தொடர்கள் மொழிபெயர்ப்பு 

பாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ்விடம் மனிதன் செய்துகொண்ட உடன்படிக்கை

பின்னர் வசனங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாத பாவிகளின் பண்புகளை எடுத்துரைக்கின்றன, அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இறையச்சமுடையோரின் பண்புகளை எடுத்துரைத்ததைப்போல. இத்தகைய மக்களைக் குறித்து தொடர்ந்து அத்தியாயம் பேசிக் கொண்டே செல்கிறது. அதே பண்புகளை உடையவர்கள்தாம் எல்லா காலகட்டங்களிலும் வெளிப்படுகிறார்கள்:

“அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுகிறார்கள்; அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட உறவுகளையும் துண்டித்துவிடுகிறார்கள்; பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.”

இங்கு வசனங்கள் சுருக்கமாகவே எடுத்துரைக்கின்றன. ஏனெனில் இங்கு அவர்களின் மனநிலையைப் பதிவுசெய்வதும் உதாரணத்தைப் படம்பிடித்துக் காட்டுவதும்தான் நோக்கமே அன்றி சம்பவத்தைப் பதிவு செய்வதோ அதனை விரிவாக விளக்குவதோ அல்ல. இங்கு சொல்லப்பட்ட விசயங்களை அவற்றின் பொதுவான பொருளிலேயே கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள எல்லா உடன்படிக்கைகளையும் அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அவன் எதை எதையெல்லாம் இணைத்து வாழும்படி கட்டளையிட்டானோ அவையனைத்தையும் துண்டித்துவிடுகிறார்கள். உலகில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள். இத்தகைய மனிதர்கள் அல்லாஹ்வுடன் தொடர்பற்றவர்கள். அவர்களின் கோணலான இயல்பு எந்த வாக்குறுதியையும் பொருட்படுத்தவில்லை; எந்த உறுதியான ஒன்றையும் பற்றிப் பிடிக்கவில்லை. குழப்பத்தைவிட்டும் தவிர்ந்திருக்கவில்லை. அவர்கள் வாழ்வென்னும் மரத்திலிருந்து பிரிந்த காய்ந்த கனியைப் போன்றவர்கள். அதனால் அது காய்ந்து கெட்டுவிடுகிறது. வாழ்வு அதனை வீசி எறிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் எந்த உதாரணத்தைக் கொண்டு நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டப்படுகிறதோ அதே உதாரணத்தைக்கொண்டு வழிகெடுக்கப்படுகிறார்கள்.

இத்தகைய மனிதர்கள் மதீனாவில் இஸ்லாமிய அழைப்பை எதிர்கொண்ட யூதர்கள், நயவஞ்சகர்கள் மற்றும் இணைவைப்பாளர்கள் வடிவில் காணப்பட்டார்கள். இன்றும் இஸ்லாமிய அழைப்பு இத்தகைய மனிதர்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறது. அது என்றும் இத்தகைய மனிதர்களை எதிர்கொள்ளும். பெயர்கள், முகவரிகள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம்.

“அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுகிறார்கள்”

மனிதர்கள் அல்லாஹ்விடம் அளித்த உறுதியான வாக்குறுதிகள் பல வடிவங்களில் வெளிப்படலாம். அது அவர்களின் இயல்பிலேயே வைக்கப்பட்டுள்ள வாக்குறுதியாக இருக்கலாம். ஒவ்வொன்றிடமும் அதன் படைப்பாளனை அறிந்து அவன்பால் முன்னோக்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கப்பட்டுள்ளது. மனித இயல்பில் இறைவனைக் குறித்த தேடல் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயினும் அது தவறான பாதையில் சென்று அந்த இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்திக் கொள்கிறது. அது அல்லாஹ் ஆதமை பூமியில் பிரதிநிதியாக நியமித்தபோது அவரிடம் பெற்ற பின்வரும் வாக்குறுதியாகவும் இருக்கலாம்:

“என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுப்பவர்கள்தாம் நரகவாசிகளாவர். அதில் நிரந்தரமாக அவர்கள் வீழ்ந்து கிடப்பார்கள்.” (2:39)

அது ஒவ்வொரு தூதரும் தங்கள் மக்களிடம் பெற்ற, “அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் அவன் தந்த சட்டங்களின்படியே தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்ற வாக்குறுதியாகவும் இருக்கலாம். இந்தப் பாவிகள் எல்லா வாக்குறுதிகளையும் மீறிவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த ஒரு உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுபவர்கள் அவனிடம் செய்த உடன்படிக்கைகள் அனைத்தையும் முறித்து விட்டவர்களாவர். அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை முறிப்பவன் மனிதர்களிடம் செய்த எந்த உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டான்.

