தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம்.. அதில் பதிமூன்றாவது பகுதி கீழே.]

நாம் மேற்குறிப்பிட்ட முரணியக்கக் கொள்கையை தாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சமூகக் கட்டமைப்பில் மார்க்சியம் நிலைநாட்ட முயன்றது. அது நீட்சே, ஹெகல் விவரித்த முரணியக்கக் கொள்கைக்குப் பதிலாக தனக்கென தனி சொல்லாடல்களைத் தெரிவுசெய்து கொண்டது.

அது சமூகம் என்னும் கட்டமைப்பில் சோஷலிசத்திற்கு ஆதாரமாக முரணியக்கக் கொள்கையைப் பயன்படுத்தியது. அது மனித சமூகம் முன்னர் அடைந்த நிலைகளைவிட உயர்ந்த நிலையாகும். முடியாட்சி வீழ்ந்து அதற்கு மாறாக ஏழைகளும் அடிமைகளும் அதிகாரிகளாக ஆனார்கள். பின்னர் அவையிரண்டும் ஒன்றிணைந்து ஜமீன்தார்முறை உருவானது. பின்னர் அது வளர்ச்சியடைந்து முதலாளித்துவமாக மாறியது. இந்த முதலாளித்துவம் வீழ்ந்து தொழிலாளர்களை உள்ளடக்கிய கம்யூனிசமாக மாறும் என்று மார்க்சியம் கூறுகிறது.

ஆனால் இந்த கம்யூனிசத்தோடு முரணியக்கக் கொள்கை நின்றுவிடுமா என்ன? முரணியக்கக் கொள்கையின்படி அது வீழ்ந்து அதற்கு மாறான ஒன்றாக மாறாதா என்ன?

மார்க்சியத்தின் பார்வையில் மனித சமூகம் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது அதன் கண்ணோட்டத்திலும் பரிமாண வளர்ச்சி ஏற்படுகிறது. ஜமீன்தார் முறை முடியாட்சியைவிடச் சிறந்தது. முதலாளித்துவம் ஜமீன்தார் முறையைவிடச் சிறந்தது. சோஷலிசம் முதலாளித்துவத்தைவிடச் சிறந்தது.

ஒவ்வொன்றும் முன்னர் இருந்ததைவிடச் சிறந்தது என்ற சோஷலிஸ்டுகளின் வாதமே பலர் சோஷலிசத்தைப் பின்பற்ற காரணமாக அமைந்தது. ஏனெனில் அவர்கள் தாங்கள் முன்னர் இருந்த உலகைவிட சிறந்த உலகைப் பெற்றிருப்பதாக நம்புகிறார்கள். (பார்க்க. நவீன இஸ்லாமியச் சிந்தனையும் மேற்கத்திய காலனியாதிக்கத்துடன் அதன் தொடர்பும், பக்கம் 311லிருந்து 315வரை)

மேற்கூறப்பட்டவற்றிலிருந்து, மார்க்சியம் குறிப்பிட்ட விளைவுகளை அடைய விரும்பும் அதன் விருப்பத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் அது எதார்த்தத்தையோ எதார்த்தத்தை பின்தொடர்வதையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

நீட்சே மற்றும் ஹெகல் கூறிய முரணியக்கக் கொள்கை வெறும் சிந்தனையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டம்தான். எதார்த்தத்தோடு அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. கார்ல் மார்க்ஸ் அதனை மனித சமூக வரலாற்றின்மீது பொருத்திப் பார்த்தபோது ஆரம்பத்தில் – சாத்தியமாகும் பட்சத்தில் – முரணியக்கக் கொள்கை செயல்படத்தக்க மனித சமூகத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் வீழ்த்துவதையே விரும்பினார். பின்னர் பொருளியல் மதிப்பீட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டார். அது மனித வாழ்வின் எல்லா பகுதிகளையும் தழுவியதல்ல. பின்னர் அவையனைத்திற்கும் பிறகு குறிப்பிட்ட சமூகத்தின் – ஐரோப்பிய சமூகத்தின் – வரலாற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார். கால ஓட்டத்தில் அந்த சமூகத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய எல்லா காரணிகளையும் கவனத்தில் கொள்ளாமல் சில குறிப்பிட்ட விசயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டார். வெளிப்படையான சில விசயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு பலவற்றை விட்டுவிட்டார். பின்னர் நான்காவது முறையாக அல்லது ஐந்தாவது முறையாக அல்லது பத்தாவது முறையாக எதிர்காலத்தில் வரக்கூடிய ஒவ்வொன்றும் முந்தையவற்றைவிடச் சிறந்தது என்று கருதினார். ஆயினும் அவர் சோஷலிசத்தைத் தாண்டி வேறு சிறந்த அமைப்பை விரும்பவில்லை. மாறாக அந்தப் புள்ளியில் அவர் நின்றுகொண்டார்.

மனஇச்சையின்படி அமைக்கப்பட்ட இந்த சிந்தனைப்பள்ளியினால் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் பாதிப்படையவில்லை. மாறாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதனை ஆட்சேபனை செய்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பழமையான ஒவ்வொன்றின்மீதும் தாக்குதல் தொடுத்து புதுமையான ஒவ்வொன்றையும் விரும்பினார்கள். தங்களின் இச்சைகளுக்குத் தடையாக அமைந்த கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் விட்டு வெளியேறினார்கள். நிலையான ஒழுக்க மதிப்பீடுகளை பரிகாசம் செய்தார்கள். அதற்குப் பின்னால் மார்க்சியம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தையே அடைய விரும்பியது. இவை எந்தவொரு அறிவியல்பூர்வமான  ஆய்வின் வெளிப்பாடும் அல்ல.

‘கட்டுப்பாடற்ற வளர்ச்சி’ என்னும் கோட்பாடு ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பும் செயலைச் செய்வதற்கான வாய்ப்பேயாகும். அது முதலில் அரசு தம் குடிமக்களுடன் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை அளிக்கிறது. அது பின்பற்ற வேண்டிய நிலையான மதிப்பீடுகளோ வரையறைகளோ எதுவும் இல்லை. அனைவருக்கும் பொதுவான சட்டம் என்று எதுவும் இல்லை.

அரசின் இந்த சுதந்திரத்தைப்போன்று குடிமக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் தங்களின் பறிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கும் உரிமைகளுக்கும் பகரமாக தங்களின் மனஇச்சைகளை, உணர்வுகளை கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தலாம். அவற்றின்படி செயல்படலாம். ஒருபுறம் அரசின் அடக்குமுறைக்கு வழங்கப்படும் சுதந்திரம். மறுபுறம் மனிதனின் தீய எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் வழங்கப்படும் சுதந்திரம். கட்டுப்பாடற்ற இந்த சுதந்திரம் அவர்களுக்கு மெய்யியலின் பெயரால், அறிவியலின் பெயரால், முரணியக்கக் கொள்கையின் பெயரால் வழங்கப்படுகிறது! இந்த சிந்தனைப் பள்ளிதான் “மதம் ஒரு போதை” என்றும் “மதம் மக்களை ஆட்சியாளர்களுக்கு அடிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கருவி” என்றும் கூறியது.

நிச்சயமாக இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் மாறாத் தன்மையே இஸ்லாமிய சிந்தனையையும் வாழ்வையும் பிரபஞ்சத்தின் மாறாத ஒழுங்குகளோடு இணைக்கிறது. அது மனிதர்களின் மனஇச்சைகளுக்கும் உணர்வுகளுக்கும் நிலையான கட்டுப்பாடுகளை வழங்கி சீர்குலைந்து விடாமல் மனித சமூகத்தைப் பாதுகாக்கிறது.

அதுதான் இஸ்லாமியச் சிந்தனையையும் சமூகத்தையும் மார்க்சிய சிந்தனையும் கம்யூனிஸ்டுகளும் பாதிக்கப்பட்டதுபோன்று பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. மார்க்சியர்கள் பாதிக்கப்பட்டதுபோன்றே திருச்சபையின் பிடியிலிருந்து வெளியேறிய மேற்கத்தியர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

அதுதான் நம்பிக்கையாளனின் உள்ளத்தில், நம்பிக்கைகொண்ட சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துகிறது. அவர்களின் வாழ்க்கை மாறாத மதிப்பீடுகளைச் சுற்றி சீராக இயங்குகிறது. முன்னேறிச் செல்லும் அவர்களின் இயக்கம் நேற்று, இன்று, நாளையோடு பின்னிப் பிணைந்தது; சீரானது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட சீரான பாதையில் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள்.

