கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிமியைக் குற்றப்படுத்தாதீர்கள்! – பேரா. இர்ஃபான் அஹ்மது

9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.

2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.

தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI – சிமி) திட்டமிட்டதற்கு வலுவான ஆதாரங்கள் கிடையாது. எனினும், 200 உயிர்களைப் பறித்த மோசமான மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளில் ஒன்றாக சிமி பார்க்கப்பட்டது.

ஒரு தீவிரவாத அமைப்பாக சிமி ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டது முற்றிலும் தவறானது; இஸ்லாம் வெறுப்பிலிருந்து வருவது.

சிமியின் பரிணாம வளர்ச்சியை சற்று கூர்ந்து நோக்கினால் இது புலப்படும். 1996ம் ஆண்டு சிமியில் ‘அன்சார்’ என்று சொல்லப்படும் மைய உறுப்பினர்கள் வெறும் 413 பேர்தான். 2002ல் அன்சார்களின் எண்ணிக்கை 1000க்கும் சற்று குறைவாகவே இருந்தது. என்றாலும், அச்சு ஊடகங்கள், குறிப்பாக அமர் உஜாலா, டைனிக் ஜாக்ரன் மாதிரியான இந்திப் பத்திரிகைகள், அன்சார்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. சிமியை ஒரு தீவிரவாத அமைப்பென்று சொன்னவர்கள், வசதியாக இந்து தேசியவாதச் சக்திகளின் முஸ்லிம் விரோதத்தன்மையை கண்டுகொள்ளவில்லை. அதுதான் தற்காப்புக் காரணங்களுக்காக சிமியை தீவிரப் போக்கினை நோக்கித் தள்ளியது.

வெளிநாட்டு ஜிஹாதிய அமைப்புகளுடன் சிமிக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்பட்டது; உள்நாட்டுக் காரணிகள் உதாசீனப்படுத்தப்பட்டு, முழுக் கவனமும் பாகிஸ்தானின் பக்கம் குவிக்கப்பட்டது. இந்திய தேசத்துக்குத் துரோகமிழைப்பவர்களாய் முஸ்லிம்கள் தூற்றப்பட்டனர். சிமிக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இருந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகான ஒரு நிகழ்வுப்போக்காக சிமி தீவிரவயப்பட்டது (Radicalized) முதன்மையாக உள்நாட்டுக் காரணங்களோடு தொடர்புடைய ஒன்று. சிமி தீவிரவயமானது என்று நாம் குறிப்பிடுவது அது வன்முறைச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தது என்ற அர்த்தத்தில் அல்ல; மாறாக, தீவிரத்தன்மை கொண்ட ஒரு தற்காப்பு மொழியில் அது பேசத் தொடங்கியது என்பதையே.

சிமியின் தொடக்க காலமான 1980களின் மத்தியப் பகுதி தொட்டு, அதன் முதன்மைத் தளமாக மாணவர் சமூகமே இருந்திருக்கிறது. சிமி எழுப்பிய விவகாரங்கள் பெரும்பாலும் கல்வி, சமயம் சார்ந்ததாக இருந்தது. தூய்மைவாத இஸ்லாமியச் சட்டகத்திலிருந்து ஒழுக்கக்கேடு, ஆபாசம், போதைப் பொருள் பயன்பாடு போன்றவற்றுக்கு எதிராக அது பரப்புரை மேற்கொண்டது. கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பரப்புரைகளை முன்னெடுத்தது. சிமி தீவிரவயமானதற்கான அடிப்படையான வினையூக்கி, அயோத்தி இயக்கம் உருவாக்கிய பெரும்பெரும் கலவரங்கள்தாம். அதிகார வர்க்கத்தினர் கலவரக்காரர்களின் பக்கம் சார்பு எடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக நின்றனர்.

1990ம் ஆண்டு நவம்பர் மாதம் உ.பி.யின் 32 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசடைந்திருந்தது. இச்சூழலில்தான் 1991ல் “முஸ்லிம்களுக்கான செயல்திட்டம்” என்ற மாநாட்டை மும்பையில் ஒருங்கிணைத்தது சிமி. முதல்முறையாக அப்போதுதான் அது ஜிஹாதுக்கு அழைப்பு விடுத்தது. இந்து தேசியவாதிகளின் தாக்குதலிலிருந்து முஸ்லிம்கள் தம்மைக் காத்துக்கொள்ள எஞ்சியிருக்கும் ஒரே வழி ஜிஹாதுதான் என்று சிமி வாதிட்டது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையிலும் சூரத்திலும் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களுக்குப் பிறகு, வீர மரணமடைதல் (ஷஹாதத்) எனும் கருப்பொருளையும் சிமி தனது ஜிஹாது அழைப்பில் சேர்த்துக்கொண்டது.