“அவன் இணைத்து வைக்குமாறு கட்டளையிட்டதைத் துண்டித்துவிடுகிறார்கள்.”

அல்லாஹ் பலவற்றோடு சேர்ந்துவாழுமாறு கட்டளையிட்டுள்ளான். நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்துவாழுமாறும் மனித சமூகத்துடன் சேர்ந்துவாழுமாறும் கட்டளையிட்டுள்ளான். அனைத்திற்கும் மேலாக ஈமானிய உறவுகளுடன் சேர்ந்துவாழுமாறும் கட்டளையிட்டுள்ளான். அது எல்லா வகையான உறவுகளைவிடவும் மேலானது. அல்லாஹ் இணைத்து வாழுமாறு கட்டளையிட்ட உறவுகளைத் துண்டித்துவிட்டால் மனித சமுகத்தை இணைக்கும் உறுதியான கயிறு அறுபட்டுவிடும், தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும். பூமியில் குழப்பமும் சீர்குலைவும் பரவிடும்.

“உலகில் குழப்பம் விளைவிக்கிறார்கள்.”

உலகில் குழப்பம் விளைவித்தல் பல வடிவங்களில் நிகழ்கிறது. அவையனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமலிருத்தல், அவனிடம் அளித்த வாக்குறுதியை மீறுதல், அவன்  இணைத்து வாழுமாறு கட்டளையிட்டதைத் துண்டித்தல் ஆகிய செயல்களிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அவன் மனித சமூகத்திற்காக தேர்வு செய்த மார்க்கத்தைப் புறக்கணிப்பதே குழப்பத்தின் ஆணிவேராகும். அதனைப் புறக்கணிப்பதன் விளைவு, சீர்குலைவும் குழப்பமுமேயாகும். அல்லாஹ்வின் மார்க்கமின்றி, அவன் மனிதர்களுக்காக வகுத்துத் தந்த சட்டமின்றி இந்த உலகில் சீர்திருத்தம் நிகழ முடியாது. மனிதர்களுக்கும் அவர்களின் இறைவனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டால் மனித மனமும் வாழ்வும் இன்னும் பூமி முழுமையும் குழப்பங்களால் சூழப்பட்டுவிடும்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணிப்பதன் விளைவு குழப்பமும் தீங்கும் அழிவுமாகும். இங்கிருந்துதான் அவர்கள் அவனால் வழிகெடுக்கப்படுவதற்கு உரியவர்களாகிறார்கள். அதைக் கொண்டுதான் அவன் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்.

மரணத்திற்குப் பின் உயிர்கொடுத்தல்

அல்லாஹ்வை நிராகரிப்பதனால், அவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதனால் பூமியில் ஏற்படும் விளைவுகளைத் தெளிவுபடுத்திய பிறகு மனிதர்கள் அனைவரையும் நோக்கி கேட்கப்படுகிறது, உயிரளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் வாழ்வாதாரம் அளிப்பவனும் நிர்வகிப்பவனும் நன்கறிந்தவனுமாகிய அந்த இறைவனை உங்களால் எப்படி நிராகரிக்க முடிகிறது:

2:28,29. “எப்படி உங்களால் அல்லாஹ்வை நிராகரிக்க முடிகிறது?! நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு உயிரளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். பின்னர் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான். பின்னர் அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி அதனை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”

இந்த அருட்கொடைகள், சான்றுகள் அனைத்தையும் கண்ட பிறகு அல்லாஹ்வை நிராகரிப்பது எவ்வித அடிப்படையுமற்ற மிக மோசமான நிராகரிப்பாகும். திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?

இந்த எதார்த்தத்தைக் கொண்டுதான் திருக்குர்ஆன் மனிதர்களை எதிர்கொள்கிறது:

“எப்படி உங்களால் அல்லாஹ்வை நிராகரிக்க முடிகிறது? நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு உயிரளித்தான்.”

உங்களைச் சுற்றி பரவியுள்ள ஜடப்பொருள்களைப் போல்தான் நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள். உங்களில் அவன் வாழ்வை ஏற்படுத்தினான். ஆகவே நீங்கள் உயிர் பெற்றீர்கள். அவனிடமிருந்து வாழ்வைப் பெற்ற உங்களால் எப்படி அவனை நிராகரிக்க முடிகிறது?

“பின்னர் உங்களை அவன் மரணிக்கச் செய்வான்.”

இதில் யாரும் தர்க்கம் செய்ய முடியாது. உயிருள்ள ஒவ்வொன்றும் இந்த உண்மையை ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. இந்த விசயத்தில் எந்தவித தர்க்கமும் விவாதமும் செல்லுபடியாகாது.

