தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

மூன்று வகையான மனிதர்களும் படம்பிடித்துக் காட்டப்பட்ட பிறகு மனிதர்கள் அனைவரையும் நோக்கி அழைப்பு விடுக்கப்படுகிறது, நீங்கள் அனைவரும் நேர்வழியில் நிலைத்திருக்கும் கண்ணியமான முதல் வகையினரைப் போன்று தூயவர்களாக ஆகிவிடுங்கள், என்று. அவர்கள்தாம் வெற்றியாளர்கள், இறையச்சமுடையவர்கள்:

2:21,22. “மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். அதனால் நீங்கள் இறையச்சமுடையோராகலாம். அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே வானத்திலிருந்து மழை பொழியச்செய்து அதனைக்கொண்டு உங்களுக்கு உணவாக அமையும்பொருட்டு பல்வேறு வகையான தாவரங்களை முளைக்கச் செய்தான். அறிந்துகொண்டே அவனுக்கு நீங்கள் இணைகளை ஏற்படுத்திவிடாதீர்கள்.”

அவர்களையும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த அவர்களின் இறைவனையே வணங்குமாறு மனிதர்கள் அனைவரும் அழைப்புவிடுக்கப்படுகிறார்கள். அவர்களின் இறைவன்தான் அவர்களைப் படைத்தான். ஆகவே அவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும். வணக்க வழிபாட்டிற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அவர்கள் அதனை அடையலாம். அவர்கள் இறைவனை அஞ்சக்கூடியவர்களாக, அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக ஆகலாம். அவர்கள்தாம் தங்களைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறைப்படி செய்யக்கூடியவர்கள். அவர்கள்தாம் மனிதர்கள் அனைவரையும் படைத்த, வானம் மற்றும் பூமியிலுள்ள அனைவருக்கும் உணவளிக்கக்கூடிய அந்த இறைவனையே வணங்கக்கூடியவர்கள்.

“அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.”

இது மனித வாழ்விற்காக இந்த பூமி வசதியாக அமைக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. அது அவர்களுக்கு படுக்கையைப் போன்று வசிப்பிடமாக, ஓய்வளிக்கும் இடமாக, பாதுகாப்பளிக்கும் இடமாக உள்ளது. அல்லாஹ் அமைத்துத் தந்த இந்த படுக்கையை பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். அவர்கள் வாழ்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை, அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் இவற்றையெல்லாம் அவர்களுக்காக இலகுபடுத்தித் தந்திராவிட்டால் அவர்களால் இந்த பூமியில் வாழ முடியாது. இந்த வசதிகளில் ஏதேனும் ஒன்று இல்லாமல் ஆகிவிட்டால்கூட மனித வாழ்வு இங்கு நிலைபெற முடியாது. இங்கு அல்லாஹ் ஏற்படுத்திய காற்றில் நிர்ணயிக்கப்பட்ட ஏதேனும் ஒன்று குறைந்துவிட்டால் மனிதர்களால் மூச்சுகூட விடமுடியாமல் போய்விடும்.

“வானத்தை முகடாக ஆக்கியுள்ளான்.”

அதனை உறுதியான முகடாக ஆக்கியுள்ளான். பூமியில் மனித வாழ்வோடு, அந்த வாழ்வின் இலகுபடுத்தப்பட்டுள்ள வசதிகளோடு  வானம் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. அது தன் வெப்பம், ஒளி, அதன் கோள்களின் ஈர்ப்பு, அவற்றின் ஒத்திசைவு மற்றும் வானத்திற்கும் அதற்குமிடையே காணப்படும் தொடர்புகள் அனைத்தின் மூலமும் பூமியில் மனித வாழ்விற்கு வசதியமைத்துக் கொடுக்கிறது, அதற்கு உதவிசெய்கிறது. படைப்பாளனின் ஆற்றல், வாழ்வாதாரம் அளிப்பவனின் கிருபை, அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் ஆகியவைகுறித்து மக்களுக்கு நினைவூட்டப்பட்டுவதினூடே இதுவும் குறிப்பிடப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

“அவனே வானத்திலிருந்து மழை பொழியச்செய்து அதனைக்கொண்டு உங்களுக்கு உணவாக அமையும்பொருட்டு பல்வேறு வகையான தாவரங்களை முளைக்கச் செய்தான்.”

