முஸ்லிம் பாரம்பரியத்தில் செஸ் விளையாட்டு
6ம் நூற்றாண்டு கால இந்தியத் துணைக் கண்டத்தில் உருவாக்கப்பட்ட பலகை விளையாட்டான ‘சதுரங்கம்’தான் தற்கால செஸ் விளையாட்டுக்கு முன்னோடி. சதுரங்கம் எனும் வார்த்தையில் வரும் ’சதுர்’ என்பது நான்கையும், ’அங்கம்’ என்பது பிரிவையும் குறிக்கும். அதாவது, தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நான்கு படைகளையும் குறிப்பதாக இச்சொல் உள்ளது.
இந்தியாவில் உருப்பெற்ற இந்த விளையாட்டு பாரசீகத்துக்குப் பரவியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். சாசானியப் பேரரசருக்கு இந்திய மன்னர் ஒருவர் தூதுவரை அனுப்பி சதுரங்கத்தை அறிமுகப்படுத்தியதுடன், அதில் ஒரு புதிரைக் (Puzzle) கொடுத்து அதற்குப் பதிலளிக்கும்படி சவால் விடுத்ததாகவும், உரிய நேரத்துக்குள் Bozorgmehr என்ற பாரசீக அமைச்சர் அதற்கு விடையளித்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை ஆளத் தொடங்கிய பிறகே மேற்காசியாவில் இது வேகவேகமாகப் பரவ ஆரம்பித்தது. அறபு மக்களுள் பெரும் பகுதியினர் இதை விளையாடலாயினர். செஸ் விளையாட்டு அப்போது ‘ஷத்ரஞ்’ என்று அழைக்கப்பட்டது.
அறபு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை வசப்படுத்தியது செஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாய் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்த விளையாட்டையும் கொண்டு சேர்த்தனர். இவர்கள் ஆளும் பகுதிகளுக்கு வரும் பயணிகளும் இதை அவரவர் பிரதேசங்களுக்குக் கொண்டு போயினர்.

‘ஷா’ (ராஜா) எனும் பாரசீக வார்த்தையே மருவி, பல இடங்களில் இந்த விளையாட்டின் பெயராய் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, இத்தாலி மொழியில் Scacchi, டச்சில் Schaakspiel, ஜெர்மனில் Schachspiel, செர்பிய மொழியில் Shkak என இது அழைக்கப்பட்டது. இதிலிருந்தே ’செஸ்’ (Chess) எனும் பெயரும் வந்தது.
செஸ் விளையாட்டை முஸ்லிம் மன்னர்கள் சிறப்பாக ஊக்குவித்தனர். அந்த வகையில், மன்னர் ஹாரூன் அல்-ரஷீத் குறிப்பிடத்தக்கவராவார். கண்ணைக் கட்டிக்கொண்டு செஸ் விளையாடுவது போன்ற அசாத்திய திறன்படைத்த வீரர்களை இனங்கண்டு பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டினார்.
சார்லமேன் செஸ் செட் உலகப் பிரசித்திபெற்ற ஒன்று. அதில் யானைகள், குதிரைகள், ராஜா, ராணி என அனைத்தும் முழு உருவ வடிவில் இருக்கும். மன்னர் சார்லமேனுக்கு ஹாரூன் அல்-ரஷீத் ஒரு செஸ் செட் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மன்னர் ஹாரூனின் வாரிசான அல்-அமீன் (இறப்பு 813) பற்றி ஒரு சுவாரஸ்யமான பழங்கதை உண்டு. அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் அல்-மாமூனின் படைகளால் பாக்தாத் முற்றுகையிடப்பட்டபோது, அவர் செஸ் விளையாடிக்கொண்டிருந்தாராம்.

அப்பாசிய ஆட்சிக்காலத்தில் (10ம் நூற்றாண்டு) அஸ்ஸுலி மற்றும் அவரின் மாணவர் அல்-லஜ்லஜ் ஆகியோர் மிகப் பிரபலமான செஸ் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் இந்த ஆட்டம் குறித்து எழுதியவை 12ம் நூற்றாண்டு மத்தியப் பகுதியில் ஒரு பெரிய புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.

இன்று மிகவும் அமைதியாக, எவ்விதச் சலமுமின்றி செஸ் விளையாடப்படுகிறது. விளையாடுவோர் ஒருவருக்கொருவர் பேசாமல் எந்திரம் போல விளையாடுவர். ஆனால், அன்று இந்நிலைக்கு முற்றிலும் முரணாக, விளையாடுவோர் தங்களுக்குள்ளும் பார்வையாளர்களிடையேயும் நகைச்சுவையாகப் பேசிச் சிரித்துக்கொண்டு விளையாடும் வழக்கம் இருந்திருக்கிறது. இதை அல்மஸ்ஊதி என்ற வரலாற்றாசிரியர் பதிவுசெய்துள்ளார்.

ஐரோப்பாவில் ஐபீரியத் தீபகற்பம் என்று சொல்லப்படும் தற்கால ஸ்பெயின், போர்ச்சுகல் பகுதிகளுக்கு செஸ்ஸை அறபு முஸ்லிம்களே கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அங்கே காஸ்டில், லியோன், கலீசியா ஆகிய பிராந்தியங்களை ஆட்சிபுரிந்த அல்ஃபோன்சா எக்ஸ் (1221-1284) என்ற மன்னரின் மானியத்தில் அறபியிலிருந்து பழைய ஸ்பானிய மொழிக்கு மாற்றப்பட்ட விளையாட்டு குறித்த நூலில், மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆஃப்ரிக்காவில் விளையாடப்பட்ட ஷத்ரஞ்சின் மேம்பட்ட வடிவமே தற்போது இருப்பதாகக் கூறப்பட்டது. அதாவது, ஸ்பெயினில் செஸ் பரவலாகும்போது அது மேம்பட்ட வடிவில் இருந்துள்ளது.
முஸ்லிம் ஸ்பெயினில் கல்வி, அறிவியல், கலாச்சாரம் முதலானவை வெகுவாக ஊக்குவிக்கப்பட்டதுபோல் செஸ் விளையாட்டும் ஊக்குவிக்கப்பட்டது. அங்கிருந்தே மேற்கு ஐரோப்பா வழியாக அந்தக் கண்டத்தில் இவ்விளையாட்டு பரவியது.
10ம் நூற்றாண்டிலும், 11ம் நூற்றாண்டிலும் மத்தியக் கிழக்கு பிராந்தியத்திலிருந்து ரஷ்யா, ஸ்காண்டிநேவியா ஆகிய பகுதிகளுக்கு செஸ் அறிமுகமானது.


ஈரானில் 12ம் நூற்றாண்டு வாக்கில் குறியீட்டு (abstract) வடிவில் உருவாக்கப்பட்ட செஸ் காய்கள் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிடன் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன (பார்க்க: கீழுள்ள படம்). அதில் ‘ஷா’வுக்கு (ராஜாவுக்கு) அரியணை வடிவிலும், அமைச்சருக்கு சற்று சிறிய அளவிலான அரியணை வடிவிலும் காய்கள் இருக்கின்றன. செஸ்ஸில் இன்றைக்கு ராணி வகிக்கும் இடத்தை அந்தச் சமயத்தில் அமைச்சர் காய் வகித்தது.



செஸ் காய்கள் இடத்துக்கு இடம் மாறுபட்டது. மத்திய ஆசியாவில் யானை காயின் இடத்தை ஒட்டகம் பதிலீடு செய்தது. இதேபோல், திபெத்தியர்களிடையே ராஜா காயின் இடத்தை சிங்கமும், முகலாயர்களிடையே மந்திரியின் இடத்தை புலியும் வகித்தது. முகலாயர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாக செஸ் இருந்துள்ளது.

காலவோட்டத்தில் இன்றைக்கு செஸ் காயின் வடிவமும், அந்த விளையாட்டின் விதிமுறைகளும் மாறுதலடைந்துள்ளன. உலகம் முழுக்க அது விளையாடப்படுகிறது. இச்சூழலில், இந்த அளவுக்கு செஸ் பரவலானதிலும், அதை மேம்படுத்தி அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதிலும் முஸ்லிம் உலகின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்: Bayt Al Fann