“பின்னர் அவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான்.”

இந்த விசயத்தில் அக்காலத்திலுள்ளவர்கள் சந்தேகம்கொண்டு தர்க்கம் புரிந்து கொண்டிருந்தார்கள், தற்காலத்தில் கோணலான இயல்புடையவர்கள் தர்க்கம் புரிவதைப்போல. இதன்மூலம் இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவர்களோடு இணைந்துவிட்டார்கள். தாங்கள் முதன்முதலாகப் படைக்கப்பட்ட விதத்தைக்குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்த்தால்  இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ நிராகரிப்பதற்கோ உரிய விசயமல்ல என்பதை அறிந்துகொள்வார்கள்.

“பின்னர் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும்.”

எவ்வாறு அவன் உங்களை ஆரம்பத்தில் படைத்தானோ அவ்வாறே நீங்கள் அவன் பக்கம் திரும்புவீர்கள். அவன் பூமியில் உங்களை பரவச் செய்ததுபோன்றே ஒன்றுதிரட்டப்படவும் செய்வீர்கள். அவனது நாட்டத்தால் உயிரற்ற நீங்கள் உயிர்பெற்றதைப்போல அவனது கட்டளையால் நீங்கள் அவன் பக்கமே திரும்புவீர்கள். உங்களின் விசயத்தில் அவனே தீர்ப்பளிப்பான்.

இவ்வாறு மிகச் சிறிய ஒரு வசனத்தில் வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் புரட்டப்படுகின்றன. திடீரென்று தோன்றிய அந்த வெளிச்சத்தில் மனித சமூகம் முழுமையும் படைப்பாளனின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அவனே உயிரற்ற நிலையிலிருந்து அதற்கு உயிரளித்தான். பின்னர் மரணத்தைக் கொண்டு அந்த உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். மறுமையில் அது அவன் பக்கமே திரும்ப வேண்டும், முதன்முறையாக அவன் படைத்ததுபோன்று. விரைவான இந்த அலசலிலேயே பேராற்றலுடையவனின் ஆற்றல் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அது நம் மனதில், உணர்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான். பின்னர் அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி அதனை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”

இங்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், தர்க்கவியலாளர்கள் வானம் மற்றும் பூமியின் படைப்பைக் குறித்தும் எது முன்னர் படைக்கப்பட்டது, எது பின்னர் படைக்கப்பட்டது என்பது குறித்தும் ‘இஸ்தவா’ என்பதன் பொருள் குறித்தும் மிக அதிகமாகவே பேசியுள்ளார்கள், விவாதித்துள்ளார்கள். ‘முன்னர்’ ‘பின்னர்’ போன்ற சொல்லாடல்கள் மனிதர்கள் விசயத்தில் பயன்படுத்தப்படுமே தவிர அவற்றை அதே பொருளில் அல்லாஹ்வின் விசயத்தில் பயன்படுத்த முடியாது என்பதையும் ‘அல்இஸ்தவா,’ ‘தஸ்வியா’ என்ற இரு வார்த்தைகளும் வரையறைக்குட்படுத்த முடியாத ஒன்றை மனிதனுக்குப் புரிய வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள்தாம் என்பதையும் அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். குர்ஆனின் இந்த சொல்லாடல்களைச் சுற்றி முஸ்லிம் அறிஞர்களிடையே நிகழ்ந்த தர்க்கங்களெல்லாம் தூய இஸ்லாமிய, அரேபிய அறிவு கிரேக்க மெய்யியல் மற்றும் யூத, கிருஸ்தவ இறையியலுடன் ஒன்றுகலந்ததனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளில் ஒன்றேயாகும். அதுபோன்ற வீணான தர்க்கங்களில் ஈடுபட்டு இந்தக் கொள்கையின், குர்ஆனின் அழகைக் கெடுப்பதை விட்டும் நிச்சயம் நாம் விலகியிருக்க வேண்டும். அத்தகைய தர்க்கவியல் விவகாரங்கள் இன்று நமக்கு அவசியமும் இல்லை.

ஆகவே இந்தச் சொல்லாடல்களுக்குப் பின்னாலிருக்கும் அடிப்படையான உண்மைகளை -இந்தப் பூமியிலுள்ள அனைத்தும் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது, அது உணர்த்தும் மனித வாழ்வின் நோக்கம், இந்த பூமியில் அவன் ஆற்ற வேண்டிய பணி, அல்லாஹ்விடம் அதற்கான மதிப்பு போன்றவை- சுருக்கமாகக் காணலாம். இவையனைத்திலிருந்தும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், சமூகத்தில் மனிதனின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்படுகிறது.

“அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான்.”

இங்கு ‘உங்களுக்காக’ என்ற வார்த்தை ஆழமான பொருளை உள்ளடக்கியுள்ளது. அது, அல்லாஹ் இந்த மனிதனை பெரும் நோக்கத்திற்காகவே படைத்துள்ளான் என்பதை உறுதியாக அறிவிக்கிறது. இந்த பூமியின் பிரதிநிதியாக, அதிலுள்ளவற்றிற்கு அதிபதியாக, அதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவனாக அவன் மனிதனைப் படைத்துள்ளான். அவன் இந்த விசாலமான பிரபஞ்சத்தில் மிக உயர்ந்த படைப்பு. இந்த விசாலமான உலகிற்கு அவனே தலைவன். அவன் இந்த பூமியில் அவன் செய்யும் பணியே முதன்மையானது. அவன் பூமியின் தலைவன். எல்லா இயந்திரங்களின், கருவிகளின் தலைவன். பொருள்முதல்வாத கண்ணோட்டம் கூறுவதுபோன்று அவன் இயந்திரங்களின் அடிமையல்ல. பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இயந்திர உலகில் ஏற்படக்கூடிய அபரிதமான வளர்ச்சி அவனை இயந்திரங்களுக்கு, கருவிகளுக்கு அடிமையாக ஆக்கிவிடாது. அவர்கள் இந்தப் பூமிக்குத் தலைவனாகப் படைக்கப்பட்ட மனிதனை இயந்திரங்களுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறார்கள். அவனது பங்களிப்பை அற்பமாகக் கருதுகிறார்கள். மனிதனைச் சிறுமைப்படுத்தும் நோக்கங்களெல்லாம் – அவை எவ்வளவுதான் உலகியல் இலாபங்களைக் கொண்டிருந்தாலும் – மனிதப் படைப்பின் நோக்கத்திற்கே எதிரானவை. முதலில் மனிதனின் கண்ணியமும் உயர்வும் பாதுகாக்கப்பட வேண்டும். மற்றவை அனைத்தும் அவனுக்குப் பிறகுதான்.

அல்லாஹ் மனிதர்கள் மீது கிருபை பாராட்டும் அருட்கொடைகள் பூமியில் அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகள் மட்டுமல்ல. அத்துடன் பூமியிலுள்ள அனைத்திற்கும் அவனைத் தலைவனாக ஆக்கியுள்ளான். உலகியல் பொருட்கள் அனைத்தையும் விட அவனை உயர்வானவனாக ஆக்கியுள்ளான். அனைத்திற்கும் மேலாக அவனுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

“பின்னர் அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி அதனை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”

இங்கு ‘இஸ்திவா’ என்ற வார்த்தையைக் குறித்து வந்துள்ள கருத்து வேறுபாடுகளில் நாம் மூழ்க விரும்பவில்லை. ஆயினும் அது ஆதிக்கத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்வோம். அது அவன் படைப்புகளைப் படைக்க நாடியதைக் குறிக்கிறது. ஏழு வானங்கள் என்பது எதைக் குறிக்கிறது, அவற்றின் வடிவங்கள், அவற்றுக்கிடையேயுள்ள தூரங்கள் ஆகியவை குறித்த வீணான விவாதங்களிலும் நாம் ஈடுபட விரும்பவில்லை. இவற்றின் நோக்கத்தை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்தி விடுகிறோம். அந்த இறைவனை நிராகரிக்கும் மனிதர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது, “அவன்தான் பிரபஞ்சத்தின் வானத்தையும்  பூமியையும் படைத்தான். அவன்தான் அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்துகிறான். அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான். பூமியில் மனித வாழ்வு சீராக, நிம்மதியாக அமையும்பொருட்டு வானங்களையும் இணைத்துள்ளான்.”

“அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”

அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன், ஒவ்வொரு பொருளையும் நிர்வகிப்பவன். ஆகவே ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்தவன். அவன் எல்லாவற்றையும் நிர்வகிப்பதோடு எல்லாவற்றையும் குறித்தும் நன்கறிந்துள்ளான் என்ற எதார்த்தம் படைத்துப் பராமரிக்கும், நிர்வகிக்கும், வாழ்வாதாரம் அளிக்கும் அந்த ஒருவனையே வணங்க வேண்டும் என்பதைத் தூண்டும் ஏற்றுக்கொள்ளத் தூண்டும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது.

இவ்வாறு அத்தியாயத்தின் முதல் சுற்று நிறைவடைகிறது. முழுவதிலும் நம்பிக்கைகொள்ளும்படியும் இறையச்சமுடையோராக ஆகிவிடும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment