கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 3) – மரியம் ஜமீலா

Loading

1952-1953 இல் பஞ்சாபைச் சேர்ந்த பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள், காதியானி பிரிவை அரசியலமைப்பில் தனியொரு சிறுபான்மைக் குழுவாக அறிவிக்கக் கோரினர். இக் கோரிக்கையை சீர்குலைப்பதற்காக இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டது. அப்போது மௌலானா மௌதூதி அக்கோரிக்கைகளை ஆதரித்து, அரசாங்க கொள்கையைக் கண்டித்து ‘காதியானிப் பிரச்சனை’ என்ற தலைப்பில் பிரசுரம் ஒன்றை எழுதினார்.

“பல்வேறு பிரிவுகள் தங்களுக்கு மத்தியில் சாட்டும் முரண் சமயக்கருத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்து காதியானிப் பிரச்சனை முற்றிலும் மாறுபட்டது. காதியானிகள், மிர்ஸா குலாம் அஹ்மதை (1839-1908) புதியதொரு நபியாக ஏற்று அவரை நிராகரிப்பவர்களை காஃபிர்கள் எனக் கண்டிக்கின்றனர். தங்களை முஸ்லிம்களாக பாவித்து, முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவி, மதமாற்றப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்கின்றனர். மேலும் முஸ்லிம் சமூகத்தின் இழப்பில் தங்கள் எண்ணிக்கையை பெறுக்கிக் கொள்ள தொடர்ந்து பாடுபடுகின்றனர். தற்போது, காதியானிகளை தனிமைப்படுத்தும் கோரிக்கை, பெரும்பான்மை முஸ்லிம்களிடமிருந்து எழுந்துள்ளது;

ஏனெனில், இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினரே. ஒருபுறம் ஈமான் கொண்ட, மைய முஸ்லிம் சமூகத்திலிருந்து தனித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் சிறுபான்மையினரின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்கின்றனர். மறுபுறம் முஸ்லிம்கள் என்ற போர்வைக்குள்ளிருந்து பெரும்பான்மையினரோடு இருப்பதனால் கிடைக்கும் நலன்களையும் பறித்துக் கொள்கின்றனர். நுணுக்கமான பிரச்சாரத்தின் மூலம் அறியாமையிலிருக்கும் மக்களை ஏமாற்றி தங்கள் எண்ணிக்கையை பெறுக்கிக் கொள்கின்றனர். அதேவேளை, பொதுவாழ்வின் பல்வேறு தளங்களில், அவர்களுக்குரிய பங்கைவிட அதிகமானதை பறித்துக் கொள்கின்றனர். இதனால்தான் அவர்களை தனிமைப்படுத்தும் கோரிக்கை சிறுபான்மையினரடமிருந்து எழாமல் பெரும்பான்மையினரடமிருந்து வந்துள்ளது.” (8)

இதன் விளைவாக 1953, மார்ச் 28 இல் மௌலானா மௌதூதி, கைது செய்யப்பட்டு விசாரணை ஏதுமின்று சிறையிலடைக்கப்பட்டார். இராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அப்போது அவர் இவ்வாறு முழங்கினார்:

“இறைவன் நாடியது இதுதான் எனில், நான் இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் இப்போதே மரணித்துவிட வேண்டும் என்பது இறைவனின் நாட்டமில்லையெனில், அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனக்கு சிறு தீங்கும் இழைக்க முடியாது”.

மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் சி.ஐ.டி (CID) யின் உறுப்பினரான மியான் அன்வர் அலி, மௌலானா மௌதூதி மீது மரணதண்டனை ஏற்படுத்திய எதிர்வினையை அறிய விரும்பினார். அவர் சாதாரண உடையணிந்து தனது அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல், சிறையதிகாரியோடு சேர்ந்து மௌலானாவை, காணச் சென்ற சம்பவம் சுவாரஸ்யமானது. இதற்குமுன் தான் கண்ட ஏரத்தாள எல்லா மரணதண்டனைக் கைதிகளிடமுமிருந்த கலங்கிய, அசாதாரணமான மனோநிலைக்கு நேர்மாறாக மௌலானா மௌதூதி மிகவும் இயல்பாக, அசாதரணமாக எதுவும் நடக்கவிருக்காதது போல காணப்பட்டார். தண்டனைக் கைதிகளுக்கான சிறிய குறுகிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கான பிரத்யேக உடையான பைஜாமாவும் சட்டையும் அணிந்து, நார் பாயில் அமர்ந்திருந்தார். அவரருகில் தண்ணீர் நிரம்பிய மண்பானை ஒன்று இருந்தது. சிறையதிகாரி, மௌதூதியிடம் கருணை மனுக்கான விண்ணப்பத்தை நீட்டியபோது, அவர் தெளிவாக “வேண்டாம்!” என்றார். ஒரு விருந்தினரிடம் அவர் தேநீர் அருந்துவாரா அல்லது காபி அருந்துவாரா என கேட்கப்படும்பொழுது, அதற்கு பதிலளிக்க இயல்பாக எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கூட மௌலானா ‘வேண்டாம்’ எனச் சொல்வதற்கு எடுத்துக் கொள்ளவில்லை. தன் வாழ்க்கை அனுபவங்களில் மறக்கமுடியாத சம்பவங்களுள் ஒன்றாக, மியான் அன்வர் அலி இதைக் கூறுகிறார். (9)

