நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

யாத் வஷேம்: வேர்களைத் தேடி…

கன்னட எழுத்தாளர் நேமி சந்த்ராவால் எழுதப்பட்ட ‘யாத்வஷேம்’ நாவலை கே.நல்லதம்பியின் தங்குதடையற்ற மொழியாக்கத்தில் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது.

நேமிசந்த்ரா 1995ம் ஆண்டு இந்நாவலை எழுதத் தொடங்கி, 2006ம் ஆண்டு நிறைவுசெய்துள்ளார். உள்நாட்டு- வெளிநாட்டுப் பயணங்கள், தரவச் சேகரிப்பு எனப் பெரும் உழைப்பை தன்னுள் கொண்டுள்ள நாவலிது.

ஒரு படைப்பாளி, தான் வாழும் சமகாலத்திற்கு முன்னேயும் பின்னேயும் தடங்கலின்றி உலவக்கூடியவர். பதினாறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்நாவலை இன்று காற்புள்ளிகூட மாற்றாமல் இந்தியச் சூழலுக்கு அப்படியே பொருத்த முடியும். மதியற்ற உற்சாக மடையனான ஒரு முற்றதிகாரியின் புதைமிதியின் கீழ் அகப்பட்ட குப்பையாக இவ்வளவு விரைவில் இந்தப் பென்னம்பெரிய நாடு சீரழியும் என்பதை நேமிசந்த்ரா முன்னுணர்ந்திருக்கிறார் போலும்.

ஹிட்லரும் நாஜிகளும் யூதர்கள்மீது ஆடிய வேட்டையை அப்படியே அள்ளி ஆவணப்படுத்தியுள்ளனர் யூதர்கள். தங்கள்மீது உலகம் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதற்காகவே யூதர்கள் தங்கள் மீதான நாஜிக் கொடுமைகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றனர் என்று கருதுவோரும் உள்ளனர்.

“இரண்டாம் உலகப்பெரும்போர்பற்றி ஏராளமான நூல்களையும் ஆவணப்படங்களையும் ஆங்கிலேயர்களும் யூதர்களும் படைத்துக் குவித்துள்ளனர். காரணம், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும்; வரலாற்றில் தாங்கள் இழைக்கும் அநீதிகள் அனைத்தும் ஏற்கனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகத்தான் என்பதை வேறு வகையில் உலகிற்குச் சொல்வதற்காகவும்தான். யூதர்கள் இன்று அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றனர்” என்கிறார் ஆவணப்பட இயக்குநரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார்.

உலகில் நடந்த ஒரே இன அழித்தொழிப்பு ‘ஹோலோகாஸ்ட்’தான் என்ற புகையடித்தலில் அமெரிக்கர்கள் ஆதிகுடிச் செவ்விந்தியர்கள் மீதும் ஆஃப்ரிக்கர்கள் மீதும் நடத்திய இன அழித்தொழிப்புகளும், யூதர்கள் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள்மீது எண்பதாண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை நடத்திவரும் எல்லாவிதக் கொடுமைகளும் மங்கித்தான் போகின்றன.

தங்களுக்குச் சாதகமில்லாத வரலாற்றின் பக்கங்களை சிறியதாக்கித் தட்டையானதாக மாற்றுவதும் ‘வரலாற்றுத் திரிபு’ எனும் குற்றத்துக்குச் சற்றும் குறைவான ஒன்றல்ல.

சாதி, இன, மத, குல நிற, மொழி, பிராந்திய, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் நின்றுகொண்டு, ‘எந்த மனித உயிரும் அநீதியாகக் கொல்லப்படுவதை என்னால் ஏற்க முடியாது’ எனச் சொல்வதற்கு உண்மையிலேயே தனியானதொரு துணிவும் நேர்மையும் வேண்டும்.

கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ்களுக்கு இந்து ராஷ்டிரம் அளித்த அதிஉயர் பரிசுகள் குறித்து நாம் மறந்திருக்க மாட்டோம். நேமிசந்த்ரா போன்ற அரசு ஊழியத்துடன் படைப்புத்துறையிலும் சம நேரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியா போன்ற ஃபாசிஸ மயமாக்கப்பட்டு வரும் நாடுகளில் துணிவு நேர்மையுடன், கூடவே தனது உயிரைத் துச்சமாக்கி மதிக்கவும் தெரிய வேண்டும். நேமிசந்த்ரா அந்த அளவுகோலின் உச்சத்தில் நிற்கிறார்.

இந்த நாவலைப் படித்த பிறகு நேமிசந்த்ரா அவர்களுடனும், மொழியாக்கிய நல்லதம்பி அவர்களுடனும் பேசினேன். நான் எனது நன்றியை வெளிப்படுத்தியபோது நேமிசந்த்ரா கூறினார், “எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம்தான்”. அவர் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். அவர் சொன்னதை அப்படியே திருப்பிப்போட்டுச் சொன்னேன், “இவைபோன்ற எழுத்துக்களால்தான் இந்தியா இன்னும் கொஞ்சமேனும் இந்தியாவாக நீடிக்கிறது“.

இந்தியா, ஜெர்மனி, இஸ்ராயீல் (இஸ்ரேல்) என்ற மூன்று நிலப்பரப்புக்களையும் களனாகக் கொண்டு நடக்கிறது இந்த நாவல்.

ஹோலோகாஸ்டில் தப்பிப் பிழைத்த தகப்பனும் மகளும் அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வருகின்றனர். தகப்பன் இந்தியாவிலேயே இறந்துபோக தனித்து விடப்படும் மகள் ஓர் இந்துக் குடும்பத்தினரால் போற்றி வளர்க்கப்படுகிறார்.