1990களின் இறுதியில் இந்து தேசியவாதிகள் ஆட்சிக்கு வந்த பிறகு சிமியின் தீவிரப்போக்கு அதிகரித்தது. முஹம்மது நபியைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்த அபூ ஜஹ்லுடன் எல்.கே. அத்வானியை ஒப்பிட்டது சிமி.

2004ல் சிமியின் தேசியத் தலைவரை நான் நேர்காணல் செய்தேன். அப்போதுதான் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். பின்வரும் காரணங்களைச் சொல்லி ஜிஹாதுக்கான தேவை இருப்பதாக அவர் வலியுறுத்தினார்:

“நாங்கள் தொடர்ச்சியாகக் கலவரங்களில் கொல்லப்படுகிறோம், எங்கள் சொத்துகள் அழித்தொழிக்கப்படுகின்றன; எங்கள் தாய், தங்கைகளின் கற்பு பட்டப்பகலில் சூறையாடப்படுகிறது. எத்தனை முஸ்லிம்கள் மும்பையிலும் சூரத்திலும் பிற இடங்களிலும் கொல்லப்பட்டார்கள்? குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஜிஹாது செய்ய வேண்டியிருக்கிறது.”

சிமியின் தீவிரப்போக்கு முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது என்பதையே மேலே உள்ள கூற்று நமக்குச் சுட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்கள் உருவாக்கிய அமைப்புகளின் பெயர்களேகூட இந்த விஷயத்தை நமக்குத் தூலமாகப் புலப்படுத்துகின்றன: ’குஜராத் முஸ்லிம் பதிலடிப் படை’, ’முஸ்லிம் பாதுகாப்புப் படை’, ’இஸ்லாமியப் பாதுகாப்புப் படை’, இன்னும் பல.

இவ்வாறிருக்க, இந்து தேசியவாதச் சக்திகள் நடத்திய கலவரங்களின் பின்னணியில் உருவான இந்த அமைப்புகள் அனைத்தையும் ’தீவிரவாத அமைப்புகள்’ என்றே அரசாங்கமும் ஊடகமும் முத்திரை குத்துகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்துநிறுத்த அரசு தவறிவிட்டதன் விளைவுதான் இந்த அமைப்புகள் எனும் உண்மையை இந்த முத்திரை குத்தல் மடைமாற்றம் செய்கிறது.

சுமார் 30 சதவீத சிமி உறுப்பினர்கள் மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். கடந்த இரு தசாப்தங்களில் கலவரங்கள் மிக அதிகம் நடந்த மாநிலங்கள் இவை. அதேவேளை, 1990 தொட்டு எந்தக் கலவரங்களும் நடக்காத பிஹாரில் சிமிக்கு உறுப்பினர்களே இல்லை. கலவரங்கள் நடந்த பகுதிகளுக்கும் இஸ்லாமிசத் தீவிரப்போக்குக்கும் இடையிலான தொடர்பினை இது மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

அதிர்ச்சிகர பகுப்பாய்வுகள் எதுவும் இந்த விவகாரத்தின் சிக்கல்தன்மையையும் ஆழத்தையும் கணக்கில் கொள்வதில்லை. சிமியை ஒரு தீவிரவாத அமைப்பென்று கூறுகின்ற பரபரப்பூட்டும் தலைப்புச் செய்திகளை வாசிக்கையில் எழும் எண்ணம் இதுதான்:

“அரசின் துணையுடன் அதிதீவிர இந்து தேசியவாதிகள் நடத்திய கலவரங்கள் பற்றிய செய்திகளை நாம் எப்போது ஊடகங்களில் கேட்கப் போகிறோம்? அதனோடு தொடர்புடைய சிறு பகுதி மட்டும்தானே சிமி?!”

மும்பை படுகொலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இந்தியாவின் மதச்சார்பின்மை செல்லரிக்கப்படுவது குறித்தும் நாம் ஆய்ந்தறிய வேண்டாமா? ஏனெனில், அவ்வாறு அது செல்லரிக்கப்படுவதன் மீதான ஆத்திரத்தின் எதிரொலிதான் சிமி!

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

(முதன்முறையாக சிமி தடை செய்யப்பட்ட நாள் இன்று.)

Related posts

Leave a Comment