுக்கும் விரிவடைய வேண்டும் என்றுகூடப் பரிந்துரைத்தார். பல்வேறு புகழ்பெற்ற பெண்ணியவாதிகளும் ஃபெமோகிராட்ஸும் இச்சட்டங்களை ஆதரித்தனர். அது பெண் உரிமைகளின் பெயரால் இஸ்லாம் எதிர்ப்பு நிலைப்பாடுகளை வலுப்படுத்தியது.
உங்கள் புத்தகத்தில் வலதுசாரி வெள்ளையினத் தேசியவாதிகளுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் நவ தாராளவாதிகளுக்கும் ஃபெமோகிராட்டுகளுக்கும் இடையே ’இயல்புக்கு மாறான புதிய கூட்டணி’ (New unholy alliance) ஒன்று உருவாகியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். பழுப்பு நிறப் பெண்களை பழுப்பு நிற ஆடவர்களிடமிருந்து வெள்ளையினப் பெண்கள் ‘காப்பாற்றுகிற’ கதை புதிய ஒன்றல்ல. இவ்விதமான போக்குகளின் வரலாற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்த நினைக்கிறேன். இது உண்மையிலேயே ஒரு “இயல்புக்கு மாறான கூட்டணிதானா” என்று நான் என் புத்தகத்தில் கேள்வி எழுப்பியிருப்பேன். அதற்குப் பதிலாக நான் “ஒருங்கிணைவு” (convergence) என்ற வார்த்தையைத் தெரிவுசெய்கிறேன். ஏனெனில், அதுவே இதன் திரவத்தன்மையை நன்கு உணர்த்துவதாக இருக்கிறது. உண்மையில் மிகவும் வேறுபட்ட அரசியல் செயல்திட்டங்களைச் சேர்ந்த நபர்களும் அரசியல் பிரமுகர்களும் இந்த வெளியில் ஒருங்கிணைகிறார்கள். இவ்வெளியில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன.
“கூட்டணி” என்று சொல்வது பிரக்ஞைபூர்வமாக ஒருங்கிணைகிறார்கள் என்பதாக அர்த்தம் தரும் அல்லவா?
மிகச் சரி. நான் அதனை அவ்வாறு கருதவில்லை.
தற்போது நடந்துகொண்டிருப்பதில் குறிப்பாகப் புதிதொன்றும் இல்லை. ’நாகரிகமடையாத நாடுகளுக்கு’ ‘நாகரிகத்தைக்’ கொண்டு செல்வதாய் (பெண் உரிமைகள் உட்பட) ஏகாதிபத்தியவாதிகளும் காலனித்துவவாதிகளும் கோருவது தொடர்பாக ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளை நாம் தர முடியும். அல்ஜீரியாவில் முஸ்லிம் பெண்களின் முகத்திரைகளை அகற்றுவதற்கான தீராத ஆர்வத்தை பிரஞ்சு ராணுவம் 1950களில் வளர்த்துக்கொண்டது. காலனியத்தின் இந்த முனைவுகளை பெண் உரிமைகளின் பெயரால் பெண்ணியவாதிகள் சிலரும் ஆதரித்தனர். 9/11லிருந்து குறிப்பிடத்தக்கதாக இருப்பது என்னவெனில், குறிப்பாக முஸ்லிம் சமூகம் என்று வரும்போது பெண்களின் உரிமைகள் அபாயத்திலிருக்கின்றன என்ற கருத்து மிகப் பிரபலமான ஒன்றாக மாறியிருக்கிறது.
பொதுமைப்படுத்த முடியாது என்றாலும், முஸ்லிம் நாடுகள் பலவற்றிலும் பெண்கள் தம் உரிமைகள் குறுக்கப்படும், அச்சுறுத்தப்படும் சூழலை எதிர்கொள்கிறார்கள்தானே? அதிலும் இன்றைய சூழ்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் எழுச்சி பெற்றிருப்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனாலேயே பெண்கள் தொடர்பான பேசுபொருள்களின் பக்கம் கவனம் குவிவதாக நாம் எடுத்துக்கொள்ள முடியாதா?
எனக்கு இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான்மீது படையெடுத்ததற்கான காரணங்களுள் ஒன்றாக பெண்களுக்கு விடுதலையளிப்பது என்பதே சொல்லப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ்-க்கும், 9/11க்குப் பிந்தைய நிகழ்வுகளுக்கும் முன்பாக நடந்தது இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் புத்தகத்துக்கும் கல்வியாளர் ஜஸ்பிர் பவுர் எழுதிய ‘Terrorist Assemblages: Homonationalism in Queer Times’ என்ற புத்தகத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? பாலியல், இனம், பாலினம், தேசம், வர்க்கம், இனத்துவம் ஆகியவற்றின் இயக்காற்றல்களெல்லாம் தேசப்பாதுகாப்புவாதம், பயங்கரவாத எதிர்ப்பு, தேசியவாதம் ஆகிய சமகாலச் சக்திகளுக்கு இசைவாகத் தம்மை மறுசீரமைப்புச் செய்துகொள்கின்றன என்பதாக அந்நூல் பத்தாண்டுகளுக்கு முன்பு வாதித்தது.
பவுரின் நூல் எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. அமெரிக்காவிலுள்ள LGBT சமூகப் பிரதிநிதிகள் சிலர், குறிப்பாக 9/11க்குப் பிறகு அமெரிக்க தேசியவாதத்தையும் இஸ்லாமிற்கு எதிரான பரப்புரைகளையும் ஆதரிக்கிறார்கள், முஸ்லிம்கள் தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில். நான் என்னுடைய நூலில் தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் சம்பந்தமாகப் பேசவில்லை, பெண் உரிமைகள் பற்றியே கவனம் செலுத்தியிருக்கிறேன். எனினும், பவுர் தொடங்கி வைத்திருக்கும் உரையாடல் மிக முக்கியமானது. ஃபெமோ நேஷனலிசத்தின் அரசியல்-பொருளாதார அடிப்படைகளுக்கும் நான் அழுத்தம் தந்து பேசியிருக்கிறேன்.
குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, துப்புறவுப் பணி, வீட்டுவேலை முதலானவற்றில் பெண் தொழிலாளர்களுக்கான தேவை மேற்குலகில் அதிகரிப்பது தொடர்பாக உங்கள் நூல் பேசுகிறது. குறிப்பாக இது எப்படி புலம்பெயர்ந்த முஸ்லிம் பெண்கள் மீதான அணுகுமுறையுடன் தொடர்புபடுகிறது?
ஃபெமோ தேசியவாதக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா ஆகியவற்றின் பொருளாதார அம்சங்கள்மீது வெளிச்சம் பாய்ச்சியிருப்பது நான் பங்களிக்க முயன்றுள்ளவற்றில் முக்கியமான ஒன்று. வேலை வாய்ப்பைப் பறித்துக்கொள்வோர் என்பதாக குடிபுகுந்தோர் பற்றி நிலவும் கருத்து பெரும்பாலும் ஆண்களைக் குறிப்பதாகவே இருக்கிறது. வெள்ளையின பிரிட்டிஷ் ஒருவர் சாலையில் பிச்சையெடுப்பது போன்ற UK சுதந்திரக் கட்சியின் (UKIP) சுவரொட்டி மனதில் நிழலாடுகிறது. இங்கு என் கேள்வி, புலம்பெயர்ந்த பெண்கள் எங்கே போனார்கள் என்பதாக இருந்தது. அவர்கள் யாரும் வேலை வாய்ப்பைப் பறிப்போராக ஊடகங்களில் காட்டப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தம் சொந்த பின்தங்கிய கலாச்சாரங்களின் முன் பணிந்துகிடக்கிற செயலூக்கமில்லாத அபலைகள் எனச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் எங்கே? இத்தாலியில் தீவிர இனவாதக் கட்சியான நார்தன் லீக்கின் முன்னாள் தலைவர் ராபர்டோ மரோனி சொன்னார்: “சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைந்தோருக்கு, பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவோருக்கு, வீடுகளில் திருடுவோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. ஆனால், நிச்சயமாகச் சமூகத்துக்கு மிக அத்தியாவசியமான வேலைகளைச் செய்வோருக்கு, புலம்பெயர்ந்த வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்கள் போன்றோருக்குக் குடியுரிமை வழங்கும் அம்சத்தை நாங்கள் பரிசீலிப்போம்”. இந்தப் பராமரிப்புப் பணியாளர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுதான் இனவாதத்தைப் பாலினவயமாக்குவது (sexualisation of racism) என்பது. பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்கள் முறையாக சமூக ஓட்டத்துடன் இணைந்தால் அவர்களுக்கான வெளி உருவாக்கித் தரப்படும். ஆனால் ஆண்களோ சபிக்கப்பட்ட மற்றமைகள்!
முஸ்லிம் ஆண்களை பூதாகரப்படுத்திக் காட்டும் அல்லது இஸ்லாம் எதிர்ப்பு செயல்திட்டத்துக்குப் பங்களிக்கும் என்கிற நம் அச்சமானது பெண் உரிமைகளுக்கு எதிர்நிலையில் நகர்ந்து, புலம்பெயர்ந்த முஸ்லிம் பெண்களை ஆதரிக்கும், அதிகாரப்படுத்தும் முயற்சிகளைப் பின்னுக்குத் தள்ளாதா? அப்படியொரு அபாயமில்லையா?
நெடுங்காலமாக இருக்கும் குழப்பம்தான் இது. பாலினவாத எதிர்ப்பு (anti sexism) என்பது இனவாத எதிர்ப்புக்கு விரோதமாகவும் மாறியிருக்கிறது. 1960களிலும் 70களிலும் அமெரிக்காவிலுள்ள கறுப்பினப் பெண்ணியவாதிகள் நிறைய எழுதவும், தொடர்ந்து விவாதிக்கவும் செய்த ஒன்றுதான் இது. அதாவது, நம் சமூகத்துக்குள் இருக்கும் பாலினப் பாகுபாட்டினை எதிர்த்துப் பேசினால், அது கறுப்பின ஆண்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படாதா? இதற்கு எளிய பதிலேதும் இல்லை. எந்தச் சமூகத்திலுள்ள பெண்களாக இருந்தாலும், பாலினப் பாகுபாட்டுக்கு எதிராகப் பேசுவதற்கு அந்தப் பெண்களுக்கு நம்மால் இயன்ற எல்லா வழிகளிலும் நாம் உதவ வேண்டும். நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், உண்மையில் நாம் இதைத்தான் செய்கிறோமா? இஸ்லாமோ ஃபோபியா எழுச்சிபெற்றுள்ள, நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமடைந்துள்ள இன்றைய சூழலில் இப்பெண்களின் போராட்டத்துக்கு நாம் எவ்வகையில் ஆதரவளிப்பது? பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம், இனவாதத்துக்கு எதிரான போராட்டம் இரண்டும் இணையாகத் தொடர வேண்டியவை.
(பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் அரசியல் இணைய இதழான ஓபன் டெமாக்ரசிக்கு கல்வியாளர் சாரா ஃபாரிஸ் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்.)
தமிழாக்கம்: நாகூர் ரிஸ்வான்