தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

[இஸ்லாத்திற்கென்று தனித்த, அனைத்தையும் தழுவிய ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கின்றது. இஸ்லாம் முன்வைக்கும் இறைக் கோட்பாடு தொடங்கி, அது கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வரை அனைத்தும் அதிலிருந்தே பிறக்கின்றன. அதனை இரத்தின சுருக்கமாக, திட்டவட்டமான முறையில் வரைவிலக்கணம் செய்யும் முயற்சியில்  சையித் குதுப் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) என்பது தலைப்பு. இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக நிலைநிறுத்த உழைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய சாராம்சமான விசயங்களை அவர் அதில் முன்வைத்துள்ளார். இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்பதென்ன என்று விளங்க முயலும் அனைவருக்கும் இது நல்லதொரு அறிமுகப் பிரதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

நூலின் மொழிபெயர்ப்பை ‘மெய்ப்பொருள்’ தளத்தில் தவணை முறையில் வெளியிட எண்ணியிருக்கிறோம். கடைசியில் தொகுத்து புத்தகமாக பதிப்பிக்கும் எண்ணமிருக்கிறது, இன்ஷா அல்லாஹ். புத்தகத்துடைய முன்னுரையின் முதற் பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம்.]

**********************************

அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இந்த நூலில் நான் கையாண்டுள்ள வழிமுறையைப்பற்றி

“நிச்சயமாக இந்தக் குர்ஆன் நேரான வழியைக் காட்டுகிறது.”

இந்தத் தலைப்பில் பேசப்பட வேண்டியது பல்வேறு காரணங்களால் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

  1. மனித இருப்பைக் குறித்த அனைத்தையும் தழுவிய, பரிபூரணமான விளக்கத்தை அறிந்து கொள்வது ஒரு முஸ்லிமுக்கு அவசியமான ஒன்றாகும். அந்த அடிப்படையில்தான் அவன் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அணுக முடியும்.
  2. அதே போன்று அவனைச் சுற்றிக் காணப்படும் படைப்புகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும், இயக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளை அவனுக்குத் தெளிவுபடுத்தக்கூடிய எளிமையான ஓர் விளக்கம் அளிப்பதும் அவசியமான ஒன்றாகும். அது பிரபஞ்சம், வாழ்க்கை மற்றும் மனிதனைக் குறித்த இயல்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  3. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதும் அவசியமான ஒன்றாகும். இந்த அறிதல்களிலிருந்தே இந்த உலகில் மனிதன் ஆற்ற வேண்டிய பணி, அவனுக்கு வழங்கப்பட்ட சிறப்புகளின் வரம்புகள், அவனையும் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்த அந்தப் படைப்பாளனுக்கும் அவனுக்குமான தொடர்பின் எல்லைகள் ஆகியவை தெளிவாகிறது.
  4. மேலும் அனைத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் வாழ்க்கையின் வழிமுறையும் அந்த வழிமுறையை நிலைநிறுத்தக்கூடிய அமைப்பின் வகையும் நிர்ணயமாகிறது. மனித வாழ்வை ஆட்சி செய்யக்கூடிய அமைப்பின் வகையை, அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான இந்த விளக்கத்தைக் கொண்டே அறிய முடிகிறது. அந்த அமைப்பு இந்த அறிதல்களிலிருந்து வெளிப்படும் இயல்பான வெளிப்பாடாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது செயற்கையான, ஆழமற்ற, விரைவில் அழிந்துவிடக்கூடிய ஒன்றாகிவிடும். அவ்வகையான அமைப்பு நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, மனித இயல்புக்கும் மனிதனின் இயல்பான தேவைகளுக்கும் அந்த அமைப்பிற்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாக இருக்கும். இது விதிவிலக்கின்றி இந்த உலகிலுள்ள எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். குறிப்பாக தங்களை முன்னேற்றமடைந்த சமூகத்தினர் என்று சொல்லிக் கொள்வோருக்கும்.
  5. இந்த மார்க்கம் தனித்துவமிக்க ஒரு சமூகத்தை கட்டமைப்பதற்காக வந்த மார்க்கமாகும். அந்த சமூகம் முழு மனித சமூகத்தையும் வழிநடத்துவதற்காகவும் வழிகெட்ட தலைமைகள், தவறான வழிமுறைகள் மற்றும் கண்ணோட்டங்கள் ஆகியவற்றிலிருந்து மனித சமூகத்தை விடுவிப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமாகும். (இன்றும் மனித சமூகம் வழிகெட்ட தலைவர்களால், தவறான வழிமுறைகள் மற்றும் சித்தாத்தங்களால் பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது).
  6. இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்தின் இயல்பையும் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ளும் நம்பிக்கையாளன் தனித்துவமிக்க இந்த சமூகத்தைக் கட்டமைப்பதில் சிறந்த முறையில் பங்காற்றுகிறான். மேலும் அவர்களை வழிநடத்துவதற்கும் அறியாமை என்னும் காரிருளிலிருந்து விடுவிப்பதற்கும் ஆற்றல் பெறுகிறான்.