அது இஸ்லாமிய சமூகத்தில் நம்பிக்கைகொண்ட தனிமனிதர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நிலையான, பொதுவான விதிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறது. ஆட்சியாளர்கள் வரம்புமீறிவிடாமல் இருக்க அவர்களுக்குக் கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் வழங்குகிறது. தனிமனிதர்களின் தீய மனஇச்சைகள், உணர்வுகள் வரம்புமீறிவிடாமல் இருக்க கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் வழங்குகிறது.

இஸ்லாமியக் கண்ணோட்டம் மனித வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைகளை வழங்குகிறது. அவை காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப என்றும் மாறாதவை; நிலையானவை.

அவை நேர்வழியும் வழிகேடுமாகும். வழிகேட்டின் நிறங்கள், வடிவங்கள் மாறுபடலாம். ஆனால் நேர்வழி ஒன்றே ஒன்றுதான். அதுதான் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாமாகும். அதைத்தவிர அனைத்தும் வழிகேடுகளே.

“நிச்சயமாக இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாகும்.” (3:19)

“யார் இஸ்லாத்தைத்தவிர வேறொரு மார்க்கத்தை நாடுகிறாரோ அவரிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” (3:85)

“நேர்வழிக்குப் பிறகு வழிகேட்டைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?” (10:32)

“பின்னர் மார்க்கத்தின் தெளிவான வழிமுறையில் நாம் உம்மை நிலைத்திருக்கச் செய்தோம். எனவே நீர் அதனைப் பின்பற்றும். அறிவற்ற மக்களின் மனஇச்சைகளுக்கு நீர் இணங்கிவிடாதீர்.” (45:18)

“இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். வேறு வழிகளில் செல்லாதீர்கள். அவை அவனது பாதையைவிட்டும் உங்களைத் திசைதிருப்பிவிடும்.” (6:153)

“அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களுக்குப் பொறுப்பாளனாக இருக்கின்றான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகிறான். நிராகரிப்பாளர்களுக்கு ஷைத்தான்களே பொறுப்பாளர்களாவர். அவர்கள் இவர்களை வெளிச்சத்திலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர்.” (2:257)

“யார் அல்லாஹ் அருளியதைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே நிராகரிப்பாளர்களாவர்.” (5:44)

“அறியாமைக்காலத்து தீர்ப்பையா நீங்கள் விரும்புகிறீர்கள்? உறுதியாக நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிட சிறந்தவன் யார்?” (5:50)

“நீங்கள் ஏதேனும் ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் திருப்புங்கள், நீங்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால்.” (4:59)

இந்த வரையறை உறுதியாகிவிட்டால் மனித வாழ்வு அதன் வட்டத்திற்குள் சுதந்திரமாகவும் அதன் இயல்பான ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றியவாறும் சீரான, நிலையான கண்ணோட்டத்திலிருந்து தனக்குத் தேவையானதைப் பெற்றவாறும் இயங்க முடியும்.

இந்த தனித்தன்மையின் மிகப் பெரிய பலன், நம்பிக்கையாளனின் கண்ணோட்டமும் உணர்வும் நிலைபெறக்கூடிய மூலத்தின் மாறாத்தன்மையாகும். அதன்மீது இஸ்லாமிய வாழ்வும் சமூகமும் உறுதியாக நிலைபெறுகிறது,  சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் அமைப்புகளிலும் சட்டங்களிலும் ஏற்படும் இயல்பான வளர்ச்சிக்கு சுதந்திரம் அளித்தவாறு. மத்திய காலங்களில் திருச்சபை விரும்பியதைப்போல சிந்தனைச் சுதந்திரம் தடைசெய்யப்பட்டு அறிவுச்செயல்பாடு முடக்கப்படவில்லை. அதேசமயத்தில் ஐரோப்பா செய்ததைப்போல கட்டுப்பாடுகள், வரையறைகள் இல்லாமல் தடுமாறித் திரியுமாறும் விட்டுவிடப்படவில்லை.

எதிரிகளால் நாலாபுறமிருந்தும் இஸ்லாம் தொடர்ந்து கடுமையான முறையில் தாக்கப்பட்டபோதும் இந்த தனித்தன்மைதான் இஸ்லாமிய சமூகத்தின் உறுதியை, பலத்தை ஆயிரம் வருடங்களாக பாதுகாத்தது. இந்த தனித்தன்மையைவிட்டு நாம் தூரமானபோதுதான் எதிரிகள் இஸ்லாத்தின் போதனைகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைகளை முன்னிறுத்துவதில் வெற்றிபெற்றார்கள். (பார்க்க, முஹம்மது குதுப் எழுதிய ‘நாம் முஸ்லிம்களா?’ என்ற புத்தகம்)

நிலையான மூலத்திலிருந்து பெறப்படாத, எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் கொள்கைளுக்குப் பின்னால் ஓடக்கூடிய சமூகம், தம் யூகங்கள் மற்றும் அனுமானங்களுக்கேற்ப, வரையறைக்குட்பட்ட தம் அறிவுக்கேற்ப கொள்கைளை மாற்றிக் கொள்ளும் சமூகம், அந்த அறிவையே கடவுளாக்கி அதிலிருந்து கண்ணோட்டங்களையும் மதிப்பீடுகளையும் பெறக்கூடிய சமூகம் நிச்சயமாக தாக்குதல்களால் பாதிக்கப்பட்டே தீரும். அது தம் அறிவில் தடுமாற்றத்தையும் உள்ளத்தில் துன்பத்தையும் களைப்பையும் கட்டமைப்பில் சீர்குலைவையும் சந்திக்கும்.

இதுதான் ஐரோப்பிய சமூகங்களில் நிகழ்ந்தது. இதுதான் இன்று முழு மனித சமூகத்தையும் பீடித்துள்ளது. அது திசைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

நாம் இந்த தனித்தன்மையை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பெறுகிறோம்.  இத்தகைய கண்ணோட்டம் அறிவுச் செயல்பாட்டையோ இயக்கத்தையோ முடக்கிவிடாது. பிரபஞ்சத்தின் மாறா இயக்கத்தைப் போல வாழ்வு இதனை மையமாகக் கொண்டே இயங்கும். அது முடங்கிவிடாது, தேங்கி கெட்டுவிடாது. எப்போதும் இயங்கிக்கொண்டே, வளர்ந்துகொண்டேயிருக்கும். ஆயினும் அதன் இயக்கமும் வளர்ச்சியும் என்றும் மாறாத நிலையான மையத்தைச் சுற்றியே இருக்கும்.

நாம் மேற்கத்திய சிந்தனைப் பள்ளிகளை வாசிக்கும்போது, அது நிலையான மையமின்றி கட்டுப்பாடற்ற இயக்கத்தையும் வளர்ச்சியையும் அடிப்படையாகக்கொண்டது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த சிந்தனையின்பால் அவர்களைக் கொண்டுசென்ற வரலாற்றுரீதியான காரணிகளையும் மதத்தின்மீது அவர்கள் கொண்ட மறைமுகமான ஆழமான வெறுப்பையும் அந்த வெறுப்பிற்குப் பின்னால் மறைந்திருக்கும் காரணிகளையும் அறிந்துகொள்வது மிக அவசியமாகும். இந்த வழிமுறைகளைக்கொண்டு நாம் நம்முடைய சிந்தனைப் பள்ளிகளை அணுக முடியாது என்பதையும் நம்முடைய ஆய்வுகளில் அவற்றைக்கொண்டு உதவிபெற முடியாது என்பதையும் அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.

நாம் இந்த சிந்தனையிலிருந்து சில விசயங்களைப் பெற்று அவற்றை இஸ்லாம்குறித்த அல்லது சமூகம்குறித்த அல்லது சிந்தனைப் பள்ளிகள் குறித்த நம் உரையாடலோடு கலந்துவிடுகிறோம். இது அறிவின் வடிவத்தில் வெளிப்படும் அறியாமையே. சில சமயங்களில் இந்த அறியாமையோடு தீய எண்ணமும் சேர்ந்துவிடுகிறது.

பேராசிரியர் முஹம்மது அஸத் (லியோபோல்டு) الإسلام على مفترق الطرق” -அல்இஸ்லாம் அலா முஃப்தரிகித் துருக்” என்ற தம் நூலில் கூறுகிறார்:

“மனித சமூகத்தின் எல்லா கலாச்சாரங்களும் நாகரிகங்களும் பிரபஞ்சத்தில் காணப்படும் உயிருள்ள ஒன்றைப் போன்றவை என்று வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. அவை வாழ்வின் எல்லா கட்டங்களையும் கடந்து செல்கிறது. அவை கடந்து செல்லத்தான் வேண்டும். அவை பிறக்கின்றன. பின்னர் வளர்கின்றன, பலம்பெறுகின்றன. இறுதியில் நோய்க்கூறுகள் அதனைத் தாக்கிவிடுகின்றன. கலாச்சாரங்கள் தாவரங்களைப்போன்றவை. மக்கி மண்ணாகி விடுகின்றன. தம் இறுதிக்காலத்தில் மரணித்துவிடுகின்றன. மற்ற கலாச்சாரங்கள் புதிதாகத் தோன்றுவதற்கு வழிவிடுகின்றன.

அப்படியென்றால் இதுதான் இஸ்லாத்திற்கும் பொருந்துமா? மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இஸ்லாமியக் கலாச்சாரம் வளர்ந்து உச்சகட்டத்தை அடைந்தது. தன்னைப் பின்பற்றிய மனிதர்களுக்கு பெரும் காரியங்களையும் தியாகங்களையும் செய்யும் ஆற்றலை அளித்தது. சமூகத்தின் போக்கையே மாற்றி புதிய நாடுகளைத் தோற்றுவித்தது. பின்னர் அது அமைதியடைந்து வெறும் வார்த்தையாக மட்டும் மாறிவிட்டது. நாம் அது முழுமையாக வீழ்ச்சியடைவதை பார்ப்போமா?

இஸ்லாம் என்பது மற்ற கலாச்சாரங்களைப்போல் ஒரு கலாச்சாரம் அல்ல. மனித மூளையின், உழைப்பின் உருவாக்கம் அல்ல. மாறாக எல்லா இடத்திற்கும் காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் படைத்த இறைவனால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட வாழ்வியல் நெறி. அது ஒருபோதும் மாறாது.

நம் நம்பிக்கையின்படி இஸ்லாம் படைத்த இறைவனால் வழங்கப்பட்ட வாழ்வியல் நெறியாக இருந்தால் அதுவும் மற்ற கலாச்சாரங்களைப் போல ஒரு கலாச்சாரம் என்றும் கால ஓட்டத்திற்கும் வாழ்க்கையின் மாற்றத்திற்கும் உட்பட்டது என்றும் ஒருபோதும் கூற முடியாது. இன்று இஸ்லாத்தில் வீழ்ச்சியாகத் தெரிவது நம்முடைய செயலின்மை மற்றும் மந்தத்தினால் நம் உள்ளத்தில் ஏற்பட்ட வெறுமையும் மரணமுமேயாகும்… அதேபோன்று மனித சமூகம் இஸ்லாத்தை விட்டுவிட்டதனால் வளர்ச்சியடைந்துவிட்டது என்று கூறுமளவுக்கு எந்த அடையாளமும் காணப்படவில்லை. மனித சமூகத்திற்கு மத்தியில் சகோதரத்துவத்தை இஸ்லாத்தினால் மட்டுமே உருவாக்க முடியும். அது மட்டுமே நடைமுறையில் உருவாக்கிக் காட்டியது. அது மட்டுமே மனிதனின் மதிப்பை உயர்த்தியது. அவனது உள்ளத்திலும் சமூகத்திலும் அமைதியை நிலைநிறுத்தியது.

மனித சமூகம் அடைந்துள்ள இவையனைத்திலும் குறைபாடுகளைப் பெற்றுள்ளதாகவே காண்கிறோம். இப்படியிருக்கையில் இஸ்லாத்தின் காலம் முடிவடைந்துவிட்டது என்று எவ்வாறு கூற முடியும்? அது இன்றைய காலத்தில் இல்லாத தூய மார்க்கத்தின் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பதற்காகவா? ஆனால் அந்த மார்க்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அமைப்பு மனித அறிவு உருவாக்கியவற்றைவிட வாழ்க்கைக்கு உகந்த, பரிபூரணமான, மனித இயல்போடு ஒத்துப்போகக்கூடிய ஒரு வழிமுறையை உருவாக்கிக் காட்டியதே? இது ஒன்றே வழிகாட்டத் தகுதியான மார்க்கம் என்பதற்கு இதுவே ஆதாரமல்லவா?

இன்று மனித சமூகத்தின் விதவிதமான கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாம்தான் ஆதாரமாக, வழிகாட்டியாக அமைந்தது – இதற்கான ஏராளமான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றன – மனிதன் அவற்றைக்குறித்து சிந்திப்பதற்கு முன்பே இஸ்லாம்தான் அவற்றின்பால் வழிகாட்டி அவனை உந்தித் தள்ளியது. அதுபோன்று இஸ்லாம் இன்று மனித சமூகம் அடைந்துள்ள தோல்விகளையும் தீயவிளைவுகளையும் முன்னரே சுட்டிக்காட்டியிருக்கிறது. இன்னின்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தம் குரலை உயர்த்தி மிகத் தெளிவாக அவனை எச்சரித்தது.

நாம் இஸ்லாத்தை சீர்திருத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அது தன்னளவில் பரிபூரணமானது. நாம்தாம் சீர்திருந்த வேண்டியிருக்கிறது. நம்முடைய செயலின்மையை, ஏமாற்றத்தை, பார்வைக்குறைபாட்டை சீர்படுத்த வேண்டியிருக்கிறது.

இஸ்லாம் சமூகம் மற்றும் ஆன்மீக அமைப்புகளைப்போன்று அழகுபடுத்த வேண்டிய அவசியமற்றது. அதில் செய்யப்படும் சிறு மாற்றம்கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மொத்த இழப்புகளையும் நாம்தாம் சந்திக்க நேரிடும்.”

நாம் கூறுகிறோம், இழப்பு நமக்கு மட்டுமல்ல. மாறாக ஒட்டுமொத்த மனித சமூகமூம் இழப்பை சந்திக்க நேரிடும். ஏனெனில் இஸ்லாம் மட்டுமே இயல்பு நிலையில் நிலைத்திருக்கின்ற ஒரே இறைமார்க்கம். அதனால் மட்டுமே மனித சமூகத்திற்கு சரியான வழியைக் காட்ட முடியும். அதை நாம் இழந்துவிட்டால் நிலையான மையத்திலிருந்து விலகிச் சென்று மீறும் மன இச்சைகளில் உழலக்கூடியவர்களாகி விடுவோம். நீரிலும் நிலத்திலும் மனிதர்கள் ஏற்படுத்தும் தீங்குகளினால் குழப்பம் பரவிவிடும். இஸ்லாத்தினால் மட்டுமே மனித சமூகத்தைக் காப்பாற்ற முடியும்.

வளர்ச்சியின் பெயரால், சீர்திருத்தத்தின் பெயரால் அல்லது மற்ற கோஷங்களின் பெயரால் இதனைக் களங்கப்படுத்த முயற்சிப்பவர்கள்தாம் நம்முடைய உண்மையான எதிரிகள், மனித சமூகத்தின் எதிரிகள். நாம் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறே மனித சமூகத்திடமும் அவர்களை விரட்டியடிக்குமாறு கோர வேண்டும்.

தங்களை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டே அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய உருவாக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இருபதாம் நூற்றாண்டை அவர்கள் அடையவில்லை. மார்க்சியத்தின் கோட்பாட்டுக்குள்ளே தங்களை சுருக்கிக் கொண்டார்கள். அதற்கு மாறான சிந்தனைகளை அவர்கள் உள்வாங்கவில்லை. அதுவே ஐரோப்பாவின் பொதுவான சிந்தனையாகிப்போனது. அவர்கள் மற்றவர்களை பிற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டே மார்க்சிய சடவாதத்தையும் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டையும் துதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையான முற்போக்குச் சிந்தனை மார்க்கத்தின் பக்கம் திரும்பவே விரும்புகிறது. மூன்று நூற்றாண்டுகளாக தடுமாற்றம், பதற்றம், வெறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அது மார்க்கத்திடம் நிம்மதியையும் உறுதியையும் வேண்டி நிற்கிறது.

மேற்கத்திய சிந்தனை அடைந்த இத்தகைய விளைவுகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றிவிட்டான். இத்தகைய சூழல்களால் பாதிக்கப்படாமலேயே நாமாக சென்று வலிந்து அவர்களைப்போன்று தடுமாற விரும்பினால் நம்மைவிட வடிகட்டிய முட்டாள்கள் வேறு யாருமில்லை.

இதனால் இழப்பு நமக்கு மட்டுமல்ல. முழு மனித சமூகத்திற்கும் சேர்த்துதான். நீண்ட காலமாக தடுமாற்றத்திலும் சந்தேகத்திலும் பதற்றத்திலும் திரிந்துகொண்டிருக்கும் மனித சமூகம் நிம்மதியையும் நம்பிக்கையும் பெறுவதற்காக என்றாவது ஒருநாள் இந்த உறுதியான கண்ணோட்டத்தை நோக்கிவரும்.

நமக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப் பெரிய பொறுப்பை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment