5 states election results 2022காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

பாஜகவின் தேர்தல் வெற்றிகளும் முஸ்லிம்களும்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையொட்டி சகோதரன் இணையதள ஆசிரியர் பஷீர் அஹ்மதுடன் மெய்ப்பொருள் ஆசிரியர் நாகூர் ரிஸ்வான் மேற்கொண்ட உரையாடல்.

சகோதரன் யூடியூப் சேனலில் வெளியான பேட்டியின் எழுத்தாக்கம் இது. இதில் கூடுதலாக சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
நேர்கண்டவர்: பஷீர் அஹ்மது

கே: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களின் முடிவுகள் எதை உணர்த்துகின்றன?

ப: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மனிப்பூர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், பஞ்சாப் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றிருக்கிறது. பாஜகவின் வெற்றியை பெரும்பான்மைவாதத்தின் எழுச்சியாகவே பார்க்க முடிகிறது. இந்துத்துவம் தன் செயல்திட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல இந்த வெற்றி உத்வேகமளிக்கும்.

கே: நேரு குடும்பம் காங்கிரஸிலிருந்து வெளியேறினால்தான் காங்கிரஸ் கட்சி பிழைக்கும் என்கிறார்களே..?

ப: ராமசந்திர குஹா போன்றோர் இதைத் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அவ்வளவு வலுவானதாக இல்லை. தேர்தலில் பாஜகவை வீழ்த்த நினைப்போர்கூட தவறான பல கோணங்களில் பாஜகவின் வெற்றியைப் புரிந்துகொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் நேரு குடும்பம் காங்கிரஸிலிருந்து வெளியேறிவிட்டால் அந்தக் கட்சி பலமடைந்துவிடும், பாஜக தோற்றுவிடும் என்ற கணக்கு. உண்மையான பிரச்னை எது என்பதை அடையாளம் காணாமல், வெறுமனே சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் விலக்கி நிறுத்த முயல்வதால் யாருக்குப் பயன்? இப்போது தேசிய அளவில் நரேந்திர மோடிக்கு நிகராக முன்னிறுத்துவதற்கு யார் இருக்கிறார்கள்? பாஜககூட மோடிக்கு அடுத்தபடியாக ஆதித்யநாத்தை முன்னிறுத்துகிறது. இத்தகைய சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் முகமாக உள்ள ராகுல் காந்தியை விலகச் சொல்வது எப்படி ஒரு தீர்வாக அமையும்?

கே: எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமா?

ப: பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு சதவீதம் பெரியளவுக்கு இல்லை. நடப்பிலுள்ள FPTP தேர்தல்முறையால் அது அதிக தொகுதிகளைப் பெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராய் பலமான கூட்டணியை உருவாக்கினால் தேர்தலில் அதைத் தோற்கடிப்பது இயலுமான ஒன்றுதான். சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கூட ‘அனைத்து இந்திய சமூகநீதி சம்மேளனம்’ எனும் பெயரில் ஒரு தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மாநில உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் நலன், மொழியுரிமை போன்ற பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டணியை உருவாக்கி, சரியான விதத்தில் அதைக் கொண்டு சென்றால் அது பாஜகவுக்குப் பெரும் சவாலாக விளங்கக்கூடும்.

மேலும், பலமான கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்துவது மட்டும் போதாது. அது அவர்களுக்குத் தற்காலிகப் பின்னடைவையே கொடுக்கும். எனவே, பெரும்பான்மைவாதத்தையும் இந்து தேசியவாதத்தையும் வேரோடு பிடுங்காமல் நமக்கு விடிவு இல்லை. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தவிர மற்ற அனைத்து சமூகங்களையும் இந்து எனும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது பெரும்பான்மைவாதத்தின் அடிநாதம். அதை மதச்சார்பற்ற கட்சிகள் கேள்வி கேட்குமா? அதேபோல், தீவிர தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்குமா? அவ்வாறு செய்யத் துணியாதவரை பாஜகவை முற்றிலுமாக வீழ்த்துவது கடினமே.

சங் பரிவாரம் இட ஒதுக்கீடு போன்றவற்றைக் கண்டு அலறுவதற்குக் காரணம் அவை இந்து என்ற பெருந்தொகுப்பில் ஓர் உடைவை ஏற்படுத்துவதால்தான். அதுபோலவே, மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்றெல்லாம் பேசும்போது இந்தியாவின் பெயரால் மக்களை அவர்களால் அணிதிரட்ட முடிவதில்லை. இந்து, இந்தி, இந்தியா எனச் சொல்லி சங் பரிவாரம் தமிழ்நாட்டில் வளர முடியாததற்குக் காரணம் இதுவே. மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் சமூகநீதி சம்மேளனத்தை நான் ஆதரிக்கக் காரணம், முதல்கட்டமாக பாஜகவை வீழ்த்தத் தேவையான அடிப்படை அதில் இருப்பதாகத் தோன்றுகிறது.

கே: உபியில் சமாஜ்வாதி கட்சி தோற்க அசதுத்தீன் உவைசியின் கட்சிதான் காரணமா?

ப: ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் AIMIM 97 தொகுதிகளில் போட்டியிட்டு 96 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. 0.5%-தான் அதன் வாக்கு சதவீதம். அங்கே தலித்கள், ஓபிசியினர் வைத்திருக்கும் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் உவைசி. பாஜகவின் B டீம் என்றும், வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் வழமைபோல் இவரை சாடுகின்றனர். தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால் பாஜகவின் வெற்றிக்கும் உவைசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். எனினும், எந்த அடிப்படையும் இல்லாமல் எல்லாத் தேர்தல்களிலும் தங்கள் தோல்விக்கு உவைசியைக் காரணமாக்குவது மதச்சார்பற்ற மையநீரோட்ட கட்சிகளின் வழக்கமாகிவிட்டது.

முஸ்லிம் வாக்குகளில் மிகச் சொற்பமான அளவு சிதறினால்கூட ஆவேசமடையும் இந்தக் கட்சிகள், தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்போரைக் குறைகாண்பதே இல்லை. அவர்கள் ஏன் வாக்களிக்கிறார்கள் என்பதை யோசிக்கவோ, இந்துத்துவம் பொது ஏற்பு பெறுவதை இனங்காணவோ, அதை முறியடிக்கவோ இவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்கள், யாதவ்கள், பட்டியலின ஜாதவ்கள் தவிர்த்து இந்துத் தொகுப்பிலுள்ள அனைத்து சாதியினரும் சேர்ந்துதான் பாஜகவை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவருவது என்னவென்றால், இடைநிலைச் சாதியினர் பாதிக்கும் மேல் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்; பார்ப்பனர்கள், ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட உயர் சாதியினரின் முக்கால் பங்கு வாக்குகள் பாஜகவுக்குப் போயிருக்கிறது. பட்டியலினத்தவர்கள் வாக்குகளையும்கூட அந்தக் கட்சி ஒரு குறிப்பிட்ட அளவு அறுவடை செய்துள்ளது. அடுத்த தேர்தலில் இதையெல்லாம் தடுக்க மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?

கே: உவைசியால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறீர்களா?

ப: ஒரு யதார்த்தம் என்னவென்றால் எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக உள்ள பலமான கூட்டணி எதுவோ அதற்குத்தான் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள்; வெகுசிலர் வேண்டுமானால் AIMIM போன்ற வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். அது தேர்தல் முடிவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கடந்த 2020 பிஹார் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட்ட உவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சி போட்டியிட்ட பிற 9 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி வென்றது; மீதமுள்ள 6 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அந்த 6 இடங்களை ஆராய்ந்தால், பாஜக வென்ற ராணிகஞ்ச் என்ற ஒரே ஒரு தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் AIMIM பெற்ற வாக்குகளை ஆர்ஜேடி-யின் வாக்குகளுடன் சேர்த்தாலும்கூட அது ஜெயிக்க வாய்ப்பில்லை என்ற நிலைதான்.

ராணிகஞ்ச் என்பது தனித்தொகுதி; அதில் உவைசி தலித் பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், கடந்த காலங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிக்கும் சில முஸ்லிம் தொகுதிகள் இருப்பதாகவும், அந்தக் கட்சி பாஜகவுடன் சேர்ந்துகொண்டதால் அங்குள்ளோர் ஆர்ஜேடி-க்கு மாற்றாக AIMIM-ஐத் தெரிவு செய்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கே: பாஜக வெல்வதற்கு மக்களிடம் கல்வியறிவு இல்லாததே காரணம் என்று சொல்வது சரியா?

ப: இதுவொரு சிறுபிள்ளைத்தனமான, யதார்த்தத்துக்கு முரணான வாதம். ஏழைகளாலும் படிப்பறிவில்லாதவர்களாலும்தான் பாஜக வெற்றி பெறுகிறதா? உபியில் யோகி ஆதித்யநாத்தை ஆட்சியில் அமர வைத்ததில் அங்குள்ள உயர் சாதியினரான பிராமணர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் பெரும் பங்கிருப்பதை யாராவது மறுக்க முடியுமா? அவர்களெல்லாம் கல்வியறிவு இல்லாதவர்களா?

