தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் பதினான்காம் பகுதி கீழே.]

“நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான ஏட்டில் கணக்கிட்டு வைத்துள்ளோம்.”

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் மூன்றாவது தனித்தன்மை அது அனைத்தையும் தழுவியது என்பதாகும். இதுவும் அதன் முதல் தனித்தன்மையான “இறைக்கண்ணோட்டம்” என்பதிலிருந்து வெளிப்படக்கூடிய ஒன்றாகும். இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் அனைத்தையும் தழுவிய ஒன்றாகத்தான் இருக்கும்.

மனிதன் முதலில் இடம் மற்றும் காலத்தின் வரம்புக்கு உட்பட்டவன் ஆவான். அவன் குறிப்பிட்ட காலத்தில் தோன்றி பின்னர் மறைபவன். ஒன்றும் இல்லாமல் இருந்த பிறகே அவன் தொடங்குகிறான். அவன் வாழும் குறிப்பிட்ட இடத்தோடு மட்டுமே தொடர்புடையவன். அதற்கு அப்பால் அவனால் சிந்திக்க முடியாது. அவனது அறிவும் அனுபவமும் வரம்புக்குட்பட்டது. அவன் தோன்றிய பிறகு அவனது அறிவு தொடங்குகிறது. அவன் வாழும் காலம் மற்றும் இடத்திற்கேற்ப அவனது அறிவு தன் இறுதி எல்லையை அடைந்துகொள்கிறது. அதேபோன்று -நாம் முன்னரே கூறியவாறு- அவனது பணியும் எல்லைக்குட்பட்டதுதான். ஏனெனில் அவன் வரம்புக்குட்பட்டவன்தான். அவனது பலவீனம், மன இச்சை, ஆர்வம், அறியாமை ஆகியவற்றால் அவன் கட்டுப்படுத்தப்பட்டவன்.

இதுதான் மனிதனின் நிலை. அவன் ஒரு கண்ணோட்டத்தை சுயமாக உருவாக்குவதைக் குறித்து சிந்திக்கும்போது அவனது சிந்தனை மேற்குறிப்பிட்டவற்றால் பாதிக்கப்பட்டே தீரும். ஒரு காலத்திற்கு உகந்ததாக, வேறு காலத்திற்கு உகந்ததில்லாத, ஓரிடத்திற்கு பொருந்தக்கூடியதாக, வேறு இடத்திற்கு பொருத்தமற்றதாகத்தான் இருக்கும். தவிர அவனால் வாழ்வின் அனைத்து கட்டங்களையும் சூழல்களையும் காரணிகளையும் விசயங்களையும் தழுவி சிந்திக்க முடியாது. அவனது சிந்தனை பலவீனம், மனஇச்சை ஆகியவற்றை விட்டும் நீங்கியிருக்காது. அவை மனித இயல்பின் இரு தன்மைகள்.

அதேபோன்று மனித சிந்தனையால் அனைத்தையும் தழுவிய ஒரு வழிமுறையைக் கொண்டுவர முடியாது. அதனால் அது வாழும் ஒரு பகுதியைக்குறித்து, காலத்தைக்குறித்து மட்டுமே சிந்திக்க முடியும். அதிலும் பிழைகளும் குறைபாடுகளும் ஏற்படலாம். மனித சிந்தனையின் உருவாக்கங்களில் முரண்பாடுகளும் தர்க்கங்களும் காணப்படுவது இயல்பானது.

ஆனால் அல்லாஹ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது மார்க்க கண்ணோட்டமும் அதிலிருந்து வெளிப்படக்கூடிய உயிரோட்டமான   வழிமுறையும் பிழைகள், குறைபாடுகள், பலவீனம், முரண்பாடு ஆகிய மனித உருவாக்கத்தின் பிழைகளிலிருந்து நீங்கி வந்தன. இவ்வாறு இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளில் ‘அனைத்தையும் தழுவியதும்’ ஒன்றானது.

இந்த தனித்தன்மை இந்தக் கண்ணோட்டத்தில் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அவற்றில் மிகப் பெரியது, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் -அதன் வளர்ச்சி, இயக்கம், அதில் வெளிப்படக்கூடிய மாற்றங்கள், அதனைப் பாதுகாத்தல், நிர்வகித்தல், பராமரித்தல் ஆகியவை- என்றும் நிரந்தரமான இறைவனின் நாட்டத்தோடு இணைத்தலாகும். அவன், தான் விரும்பியதைச் செய்யும் பேராற்றலுடையவன், இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள ஒவ்வொரு பொருளையும் முன்மாதிரியின்றி படைத்தவன்.

இந்த ஏகத்துவம்தான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் முதல் அடிப்படை. இந்த அடிப்படையான உண்மையை நிலைநிறுத்துவதற்காக திருக்குர்ஆனின் பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அவையனைத்தையும் நம்மால் இங்கு எடுத்துரைக்க முடியாது. அவற்றுள் சிலவற்றை இந்தக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளில் ஒன்றான “நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டது” என்பதை எடுத்துரைக்கும்போதும் சிலவற்றை “ஏகத்துவம்” என்னும் தனித்தன்மையை எடுத்துரைக்கும்போதும் காணலாம். இதுகுறித்த முழுமையான விளக்கத்தை இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் -“இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள்” -காணலாம். இங்கு இந்த தனித்தன்மையின் மதிப்பை அளவிடுவதோடு நிறுத்திக் கொள்வோம்.

நிச்சயமாக இந்தக் கண்ணோட்டம் -அனைத்தையும் தழுவிய அதன் தனித்தன்மையினால்- முதலில் இந்தப் பிரபஞ்சத்தைக்குறித்து புரிந்துகொள்ளும்படியான விளக்கத்தை நமக்கு வழங்குகிறது. பின்னர் அதில் நடைபெறும் ஒவ்வொரு இயக்கத்தையும் குறித்த விளக்கத்தையும் அளிக்கிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால் பருப்பொருளில் வாழ்க்கையின் வெளிப்பாடு குறித்து புரியும்படியான விளக்கத்தை அளிக்கிறது. நிச்சயமாக வாழ்க்கை என்பது பருப்பொருள் அல்லாத வேறு ஒன்றாகும். அது ஆச்சரியமானது. அதுவே நாடப்படுவதாகும்.

இந்தப் பிரபஞ்சம் தன் இருப்பின்மூலம் மனிதனை எதிர்கொள்கிறது. இதற்கான விளக்கத்தை அவனிடம் கோருகிறது. பின்னர்  தன் ஆச்சரியமான ஒத்திசைவு, சமநிலை ஆகியவற்றால் மனிதனை எதிர்கொள்கிறது. அவை ஒருபோதும் தற்செயலாக நிகழ முடியாது. தற்செயல் நிகழ்வுகளுக்கும் சில வரையறைகள் இருக்கின்றன. இந்த ஆச்சரியமான ஒத்திசைவுக்கும் சமநிலைக்கும் அது அவனிடம் தெளிவான விளக்கத்தைக் கோருகிறது.

அவ்வாறே வாழ்வும் ஏராளமான கேள்விகளால் அவனை எதிர்கொள்கிறது. அவை பிரபஞ்சம் எழுப்பும் கேள்விகளைவிட சற்றும் குறைவானவை அல்ல.

உயிரற்ற சடப்பொருளில் இந்த வாழ்வு எவ்வாறு வெளிப்பட்டது? எவ்வாறு அது ஆச்சரியமான ஒத்திசைவுகளுடன் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் துல்லியமாக, சீராக இயங்குகிறது?

இஸ்லாமியக் கண்ணோட்டம் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. அது தரும் விளக்கத்தைக் கொண்டே நாம் பிரபஞ்சத்தையும் அதில் வெளிப்படக்கூடிய அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். இஸ்லாமியக் கண்ணோட்டம் தரும் விளக்கத்தைக்கொண்டே கேள்விகளைக் கண்டு வெருண்டோடாமல் அல்லது அவற்றைத் தட்டிக்கழிக்க முயலாமல் உயிரற்ற சடப்பொருளில் வாழ்வு வெளிப்படுவதன் இரகசியத்தையும் அதன் ஆச்சரியமான இயக்கத்தின்  இரகசியத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

இருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது? இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது? தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம்.

இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”

மனித அறிவும் உணர்வும் இந்தப் பதிலில் திருப்தியடைகிறது. ஏனெனில் அந்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அந்த உயிரற்ற சடப்பொருளில் வாழ்வை ஏற்படுத்திவிட முடியாது. எதுவும் இல்லாதவன் என்னதான் வழங்க முடியும்? இந்த சடப்பொருளில் வாழ்வு மறைந்துள்ளது என்றும் கூற முடியாது. படைத்துப் பராமரிப்பவன் இன்றி குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுவதற்காக எண்ணவே முடியாத பல்லாயிரம் ஆண்டுகளாக அவை எப்படி மறைந்தேயிருக்கும்?

பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையைக்குறித்த விசயங்களை இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இரண்டாம் பாகத்தில் இதுகுறித்து விரிவாகக் காண்போம். அனைத்தையும் தழுவிய இந்தக் கண்ணோட்டத்தின்பால் திரும்புவோம். அது இந்தப் பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் இறைவனின் நாட்டம், திட்டம், அதிகாரம் ஆகியவற்றின்பால் திருப்புகிறது. இந்த தனித்தன்மையை வெளிப்படுத்தும் சில குர்ஆன் வசனங்கள்:

“நாம் ஒவ்வொன்றையும் ஒரு அளவின்படியே படைத்துள்ளோம்.” (54:49)

“அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்து அவற்றின் விதியை நிர்ணயம் செய்தான்.” (25:2)

“ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடமே ஒரு அளவு உள்ளது.” (13:8)

“அவனே ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய வடிவத்தைக் கொடுத்து பின்னர் வழிகாட்டினான்.” (20:50)

“நாம் ஏதேனும் ஒரு பொருளை படைக்க நாடினால் ஆகிவிடு என்றுதான் கூறுவோம். அது ஆகிவிடும்.” (16:40)

“மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் அர்ஷின்மீது உயர்ந்துவிட்டான். அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாகப்  பின்தொடர்கிறது. அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்துகொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத்தவிர வேறு படைப்பாளன் இல்லை. அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. பாக்கியமிக்க அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.” (7:54)

“இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதிலிருந்து பகலை இழுத்து இரவைக் கொண்டுவந்து பகலின் வெளிச்சத்தை போக்கி விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள். சூரியன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு நிர்ணயிக்கப்பட்டதை அல்லாஹ்வே அறிவான். அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும்.

நாம் சந்திரனுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரியதாகி பின்னர் காய்ந்த பேரீச்ச மட்டையைப்போன்று சிறியதாகி விடுகிறது. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகியவற்றின் சான்றுகள் அல்லாஹ் ஏற்படுத்திய நிர்ணயமாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன் தனது செல்லுமிடத்தை மாற்றி சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலின் நேரம் முடிவடைவதற்கு முன்னரே அதில் நுழைந்து அதனை முந்த முடியாது. கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்த வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.” (36:37-40)

“அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரால் படைத்துள்ளான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. சில இரு கால்களால் நடந்து செல்கின்றன. இன்னும் சில நான்கு கால்களால் நடந்து செல்கின்றன. தான் நாடுவதை அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.” (24:45)

“உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் நீரிலிருந்தே உருவாக்கினோம்.” (21:30)

“நிச்சயமாக அல்லாஹ்தான் விதையையும் கொட்டையையும் வெடிக்கச் செய்பவன். அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துகிறான். இவையனைத்தையும் செய்வது உங்களைப் படைத்த அல்லாஹ்தான். பிறகு நீங்கள் சத்தியத்தைவிட்டு எங்கே திசைமாறிச் செல்கிறீர்கள்? அவன் அதிகாலையின் வெளிச்சத்தை இரவின் இருளிலிருந்து வெளிப்படுத்துகிறான். அவனே இரவை மக்கள் ஓய்வெடுப்பதற்காக அமைத்துள்ளான். அவனே சூரியனையும் சந்திரனையும் ஒரு கணக்கின்படி இயக்குகிறான். இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்தவனின் நிர்ணயமாகும். தன் படைப்புகளுக்குத் தேவையானதை அவன் நன்கறிந்தவன்.

அவன்தான் வானத்தில் உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான். நீரிலும் நிலத்திலும் நீங்கள் பயணம் செய்யும்போது அவற்றைக் கொண்டே பாதைகளை அறிந்துகொள்கிறீர்கள். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகளையும் ஆதாரங்களையும் நாம் தெளிவுபடுத்திவிட்டோம். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. புரிந்துகொள்ளும் மக்களுக்கு நாம் வசனங்களைத் தெளிவுபடுத்திவிட்டோம். நாமே வானத்திலிருந்து மழைநீரை இறக்கின்றோம். அதைக்கொண்டு எல்லா வகையான தாவரங்களையும் முளையச் செய்கின்றோம். அந்த தாவரங்களிலிருந்து பயிர்களையும் பசுமையான மரங்களையும் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து அடுக்கடுக்காக இருக்கக்கூடிய விதைகளை வெளிப்படுத்துகின்றோம். பேரீச்சை மரத்தின் பாளைகளிலிருந்து அருகில் தொங்கக்கூடிய குலைகளையும் வெளிப்படுத்துகின்றோம். திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ், மாதுளை போன்றவற்றையும் வெளிப்படுத்துகின்றோம். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. சுவையோ வேறுபட்டதாக இருகின்றது. அவை ஆரம்பத்தில் வெளிப்படும்போதும் கனியும்போதும் அவற்றைப் பாருங்கள். இதில் அல்லாஹ்வை உண்மைப்படுத்தும் மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.” (6:95-99)

எந்த அளவுக்கெனில் வெளிப்படையான காரணம் வெளிப்படும் சம்பவங்களைக்கூட இஸ்லாமியக் கண்ணோட்டம் அல்லாஹ்வின்பால் திருப்புகிறது.