இந்தக் கண்ணோட்டம்தான் செயல்படுத்தத்தக்க அமைப்பாக உருமாறுகிறது. அந்த அமைப்பு கண்ணோட்டத்தை அடித்தளமாகக் கொண்டது. அது வெவ்வேறு தளங்களில் தனி மனிதனையும் சமூகத்தையும் இயக்குகிறது.

திருக்குர்ஆன் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த விளக்கத்தை மனிதர்களுக்கு பரிபூரணமான வடிவில் வழங்கியது. அது மனிதனின் அனைத்துப் பகுதிகளையும் எதிர்கொண்டது. அவனது அறிவு, உணர்வு, இயல்பு என அனைத்தையும் விளித்து உரையாடியது. அதேபோன்று அவனது புற உலகோடும் சரியான அணுகுமுறையை மேற்கொண்டது. அது படைப்பாளன் எந்த இயல்பில் மனிதனைப் படைத்தானோ அதனோடு முழுமையாக ஒன்றிப்போனது.

திருக்குர்ஆனிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டே அந்த முதல் முஸ்லிம் தலைமுறை தம்மைக் கட்டமைத்துக் கொண்டது. மனித சமூகத்தை தனித்துவமான முறையில் வழிநடத்தியது. மனித சமூகம் அதற்கு முன்பும் பின்பும் அதைப்போன்றதைக் கண்டதில்லை. அது மனித வாழ்வில் -அதன் அக வாழ்விலும் புற வாழ்விலும்- வரலாறு காணாத தனித்துவமிக்க இந்த முன்மாதிரியை நிகழ்த்திக் காட்டியது. திருக்குர்ஆனே அந்த சமூகத்தின் மூலாதாரமாக விளங்கியது. அது மனித சமூகத்தில் தோன்றிய ஆச்சரியமான தலைமுறையாக, திருக்குர்ஆனின் வசனங்களினால் தம்மைக் கட்டமைத்துக் கொண்ட சமூகமாக இருந்தது. அதைக் கொண்டே அந்த சமூகம் வாழ்ந்தது. அதையே முழுமையாகச் சார்ந்திருந்தது.

‘சுன்னா’ என்று சொல்லப்படக்கூடிய நபியின் சொல்லும் செயலும் அந்தக் குர்ஆனின் நடைமுறை விளக்கமாகவே இருந்தது. நபியின் மனைவி அன்னை ஆயிஷாவிடம் (ரலி) இறைத்தூதரின் பண்புகளைக் குறித்து கேட்கப்பட்டபோது, “நபியவர்கள் குர்ஆனாகவே வாழ்ந்தார்கள்” என்றார். (நஸயீ)

••••••••••••••

ஆனால் மக்கள் திருக்குர்ஆனை விட்டும், அதன் தனித்துவமிக்க வழிமுறையை விட்டும், அதன் நிழலில் வாழ்வதை விட்டும், அது அருளப்பட்ட சூழல்களை விட்டும் தூரமானார்கள். அது அருளப்பட்ட சூழ்நிலைகளும் அவற்றையொத்த நிகழ்கால சூழ்நிலைகளுமே அது அருளப்பட்டபோது புரிந்துகொள்ளப்பட்டதைப் போன்று புரிந்துகொள்ளக்கூடியதாக அதனை ஆக்குகின்றது. இந்தக் குர்ஆன் கூறும் போராட்டக் களத்தை விட்டும் அதனால் ஏற்படும் கஷ்டங்கள், வலிகள் மற்றும் நடைமுறை வாழ்வில் அவற்றையொட்டி தோன்றக்கூடிய வெவ்வேறு வகையான உணர்வுகளை விட்டும் தொடர்பற்றுத் தூரமாக வாழ்பவரால் இந்தக் குர்ஆனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்று கூறுவது அதன் வார்த்தைகளையோ வாக்கியங்களையோ அல்ல. அவற்றில் எவ்விதச் சிக்கலும் இல்லை. நாம் கூறுவது, அது அருளப்பட்டபோது எந்தவகையான தாக்கங்களை, உணர்வுகளை, அனுபவங்களை அந்த முதல் தலைமுறையினரின் உள்ளத்தில் ஏற்படுத்தியதோ அதே வகையான தாக்கங்களை, உணர்வுகளை, அனுபவங்களை நம் உள்ளமும் பெறுவதில்தான்.

