இமாம் அல் கஸ்ஸாலிகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையும் (1)

Loading

தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.

இந்தச் சிந்தனை மிக எளிமையாகவும், அறிவியல் பார்வையற்றதாகவும் தோன்றலாம். புறவுலகைப் பற்றிய பொதுவான கருத்துக்குப் பொருத்தமில்லாததாகவும் தோன்றலாம். பொதுவான புரிதலில் இப்பிரபஞ்சம் காலத்தால் நிற்கும், நிலையான பொருட்களால் உருவானவை. அப்பொருட்களின் செயல்பாடுகளை தர்க்கமுறையாலும், அனுமானித்தலின் மூலமாகவும் அறிய முடியும். நியூட்டனின் தத்துவமான இயந்திரவியல் பார்வையில் இவ்வுலகைப் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இதுவே பல நூற்றாண்டுகளாக அறிவியலின் அடித்தளமாக உள்ளது. இன்னும் பெருவாரியான மக்கள் உலகத்தை ஓர் இயந்திர மாதிரியாக விளக்குவதை நம்புகிறார்கள். அறிவியல் முன்னேற்றத்திற்குக் காரணமான குவாண்டம் கருத்துகளானது உலகத்தின் இயந்திர மாதிரியைக் கேள்வியெழுப்பியதுடன், இந்தப் பௌதீக உலகம் உண்மையில் வேறுபட்டது என்பதைச் சுட்டியது.

குவாண்டம் கருத்துகளானது பௌதீகமாக இருப்பவற்றின் இயல்பையும், அவை செயல்படும் விதங்களையும் விளக்குவதைத் தன் தேடலாகக் கொண்டது. 20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இப்பிரபஞ்சத்தை அக்கால நடைமுறையிலிருந்த இயந்திரவியல் பார்வையுடன் இணைக்க முடியாத புதிய அறிவியல் தரவுகளுக்கு விடையளிக்கும் வகையில் குவாண்டம் கொள்கை தோற்றம் பெற்றது. முதன்முதலில் முன்மொழியப்பட்டதிலிருந்து இதன் கோட்பாட்டின் அரூபத்தாலும், கணித இயல்பின் காரணமாகவும், சரியான பௌதீக விளக்கங்களில் பெரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், மிகப் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட காபன்ஹேகன் (Copenhagen) குவாண்டம் கருத்தின் விளக்கத்திற்கும், இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைக்கும் உள்ள ஒப்புமைகளை விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இவற்றுக்கு மத்தியில் கலாச்சாரம் மற்றும் பல நூற்றாண்டு கால இடைவெளி இருந்தாலும், இவ்விரு பிரிவிலும் ஒரே மாதிரியான சிந்தனைகள் இணைந்திருக்கின்றன. அதில் ஒத்துப்போவதில் முக்கியமாக உலகத்தின் காரண காரியமும், பௌதீகப் பொருட்களின் இயல்பும் மற்றும் எந்த எல்லைவரை பொருட்களின் செயல்பாடுகள் குறித்து அனுமானிக்க முடியும் என்பது போன்ற ஒத்தச் சிந்தனைகளைக் காண முடிகிறது.

மேற்கத்தியச் சிந்தனை நீண்ட காலமாக பொருட்கள் குறித்த ஆய்வுகளுக்கும், கடவுள் குறித்த ஆய்வுகளுக்கும் வேறுபாட்டை அமைத்துள்ளது. அறிவியல் என்பது பொருட்கள் குறித்த ஆய்விற்கும், இயற்கை குறித்த ஆய்விற்குமாகும். கடவுள் குறித்த ஆய்வுமுறையே தத்துவம் மற்றும் இறையியலிற்குச் சொந்தமாகும். இருப்பினும், இந்த இடைவெளியினால் தன்னளவில் சிக்கல்கள் எழுகின்றன என்ற விழிப்புணர்வும் பெருகி வருகிறது. பல விஞ்ஞானிகள் பொருட்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகளைக் கட்டுப்படுத்த விரும்பினாலும், குவாண்டம் கொள்கை விஞ்ஞானிகளில் பலருக்கு அறிவியலிலுள்ள மெய்யியல் சார்ந்த கேள்விகளை எழுப்பக் காரணமாய் உள்ளது.

குவாண்டம் கோட்பாட்டை ஆதரிக்கும் தரவுகள் வலுவானவை என்பதால் அதைப் புறக்கணிக்க முடியாது. இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதென்பது, பல விஞ்ஞானிகளை குவாண்டம் சிந்தனைகளோடு கொண்டு வர விஞ்ஞானப் புதுமுயற்சிக்கு அடிப்படையான சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது.

விஞ்ஞான முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்துவரும் கோட்பாடுகள் அறிவியலிலுள்ள மெய்யியல் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. இதைவிட, இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையாளர்களும் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்பதில் ஆச்சரியமில்லை. ஒரே மாதிரியான கேள்விகள் என்றால் கேட்கப்பட்ட தொனி ஒரே மாதிரியானது என்று அர்த்தமில்லை அல்லது எந்த வடிவிலும் ஒன்றையொன்று செல்வாக்கு செலுத்தியது என்றும் குறிக்கவில்லை.

இமாம் கஸ்ஸாலியையும், அவரது சமகாலத்தவர்களையும் விசாரத்துக்கு உள்ளாக்கிய கேள்விகள்: “அன்றாட நிகழ்வுகளில் இறைவனின் பங்கு என்ன?” அல்லது “அற்புதங்கள் நிகழ்வது எப்படி சாத்தியம்?” மறுபுறம், குவாண்டம் கொள்கை, “இரு நிகழ்வுகளுக்கு இடையே காரணத்திற்கான இணைப்புள்ளதா?” அல்லது “எந்த எல்லைவரை பௌதீகமான பொருட்களின் செயல்பாடுகளை முன்னனுமானிக்க முடியும்?” என்று கேட்கிறது. வார்த்தைகளும், அதன் உள்ளடக்கமும் வெவ்வேறாக இருந்தாலும் இக்கேள்விகளின் அடிநாதம் ஒன்றுபோலுள்ளது. இவ்விரு ஒப்பீட்டிலும் கேள்விகள் உலக நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள காரணத்தைச் சுற்றியே சுழல்வதுடன், எந்த எல்லைவரை நிகழ்வுகளை முன்னனுமானிக்க முடியும் என்பதைச் சுற்றியே உள்ளது. ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வுக்குக் காரணமாக உள்ளதா அல்லது அந்நிகழ்வு நிகழ்வதற்கு வேறேதேனும் வெளிப்புற விசையுள்ளதா என இரண்டும் கேட்கிறது.

இந்த இரண்டு சிந்தனைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளின் விசாரமே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதன் பொதுவான தன்மைகள் நம்மை வியக்க வைக்கின்றன. உதாரணமாக, பொருட்களின் செயல்பாடுகளிலுள்ள ஒழுங்குகள் காரண காரிய விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதை இரண்டுமே மறுக்கிறது. மேலும், இரண்டும் உலகத்தின் நிகழ்வுகளை உறுதியாக முன்னனுமானிக்க முடியாது என்பதை ஏற்கிறது. இரண்டும் எதிர்பாராத, முன்னனுமானிக்க முடியாத விஷயங்கள் நடக்கும், நடக்கலாம் என்பதை ஏற்கிறது.

இமாம் கஸ்ஸாலியின் விளக்கத்தின்படி, இறைவன் சர்வ வல்லமையுள்ளவன், இந்த உலகத்தில் ஒவ்வொரு தருணத்திலும் அகப்படுத்தியுள்ளவராகவும் இருப்பதனால், எதையும் நிகழ்த்த முடியும்.

காபன்ஹேகனின் குவாண்டம் கொள்கையின் விளக்கத்தில், பௌதீக விதிகளைக் கொண்டு ஒரு பொருளின் அசலான செயல்பாடுகளை அனுமானிக்க சாத்தியமில்லை. இதன் விளைவாக, ஒரு ஈயப் பந்தை (lead ball) விழ வைக்கும்போது, அந்த பந்து கீழே விழுவதற்குப் பதிலாக மீண்டும் மேலெழுவதற்கான சாத்தியங்களையும் எதிர்பார்க்க முடியும்.

ஒரு யதார்த்தமான பொருளிற்கு தனிப்பட்ட இருப்பிருப்பதை இமாம் கஸ்ஸாலியின் விளக்கமும், காபன்ஹேகனின் விளக்கமும் சந்தேகிக்கிறது. “பொருள்” என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டால் உதவியாக இருக்கும். சாதாரண மொழியில் “பொருள்” என்பது வெளியில் தனக்கென எடுத்துக்கொண்ட இடத்தையும், வெளி சூழ்நிலையில் ஒன்றை வேறுபடுத்தும் குறிபிட்ட பண்புகளையும் கொண்டதாகும். உதாரணமாக, ஈயப் பந்து போன்ற பொருளிற்கென குறிப்பிட்ட பண்புகள் அதன் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், இந்தப் பண்புகள் நிலைத்து நிற்கக் கூடியதாகவும், காலத்தால் தொடர்ந்து அதே விதமான விதிகளின்படி பந்து செயல்படும் என்றும் கருதப்படுகிறது. ஒரு ஈயப் பந்து கீழே விழும்போது அது விழுகிறது, ஏனெனில் அது அவ்வாறாகச் செயல்பட கனமான பொருளியல்பைக் கொண்டது.

நான் சுட்டிக்காட்டியுள்ள ஒற்றுமைகளை முழுமையாக விவாதிக்க வாசகர்கள் இமாம் கஸ்ஸாலியின் கருத்துகளிலும், குவாண்டம் கோட்பாட்டின் சில அடிப்படைக் கருத்துகளிலும் ஓரளவு பரிச்சயம் பெற்றிருப்பது அவசியம். இதன் பின்னணியை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன். இவ்விரண்டுக்கு இடையிலான ஒற்றுமையிலிருக்கும் சிறப்பம்சத்தை இறுதிப் பகுதியில் எதிர்பார்க்கலாம்.

(Karen Harding எழுதிய Causality Then and Now: Al-Ghazali and Quantum Theory என்ற நீண்ட கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)

Related posts

Leave a Comment