தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

மாறுபட்ட சித்திரம்

இரண்டாவது வகையான மனிதர்கள் நிராகரிப்பாளர்களாவர். அவர்கள் எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் அடிப்படைகளை வெளிப்படுத்துகிறார்கள்:

2:6,7. “சத்தியத்தை சத்தியம் என அறிந்தும் நிராகரிப்பவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமலிருப்பதும் ஒன்றுதான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீதும் செவிகளின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரை உள்ளது. அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.”

இங்கு இறையச்சமுடையோருக்கும் நிராகரிப்பாளர்களுக்குமிடையே காணப்படும் முழுமையான வேறுபாட்டைக் காண்கிறோம். இந்த வேதம்தான் இறையச்சமுடையோருக்கு நேரான வழியைக் காட்டுகிறது. அதற்கு மாறாக இதைக் கொண்டு நிராகரிப்பாளர்களை எச்சரிப்பதும் எச்சரிக்காமலிருப்பதும் ஒன்றுதான். இறையச்சமுடையோரின் ஆன்மாக்களில் திறந்திருக்கும் வழிகளெல்லாம் நிராகரிப்பாளர்களின் ஆன்மாக்களில் மூடப்பட்டுள்ளன. இறையச்சமுடையோரை பிரபஞ்சத்தோடும் பிரபஞ்சத்தின் படைப்பாளனோடும் இணைக்கும் தொடர்புகளெல்லாம் நிராகரிப்பாளர்களின் விசயத்தில் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய உள்ளங்களின்மீதும் முத்திரையிடப்பட்டு உள்ளது. அதில் சத்தியம் நுழைய முடியாது. அவர்களின் பார்வைகளின் மீதும் திரை உள்ளது. நேர்வழியையோ அதன் ஒளியையோ அவர்களால் காண முடியாது. தங்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையை இழிவாகக் கருதி புறக்கணித்ததனால்தான் அவர்களுடைய உள்ளங்களின் மீதும் செவிகளின் மீதும் முத்திரையிடப்பட்டு பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டது. அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்றுபோல் ஆகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் பாறையைப் போன்று கடினமான உள்ளமுடையவர்கள், காரிருளில் இருப்பவர்கள்.

எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தை சத்தியம் என அறிந்தும் நிராகரித்ததன் இயல்பான விளைவு, அவர்கள் கடுமையான வேதனையைப் பெறுவார்கள்.

நயவஞ்சகத்தின் அடையாளம்

பின்னர் மூன்றாவது வகையான மனிதர்கள் படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள். அவர்கள் முதல் வகையான மனிதர்களைப்போல தாராளமான, விசாலமான மனம்கொண்டவர்களோ இரண்டாவது வகையான மனிதர்களைப்போல கடினமான உள்ளம்கொண்டவர்களோ அல்ல. ஆனால் தடுமாற்றமுடையவர்கள். வெளிப்படையாகத் தெரியாதவர்கள். உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துவிட்டு வெளியில் நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவர்கள். அவர்கள்தாம் நயவஞ்சகர்கள்.

2:8-16. “மக்களில் சிலர், “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்ற எண்ணுகிறார்கள். உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆயினும் அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் அதனை இன்னும் அதிகப்படுத்திவிட்டான். பொய்யுரைத்துக் கொண்டிருந்ததனால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

“உலகில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள்தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்” என்று கூறுகிறார்கள். எச்சரிக்கை! இவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் இவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. “மற்ற மக்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நீங்களும் நம்பிக்கைகொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “மூடர்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கைகொள்ள வேண்டுமா?” என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் இவர்கள் அறிந்துகொள்வதில்லை.

அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால், “நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்கின்றோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். அவர்களின் வழிகேட்டில் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறான். அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள். அவர்களின் வியாபாரம் பலனளிக்கவுமில்லை; அவர்கள் சத்தியத்தின் பக்கம் செல்லும் வழியையும் பெறவில்லை.”

இந்த வகையான மனிதர்கள் மதீனாவில் இருந்தார்கள். ஆனால் காலம் மற்றும் இடத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா தலைமுறைகளிலும் இவ்வகையான மனிதர்கள் காணப்படத்தான் செய்கிறார்கள். மேல்தட்டு மக்களிடையே காணப்படும் இந்த நயவஞ்சகர்களால் துணிவாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அதனை நிராகரிக்கவும் முடியாது. அதே சமயம் மக்களில்  உயர்ந்தவர்களாக, விசயங்களை சரியான முறையில் அணுகக்கூடியவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளவும் செய்வார்கள். ஆகவே வரலாற்றுக் குறிப்புகள் எதுவுமின்றி எல்லா தலைமுறைகளிலும் காணப்படும் நயவஞ்சகர்களைக் குறிக்கும்படி வசனங்கள் பொதுவாக வந்துள்ளவாறே நாமும் அவற்றை அணுகுவோம்.

அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புவதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல. நம்பிக்கையாளர்களை எதிர்கொண்டு தங்களின் நிராகரிப்பை வெளிப்படுத்தத் துணிவற்ற நயவஞ்சகர்கள்.

இந்த எளியவர்களை இவ்வாறு ஏமாற்றுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆன் அவர்களுடைய செயலின் உண்மைநிலையைத் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் நம்பிக்கையாளர்களை மட்டும் ஏமாற்ற எண்ணவில்லை, அல்லாஹ்வையும் ஏமாற்ற எண்ணுகிறார்கள்.

“அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்ற எண்ணுகிறார்கள்.”

இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே  மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?

இது உண்மையில் நம்பிக்கையாளர்களை ஏமாற்ற எண்ணுவோருக்கு, அவர்களுக்குத் தீங்கிழைக்க நாடுவோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதிராகப் போரிடவில்லை. மாறாக அனைத்தையும் அடக்கியாளும் பேராற்றலுடைய இறைவனுக்கு எதிராகப் போரிடுகிறார்கள். இறைநேசர்களை எதிர்த்துப் போரிடுபவர்கள் இறைவனை எதிர்த்துப் போரிடுகிறார்கள். அவர்களின் இந்த முயற்சி இறைவேதனையைத்தான் பெற்றுத்தரும்.

மறுபுறம் நம்பிக்கையாளர்கள் இந்த உண்மையைக் குறித்து சிந்தித்து திருப்தியடைய வேண்டும் என்பதற்காகவும் எதிரிகளின் சூழ்ச்சிகளைப் பொருட்படுத்தாமல் தங்களின் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் எதிரிகள் இதனைக் குறித்து சிந்தித்து தாங்கள் யாருடன் போரிடுகின்றோம் என்பதை அறிந்து பதற்றமடைந்து திரும்ப வேண்டும் என்பதற்காகவும்தான்.

நயவஞ்சகத்தனமாக “நாங்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறோம்” என்று கூறுவதை புத்திசாலித்தனம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! வசனம் முடிவதற்கு முன்னரே அதன் இயல்பு தெளிவுபடுத்தப்படுகிறது, “அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அதனை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை, என்று.

அவர்கள் எந்த அளவு அலட்சியமாக உள்ளார்கள் எனில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதைக்கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் ஏமாற்றுவதை அல்லாஹ் நன்கறிந்தவன். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் அரவணைப்பில், பாதுகாப்பில் இருக்கிறார்கள். இந்த அலட்சியவாதிகள்தாம் நயவஞ்சகத்தினால் பெரும் இலாபத்தை ஈட்டிவிட்டதாகக் கருதி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் மறைத்து வைத்திருக்கும் நிராகரிப்பினாலும் வெளிப்படுத்தும் நயவஞ்சகத்தினாலும் பேரழிவை சந்திப்பார்கள், மோசமான தங்குமிடத்தை அடைவார்கள்.

ஆயினும் இந்த நயவஞ்சகர்கள் ஏன் இவ்வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்?

“அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது.”

அவர்களின் இயல்பில் கோளாறு இருக்கிறது. உள்ளங்களில் நோய் இருக்கிறது. அதுதான் அவர்களை நேரான வழியைவிட்டு திசைதிருப்பி தவறான வழியில் முன்னேறிச் செல்லக்கூடியவர்களாக ஆக்கிவிட்டது.