பாஜகவை மீம் கன்டெண்ட் என்ற அளவில் குறைத்து மதிப்பிடுவதால் ஏற்படும் விளைவால்தான் இப்படியான வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள் என்றே கருத முடிகிறது. இவர்கள் இன்னும் இந்து தேசியவாதத்தை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. பாஜக ஒரு முட்டாள் கட்சி, படிக்காதவர்களே அதை ஆதரிப்பார்கள், சரியாக ஆட்சி செய்யாவிட்டாலும் அதை வெற்றிபெறச் செய்கிறார்கள் என இவர்கள் நினைக்கிறார்கள். எதிரியை இப்படி மிகவும் குறைத்து மதிப்பிடுவது இவர்களின் பலவீனத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது. எதிரி தங்களை எளிதாக வீழ்த்த இவர்களே வழியமைத்துக் கொடுக்கிறார்கள்.

கே: முஸ்லிம் அரசியல் கட்சிகளின் இருப்பே ஒரு பிரச்னைக்குரியதாகப் பார்க்கப்படுகிறதே..?

ப: பொதுவெளியில் முஸ்லிம்களின் அடையாளங்களும் கலாச்சாரங்களும் தீவிரமாக ஒடுக்கப்படுகின்றன. பல தரப்புகள் அவற்றையெல்லாம் கைவிடும்படி முஸ்லிம்களை நிர்பந்திக்கின்றன. அரசியல் களத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒழித்துக்கட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பான்மைவாதத்தின் எழுச்சியால் இப்படியான அழுத்தங்கள் மேன்மேலும் கூர்மையடைந்துள்ளன. இதனால் முஸ்லிம்கள் தமக்குள் உரையாட வேண்டிய பலவற்றைக்கூட உரையாட முடியாத சூழல் நிலவுகிறது. என்றாலும், முஸ்லிம்கள் இந்த அழுத்தங்களுக்கெல்லாம் பணியாமல் தம் அடையாளங்களை assert செய்ய வேண்டும்.

இந்தியாவில் சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி என்று எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் சாதி மதப் பின்புலம் உண்டு. சமாஜ்வாதி கட்சி யாதவர்களையும், அகாலி தளம் சீக்கியர்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஜாதவ் தலித்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள்தானே? ஆனால் முஸ்லிம்கள் அரசியல் கட்சி வைத்திருப்பது மட்டும் குற்றமா?

உவைசியைக் கண்மூடித்தமாக எதிர்க்கும் மதச்சார்பற்றவாதிகள் அவரிடமுள்ள பிரச்னையாகக் கருதுவது அவரின் தேர்தல் உத்தியை மட்டுமல்ல, முஸ்லிம் அரசியல் உருவாக்கத்தையே அவர்கள் எதிர்மறையாகப் பார்க்கிறார்கள்; மதச்சார்பின்மைக்கு விரோதமானதாக அதைக் கருதுகிறார்கள். முஸ்லிம்கள் மையநீரோட்டக் கட்சிகளில் இருக்கலாம், ஆனால் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதனால்தான் உபி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதைக் காட்டிலும் உவைசியின் கட்சி போட்டியிடுவதை இவர்கள் பிரச்னையாக்குகிறார்கள்.

கே: இறுதியாக ஒன்று. தற்காலச் சூழலில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ப: முஸ்லிம் சமூகம் ஒன்றிணைவது, தங்களின் எல்லா விதமான வளங்களையும் ஒருமுகப்படுத்துவது, சமூக நிறுவனங்களான கல்விக்கூடம், ஊடகம், பைத்துல்மால் போன்றவற்றை உருவாக்குவது/ பலப்படுத்துவது, அரசியல் தளத்தில் தம் இருப்பை உறுதி செய்வது முதலானவற்றை அவர்கள் கைக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அரசியல் கட்சி வலுவாக இருந்தால் மையநீரோட்டத்தில் அதைக் கொண்டு லாபி செய்ய முடியும். சமூக நிறுவனங்களை வளர்த்தெடுத்தால் அது முஸ்லிம்கள் ஆற்றல்படவும், சமூகம் வலுப்பெறவும் வழியேற்படும். அப்போதுதான் முஸ்லிம்களை எளிதாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க முடியாத நிலை உண்டாகும்.

Related posts

Leave a Comment