தனது சிறு வயதின் மிகக் குறைந்த வருடங்களை ஜெர்மனியில் கழித்த அந்த யூதப்பெண் நச்சுக்காற்று, எரியூட்டும் அறைகளில் முடிந்துபோன தன் அம்மா, அக்கா, தம்பியின் நினைவுகளால் வாடுகிறார். வரலாற்றில் சாம்பலாகக் கூட எஞ்சியிராத தனது வேர்களைத் தேடி, அழிவின் எச்சங்களை-தடங்களைத் தேடி இஸ்ராயீலுக்கும் ஹோலோகாஸ்ட் நடந்த நிலமான ஜெர்மனிக்கும் தான் காதலித்து மணமுடித்த இந்துக் கணவனுடன் பயணிக்கிறார்.

புகையாகிக் கரைந்துபோன தன் குடும்பத்தின் மீதான ஏக்கத்தைச் சுமந்துகொண்டு அவர் மேற்கொள்ளும் அந்தப் பயணத்தில் அவர் பெற்ற பார்வைகள், அடைந்த கண்ணோட்டங்கள் நாவல் முழுக்கப் பரவியிருக்கின்றன.

உலர்ந்த, வற்றிய சருகுகள்தான் நெருப்பை விழுங்குகின்றன. எல்லோரும் கூடி வாழும் ஒரு நாட்டில் ரத்தமும் சதையுமாய் ஊனும் நிணமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதத் தொகையினரை எல்லோரையும் சாட்சியாக்கிக் கொன்றொழிக்க எப்படி முடிகிறது? அதைத்தான் இந்த நாவல் கேள்விகளாக்கி, கள்ள மௌனம் சாதிக்கும் பெரும்பான்மையினரின் முகத்திற்கு நேரே நீட்டுகிறது.

இதுபோன்ற இன அழித்தொழிப்புக்கள் நடக்கும்போது பெரும்பான்மையினர் கள்ள மௌனம் காப்பது மட்டுமில்லை. பல நேரங்களில் அவர்களே நேரடிப் பங்கேற்பாளர்களாகவும் இருப்பதோடு அந்தக் கொலைப் படலத்தில் சிறு சலனம்கூட இல்லாமல் எவ்வாறெல்லாம் ஆதாயமடைகின்றனர் என்பதையும்; இக்கூட்டுப் பாதகத்தில் பங்கேற்போர் உதிரிகள் மட்டுமல்ல, சமூகத்தின் உயர் அடுக்கில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள் என்பதையும் உறுத்தும் அம்மணமாக்கி நம் முன் நிறுத்துகிறது நாவல். குஜராத்தும் உத்திரபிரதேசம் அடங்கலான வடபுலமும் நினைவின் எல்லாப் பக்கங்களையும் கறுப்பாக்கிக் கொண்டு நமக்குள் உறைந்துபோக மறுக்கின்றன.

இங்குள்ள தமிழ் இந்து நாளிதழ், நரேந்திர மோதிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்திக் குதூகலிப்பதைப் போல கம்யூனிஸ்டுகள், மாற்றுத் திறனாளிகள், யூதர்கள் ஆகியோருக்கெதிரான அழித்தொழிப்பை ஹிட்லரும் நாஜிப் படையினரும் நிகழ்த்தியபோது ஹிட்லருக்கு ‘ஆகச்சிறந்த மனிதர்’ எனும் பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தன ஜர்மானிய ஊடகங்கள்.

“வெளிலதான் பிரச்ன. இங்க எல்லாரும் சவுரியமாத்தான் இருக்கோம்“ எனப் பல் குத்திக் கொண்டே எல்லா கொடூரங்களையும் கடந்து செல்லும் பெரும்பான்மையின் மூளையில் ஆணியை இறக்குகிறது இக்கதை.

உலகை உய்விக்கவந்த பெரு-சிறு மதங்களின் நந்தவனங்களிலிருந்துதான் மென்னிதழ்களைக் கொண்ட பூக்களும் கருக்கிப்போடும் கந்தக உருண்டைகளும் அறுவடை செய்யப்படுகின்றன. ஒடுக்கப்படும் ஒரு மனிதத்திரள் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையான பிறகு, வலியதொரு கட்டாய மறதித் திரையை தம் மீது போர்த்திக்கொண்டு சக மானுடக் கூட்டத்தின் மீது ஆயுதங்களைப் பிரயோகிக்கிறது.

ஹிட்லரின் நாஜிஸம்தான் இஸ்ராயீலில் ஸியோனிசமாகவும் இந்தியாவில் இந்துத்துவமாகவும் உருவெடுத்துள்ளன என்ற சமகால அரசியல் பருண்மையை பசப்பி மழுப்பாமல் நெஞ்சுரக்கச் சொல்லி நிலைக்கிறது கதை. ஹிட்லரும் நாஜிஸமும் நாடுகள் என்ற வெற்று மண் பரப்புக்களிலிருந்து கிளைப்பதல்ல; எனக்குள்ளும் உங்களுக்குள்ளும் எப்போது வேண்டுமானாலும் அவை முளைக்க முடியும் எனப் பிரச்னையின் மூலாதாரம் நாம் தப்பி ஓட முடியாத ஓரிடத்திலிருந்து அடையாளம் காட்டப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த நாவலை ஏன் நாம் வாசிக்க வேண்டும் என்பதற்கு நாவலில் வரும் கீழ்க்கண்ட வரிகளே போதுமானவை:

“யூதர்களின் மீது வன்மம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அதற்கு விலை கொடுத்தவர்கள் அரேபியர்கள்.”

“உங்கள் நாட்டை நேசியுங்கள், உங்கள் அரசை சந்தேகப்படுங்கள்.”

“நான் நானாகவும் அவர்கள் அவர்களாகவும் இருந்துகொண்டே நாமாக முடியும்.”

Related posts

Leave a Comment