“அல்லாஹ் அவர்களின் நோயை இன்னும் அதிகப்படுத்திவிட்டான்.”

நோய் நோயை உண்டாக்குகிறது. தவறான பாதையில் செல்வது சிறிய அளவில்தான் தொடங்குகிறது. பின்னர் அது விரிவடைந்து கொண்டே செல்கிறது. இது என்றும் மாறாத இறைநியதியாகும். பொருள்கள், சூழல்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றில் இதுதான் இறைவன் அமைத்த நியதியாகும். அப்படியெனில் அவர்கள் அறியப்பட்ட இருப்பிடத்தை நோக்கியே செல்கிறார்கள். அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்ற எண்ணுவோருக்கு அதுதான் சேருமிடமாக அமையும்.

“பொய்யுரைத்துக் கொண்டிருந்ததனால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.”

அவர்களின் மற்றுமொரு பண்பு – அவர்களிலும் குறிப்பாக ஹிஜ்ரத்திற்கு முன்னால் தலைவர்களாக இருந்தவர்கள் உதாரணமாக, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் – கர்வமும் தாம் செய்யும் குழப்பத்தை நியாயப்படுத்துவதுமாகும்.

“உலகில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள்தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்” என்று கூறுகிறார்கள். எச்சரிக்கை! இவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் இவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.”

பொய் கூறுவதோடு, ஏமாற்றுவதோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. அவர்கள் முஸ்லிம்களை முட்டாள்களாக்கவும் முயற்சித்தார்கள். “உலகில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள் குழப்பம் செய்யவில்லை” என்று மட்டும் அவர்கள் கூறவில்லை. மாறாக வரம்புமீறி வீம்புடன், “நாங்கள்தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்” என்றார்கள்.

குழப்பம் விளைவிப்பவர்கள் தங்களைச் சீர்திருத்தவாதிகள் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லா காலகட்டங்களிலும் மிக அதிகமாகத்தான் காணப்படுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அவர்களிடம் இருக்கும் உரைகற்கள் வீணாகிவிட்டன. அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செயல்படுதல் என்னும் உரைகல் வீணாகிவிட்டால் மற்ற உரைகற்கள், மதிப்பீடுகள் அனைத்தும் வீணாகி விடும். தம் உள்ளத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்காதவரால் செயல்களில் ஏற்படும் கோளாறை, குழப்பத்தை உணர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் நன்மை, தீமை, சீர்திருத்தம், குழப்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான உரைகல் அவர்களின் மன இச்சையோடு இணைந்து வீணாகிவிட்டது. அது இறைவனின் பக்கம் திரும்புவதில்லை. பின்னர் அவர்களைக் குறித்த உண்மையான நிலவரம் உறுதிப்படுத்தப்படுகிறது:

“எச்சரிக்கை! இவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் இவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.”

அதேபோன்று அவர்களின் மற்றுமொரு பண்பு, பொதுமக்களிடம் கர்வம்கொண்டு அவர்களின் பார்வையில் பொய்யான அந்தஸ்தைப் பெற முயற்சிப்பது:

“மற்ற மக்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நீங்களும் நம்பிக்கைகொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், ‘மூடர்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கைகொள்ள வேண்டுமா?‘ என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் இவர்கள் அறிந்துகொள்வதில்லை.”

உண்மையில் மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் மன இச்சைகளைவிட்டும் நீங்கி தூய மனதுடன் நம்பிக்கைகொள்ளுமாறு, இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து, அல்லாஹ்வுக்காக தங்களை ஆக்கிக் கொண்டவர்களைப்போன்று நம்பிக்கைகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டார்கள். தூய மனதுடன் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டார்கள்.

ஆனால் நபியவர்களின் இந்த அழைப்பை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. எந்த அந்தஸ்தும் இல்லாத அடித்தட்டு மக்கள்தாம் இவ்வாறு கீழ்ப்படிவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே அவர்கள் கர்வத்துடன் கேட்டார்கள், “மூடர்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கைகொள்ள வேண்டுமா?”. அவர்களின் இந்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது:

“உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் இவர்கள் அறிந்துகொள்வதில்லை.”

எப்போது மூடன் தன்னை மூடன் என அறிந்துகொண்டான்? எப்போது வழிகேடன் தான் நேரான வழியை விட்டும் தூரமாகிவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டான்?

பின்னர் மதீனாவில் இருந்த யூதர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையே காணப்பட்ட தொடர்பை அம்பலப்படுத்தும் இறுதியான அடையாளம் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்கள் பொய், ஏமாற்று, மக்களை முட்டாளாக்க முயற்சித்தல் ஆகிய குற்றங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. திரைமறைவில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள்.

“அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால், “நீங்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்கின்றோம்” என்று கூறுகிறார்கள்.”

சிலர் மோசடி செய்வதை சாமர்த்தியமான செயலென்றும் சூழ்ச்சி செய்வதை புத்திசாலித்தனமான செயலென்றும் எண்ணிக் கொள்கிறார்கள். உண்மையில் அது பலவீனத்தின் வெளிப்பாடும் இழிவான குணமுமாகும். பலமானவன் மோசடி செய்பவனாக, தீயவனாக, ஏமாற்றுக்காரனாக, சூழ்ச்சிக்காரனாக இருக்க மாட்டான். நம்பிக்கையாளர்களை எதிர்க்கத் துணிவற்ற இந்த கோழைகள் அவர்களை சந்திக்கும்போது தங்களை முஸ்லிம்களாக வெளிப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தீங்கிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதற்காகவும் இவ்வாறு அவர்கள் வேஷமிட்டுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் ஷைத்தான்களுடன் – யூதர்களுடன்- தனித்திருக்கும்போது “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். நாங்கள் வெளிப்படுத்தும் இந்த நம்பிக்கையின்மூலம் நம்பிக்கையாளர்களைப் பரிகாசம் செய்கின்றோம்” என்றார்கள். இவர்களைக் கொண்டே யூதர்கள் இஸ்லாமிய அணியில் பிரிவினையை, குழப்பத்தை ஏற்படுத்தும் வழிகளைப் பெற்றார்கள். அதேபோன்று இவர்களும் யூதர்களிடமே அடைக்கலம் தேடினார்கள்.

திருக்குர்ஆன் அவர்களின் இந்த கூற்றை எடுத்துரைத்து கடுமையான தொனியில் அச்சமூட்டுகிறது. அது எந்த அளவுக்கு கடுமையான எச்சரிக்கையெனில் மலைகள்கூட அதனால் தூள்தூளாகிவிடும்.

“அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். அவர்களின் வழிகேட்டில் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறான்.”

வானங்கள் மற்றும் பூமியை அடக்கியாளும் அந்த இறைவனால் பரிகசிக்கப்பட்டவர்கள் எவ்வளவு துர்பாக்கியசாலிகள்! சிந்தனை அச்சுறுத்தும் காட்சியை நோக்கி, உள்ளங்களை நடுநடுங்க வைக்கும் இருப்பிடத்தை நோக்கி நீண்டுகொண்டே செல்கிறது.

அவன் “அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். அவர்களின் வழிகேட்டில் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறான்” என்ற வசனத்தைப் படிக்கிறான். இலக்கில்லாத பாதையில் எவ்வித வழிகாட்டலுமின்றி தடுமாறித் திரிகிறான். இறுதியில் அனைவரையும் அடக்கியாளும் பேராற்றலுடைய இறைவனின் பிடிக்கு உள்ளாகிறான். தம்மைப் பிடிப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளது என்பதைக்கூட அறியாமல் வலையிலே துள்ளிக் குதிக்கும் எலிகளைப்போல இறுதியில் அகப்பட்டுக் கொள்கிறான். இதுதான் அச்சுறுத்தும் பரிகாசம். இது அவர்களின் சாதாரண பரிகாசத்தைப் போன்று அல்ல.

இங்கு நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டிய எதார்த்தம் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது. அது அல்லாஹ் இந்தப் போராட்டத்தில் நம்பிக்கையாளர்களுக்குப் பொறுப்பாளனாக அவர்களுடன் இருக்கின்றான் என்பதாகும். இது இறைவனின் நேசர்களுக்கு முழுமையான திருப்தியைப் பெற்றுத் தருகிறது. அலட்சியமாக இருக்கும் அவனது எதிரிகள் அச்சுறுத்தும் மோசமான விளைவைப் பெறுவார்கள். அவர்களின் வழிகேட்டிலேயே தடுமாறித்திரியுமாறு விட்டுவிடப்பட்டுவிட்டார்கள். எதிர்ப்பதற்கு குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது. அங்கு அவர்களுக்காக அச்சுறுத்தும் தங்குமிடம் காத்திருக்கின்றது. இங்கு அவர்களோ தடுமாறித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக அவர்களின் உண்மையான நிலையும் எந்த அளவுக்கு அவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

“அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள். அவர்களின் வியாபாரம் பலனளிக்கவுமில்லை; அவர்கள் சத்தியத்தின் பக்கம் செல்லும் வழியையும் பெறவில்லை.”

விரும்பினால் அவர்கள் நேர்வழியில் செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள். அது அவர்களுக்கு முன்னால்தான் இருந்தது. அவர்களின் வசம்தான் இருந்தது. ஆயினும் அவர்கள் அதற்குப் பகரமாக தவறான வழியை வாங்கிக் கொண்டார்கள், முட்டாள் வியாபாரிகளைப் போல.

“அவர்களின் வியாபாரம் பலனளிக்கவுமில்லை, அவர்கள் சத்தியத்தின் பக்கம் செல்லும் வழியையும் பெறவில்லை.”

உள்ளிருக்கும் எதிரி

முதல் இரண்டு வகையினரைவிட இந்த மூன்றாவது வகையினரைக் குறித்தே அதிகமாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். முதல் இரண்டு வகையினரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியானவர்கள். அவர்களை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. முதல் வகையினர் தூய உள்ளத்துடன் நேர்வழியைப் பின்பற்றுபவர்கள். இரண்டாவது வகையினர் கர்வத்துடன் தங்களின் நிலைப்பாட்டில் நிலைத்திருப்பவர்கள். மூன்றாவது வகையினர் கோணலையும் நோய்க்கூறுகளையும் பெற்றவர்கள். அவற்றைத் தெளிவுபடுத்துவதற்கு மேலதிக விளக்கம் அவசியமாகிறது.

மேலதிக இந்த விளக்கம் நமக்கு இன்னொரு விசயத்தையும் தெளிவுபடுத்துகிறது. அது மதீனாவில் முஸ்லிம் சமூகத்திற்குத் தீங்கிழைப்பதற்காக நயவஞ்சகர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பும் அவர்கள் ஏற்படுத்திய குழப்பமும் சீர்குலைவுமாகும். அதேபோன்று எல்லா காலகட்டங்களிலும் இத்தகைய நயவஞ்சகர்கள் முஸ்லிம் சமூகத்தில் குழப்பத்தையும் சீர்குலைவையும்தான் ஏற்படுத்துவார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அடுத்து வரக்கூடிய வசனங்கள் இந்தக் கூட்டத்தினருக்கு உதாரணங்கள் கூறி அவர்களின் இயல்பைத் தெளிவுபடுத்துகின்றன:

2:17,18. “இந்த நயவஞ்சகர்களுக்கு உதாரணம் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பு மூட்டிய ஒருவனைப் போன்றது. அது ஒளிவீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் போக்கிவிட்டான். எதையும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டுவிட்டான். அவர்கள் சத்தியத்தைச் செவியுற்று கீழ்ப்படிய முடியாத செவிடர்கள்; சத்திய வார்த்யைப் பேச முடியாத ஊமையர்கள். அவர்கள் பார்வையற்ற குருடர்கள். அவர்களால் வழிகேட்டிலிருந்து திரும்ப முடியாது.”

அவர்கள் நிராகரிப்பவர்களைப்போல சத்தியத்தை புறக்கணிப்பவர்களாக, சத்தியத்தை செவியேற்காமல் இருக்கும் செவிடர்களாக, சத்தியத்தை பார்க்காமல் இருக்கும் குருடர்களாக மட்டும் இருக்கவில்லை. மாறாக அவர்கள் நேர்வழி இதுதான் என்று தெளிவானபின்னர் அதனை விடுத்து வழிகேட்டை விரும்பினார்கள். அவர்கள் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பு மூட்டினார்கள். ஆனால் அது வெளிச்சம் தந்தபோது அதனைக் கொண்டு பயனடையவில்லை. அதனால் அல்லாஹ் அந்த வெளிச்சத்தைப் போக்கிவிட்டான். வெளிச்சத்தைப் புறக்கணித்ததற்குத் தண்டனையாக எதையும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டுவிட்டான்.

அவர்களின் செவிகள், நாவுகள், கண்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் பயனடையவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட செவிகளைக் கொண்டு பயனடையாமல் செவிடர்களாக, நாவுகளைக் கொண்டு பயனடையாமல் ஊமையர்களாக, கண்களைக்கொண்டு பயனடையாமல் குருடர்களாக ஆகிவிட்டார்கள். ஆகவே அவர்கள் சத்தியத்தின் பக்கம், வெளிச்சத்தின் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

மற்றுமொரு உதாரணம் அவர்களின் உள்ளங்களிலுள்ள தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் பயத்தையும் பதற்றத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது:

2:19,20. “அவர்களின் உதாரணம், காரிருளில் இடிமின்னலுடன் வானிலிருந்து பொழியும் மழையைப் போன்றது. இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி அவர்கள் தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை சூழ்ந்துள்ளான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது வெளிச்சம் தரும்போதெல்லாம் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். இருள் அவர்களைச் சூழ்ந்துவிடும்போது அப்படியே நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிகளையும், கண்களையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.”

நிச்சயமாக இது இயக்கங்கள் நிரம்பிய ஆச்சரியமான காட்சி. இதில் தடுமாற்றம், வழிகேடு, பதற்றம், பயம், வெளிச்சம், சப்தம் என அத்தனையும் காட்சிவடிவில் வெளிப்படுகின்றன. வானிலிருந்து பொழியும் பெருமழை… அதில் காரிளும் இடியும் மின்னலும்… “அது வெளிச்சம் தரும்போதெல்லாம் முன்னேறிச் செல்கிறார்கள்”… “இருள் அவர்களைச் சூழ்ந்துவிடும்போது நின்றுவிடுகிறார்கள்” என்ன செய்வது? எங்கு போவது? என்று தெரியாமல் தடுமாற்றமடைந்தவர்களாக நின்றுவிடுகிறார்கள். “இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள்.”

காட்சி முழுவதையும் சூழ்ந்திருக்கும் இயக்கங்கள்: காரிருளில் இடிமின்னலுடன்கூடிய பெருமழை, தடுமாற்றத்துடன் முன்வைக்கும் அடிகள், இருள் சூழ்ந்துவிடும்போது பயமும் பதற்றமும் கொண்டு நின்றுவிடுதல். இந்தக் காட்சியில் அந்த நயவஞ்சகர்களின் தடுமாற்றம், பயம், பதற்றம், நம்பிக்கையாளர்களுக்கும் ஷைத்தான்களுக்கும் மத்தியில் திரிந்துகொண்டிருந்த அவர்களின் மனம், வெளிச்சத்தை தேடிக்கொண்டே இருளின்பால் திரும்புதல் ஆகியவை துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன. இது அவர்களின் மனநிலையைத் துல்லியமாக படம்பிடித்துக் காட்டுகிறது. திருக்குர்ஆனின் ஆச்சரியமான வழிமுறைகளில் ஒன்று, அது மனிதனின் இயல்புகளை காட்சி வடிவில் துல்லியமாக படம்பிடித்துக் காட்டிவிடுகிறது. (விரிவாக அறிய, பார்க்க, ‘தஸ்வீருல் ஃபன்னீ ஃபில்குர்ஆன்’ என்ற புத்தகம்).

Related posts

Leave a Comment