வானத்திலிருந்து மழைபொழியச் செய்து அதன்மூலம் பலவகையான தாவரங்களை வெளிப்படுத்தும் அல்லாஹ்வின் இந்த செயல் அவனது ஆற்றல் மற்றும் அருட்கொடைகளைக் குறித்து நினைவூட்டப்படும் குர்ஆனின் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. வானத்திலிருந்து பொழியும் மழைதான் இந்த பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தின் வாழ்விற்கும் அடிப்படையான பொருள்.  அதிலிருந்தே வாழ்வு தன் அனைத்து வடிவங்களோடும் நிலைகளோடும் தோன்றுகிறது.

“நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே படைத்தோம்.”

சில சமயங்களில் நேரடியாக மழையிலிருந்து நீரைப் பெற்று தாவரங்கள் வளர்கின்றன. சில சமயங்களில் அந்த மழையின்மூலம் உருவாகிய ஆறுகள் மற்றும் நீரோடைகளிலிருந்து நீரைப் பெற்று வளர்கின்றன. அல்லது அந்த மழையினால் பூமிக்கடியில் சேகரமாகும் நீர் ஊற்றுகளாக வெளிப்படுகிறது அல்லது கிணறுகள் தோண்டப்பட்டு பெறப்படுகிறது அல்லது நவீன கருவிகள்மூலம் உறிஞ்சப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுகிறது.

பூமியில் நீரின் முக்கியத்துவம், மனித வாழ்வில் அதன் பங்கு, வாழ்வு தன் எல்லா வடிவங்களோடும் அதனையே சார்ந்திருத்தல் ஆகியவை அனைத்தும் தர்க்கத்தால் மறுக்கமுடியாத இயல்பான விசயங்களாகும். படைத்துப் பராமரிப்பவனையே வணங்க வேண்டும் என்பதன் பக்கம் அழைப்புவிடுக்கப்படும்போது அந்த நீரின் பக்கம் சுட்டிக்காட்டப்பட்டு அதைக்கொண்டு நினைவூட்டப்படுவதே போதுமானதாகும்.

இந்த வசனத்திலிருந்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் இரண்டு அடிப்படையான அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, படைப்புகள் அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஒருவனே என்பது. “அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான்.” இரண்டு, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஒன்றுதான். அவற்றுக்கு மத்தியில் ஒத்திசைவு காணப்படுகிறது. அவையனைத்தும் மனித வாழ்விற்காக படைக்கப்பட்டு வசப்படுத்தப்பட்டுள்ளது. “அவனே வானத்திலிருந்து மழை பொழியச்செய்து அதனைக்கொண்டு உங்களுக்கு உணவாக அமையும்பொருட்டு பல்வேறு வகையான தாவரங்களை முளைக்கச் செய்தான்.” பிரபஞ்சத்தின் இந்த பூமி மனித வாழ்வுக்காகவே விரிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் வானம் முகடாக அமைக்கப்பட்டுள்ளது. அது பூமியில் மழைபொழியச் செய்து மனிதர்களுக்கு உணவாக அமையும்பொருட்டு பலவகையான தாவரங்களை முளைக்கச்செய்கிறது. இவையனைத்தும் படைப்பாளனின் கிருபையேயாகும்.

“அறிந்துகொண்டே அவனுக்கு இணைகளை ஏற்படுத்திவிடாதீர்கள்.”

அவன்தான் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான் என்பதையும் அவன்தான் நீங்கள் வாழ்வதற்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கி அதிலிருந்து மழைபொழியச் செய்கிறான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவனுக்குப் பங்காளிகளோ இணையானவர்களோ யாரும் இல்லை. இவ்வாறு அறிந்தபிறகு நீங்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது தகுந்த காரியமல்ல.

மனித மனதில் ஏகத்துவக் கொள்கையை தூய நிலையில் நிலைநிறுத்தும்பொருட்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துவது மிகக்கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அது இணைவைப்பாளர்கள் செய்துகொண்டிருந்த வெளிப்படையான, சாதாரண இணைவைப்புச் செயல்களை மட்டும் தடைசெய்யவில்லை. மாறாக இறைவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவதன் மறைவான அனைத்து வடிவங்களையும் தடைசெய்கிறது. அல்லாஹ்வைத் தவிர மற்ற படைப்புகளும் தனக்குப் பலனளிக்கும் என்று நம்புவது, அவனைத்தவிர மற்றவர்களுக்கு, அவனது படைப்புகளுக்கு அஞ்சுவது, அவனைத்தவிர மற்றவர்களால் தனக்கு நன்மையளிக்கவோ தீங்களிக்கவோ முடியும் என்று நம்புவது என எந்த வடிவில் இறைவனுக்கு இணையாக மற்றவர்கள் ஆக்கப்பட்டாலும் அது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்:

“இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்துவது என்பது இரவின் இருட்டில் கரும்பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பைவிட மறைவான ஷிர்க்காகும். உதாரணமாக, ஒருவர் “இன்ன மனிதரே! அல்லாஹ்வின்மீதும் உன் வாழ்க்கையின்மீதும் சத்தியமாக” என்று கூறுவது, “இந்த நாய் மட்டும் இல்லையென்றால் திருடன் நம் வீட்டில் நுழைந்திருப்பான்” என்று கூறுவது, “இந்தப் பூனை மட்டும் இல்லையென்றால் திருடன் வீட்டில் நுழைந்திருப்பான்” என்று கூறுவது, “அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்” என்று கூறுவது… ஆகியவை அனைத்தும் ஷிர்க்காகும்.

இவ்வாறுதான் இந்த சமூகத்தின் முன்னோர் மறைவான ஷிர்க்கையும் அறிந்துவைத்திருந்தார்கள். அவர்களின் இந்த அளவுப் பேணுதலோடு ஒப்பிடும்போது நாம் எங்கிருக்கிறோம்? ஏகத்துவத்தின் எதார்த்தத்தை விட்டு நாம் எந்த அளவு தூரமாக இருக்கின்றோம்?

இறைவனின் அறைகூவல்

யூதர்கள் நபியவர்களின் தூதுத்துவத்தில் சந்தேகம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். நயவஞ்சகர்களும் அதில் சந்தேகம் கொண்டிருந்தார்கள். அதேபோன்று மக்காவின் இணைவைப்பாளர்களும் சந்தேகம்கொண்டு அங்கு சந்தேகம் ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். இங்கு திருக்குர்ஆன் அனைவருக்கும் சவால் விடுகிறது. மனிதர்கள் அனைவரும் விளித்து அறைகூவல் விடுக்கப்படுகிறார்கள்.

2:23. “மனிதர்களே! நம்முடைய அடியாருக்கு நாம் அருளிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால் நாம் உங்களுக்கு சவால் விடுகிறோம், இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.”