“ஒன்றும் இல்லாமல் இருந்த உங்களை நாமே படைத்தோம். நீங்கள் இறந்தபிறகு நாம் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?  நீங்கள் உங்கள் மனைவியரின் கர்ப்பப்பையில் சிந்தும் விந்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா? அந்த விந்தை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா? நாம் உங்களிடையே மரணத்தை விதித்துள்ளோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணை இருக்கின்றது.  நீங்கள் அறிந்த உங்களின் படைப்பையும் வடிவத்தையும் மாற்றி நீங்கள் அறியாத படைப்பையும் வடிவத்தையும் உங்களுக்கு அளிப்பதற்கு நாம் இயலாதவர்கள் அல்ல.

நாம் உங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா? நீங்கள் பூமியில் விதைக்கும் விதையைக் கவனித்தீர்களா? அந்த விதையை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது நாம் முளைக்க வைக்கிறோமா? நாம் அந்த விதையை கூளமாக ஆக்க நாடியிருந்தால் அது முளையும் நிலையை அடைந்த பின்னர் கூளமாக ஆக்கியிருப்போம். பின்னர் அதற்கு ஏற்பட்ட பாதிப்பைக்கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் கூறுவீர்கள்: “நாம் செய்த செலவுக்கு நஷ்டமடைந்து விட்டோம். வேதனைக்குள்ளாகி விட்டோம். மாறாக நாம் வாழ்வாதாரத்தைவிட்டு தடுக்கப்பட்டு விட்டோம்.”

நீங்கள் பருகும் நீரைக்குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனை இறக்கி வைக்கிறீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கிறோமா? நாம் நாடியிருந்தால் நீங்கள் பயன்பெற முடியாதபடி அந்த நீரை கடும் உப்பு நீராக ஆக்கியிருப்போம். சுவையான நீரை இறக்கிய அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் உங்களின் பயன்பாட்டிற்காக மூட்டும் நெருப்பைக் கவனித்துப் பார்த்தீர்களா? எந்த மரத்திலிருந்து நெருப்பை நீங்கள் மூட்டுகிறீர்களோ அதனை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா? இந்த நெருப்பை நாம் உங்களுக்கு மறுமையின் நெருப்பை நினைவூட்டக்கூடியதாகவும் பயணிகளுக்குக் பயனளிக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளோம். தூதரே! கண்ணியமிக்க உம் இறைவனுக்குப் பொருத்தமற்ற பண்புகளிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.” (56:57-74)

“நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். நீர் அவர்களின்மீது மண்ணை எறிந்தபோது நீர்  அதனை எறியவில்லை. மாறாக அல்லாஹ்தான் எறிந்தான். இது அல்லாஹ் தன் புறத்திலிருந்து நம்பிக்கையாளர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.” (8:17)

இந்த இடத்தில் இவற்றைவிட அதிகமாக குறிப்பிட முடியாது. இந்த புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் -‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தன் அடிப்படைகள்’- இதுகுறித்து விரிவாகக் காணலாம். இந்த தனித்தன்மையைக்குறித்த சுருக்கமான விளக்கமே நமக்குப் போதுமானது.

இஸ்லாமியக் கண்ணோட்டம் -இந்த தனித்தன்மையின்மூலம்- மனித அறிவிற்கும் உள்ளத்திற்கும் நிம்மதியையும் திருப்தியையும் வழங்குகிறது என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியும். அது இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான ஆற்றலோடு மனிதனை இணைக்கிறது. வழிகாட்டி இல்லாமல் காரிருளில் தடுமாறித் திரிவதைவிட்டும் மனிதச் சிந்தனையைப் பாதுகாக்கிறது. அதனை வரையறையற்ற காரணிகளோடு இணைத்துக்கூறுவதைவிட்டும் இல்லாத ஒன்றுடன் -எல்லாம் இயற்கை என்று கூறுவது- இணைத்துக் கூறுவதைவிட்டும் சிலைவழிபாட்டு புராணங்களோடு இணைத்துக் கூறுவதைவிட்டும் தடுக்கிறது.

இவையனைத்தும் இந்தக் கண்ணோட்டம் மனித உள்ளத்திலும் வாழ்விலும் உருவாக்கிய, உறுதிப்படுத்திய ஒழுக்கவியல் பகுதியையும் உள்ளடக்கியதாகும். அது பிரபஞ்சம், வாழ்வு என அனைத்தையும் அல்லாஹ்வின் ஆற்றல், கண்காணிப்பு மற்றும் அவனது அதிகாரத்தின்பால் இணைக்கிறது.

Related posts

Leave a Comment