இறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)
கருத்துரை
மிகப்பெரிய அத்தியாயத்தின் ஆரம்பமாக வந்துள்ள இந்த வசனங்களில் யூதர்களைத்தவிர மதீனாவில் இஸ்லாமிய அழைப்பு எதிர்கொண்ட கூட்டங்களின் அடிப்படையான பண்புகளைக் காண்கிறோம். யூதர்களைக் குறித்து சிறிய குறிப்புதான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதுவே அவர்களைக் குறிக்கப் போதுமானது. ‘ஷைத்தான்கள்’ என்று அவர்கள் அழைக்கப்பட்டது, அவர்களின் பல பண்புகளையும் பங்களிப்பையும் தெளிவாக உணர்த்துகிறது. பின்னர் அடுத்து வரும் வசனங்களில் அவர்களைக் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பண்புகளினூடே திருக்குர்ஆனின் தெளிவுபடுத்தும் முறையின் சிறப்பம்சங்களைக் காணமுடிகிறது. அது பயன்படுத்தும் வார்த்தைகள் அழகிய காட்சியாக கண்முன்னால் விரிகிறது. அதன் வார்த்தைகளினூடே விசயங்கள் அப்படியே படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. பின்னர் அந்தக் காட்சிகள் நம் கண்முன் நிகழும் நிஜமான ஒன்றைப்போன்று தோன்றுகின்றன.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறைவான வார்த்தைகள் மற்றும் பத்திகளில் மூன்று வகையான மனிதர்கள் படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு வகையினரும் எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் காணப்படக்கூடிய உயிருள்ள உதாரணங்களாவர். எந்த அளவுக்கெனில் முழு மனித சமூகத்தையும் இந்த மூன்று வகைக்குள் அடக்கிவிடலாம். இதுதான் குர்ஆனின் மிகப் பெரிய அற்புதம்.
குறைவான வார்த்தைகள் மற்றும் குறிப்பிட்ட வசனங்களில் இந்த மூன்று வகையினரும் மிகத் தெளிவாக, பரிபூரணமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள். அவர்கள் உயிருள்ள உதாரணங்களாக, துல்லியமான, வேறுபடுத்தும் பண்புகளை உடையவர்களாக நம் கண்முன்னால் வெளிப்படுகிறார்கள். தெளிவுபடுத்தக்கூடிய, அழகிய ஒத்திசைவைக் கொண்ட, தாக்கம் ஏற்படுத்தும் ராகமுடைய சுருக்கமான இந்த வாசகங்களுக்கு முன்னால் விரிவான விளக்கங்கள்கூட மதிப்பிழந்து போகும்.
இந்த மூன்று வகையான பண்புகளும் படம்பிடித்துக்காட்டப்பட்ட பிறகு மனிதர்கள் அனைவரும் முதல் வகையான பண்புகளின்பால் அழைப்பு விடுக்கப்படுகிறார்கள். அவர்களைப் படைத்த, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படியும் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காமல் இருக்கும்படியும் அழைப்பு விடுக்கப்படுகிறார்கள். நபியவர்களின் தூதுத்துவத்தின்மீதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தின்மீதும் சந்தேகம்கொள்பவர்கள் அதிலுள்ள ஒரு அத்தியாயத்தைப்போன்று ஒன்றைக் கொண்டுவரும்படி அறைகூவல் விடுக்கப்படுகிறார்கள். புறக்கணிப்பவர்கள் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களுக்காக நிலையான சுவனம் காத்திருக்கிறது என்ற நற்செய்தியும் வழங்கப்படுகிறது.
பின்னர் குர்ஆனில் கூறப்படும் உதாரணங்களை மறுத்து அவற்றைக் கொண்டு சந்தேகங்களை உண்டுபண்ணிய யூதர்கள் மற்றும் நயவஞ்சகர்களுக்கு மறுப்புரை வழங்கப்படுகிறது. அவை நம்பிக்கையாளர்களை நேர்வழியில் முன்னேறச் செய்வதைப்போல படைத்துப்பராமரிக்கும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்களை வழிகேட்டில் ஆழ்த்திக்கொண்டே செல்லும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மனிதனைப் படைத்த அந்த அல்லாஹ்தான் அவனுக்காக பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அவனை அதில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவை இந்தப் பாடத்தில் சொல்லப்பட்டுள்ள சுருக்கமான தகவல்கள். இனி ஒவ்வொன்றையும் சற்று விரிவாகக் காணலாம்.
இறையச்சமுடையோரின் பண்புகள்
2:1. “அலிஃப். லாம். மீம்”
இதுபோன்ற தனித்தனியான எழுத்துக்கள் வேறு சில அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் வந்துள்ளன. இவைகுறித்து பல கருத்துகள் காணப்படுகின்றன. அவற்றில் நாம் சரியெனக் காண்பது, இதுபோன்ற எழுத்துகளைக் கொண்டுதான் இந்த வேதம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டுதான் நீங்கள் பேசுகிறீர்கள். ஆயினும் இந்த எழுத்துகளைக் கொண்டு இதுபோன்ற ஒரு வேதத்தை உங்களால் உருவாக்க முடியவில்லை. இதுதான் குர்ஆனின் அற்புதம். இந்தக் குர்ஆன் தன்னைப்போன்ற ஒன்றைக் கொண்டுவரும்படி மீண்டும் மீண்டும் சவால் விடுகிறது. ஆனாலும் யாராலும் இந்த சவாலுக்குப் பதிலளிக்க முடியவில்லை.
இதுபோன்றுதான் அல்லாஹ்வின் மற்ற படைப்புகள் அனைத்தின் விசயத்திலும். இந்த பூமியின் மண்ணானது பண்புகள் அறியப்பட்ட கூறுகளால்தான் இணைக்கப்பட்டுள்ளது. மனிதனும் அந்தக் கூறுகளை இணைத்தால் செங்கல்லையோ கட்டிடத்தையோ பாத்திரத்தையோ எதையேனும் ஒன்றையோ உருவாக்கிவிடலாம். ஆனால் அல்லாஹ் அவற்றில் வாழ்வை ஏற்படுத்துகிறான். அவற்றிலிருந்து உயிர் ததும்புகிறது. அந்த உயிர் எவ்வாறு உருவானது? அதன் இரகசியம் என்ன? என்பதை மனிதர்களால் அறிய முடியாது. அப்படிப்பட்ட ஒன்றை அவர்களால் உருவாக்க முடியாது. அப்படித்தான் குர்ஆனும். மனிதர்கள் பேசுகின்ற எழுத்துக்கள், வார்த்தைகள்தாம். அல்லாஹ் அவற்றைக் கொண்டு திருக்குர்ஆனை, சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவுபடுத்தக்கூடியதை உருவாக்கியுள்ளான். அல்லாஹ் உருவாக்கிய எழுத்துக்கள், வார்த்தைகளுக்கும் மனிதர்கள் உருவாக்கிய எழுத்துக்கள், வார்த்தைகளுக்குமான வேறுபாடு உயிரற்ற உடலுக்கும் உயிர்ததும்பும் ஆன்மாவுக்குமான வேறுபாடாகும்.
2:2. இது இறைவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.
எங்கிருந்து சந்தேகம் உண்டாகும்? அது உண்மையானது என்பதற்கு அதுவே உறுதியான சாட்சியல்லவா!? அவர்கள் பயன்படுத்தும் இந்த எழுத்துகளைக் கொண்டு அதைப்போன்ற ஒன்றை அவர்களால் உருவாக்க முடியவில்லையே!
நேரான வழியைக் காட்டுவதே அதன் இயல்பும் சாராம்சமும் ஆகும். ஆனால் அது யாருக்கு வழிகாட்டும்? அது யாருக்கு வழிகாட்டியாகவும் ஒளியாகவும் இருக்கும்? இறைவனை அஞ்சக்கூடியவர்களுக்கு. இறையச்சமே அதிலிருந்தும் பயனடையும் தகுதியுடையவர்களாக அவர்களை ஆக்குகிறது. அதுதான் உள்ளத்தின் பூட்டுகளைத் திறந்து அதில் பிரவேசித்து தான் நிறைவேற்ற வேண்டிய பணியைச் செய்கிறது. அதுதான் பெற்றுக்கொள்ளவும் பதிலளிக்கவும் உள்ளத்தை தயார்படுத்துகிறது.
திருக்குர்ஆனிலிருந்து வழிகாட்டலைப் பெற விரும்புபவர் கண்டிப்பாக தூய உள்ளத்துடன் அதன்பால் வர வேண்டும். அவனை அஞ்சக்கூடிய, வழிகேட்டிலிருந்து விலகக்கூடிய உள்ளத்துடன் அவன்பால் வர வேண்டும். அப்போதுதான் திருக்குர்ஆன் தன் இரகசியங்களையும் ஒளியையும் திறந்து காட்டும். அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அது தன் வெளிச்சத்தைப் பரப்பும்.
உமர் இப்னு கத்தாப் (ரலி) உபை இப்னு கஅபிடம் கேட்டார், ‘இறையச்சம்’ என்றால் என்ன? பதிலளிக்கும்விதமாக கஅப் (ரலி) உமரிடம் கேட்டார், “நீங்கள் இருபுறமும் முட்கள் சூழ்ந்த பாதையில் சென்றுள்ளீர்களா?” அதற்கு உமர், “ஆம். நான் சென்றுள்ளேன்” என்றார். அவர், “அந்தப் பாதையில் எப்படிச் செல்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு உமர், “என் ஆடைகளை கெண்டைக்காலுக்கு மேலுயர்த்தி முட்களில் பட்டுவிடாதவாறு பேணுதலாகச் செல்வேன்” என்றார். அதற்கு அவர், “அப்படித்தான் இறையச்சமும்” என்றார்.
இதுதான் இறையச்சம். உள்ளத்தில் நிரந்தரமாக இருக்கும் விழிப்புணர்வு. வாழ்க்கை என்னும் பாதையைச் சூழ்ந்திருக்கும் முட்களைக் குறித்த எச்சரிக்கையுணர்வு. பேராசைகள், தீய இச்சைகள், ஊசலாட்டங்கள், பொய்யான வாக்குறுதிகள், பயம் ஆகியவை சரியான பாதையை விட்டும் நம்மைத் திசைதிருப்பும் முட்களாக இருக்கின்றன. இவைபோன்று இன்னும் ஏராளமான முட்களும் நம் பாதையில் காணப்படுகின்றன.
மறைவானவற்றின் மீது நம்பிக்கை
பின்னர் வசனங்கள் இறையச்சமுடையோரின் பண்புகளைத் தெளிவுபடுத்துகின்றன. அவை அப்போது மதீனாவில் வாழ்ந்த ஆரம்பகட்ட முஸ்லிம்களின் பண்புகளாகும். அவைதாம் எல்லா காலங்களிலும் நம்பிக்கையாளர்களின் பண்புகளாகவும் இருக்கின்றன:
2:3. அவர்கள் நாம் அறிவித்த மறைவான விசயங்களை நம்புகிறார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள். நாம் வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவும் செய்கிறார்கள்.
இறையச்சமுடையோரிடம் காணப்படும் முதல் தனித்தன்மை, நேர்மறையான உணர்வும் செயலுமாகும். அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றை நம்புவது, அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றுவது, தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வது, மறுமைநாளின்மீது உறுதியான நம்பிக்கைகொள்வது ஆகிய அனைத்துப் பண்புகளும் ஒருசேர அவர்களிடம் காணப்படுகின்றன. இந்த பரிபூரணத்தைக் கொண்டு இஸ்லாமியக் கொள்கை சிறப்படைகிறது. இந்த கொள்கையைக் கொண்டு நம்பிக்கையாளன் சிறப்படைகிறான். மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாகவும் மனித சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவர்கள் அதன் நிழலில் தங்கள் உணர்வுகளைக் கொண்டும் வாழ்வியல் வழிமுறையைக் கொண்டும் பரிபூணரமான, உணர்வையும் செயலையும் நம்பிக்கையையும் ஆட்சியமைப்பையும் உள்ளடக்கிய வாழ்வை வாழ்வதற்காகவும் வந்த இறுதியான கொள்கை இப்படித்தான் இருக்க வேண்டும்.
இறையச்சமுடையோரின் இந்த முதல் தனித்தன்மையை இன்னும் விரிவாக, தனித்தனியாகப் பார்த்தோமேயானால் அது மனித வாழ்வின் அடிப்படையான மதிப்பீடுகளை நமக்குத் தெளிவுபடுத்தும்.
“அவர்கள் அல்லாஹ் அறிவித்த மறைவான விசயங்களை நம்புவார்கள்”
அவர்களால் உணர முடியாத விசயங்கள் அவர்களுக்கும் இறைவனுக்குமான தொடர்பில் தடையாக வந்து நிற்காது. அவன்தான் அவர்களைப் படைத்தான். அவன்தான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். அவை அவர்களுக்கும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியாத ஆற்றல்கள், உண்மைகள், படைப்புகள், உயிரினங்கள் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பிலும் தடையாக வந்து நிற்காது.
அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.
இதனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட குறைவான ஆற்றல் அழிவிலிருந்தும் தனக்குத் தேவையில்லாதவற்றில், தனக்கு அறிவு இல்லாதவற்றில் மூழ்குவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சிந்திக்கும் ஆற்றல் அவன் இந்த பூமியில் பிரதிநிதித்துவ பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டதாகும். அது அவனது நெருங்கிய எதார்த்த வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளது. அதில்தான் அது கவனம் செலுத்துகிறது, ஆராய்ச்சி செய்கிறது, செயல்படுகிறது, பலன்களைத் தருகிறது. அந்த வாழ்வை வளர்ச்சியடையச் செய்து அழகுபடுத்துகிறது. ஆனால் அது நேரடியாக பிரபஞ்சத்தோடு, பிரபஞ்சத்தின் படைப்பாளனோடு தொடர்பு கொண்டுள்ள ஆன்மாவின் ஆற்றலிலிருந்து ஆதாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அறிவால் புரிந்துகொள்ள முடியாத மறைவான விசயங்களை அவனிடம் ஒப்படைத்துவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அகப்பார்வையோ உள்ளுதிப்பு வழங்கப்பட்ட ஆன்மாவோ இன்றி, அறிவால் புரிந்துகொள்ள முடியாதவற்றை மறைவானவை எனக் கருதி விட்டுவிடாமல் வரம்புக்குட்பட்ட அறிவாற்றலைக் கொண்டு எதார்த்தத்திற்கு அப்பாலுள்ளவற்றை புரிந்துகொள்ள முனைவது தோல்வியைத் தரக்கூடிய வீணான முயற்சியேயாகும். காரணம், அது படைக்கப்படாத நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான முயற்சிகள் அறிவாற்றலுக்கு அழிவையே ஏற்படுத்தும். எவ்வித வரம்புக்கும் உட்படுத்த முடியாத ஒன்றை வரம்புக்குட்ட ஒன்றால் அறிந்துகொள்ள முடியாது என்பதை மனிதனின் அறிவு உணர்ந்துகொண்டால் வரம்புக்குட்படுத்த முடியாத இறைவனை வரம்புக்குட்பட்ட தன் அறிவால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்பதை மனிதன் அறிந்துகொள்வான். மறைவானவற்றை அறிய முடியாமல் இருப்பது அவற்றின் இருப்பையே இல்லாமல் ஆக்காது என்பதையும் அவற்றை அறிய அறிவாற்றல் தவிர வேறொரு ஆற்றலிடம் அவை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதையும் அவன் அறிவான். அவற்றைக் குறித்து நன்கறிந்தவனும் வெளிப்படையானவை மறைவானவை என அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனுமாகிய இறைவனிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவன் அறிந்துகொள்வான். இது உண்மையில் மனித அறிவுக்கு வழங்கப்பட்ட கண்ணியமாகும். இந்த தன்மையைக் கொண்டு நம்பிக்கையாளர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். இதுதான் இறையச்சமுடையோரின் முதல் பண்பாகும்.
இறைவன் அறிவித்த மறைவான விசயங்களை நம்புவது மனிதனை விலங்குகள் உலகிலிருந்து வேறுபடுத்தும் முக்கிய அம்சமாகும். ஆனால் இக்காலத்தில் உலகியல் பார்வையுடையவர்கள் எல்லா காலகட்டங்களிலுமுள்ள உலகியல் பார்வையுடையவர்களைப் போன்று மனிதனைப் பின்னோக்கிச் செலுத்தவே விரும்புகிறார்கள். அவனை புலனுணர்வுகளால் உணர்ந்ததை மட்டுமே நம்பும் விலங்குகள் உலகிற்கு கொண்டுசெல்ல விரும்புகிறார்கள். இதனையே அவர்கள் ’முற்போக்கு’ என்கிறார்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களை இந்தச் சகதியிலிருந்து காப்பாற்றிவிட்டான். அவர்களின் பண்புகளில் ஒன்றாக “மறைவானவற்றை நம்புதலையும் ஆக்கிவிட்டான்” அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
“தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்”
அவர்கள் வணக்க வழிபாட்டின்மூலம் அவனையே முன்னோக்குகிறார்கள். அதன்மூலம் தங்களைப் போன்ற சக மனிதர்களுக்கு, பொருட்களுக்கு அடிமையாக இருப்பதைவிட்டும் அவர்கள் விலகிவிடுகிறார்கள். எவ்வித வரம்புக்கும் உட்படாத அந்தப் பேராற்றலை முன்னோக்குகிறார்கள். அந்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைவணங்குகிறார்கள். தங்களைப் போன்ற சக மனிதர்களுக்கு அல்ல. உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணியும் உள்ளம், இரவும் பகலும் அவனுடன் தொடர்பு கொண்டுள்ள உள்ளம் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளும். அது சாதாரண விசயங்களில், அற்ப நோக்கங்களில் தம்மைத் தொலைத்துவிடாமல் உயர்ந்த நோக்கத்தைப் பெற்றிருக்கும். அது படைப்புகள் அனைத்தையும் படைத்த படைப்பாளனோடு தொடர்பு கொண்டுள்ளதால் தான் பலமான படைப்பு என்பதை உணர்ந்துகொள்ளும். இவையனைத்தும் உள்ளத்திற்கு ஆற்றலை அளிக்கும் ஊற்றாகும். அதேபோன்று அவை இறையச்சத்தின் ஊற்றாகவும் தனிமனிதனைப் பண்படுத்தும் முக்கிய காரணியாகவும் இருக்கின்றது. அதன் கண்ணோட்டம், உணர்வு, செயல்கள் அனைத்தும் இறைவனைச் சார்ந்தவையாகவே இருக்கும்.
“நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவும் செய்வார்கள்”
அவர்கள் முதலில் தங்களிடம் இருக்கின்ற செல்வம் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது, தாங்கள் உருவாக்கியது அல்ல என்பதை ஒத்துக் கொள்வார்கள். இவ்வாறு ‘அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று அவர்கள் ஒத்துக்கொள்வதிலிருந்துதான் பலவீனமான படைப்புகளுக்கும் சக மனிதர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இது மனித மனதை பேராசையிலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் தூய்மைப்படுத்துகிறது. வாழ்வென்னும் களத்தை ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் களமாக அல்லாமல் உதவிக்கொள்ளும் களமாக ஆக்குகிறது. பலவீனர்களும் இயலாதவர்களும் ஊனமுற்றவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். அது கோரைப்பற்களும் கிழிக்கும் நகங்களுமுடைய மிருகங்களிடையே அல்லாமல் நல்லுங்களிடையே, தூய ஆன்மாக்களிடையே நாம் வாழ்கின்றோம் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
இங்கு செலவு செய்தல் என்பது ஸகாத், தர்மம் மற்றும் நல்வழியில் செய்யப்படும் செலவுகள் அனைத்தையும் குறிக்கிறது. ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பே ‘நல்வழியில் செலவு செய்வது’ கடமையாக்கப்பட்டுவிட்டது. இது பொதுவான அடிப்படையாகும். ஸகாத் குறித்த வசனங்கள் அதன் குறிப்பிட்ட வடிவத்தை நிர்ணயம் செய்கின்றன. நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா இப்னு கைஸ் அறிவிக்கிறார், “நிச்சயமாக செல்வத்தில் ஸகாத் அல்லாத கடமையும் இருக்கிறது.” (திர்மீதி)
2:4. தூதரே! அவர்கள் உமக்கு அருளப்பட்டதையும் உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறார்கள். மறுமையின் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
இது விண்ணுலக மார்க்கங்களின், தூதுத்துவங்களின் வாரிசான முஸ்லிம் சமூகத்திற்கு உகந்த பண்பாகும். இந்த சமூகம்தான் அவற்றிடமிருந்து கிடைத்தவற்றை பாதுகாக்கக்கூடியது. இதுதான் இறுதிநாள்வரை வரக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டக்கூடியது. இந்த பண்பு மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், ஒரே இறைவனை வணங்கக்கூடியவர்கள், அந்த ஒரே இறைவனின் தூதர்களைப் பின்பற்றக்கூடியவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது மற்ற மார்க்கங்கள் மற்றும் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகத் தோன்றும் வெறியிலிருந்து அவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் நேர்வழியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். இது எல்லா காலகட்டங்களிலும் மனித சமூகம் அல்லாஹ்வின் அரவணைப்பில், பாதுகாப்பில்தான் வாழ்கிறது, அதனால்தான் அவன் தொடர்ந்து ஒரே மார்க்கத்தைக் கொண்டு தூதர்களையும் தூதுத்துவங்களையும் அனுப்பினான் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நாட்கள், காலங்கள் மாறினாலும் வழிகாட்டல் என்பது காரிருளில் வழிகாட்டும் நட்சத்திரத்தைப் போன்று என்றும் மாறாதது என்ற பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது.
“மறுமையின்மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.” இது இவ்வுலகை மறுவுலகோடு, ஆரம்பத்தை முடிவோடு, செயல்களை அவற்றின் விளைவுகளோடு இணைக்கக்கூடிய அவர்களின் இறுதியான பண்பு. அது, மனிதன் நோக்கமின்றி வீணாகப் படைக்கப்படவில்லை, அவன் அப்படியே வீணாக விட்டுவிடப்பட மாட்டான், அவனது உள்ளத்திற்கு நிம்மதியளிக்கும், அவனது செயல்களுக்கு கூலியைப் பெற்றுத்தரும் இறுதித் தீர்ப்புநாள் ஒன்று இருக்கிறது என்ற உணர்வை அவனுக்குள் ஏற்படுத்துகிறது.
மறுமைநாளின்மீதான நம்பிக்கை அடைக்கப்பட்ட வழிகளிடையே வாழ்வோரையும் விசாலமான பிரபஞ்சத்தில் வாழ்வோரையும் வேறுபடுத்தும் அம்சமாகும். அது தம் வாழ்க்கை இந்த பூமியோடு முடிந்துவிட்டது என்று எண்ணுவோரையும் இந்த பூமியிலுள்ள வாழ்க்கை ஒரு சோதனையே, உண்மையான, நிரந்தரமான வாழ்க்கை கூலி கொடுக்கப்படும் மறுவுலக வாழ்கைகையே என்று எண்ணுவோரையும் வேறுபடுத்தும் அம்சமுமாகும்.
மேற்கண்ட இந்த பண்புகள் அனைத்தும் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவைதாம் இறையச்சமுடையோரின் பண்புகள். அந்த பண்புகளுக்கிடையே ஒத்திசைவும் ஒற்றுமையும் காணப்படுகிறது. அதுதான் அவற்றை பரிபூரணமானவையாக, ஒத்தவையாக ஆக்குகின்றது. இறையச்சம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்வு. அந்த உணர்விலிருந்தே செயல்கள் வெளிப்படுகின்றன. இதனால் அந்தரங்க உணர்வும் வெளிப்படையான செயல்களும் ஒன்றிணைகின்றன. மனிதன் தன் அந்தரங்கத்திலும் வெளிப்படையிலும் அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்டவனாகிறான். அந்தரங்கத்திற்கும் வெளிப்படைக்கும் இடையிலிருந்த திரைகள் அகற்றப்படுகின்றன. வெளிப்படையாக அறியப்பட்டவையும் அந்தரங்கமானவையும் ஒன்றிணைகின்றன. அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கை அந்தரங்கமான திரைகள் அகற்றப்பட்டதன் இயல்பான விளைவேயாகும். இறையச்சம் மற்றும் மறைவாவற்றின்மீதான நம்பிக்கையுடன் அல்லாஹ் தேர்ந்தெடுத்த வடிவத்தில் அவனை வணங்குவதும் அமைகிறது. அது அடியானுக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள தொடர்பாக ஆக்கப்படுகிறது. பின்னர் அவன் அளித்த அருட்கொடையை ஒத்துக்கொண்டவாறும் சகோதரத்துவ உணர்வுடனும் அதிலிருந்து செலவுசெய்வது. பின்னர் மனம் பழமையான ஈமானியக் கூட்டத்தோடு ஒன்றிணைகிறது. அது நம்பிக்கையாளர்கள் அனைவரோடும் தூதர்கள் அனைவரோடும் உறவு இருப்பதாக உணர்கிறது. பின்னர் எவ்வித சந்தேகமுமின்றி மறுமைநாளின்மீது நம்பிக்கைகொள்கிறது. இதுதான் அச்சமயம் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளைக் கொண்ட மதீனாவில் இருந்த முஸ்லிம் சமூகத்தின் வடிவமாக இருந்தது. இந்த பண்புகளைப் பெற்ற அந்தக் கூட்டத்தினரைக் கொண்டு அல்லாஹ் இந்த பூமியில், மனித சமூகத்தில் மகத்தான காரியங்களை, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினான். இறுதியாக பின்வருமாறு நிலைநிறுத்தப்படுகிறது:
2:5. இவர்கள்தாம் நேர்வழியில் இருப்பவர்கள். இவர்கள்தாம் வெற்றிபெறக்கூடியவர்கள்.
இவ்வாறுதான் அவர்கள் நேர்வழிபெற்றார்கள். இவ்வாறுதான் அவர்கள் வெற்றிபெற்றார்கள். நேர்வழிக்கும் வெற்றிக்குமான பாதை நிர்ணயிக்கப்பட்ட இந்த பாதைதான்.