முஸ்லிம் உலகம் முழுவதும் அவரது மரண தண்டனைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வீரியத்தைக் கண்ட ஆட்சியாளர்கள், அதை 14 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்க நிர்பந்திக்கப் பட்டனர்.

மௌலானா மௌதூதி தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சமயம் தலைமை நீதிபதி முஹம்மது முனீர், நீதிபதி எம்.ஆர். கயானியுடன் சேர்ந்து தனது பிரபலமான முனீர் அறிக்கையை தயாரித்தார். அது, காதியானிகளுக்கெதிரான மக்கள் கிளர்ச்சிக்கான –குறிப்பாக சௌத்ரி ஸஃபருல்லா கான் மற்றும் பிற உயர் பதவி வகித்த காதியானிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான- காரணங்களை விசாரித்து, முஸ்லிம் மத வெறியே இவற்றுக்கான மூல காரணம் என முடிவு செய்தது. இதனடிப்படையில், பாகிஸ்தான் இஸ்லாமிய அரசாக உருவாக அனுமதிக்கப்பட்டால், முஸ்லிமல்லாத அனைவரும் இயல்பாகவே ஒடுக்குமுறைக்கு உள்ளாவார்கள் என்றும், பல்வேறு முஸ்லிம் பிரிவுகள் முடிவின்றி தங்களுக்குள் பூசலில் ஈடுபடும் என்றும், “நாகரிக” உலகின் படித்தரங்களுக்கு முரணான பழங்கால சட்டங்கள் இயற்றப்படும் என்றும், பாகிஸ்தான் தனது பிற்போக்கான கலாச்சாரம் மற்றும் எதிர்வினையாற்றும் அரசாங்கத்தின் காரணமாக சர்வதேச சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் என்றும் முடிவு செய்தார்.

முனீர் அறிக்கை இஸ்லாத்தை கடுமையாக தாக்கிய அளவு, மேற்கத்திய கீழைத்தேயவாதிகளும், கிறிஸ்துவ மிஷனரிகளும் கூட தாக்கியதில்லை. அதன் ஆசிரியர் ஒரு முஸ்லிம் என்ற அவலம் அதன் தீய விளைவுகளை மேலும் பன்மடங்கு அதிகரித்தது. இந்நிகழ்வுகள் அனைத்தையும் முழுமையாக அறிந்த நிலையில் மௌலானா மௌதூதியும் ஜமாத்தே இஸ்லாமியும், பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசு என்ற எண்ணக் கரு மீது தொடுக்கப்படும் தாக்குதலை தடுத்து, தமக்கெதிராக வீசப்படும் வசைகளில் உண்மை ஏதும் இல்லை என்று நிரூபிக்கும் சவாலை எதிர்கொண்டனர். உலக அரங்கில் பாகிஸ்தான் உகந்த தேசமாக கருதப்படும் பொருட்டு, இஸ்லாத்தை தற்கால சிந்தனைகளோடு இணங்கிச் செல்லும் வகையில் முற்போக்காக மீள்விளக்கம் செய்ய வேண்டும் என்ற முனீரின் முடிவான கோரிக்கைக்கு மௌலானா மௌதூதி இவ்வாறு பதிலளித்தார்:

“எவரேனும் இஸ்லாத்தை மீள்கட்டமைப்பு அல்லது மறுதிசையமைப்பு செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். இஸ்லாத்தின் எந்தெந்தப் பகுதிகள் உயிரற்று உள்ளன, அவை ஏன் அவ்வாறு உள்ளன, எந்த அடிப்படையில் அவற்றை மாற்றலாம், அதன் அதிமுக்கிய உயிருள்ள பகுதிகள் எவை, அவற்றை எந்நிலையில் அவர் தக்கவைத்துக் கொள்வார் போன்ற கேள்விகளுக்கு தெளிவான வாதங்களின் அடிப்படையில் பதிலளித்தால், அவரது முயற்சிகள் வரவேற்கப்படும். ஆனால் அவர் இரண்டு விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, சட்ட வழக்குகளில் நீதிமன்றங்களின் கருத்தை நாம் பெறலாம்; ஆனால் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அவற்றின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நம்மை யாரும் வற்புறுத்த முடியாது.

இரண்டாவதாக வாதங்கள், குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இருப்பின் ஒரு முஸ்லிம் திருப்தி அடையக் கூடும். எனினும் இஸ்லாத்தை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் பிற ‘சர்வதேச சகோதர’ தலைவர்கள் முன் சமர்ப்பித்து, அவர்கள் விரும்பியதைத் தக்க வைத்து, விரும்பாததை வெட்டிவிட்டு, வேண்டுமென்று கருதியதை சேர்த்த பின் -இத்தனை மாற்றங்கள் சேர்த்தல்கள், விலக்கல்களுக்குப் பின்- ‘இஸ்லாம்’ என்ற பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் அதை சமர்ப்பித்தால், சில உயரதிகாரிகள் மற்றும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு வேண்டுமானால் அது கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு சாதாரண முஸ்லிமைப் பொறுத்தவரை அதை எதிர்கொள்ளும் ஒரே வழி, உச்சகட்ட வெறுப்பு கொண்டு அதை முழுமையாகப் புறக்கணிப்பதே ஆகும்.” (10)

1955, மே 25 அன்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் மௌலானா மௌதூதி விடுதலை செய்யப்பட்டார்.

இறுதியாக, பாகிஸ்தானிய இஸ்லாமியக் குடியரசின் முதல் அரசியல் சாசனம் 1956 மார்ச் இல் பிரகடனம் செய்யப்பட்டது. ஜமாத்தே இஸ்லாமியின் பெரும்பாலான கோரிக்கைகளை அது உள்ளடக்கியிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அசல் இஸ்லாமிய அரசின் அடிப்படையாக விளங்கும் வகையில் அது ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அதிபர் இஸ்கந்தர் மிர்ஸா, 1958 அக்டோபர் 7, இல் அதை ஒழித்துக் கட்டுவதற்கான ஆணையை பிறப்பித்தார். அதே மாதம் 27 ஆம் தேதியன்று படைத்தளபதி முஹம்மது அய்யூப் கான் அதிகாரத்தைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தினார். ஜமாத்தே இஸ்லாமி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தார்.

மௌதூதி உறுதி தளராமல் இஸ்லாமிய குறிக்கோள்களை மேம்படுத்தும் நோக்கில் என்றும் போல் தீர்மானமாக இருந்தார். இராணுவச் சட்டம் நடைமுறையில் இருந்த நிலையிலும், 1939 முதல் 1958 வரையிலான தனது உரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை ‘இஸ்லாமிய சட்டமும் அரசியல் சாசனமும்’ என்ற தலைப்பில் திருத்தப்பட்ட விரிவான தொகுப்பாக வெளியிட்டார். இந்நூல், நவீன அரசாங்கத்தில் ஷரீயத்தின் தேவை மற்றும் நடைமுறைக் கூறுகளை உறுதியாகவும் திருப்திகரமாகவும் நிலை நிறுத்துகிறது. மௌலானா மௌதூதியின் வாதங்கள் எந்த அளவிற்கு ஏற்கத்தக்கதாக இருந்ததெனில், பாகிஸ்தானின் தலைமை நீதிபதியான ஏ.ஆர்.கார்னீலியஸ் போன்ற உயர் பதவி வகித்த கிறித்தவர்கள் கூட, இந்நாட்டிற்கு உகந்த ஒரே சட்ட அமைப்பாக ஷரீயத்தையே வெளிப்படையாக முன்னிறுத்தினர். 1967, பிப்ரவரி 17 இல் நடந்த மேற்குப் பாகிஸ்தான் உயர்நீதிமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதிகள் அனைவரும் இஸ்லாமியச் சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற தங்கள் அவாவை வெளிப்படுத்தினர்.

1960, மே 5-6 தேதிகளில், மௌலானா மௌதூதியும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளையும் சார்ந்த பத்தொன்பது உலமாக்களும் லாஹுரில் ஒன்றுகூடி அரசியல் சாசனக் கமிஷனின்  கேள்விகளுக்கு பதிலளித்தனர். பாகிஸ்தானில் பாராளமன்ற அமைப்பு முனைப்பாக இயங்காததற்கான காரணங்கள் பற்றி ஆய்வு செய்ய, அரசாங்கத்தால் அக்கமிஷன் நியமிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள்நிறுவுவதற்குத் தேவையான பரிகார நடவடிக்கைகளை அவர்கள் முன் மொழிந்தனர்.

“பாகிஸ்தான், சாதாரண முஸ்லிம்களின் முயற்சியினாலேயே உருவானது. இறைவனின் கருணையை அடுத்து, அத்தகைய முஸ்லிம்களின் மன உறுதி மட்டுமே அதன் இருப்பிற்கும் பலத்திற்கும் உத்தரவாதம் அளிக்க முடியும். முஸ்லிம் அல்லாத எவரும் இந்நாட்டை உருவாக்கவில்லை. முஸ்லிம்களின் தியாகம் இன்றி இந்நாடு உருவாகியிருக்காது; மேலும் அவர்கள் அதன் மீது நம்பிக்கையிழந்து, அதற்காகவே வாழ்ந்து அதற்காகவே மரணிக்க வேண்டும் என்று கொண்டிருக்கும் மன உறுதியை இழந்துவிட்டால் –இறைவன் மன்னிக்க வேண்டும்- இந்நாடு தொடர்ந்து நீடிக்காது. சில உயர்குல அரசுப் பணியாளர்கள் மற்றும் ஒரு சில மேட்டுக்குடி குடும்பங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து முஸ்லிம்களும் இந்நாடு ஒரு இஸ்லாமிய அரசாக செழித்தோங்குவதையே விரும்புகின்றனர்; அதன் சட்டம் இஸ்லாமிய சட்டமாகவும் கல்வி அமைப்பு இஸ்லாமிய அமைப்பாகவும், அதன் கலாச்சாரமும் நாகரிகமும் இஸ்லாமாக இருப்பதையே விரும்புகின்றனர்.

இக்குறிக்கோள்களுக்காகவே முஸ்லிம்கள் தங்கள் உயிரையும், உடமையையும் கண்ணியத்தையும் தியாகம் செய்து பாகிஸ்தானை நிறுவினர். மக்களின் இந்த ஆர்வத்தை அழிப்பதைவிட இந்நாட்டிற்கெதிராக பெரிய பகைமை வேறெதுவும் இருக்க முடியாது. முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் விரக்தியையும் ஏமாற்றத்தையும் உருவாக்கிவிட்டு, தங்கள் மதமாகிய இஸ்லாத்தின் பெயரைக் கேட்டாலேயே வெட்கப்படும் இத்தகைய சில மனிதர்கள், இந்நாட்டிற்கு என்னதான் ஆதரவு வழங்கிட முடியும்?”  (11)

1961, மார்ச் 2 இல் அனைத்து பாகிஸ்தான் மகளிர் கூட்டமைப்பு, அரசாங்கத்தை நிர்பந்தித்து முஸ்லிம் குடும்பவியல் அவசர சட்டத்தை நிறைவேற்றியது. ஷரியத்திற்கு நேர் முரணாக, பலதார மணம் புரிவதில் கடுமையான தடங்கல்களை விதித்து, திருமணங்களை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி, திருமணத்திற்கு குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது வரம்பை விதித்து, கணவன் தனிப்பட்ட முறையில் ஒருதலைப்பட்சமாக மனைவியை விவாகரத்து செய்வதை அச்சட்டம் செல்லாததாக்குகிறது. மௌலானா மௌதூதி, நாடு முழுவதும் இருந்து பிற 209 உலமாக்களோடு சேர்ந்து இதற்கு கண்டனம் தெறிவித்தார். அதைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதன் கண்டிக்கத்தக்க அம்சங்களையாவது திருத்தி அமைக்க  வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இப்புதிய குடும்பவியல் சட்டங்களுக் கெதிரான உலமாக்களின் அறிவிப்பைத் (12) தொடர்ந்து கடுமையான அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. அதைப் பிரசுரித்து விநியோகித்தவர்கள் கூட சிறையிலடைக்கப்பட்டனர்.

இக்காலகட்டத்தில் மௌலானா மௌதூதி தனது எழுத்து மற்றும் பிரச்சாரப் பணிகளை சுதந்திரமாகவும் ஆக்ரோஷமாகவும் மேற்கொண்டார். தான் எழுதும் ஆறு தொகுதிகளடங்கிய திருக்குர்ஆனின் உருது மொழியாக்கமும் விரிவாக்கமுமான தஃப்ஹிமுல் குர்ஆனுக்காக தன்னை தயார் செய்ய வேண்டி 1959-60 க்கு மத்தியில் மேற்காசியா முழுவதும் –அரேபியா, சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்து- பயணம் மேற்கொண்டு வேதங்களில் கூறப்பட்டுள்ள புனித வரலாற்றுத் தலங்களை பார்வையிட்டார். 1942 இல் துவங்கப்பட்ட தஃப்ஹிமுல் குர்ஆனின், இறுதிப் பாகமான ஆறாவது பாகம் 1972 ஜூன் இல் நிறைவடைந்தது. முஸ்லிம் உலகம் முழுவதும் அது பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலம், அரபி, வங்காளம் மற்றும் பஷ்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

தஃப்ஹிமுல் குர்ஆனில் மௌலானா மௌதூதி, யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வேதங்களை எப்படி மாசுபடுத்தினர் என்பதைக் கூறி, பிறவற்றைக்காட்டிலும் இஸ்லாமிய வாழ்க்கை முறையின் மேம்பட்ட நிலையையும் அதன் பூரண உண்மைத்தன்மையையும் நிரூபனம் செய்கிறார். ஸுரா அல்-நூர் மற்றும் ஸுரா அல்-அஹ்ஸாபிற்கு மௌதூதி எழுதிய விரிவுரை தனியாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மனிதன் இயற்றிய எந்தவொரு மதச்சார்பற்ற குற்றவியல் சட்டத்தையும்விட இஸ்லாமிய தண்டனைகள் எப்படி மனிதாபிமானத்தோடும் பலன்மிக்கதாகவும் உள்ளன என்பதை விரிவாகக் கூறுகிறார். பாகிஸ்தானின் கல்லூரி மற்றும் பல்கலையில் பயிலும் முற்போக்கான கலை மற்றும் சட்டத்துறை மாணவர்களுக்கு இது அவசிய வாசிப்பாகிவிட்டது. சுன்னத் கீ அயீனீ ஹைசியத் (சுன்னத்தின் சட்ட நிலை) என்னும் நூலில் மௌலானா மௌதூதி ஹதீஸ் பற்றி ஆய்வு செய்துள்ளார். மேலும் அது, ஹதீஸின் அதிகார நிலையை நிராகரித்த சர் செய்யது அஹ்மது கான் மற்றும் குலாம் அஹ்மது பர்வேஸ் ஆகியோரை வெளிப்படையாகவும் வன்மையாகவும் கண்டனம் செய்வதாக அமைந்தது.

குறிப்புகள்

(8) காதியானி பிரச்சனை, அபுல் அஃலா மௌதூதி, ஜமாத்தே இஸ்லாமி, கராச்சி, 1953, பக் 22, 23

(9) மௌதூதி ஒரு அறிமுகம், மிஸ்பாஹுல் இஸ்லாம் ஃபாருகி, ஸ்டுடன்ட்ஸ் பப்ளிகேஷன்ஸ் பியுரோ, கராச்சி, 1968 பக் 113-115 சுக்

(10) முனீர் அறிக்கை: ஒரு ஆய்வு, ஜமாத்தே இஸ்லாமி பதிப்பகம், கராச்சி, 1956, பக் 214-215

(11) அரசியல் சாசனக் கமிஷனின் கேள்விகளுக்கான விடைகள் மற்றும் இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகள், செய்யது முஹம்மது தாவூத் கஸ்னவியால் பதிப்பிக்கப்பட்டது, லாஹுர், 1960, பக் 26-27

(12) முஸ்லிம் குடும்பவியல் அவசரச் சட்டம் பற்றி பாகிஸ்தானின் 209 உலமாக்களின் அறிக்கை, மியான் துஃபைல் முஹம்மதால் திருத்தி மொழியாக்கம் செய்யப்பட்டது, லாஹுர், 1962

Related posts

Leave a Comment