அவர்கள் போராட்டக்களத்தில் – தீய மன இச்சைகளுக்கு எதிரான மற்றும் எதிரிகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் – திருக்குர்ஆனின் வசனங்களைப் பெற்றார்கள். அவர்கள் குறைவான எண்ணிக்கையினராக, பலவீனர்களாக, மக்களுக்கு மத்தியில் அந்நியமானவர்களாக, பசியாலும் பயத்தாலும் அடக்குமுறையாலும் சூழப்பட்டவர்களாக, அல்லாஹ்வைத் தவிர வேறு எங்குமே அடைக்கலம் தேட முடியாது என்று இருந்த மக்காவின் சூழல்… பின்னர் சூழ்ச்சிக்கும் நயவஞ்சத்திற்கும் மத்தியில் வளர்ச்சியடைந்த மதீனாவின் சூழல்… பத்ர், உஹது, ஹன்தக், ஹுதைபிய்யா, மக்கா வெற்றி, ஹுனைன், தபூக் ஆகிய போர்கள் நடைபெற்ற சூழல்… பல்வேறு குலங்களை உள்ளடக்கிய அந்த முதல் இஸ்லாமியத் தலைமுறை வளர்ந்த சூழல்…

இந்த சூழலில்தான் குர்ஆனின் வசனங்கள் உயிரோட்டம் மிக்கவையாக, அவர்களின் நிகழ்கால வாழ்வோடு ஒன்றிப்போகக்கூடியவையாக அருளப்பட்டன. அதன் வார்த்தைகளும் வாக்கியங்களும் அவர்களின் உள்ளத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின.

ஆரம்பகட்ட அந்த இஸ்லாமிய வாழ்க்கையை மீண்டும் கொண்டுவருவதற்குச் செய்யப்படும் முயற்சிகளைத் தொடர்ந்துவரும் இதுபோன்ற சூழல்களில்தான் திருக்குர்ஆன் தன் பொக்கிஷங்களையும் இரகசியங்களையும் மனித உள்ளங்களுக்குத்  திறந்து காட்டுகின்றது. அவற்றிற்கு ஒளியாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது.

அன்றைய நாட்களில் அந்த முதல் முஸ்லிம் தலைமுறையினர் தங்களுக்கு அருளப்பட்ட பின்வரும் வசனங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்:

“தூதரே! இந்த நாட்டுப்புற மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமக்குச் செய்த கிருபையாக சொல்லிக் காட்டுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைந்ததனால் என்மீது கிருபை பாராட்டாதீர்கள். அதனால் உங்களுக்குத்தான் நல்லது. மாறாக அல்லாஹ்வே உங்களுக்கு நேரான வழியை அளித்து உங்கள்மீது கிருபை பாராட்டுகிறான், நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.” (49:17)

“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களின் உண்மையான வாழ்க்கையின் பக்கம் உங்களை அழைத்தால் அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுக்கும் அவனுடைய தூதருக்கும் பதிலளியுங்கள். அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன் என்பதையும் உங்களுக்கும் சத்தியத்திற்கு அடிபணிவதற்கும் மத்தியில் –நீங்கள் அதனைப் புறக்கணித்தால்– குறுக்கிடுவதற்கும் அவன் சக்தியுடையவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். எனவே அவன் பக்கம் விரைந்து செல்லுங்கள். மறுமைநாளில் உங்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டுவான், நீங்கள் இவ்வுலகில் செய்த செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கையாளர்களே! வேதனையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களில் பாவிகளை மட்டும் தாக்காது.  தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். பாவங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் மக்காவில் குறைவான எண்ணிக்கையினராக, பலவீனர்களாக கருதப்படக்கூடியவர்களாக, உங்களின் எதிரிகள் உங்களைத் தாக்கிவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களாக இருந்ததை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்தான். பத்ருப் போரில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவிசெய்து உங்களைப் பலப்படுத்தினான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவற்றில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய போர்ச் செல்வங்களும் அடங்கும். நீங்கள் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துங்கள். அவன் உங்களுக்கு அதிகமதிகம் வழங்குவான். நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள். உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பறித்து உங்களை வேதனையில் ஆழ்த்திவிடுவான்.” (8:24-26)

“பத்ருப்போரில் எண்ணிக்கையிலும் ஆயுதங்களிலும் நீங்கள் குறைவானவர்களாக இருந்தபோதும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டு அவனையே அஞ்சுங்கள்.” (3:123)

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே தான் நாடியவாறு உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் இத்தகைய நாட்களை மாறிமாறி வரச் செய்கின்றான். அதன் நோக்கங்களில் சில, உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துகிறான்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கக்கூடிய வாய்ப்பை வழங்குகிறான். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அதன் நோக்கங்களில் சில: நம்பிக்கையாளர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவது, அவர்களின் அணியிலிருந்து நயவஞ்சகர்களைப் பிரித்தெடுப்பது, நிராகரிப்பாளர்களை வேரோடு அழித்துவிடுவது ஆகியவையாகும்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் முஹாஜிதுகளாக பொறுமையை வெளிப்படுத்தாமல், சோதிக்கப்படாமல் நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? நம்பிக்கையாளர்களே! மரணத்தின் காரணிகளையும் அதன் கடுமையையும் நீங்கள் சந்திக்கும் முன்னரே நிராகரிப்பாளர்களை போர்க்களத்தில் சந்தித்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். ஆம், நீங்கள் ஆசைப்பட்டதைக் கண்டுகொண்டீர்கள்.”  (3:139-143)

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் குறைவான எண்ணிக்கையினராக, போதுமான முன்னேற்பாடுகளைப் பெறாதவர்களாக இருந்தபோதும்  அல்லாஹ் உங்களுக்கு பல போர்களில் உதவி புரிந்துள்ளான். ஆனால் ஹுனைன் போரில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. “எங்களை யாராலும் மிகைக்க முடியாது” என்று நீங்கள் கூறினீர்கள். உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிக எண்ணிக்கை உங்களுக்குப் பயனளிக்கவில்லை. உங்களின் எதிரிகள் உங்களை மிகைத்தார்கள். பூமி விசாலமாக இருந்தபோதும் அது உங்களுக்கு நெருக்கடிமிகுந்ததாகத் தோன்றியது. பின்னர் நீங்கள் தோல்வியடைந்து புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.

நீங்கள் உங்கள் எதிரியைவிட்டு ஓடியபிறகு அல்லாஹ் தன் தூதரின்மீதும் நம்பிக்கையாளர்கள்மீதும் நிம்மதியை இறக்கினான். அவர்கள் போரில் உறுதியாக நின்றார்கள். நீங்கள் காணாத வானவர்களையும் அவன் இறக்கினான். கொன்றும் கைதிகளாகப் பிடித்தும் அவன் நிராகரிப்பாளர்களைத் தண்டித்தான். இது தங்களின் தூதரை நிராகரித்ததனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும்.” (9:25,26)

“நம்பிக்கையாளர்களே! உங்களின் செல்வங்களிலும் உயிர்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் தீங்குதரும் ஏராளமான விஷயங்களைச் செவியுறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலும் சோதனைகளிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் நிச்சயமாக இது மிகவும் துணிச்சலான காரியமாகும்.” (3:186)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் அவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். ஏனெனில் அவை அவர்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக் குறித்து, அவர்களின் உள்ளத்தில் எஞ்சியிருந்த நினைவுகளைக் குறித்து, அவர்கள் வாழ்ந்து சூழ்நிலைகளைக் குறித்துப் பேசியது.

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும், அவர்கள் எதிர்கொண்ட அதே சூழல்களை, நிகழ்வுகளை எதிர்கொள்பவர்கள் அவர்கள் புரிந்துகொண்டதைப்போன்றே திருக்குர்ஆன் கூறும் விசயங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். அவர்கள்தாம் திருக்குர்ஆன் கூறும் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளை, அடிப்படைகளை உள்ளபடியே புரிந்துகொள்வார்கள். ஆயினும் அவர்கள் மிகக் குறைவானவர்களே.

முஸ்லிம்கள் குர்ஆனைவிட்டும் தூரமான இதுபோன்ற சூழலில் இறைவன், பிரபஞ்சம், வாழ்க்கை, மனிதன் ஆகியவை குறித்து இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் திருக்குர்ஆனின் வசனங்களினூடே தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகிவிடுகிறது.

இந்தப் புத்தகம் மனித உள்ளத்தையும் அறிவையும் விளித்து உரையாடும் திருக்குர்ஆனை விட்டும் உங்களைத் திருப்பிவிடாது. மாறாக அதன்பால் உங்களைக் கொண்டு செல்லும். அதன் சுவையை நீங்கள் உணர்வதற்கு உதவி செய்யும்.

Related posts

Leave a Comment