இந்த சவால் நபியவர்களை ‘அடியார்’ என்று கூறியவாறு தொடங்குகிறது. இந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த வார்த்தைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. “நம்முடைய அடியாருக்கு நாம் அருளியதன்மீது நீங்கள் சந்தேகம் கொண்டால்.” இந்தப் பண்பு பின்வரும் விசயங்களைத் தெளிவுபடுத்துகிறது: முதலில் இது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட கண்ணியமாகும். அல்லாஹ்வுக்கு அடிமையாக இருத்தலே மனிதன் அடைகின்ற உயர்ந்த நிலையாகும். இரண்டாவதாக, மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமைகளாக இருக்கும்படியும் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காதிருக்கும்படியும் அழைப்பு விடுக்கப்படுகிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்றுக்கொண்டிருந்த – அதுதான் மனிதன் அடைகின்ற மிக உயர்ந்த நிலை- தூதர் தம்மை அல்லாஹ்வின் அடியார் என்றே கூறிக்கொண்டார்.

இந்த அறைகூவலை அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே பார்க்க முடிகிறது. உங்கள் முன் இருக்கின்ற இந்த வேதம் இதுபோன்ற எழுத்துகளால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இதிலுள்ள அத்தியாயத்தைப் போன்று ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டுவாருங்கள். அல்லாஹ்வைத்தவிர உங்களுக்கு சாட்சி சொல்லக்கூடியவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார் உண்மையாளர் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றான்.

இந்த சவால் தூதரின் வாழ்க்கையிலும் அதற்குப் பின்னரும் சவாலாகவே எஞ்சிவிட்டது. மறுமைநாள் வரை இது சவாலாகவே எஞ்சி நிற்கும். இது எவ்வித தர்க்கத்திற்கும் இடமில்லாத உறுதியான ஆதாரமாகும். மனிதர்கள் உருவாக்கிய அனைத்தையும்விட்டு திருக்குர்ஆன் தனித்து விளங்குகிறது. அது எப்போதும் தனித்தே விளங்கும். அது பின்வரும் இறைவசனத்தை உண்மைப்படுத்தக்கூடியதாகவே இறுதிவரை நிலைத்திருக்கும்:

2:24. “நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது. மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக்கொண்டு எரிக்கப்படுகின்ற நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது.”

இங்கு விடுக்கப்படும் சவால் ஆச்சரியமானது. அதை ஒருபோதும் முறியடிக்க முடியாது என்று உறுதியாகக் கூறுவது அதைவிட ஆச்சரியமானது. அவர்களால் குர்ஆனின் இந்த சவாலை முறியடிக்க முடிந்திருந்தால் ஒரு நிமிடம்கூட தாமதித்திருக்க மாட்டார்கள். அது எவ்வித சந்தேமுமின்றி அறுதியிட்டுக் கூறுகிறது, அவர்களால் ஒருபோதும் இதைப்போன்ற ஒன்றைக் கொண்டுவர முடியாது, என்று. அது கூறியவாறே நிகழ்ந்தது. எவ்வித தர்க்கத்திற்கும் இடமின்றி அது அற்புதமாகும். அவர்களுக்கு முன்னால் களம் காலியாகத்தான் இருந்தது. ஒருவேளை இந்த சவாலை முறியடிக்கும் ஏதேனும் ஒன்றை அவர்கள் கொண்டுவந்திருந்தால் குர்ஆனின் இந்த ஆதாரம் பொருளற்று போயிருக்கும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. இனி ஒருபோதும் அவ்வாறு நிகழவும் செய்யாது. அதேபோன்று குர்ஆன் மனிதர்கள் அனைவரையும் விளித்தே சவாலை முன்வைக்கிறது. அது குறிப்பிட்ட தலைமுறை மக்களை மட்டும் விளித்து சவால் விட்டிருந்தால் அது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு சம்பவமாக மட்டுமே ஆகியிருக்கும்.

மனிதர்களின் மொழிநடைகளைக் குறித்து, பிரபஞ்சம் மற்றும் பொருள்களைக்குறித்த மனிதர்களின் கண்ணோட்டங்களைக் குறித்து நன்கறிந்தவர், மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் வழிமுறைகள் சமூகவியல், உளவியல் கண்ணோட்டங்கள் ஆகியவற்றில் போதிய அனுபவமுடையவர் சந்தேகமின்றி உறுதியாக அறிந்துகொள்வார், இந்த தளத்தில் குர்ஆன் கொண்டுவந்தவை யாவும் மனிதர்களால் உருவாக்கப்படக்கூடியவை அல்ல. அவை வேறொன்றாகும். அறியாதவர்கள் அல்லது சத்தியத்தை அசத்தியத்தோடு கலக்க நினைக்கும் உள்நோக்கம் கொண்டவர்கள்தாம் இந்த விசயத்தில் தர்க்கம் புரிவார்கள்.

பின்னர் இந்த சவாலை முறியடிக்க முடியாதவர்களுக்கு, தெளிவான பின்னரும் சத்தியத்தை நம்பாமல் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: “மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டு எரிக்கப்படுகின்ற நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது.”

ஏன் மனிதர்களும் கற்களும் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளார்கள், அச்சுறுத்தும் இந்த பயங்கரமான வடிவில்?

இந்த நரகம் நிராகரிப்பாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் குறித்துதான் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் “அல்லாஹ் அவர்களின் உள்ளங்களின்மீதும் செவிகளின்மீதும் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளின்மீதும் திரை உள்ளது” என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் அவர்களிடம் சவால் விடுகிறது. அவர்களால் சவாலை முறியடிக்க முடியவில்லை. சத்தியம் எனத் தெரிந்த பின்னரும் அதன் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. அப்படியானால் அவர்களும் கற்களைப் போன்றவர்கள்தாம். மனித வடிவில் வெளிப்படுகிறார்கள், அவ்வளவுதான். இங்கு கற்களையும் மனிதர்களையும் ஒன்றுசேர்ப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இங்கு கற்கள் குறிப்பிடப்பட்டுள்ளது மனித மனதிற்கு இன்னொரு காட்சியைத் சித்தரிக்கிறது, கற்களை விழுங்கும் நரக நெருப்பின் காட்சி. நரக நெருப்பில் கற்களோடு முட்டிமோதும் மனிதர்களின் காட்சி.

பயங்கரமான அந்த காட்சிக்கு மறுபுறம் நம்பிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் அருட்கொடைகள் நிறைந்த சுவனத்தின் காட்சி:

2:25. “அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு ‘சொர்க்கச் சோலைகள் உண்டு’ என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றில் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு அங்கிருந்து ஏதேனும் கனி உணவாக வழங்கப்படும்போதெல்லாம், ‘இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது’ என்று கூறுவார்கள். ஒன்றுக்கொன்று ஒத்தவையாக அவர்களுக்கு வழங்கப்படும். தூய்மையான துணைகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அங்கு அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.”

விதவிதமான அருட்கொடைகளுக்கு மத்தியில் தூய துணைகளும் ஒன்றுக்கொன்று ஒத்த கனிகளும் கவனத்தைத் தூண்டுபவை. அவற்றைப் போன்ற அல்லது அவற்றின் வடிவத்தையோ பெயர்களையோ ஒத்த கனிகள் அவர்களுக்கு உலகில் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது சுவனத்திலேயே அவற்றைப் போன்றவை வழங்கப்பட்டிருக்கலாம். வெளிப்படையாக அவை ஒன்றையொன்று ஒத்திருக்கலாம், சுவையில் மாறுபட்டிருக்கலாம். அவை இனிமையான, திருப்தியான, மகிழ்ச்சியான சூழலை, மீண்டும் மீண்டும் வரக்கூடிய இன்ப அதிர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டுகிறன்றன. ஒத்தவையாக காணப்படுவது ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றாக வெளிப்படும்.

தோற்றத்தில் ஒத்த, சுவையில் மாறுபடக்கூடிய இந்த தனித்தன்மை இறைவனின் படைப்பில் காணப்படக்கூடிய வெளிப்படையான தனித்தன்மையாகும். அது தோற்றத்தைவிட உண்மைநிலையை பெரியதாக ஆக்குகிறது. எடுத்துக்காட்டாக, மனிதனை எடுத்துக் கொள்வோம். உருவாக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான மனிதர்கள்தாம். தலை, உடல், சதை, இரத்தம், எலும்பு, நரம்புகள், இரு கண்கள், இரு காதுகள், வாய், நாவு.. என அனைத்தும் உயிருள்ள ஒரு செல்லிருந்து படைக்கப்பட்டவைதாம். வடிவத்திலும் மூலத்திலும் அவர்கள் ஒருவரையொருவர் ஒத்தவர்கள்தாம். ஆனால் குணத்திலும் தனிதன்மையிலும் இயல்பிலும் ஒருவர் இன்னொருவரை ஒத்திருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் இன்னொருவருக்குமான வேறுபாடு வானம் மற்றும் பூமிக்கிடையேயுள்ள தூரத்தைப் போன்றிருக்கும்.

இவ்வாறு இறைவனின் படைப்பில் தலைசுற்றும் அளவுக்கு பெரிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது. வகைகளில், வடிவங்களில், தனித்தன்மைகளில், பண்புகளில் என அனைத்திலும் வேறுபாடு காணப்படுகிறது. அனைத்தும் ஒன்றையொன்று ஒத்திருக்கக்கூடிய செல்லிருந்து தோன்றியவைதாம்.

திருக்குர்ஆனில் உதாரணங்களின் பிரயோகம்

பின்னர் அல்லாஹ் குர்ஆனில் கூறும் உதாரணங்களைக் குறித்து பேச்சு திரும்புகிறது:

2:26,27. “நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான்.   நம்பிக்கையாளர்கள் அது தம்  இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியம் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால் நிராகரிப்பாளர்களோ “இந்த உதாரணத்தின்மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள். இதன்மூலம் அல்லாஹ் பலரை வழிதவறச் செய்கிறான். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். தனக்குக் கீழ்ப்படியாத மக்களைத்தான் அவன் வழிதவறச் செய்கிறான். அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுகிறார்கள்; அவன் இணைத்து வைக்குமாறு கட்டளையிட்டதை துண்டித்துவிடுகிறார்கள்; பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.”

இந்த வசனங்கள், எந்த நயவஞ்சகர்களைக் குறித்து முன்னர் நெருப்பு மூட்டியவனின் உதாரணம், வானத்திலிருந்து பொழியும் பெருமழையின் உதாரணம் ஆகிய உதாரணங்கள் கூறப்பட்டதோ அவர்கள் இது போன்ற உதாரணங்களையும் இன்னும் மக்காவில் அருளப்பட்டு மதீனாவில் ஓதப்பட்டு வந்த வேறு வகையான உதாரணங்களையும் -எடுத்துக்காட்டாக, “அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களின் உதாரணம் தனக்கென வீட்டை அமைத்துக் கொண்ட சிலந்திப் பூச்சியைப் போன்றதாகும். நிச்சயமாக வீடுகளில் மிகவும் பலவீனமானது சிலந்தியின் வீடுதான். அந்தோ! அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!” (29:41)  அவர்கள் வணங்கும் தெய்வங்களின் இயலாமையை விளக்க பின்வரும் உதாரணம் கூறப்படுகிறது: “மனிதர்களே, உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதனைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் அழைக்கும் தெய்வங்களால் ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது. அதற்காக அவையனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் சரியே. ஏன் ஒரு ஈ அவற்றிடமிருந்து எதையேனும் பிடுங்கிக் கொண்டாலும் அதைக்கூட அவற்றால் மீட்ட முடியாது. உதவி தேடுபவர்களும் பலவீனர்களே. உதவி தேடப்படுபவையும் பலவீனமானவையே.”(22:73) – திருக்குர்ஆனின் நம்பகத் தன்மையில் சந்தேகம் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. சில சமயங்களில் அவர்களுடன் யூதர்களும் இணைவைப்பாளர்களும் இணைந்து கொண்டார்கள். ஈ, கொசு, சிலந்திப் பூச்சி போன்ற அற்ப உயிரினங்களையா அல்லாஹ் உதாரணமாகக் கூறுவான்? என்று அவர்கள் பரிகாசமாகக் கேட்டார்கள். இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது உண்மையானால் இதுபோன்ற அற்ப உதாரணங்கள் இதில் இடம்பெற்றிருக்காது என்றார்கள். இவ்வாறு மதீனாவில் யூதர்களும் நயவஞ்சகர்களும் திருக்குர்ஆனைக்குறித்து முஸ்லிம்களிடையே சந்தேகம் ஏற்படுத்த முனைந்தார்கள். மக்காவில் இணைவைப்பாளர்களும் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தார்கள்.

இந்த வசனங்கள் அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும்விதமாகவும் அல்லாஹ் உதாரணங்கள் கூறுவதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும்விதமாகவும் நம்பிக்கைகொள்ளாதவர்கள் அவர்களே அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கும்விதமாகவும் இவை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்று நம்பிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும்விதமாகவும் வந்துள்ளன.

“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான்”

அல்லாஹ்தான் சிறியதையும் பெரியதையும் படைத்த இறைவன். அவனே கொசுவையும் யானையையும் படைத்தவன். கொசுவில் இருக்கும் அதே அற்புதம்தான் யானையிலும் இருக்கிறது. இரண்டிலும் உயிர் என்னும் அற்புதம் இருக்கிறது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இந்த அற்புதத்தின் இரகசியத்தை அறிய மாட்டார். கூறப்படும் உதாரணங்களில் வடிவங்களிலோ அளவிலோ படிப்பினை இல்லை. மாறாக அவை தெளிவுபடுத்தும்பொருட்டு பயன்படுத்தப்படும் சாதனங்கள்தாம். அவற்றில் குறைஏற்படுத்தும், வெட்கப்பட வைக்கும் எதுவும் இல்லை. அல்லாஹ் இவற்றைக் கொண்டு உள்ளங்களைச் சோதிக்க நாடுகிறான்:

“நம்பிக்கையாளர்கள் அது தம் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியம் என்பதை அறிந்துகொள்வார்கள்.”

அல்லாஹ்வின்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவனிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் அவனது கண்ணியத்திற்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை ஆக்குகிறது. அந்த நம்பிக்கை அவர்களின் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சி புலனுணர்வுகளை மூடியிருக்கும் திரைகளை அகற்றி அல்லாஹ்விடமிருந்து வந்த ஒவ்வொன்றின் நோக்கத்தையும் உணரக்கூடியவர்களாக அவர்களை ஆக்குகிறது.

“ஆனால் நிராகரிப்பாளர்களோ “இந்த உதாரணத்தின்மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று பரிகாசமாகக் கேட்கிறார்கள்.”

இது அல்லாஹ்வின் ஒளியை, அவனது நோக்கத்தை உணராத, அவனது நியதியோடு தொடர்பற்ற ஒருவரிடமிருந்து, அல்லாஹ்வின் மகத்துவத்தை உணராத, அவனுடன் அடியான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்துகொள்ள விரும்பாத ஒருவரிடமிருந்து வெளிப்படும் கேள்வியாகும். அறியாமையினால் ஆட்சேபிக்கும் நோக்கத்தில் அவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்.

இங்கு அவர்களை எச்சரிக்கும் தொனியில் அந்த உதாரணங்களுக்குப் பின்னாலிருக்கும் திட்டங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுகிறது:

“இதன்மூலம் அல்லாஹ் பலரை வழிதவறச் செய்கிறான். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். தனக்குக் கீழ்ப்படியாத மக்களைத்தான் அவன் வழிதவறச் செய்கிறான்.”

அல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.

Related posts

Leave a Comment