கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை

Loading

அரசையோ, அதன் கொள்கைகளையோ, தவறான நிலைப்பாட்டில் இருக்கும் ஆளும் கட்சிகளை அல்லது எதிர்கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளையோ விமர்சிப்பதில் எவ்விதத் தவறுமில்லை. ஜனநாயக அமைப்பில், விமர்சனங்கள் அரசு திறன்பட செயல்படுவதற்கு உதவி புரிகின்றன. அதேசமயம் விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே முன்வைக்கப்படும் விமர்சனங்களால் எந்தவொரு பயனும் இல்லை.

அரசின் பணிகள் சீராக இயங்குவதற்கு விமர்சனத்துடன் கூடிய மாற்றீடுகள் (Alternatives) தேவைப்படுகின்றன. வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், போகலாம். ஆனால் அவை உருவாக்கும் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் விதிகள் மாறாமல் தொடர்ந்து நீடிக்கக்கூடியவை; குடிமக்களின் வாழ்வில் நேரடி பாதிப்பையோ பலனையோ ஏற்படுத்துபவை.

தற்போது உலகின் பெரும்பகுதி கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்றில் இதைப்போன்ற சூழல் ஒன்றும் புதிதல்ல. பல்வேறு காலங்களில் மனித இனம் இவற்றை எதிர்கொண்டிருக்கிறது; அதிலிருந்து மீண்டு, தமது தேசத்தை சிறந்த முறையில் வளர்ச்சியடையவும் செய்திருக்கிறது. தற்போதைய ஊரடங்குக்குப் பிறகு வேளாண்மை, ஜவுளி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் ஏனைய எல்லாத் துறைகளும் தீவிர நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். எழும் புதிய நெருக்கடிகள் சாதாரண குடிமக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொண்டு, அரசு முறையான திட்டங்களை வகுப்பதும், தனிநபர்களும் தங்களது பங்களிப்பை உறுதி செய்வதும் அவசியமாகும்.

நெருக்கடி மேலாண்மை என்பதென்ன?

துயரம், அன்றாட செயல்பாடுகளில் விழும் தடைகள் அல்லது கடும் ஆபத்தான சூழல் எனப் பல்வேறு வடிவங்களில் நெருக்கடியை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கு அல்லது அது பரவலாவதற்கான காரணம், ஆரம்பகால எச்சரிக்கைகளைக் குறித்த அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் அலட்சியம், ஆரம்ப நிலையிலேயே கைவசம் இருக்கின்ற வளங்களை முறையாகக் கையாளாமல் விட்டுவிடுதல், நெருக்கடிகள் பெரும் தாக்குதல் தொடுக்கும் முன்பே முன்னுரிமைகளைச் சரியாக நிர்ணயிக்கத் தவறுதல் ஆகியனவாகும்.

தனிநபர்களையோ அமைப்பையோ அல்லது அரசையோ சிக்கலான நேரங்களிலிருந்து காப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய திறனை நெருக்கடி மேலாண்மை எனலாம். மனிதன் எளிதில் பாதிக்கப்படும் மனச்சபலங்களில் இருந்தும் பேராசையிலிருந்தும் விலகியிருப்பதும், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, பாரபட்சமின்மை வெளிப்படைத்தன்மை ஆகியவற்றோடு இயங்குதல் போன்ற பண்புகள் நெருக்கடியைக் கையாளும் ஒருவருக்கு அவசியமாகும்.

தனிநபரோ சமூகமோ அரசோ எதுவாக இருப்பினும் அது நெருக்கடியைச் சரியான முறையில் கையாளத் தவறும்போது, பேரிழப்பும் பேரிடரும் தவிர்க்க இயலாததாக ஆகிறது. கோவிட்-19 வைரஸ் பரவலைப் பொறுத்தவரை, எல்லா நெருக்கடிகளையும் போலவே இதிலிருந்தும் விரைவில் மீண்டு எழ முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் இருந்தது. ஆயினும் இதுவரை இப்பிரச்னையைக் கையாள உறுதியான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. முழுமையற்ற தீர்வுகளும் வலிக்கொல்லி மாத்திரைகள் போன்ற உடனடி, தற்காலிகத் தீர்வுகளே முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. அவை மீண்டும் நோய் பரவுவதற்கும், முன்பை விட அதிக பாதிப்புகளை ஏற்படுதுவதற்கும் வாய்ப்பாக இருக்கவும் கூடும்.

இதற்கு என்னதான் தீர்வு?

  1. பாதுகாப்புவாதத்தைப் (Protectionism) புறக்கணித்து வளங்களைப் பங்கீடு செய்வோம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உவமை ஒன்று நெருக்கடி மேலாண்மையை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும். ”இறைவனின் கட்டளைகளையும் கட்டுப்பாடுகளையும் பேணி நடப்பவர்களுக்கும் அவற்றை மீறுபவர்களுக்குமான உவமானம், கப்பலில் சென்ற சில மனிதர்களை ஒத்தது. அவர்களுள் சிலருக்கு கப்பலின் மேல் தளத்திலும், வேறு சிலருக்கு கப்பலின் கீழ்த் தளத்திலும் இடங்கள் கிடைத்தன. கப்பலில் குடிநீர் வசதி மேல் தளத்தில் மட்டுமே இருந்தது. எனவே, கீழ்த் தளத்தில் இருப்பவர்களும் குடிநீர் தேவைக்கு மேல் தளத்திற்கே செல்ல வேண்டும் (இது மேல் தளத்தில் இருப்போருக்கு அசெளகரியத்தைக் கொடுத்தது).

“ஒரு கட்டத்தில், கீழ்த் தளத்தில் இருப்போர், நாம் நமக்காக கீழ்ப் பகுதியிலேயே துளையிட்டு கடலிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்வோம். இதனால் மேலுள்ளவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். தற்போது மேல்தளத்தில் இருப்போர் இவர்களின் இந்த முடிவைச் செயல்படுத்த அனுமதித்தால் ஒட்டுமொத்த கப்பலும் கடலில் மூழ்கும். அதேசமயம், மேலுள்ளவர்கள் கீழுள்ளவர்களைத் தடுத்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.”

நமக்கு அருகமையில் வசிப்பவர்கள், தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் முதலானோர் இந்த முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நம்மால் உதவி செய்யப்பட வேண்டியவர்கள்.

  1. இருப்பதைக் கொண்டு நெருக்கடியைச் சமாளித்தல்

நபி யூசுஃப் (அலை) எகிப்தில் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக நீண்ட கால அடிப்படையில் சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அவரின் திட்டம் என்பது உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு, சேமிப்பிலிருந்து மறுமுதலீடு ஆகிய நான்கு பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சமமான முக்கியத்துவம் அளித்தது. ஒவ்வொரு செயல்பாட்டுக்குமான குறிக்கோள்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. இவை தவிர, அறம் சார்ந்த கோணத்தைப் புறக்கணிக்காமல் ஒவ்வொன்றுக்குமான தனித்தனிக் கொள்கைகள், வழிமுறைகள், செயல்முறைகள் மற்றும் காலவரையறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

நபி யூசுஃப் கூறினார்: “ஏழாண்டுகள்வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்யுங்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்! அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர!” (திருக்குர்ஆன் 12:47,48)

நெருக்கடியைக் கையாள்வதற்காக ஆலோசனை கேட்ட எகிப்து அரசருக்கு நபி யூசுப் அவர்கள் வழங்கிய தீர்வுக்குப் பின்னாலுள்ள தத்துவம் இதுவே.

  1. வேளாண்துறை பாதுகாப்பு

உணவு அனைத்து மக்களின் அடிப்படைத் தேவை. நம் நாட்டைப் பொறுத்தவரை உணவு உற்பத்தியே பல மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. பெரும்பரப்பு விவசாயம் மற்றும் சாகுபடிகளைச் செய்வதுடன், ஊரடங்கு காரணத்தால் மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறிய அளவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் முதலியவற்றைச் சாகுபடி செய்ய வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நிலங்கள் பல வளமானதாகவும், விவசாயத்திற்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. இந்த நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவு உற்பத்தி அதிகரிப்பது மட்டுமன்றி தேசியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்திடவும் முடியும். சோனியா காந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பரிந்துரை செய்ததையும் கவனத்தில் கொள்ளலாம்.

“அறுவடை காலத்தின் உச்சத்தில் இந்த 21 நாட்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் விவசாயப் பயிர்கள் மார்ச் மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் அறுவடைக்காகக் காத்திருக்கின்றன. 60% சதவீதத்திற்கு நெருக்கமான இந்திய மக்கள் பொருளாதார ரீதியாக விவசாயத்தையே சார்ந்து இருப்பதால், விவாசாயப் பொருட்களை அறுவடை செய்வதற்கும், அதனை குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) கொள்முதல் செய்வதற்குமான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகளிடமிருந்து கடன் தொகை வசூல் செய்வதை ஆறு மாதத்திற்கு நிறுத்திவைப்பதுடன் கடனை ரத்து செய்வது குறித்து தாராள மனத்தோடு பரீசிலிப்பதற்கும் இதுவே சரியான தருணமாகும்.”

  1. சிறு தொழில்களை ஊக்குவித்தல்

கோவிட்-19 உலகப்பெருந்தொற்றின் காரணமாக சிறு தொழில்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளன. இந்த பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சிட்பி (SIDBI) மூலம் நீண்டகாலக் கடன் வழங்குவது போன்ற நன்மை பயக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பெரிய நிறுவனங்கள் பத்திர சந்தையில் முதலீட்டை உயர்த்துவதன் மூலமும் பிற வகையிலும் சிறிய சப்ளையர்களுக்குத் தேவையான நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறிய RBIன் முன்னால் கவர்னர் ரகுராம் ராஜனின் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழில் புரிவோர் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பத்திரங்கள், லாப-நஷ்ட ஒப்பந்தங்கள் இன்னும் பிற வடிவங்களில் வட்டியில்லா கடன் வழங்குவதன் மூலம் பெருந்தொற்றுக்குப் பிறகு குறைந்த காலத்திலேயே அவர்களை மீண்டெழச்செய்ய முடியும்.

  1. இருக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்துதல்

தற்போது இருக்கும் நிதி இருப்பு பலவற்றை சிக்கன நடவடிக்கைகள் மூலம் கோவிட்-19 பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது இந்நேரத்தின் அவசரத் தேவையாகும்.

  • மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் லாக்டவுன் காலத்தில் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகளுக்கும், பயணச் செலவுகளுக்கும் வழங்கப்பட்டிருந்த நிதியை, பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும்.
  • மக்கள் தற்போது சாலைக்கு வராமல் வீட்டில்தான் இருக்கின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் தங்களின் நலத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக சாலையோரங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்கு ஒதுக்கியிருந்த தொகையைத் திரும்பப்பெறலாம்.
  • மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அனைத்து வகையிலான (அச்சு ஊடகம், எலக்ட்ரானிக் ஊடகம், சமூக வலைதளம்) விளம்பரச் செலவுகளையும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்ய வேண்டும்.
  • பல்வேறு தேர்வுகளை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகச் செலவுகளுக்காக மறு ஒதுக்கீடு செய்யலாம். இதற்கு பிரதிபலனாக அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் தங்களது கட்டணத்தில் குறைந்தபட்சம் 30% குறைக்க வேண்டும்.
  1. கிராமத்தைத் தத்தெடுத்தல்

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் சார்ந்த எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பெரும் வணிகர்கள், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைசார் பிரபலங்கள், அரசு சாரா அமைப்புகள் என அனைவரும் முறையே ஒரு கிராமத்தை மூன்றாண்டுகளுக்குத் தத்தெடுத்தால், நாடு முழுவதும் குறைந்தது 15,000 கிராமங்கள் வளர்ச்சியடையும், நிச்சயமாக இது உலகின் பிற பகுதிகளுக்கும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமையும்.

இவ்வாறு பல்வேறு துறைகளும் நெருக்கடியைக் கையாளுவதற்குத் தேவையான, சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி மருத்துவத்துறைதான் இதில் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். அதேபோன்று, மருத்துவத் துறைக்குத் தேவையான உபகரணங்களும் சாத்தியமான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்படுவது இன்றியமையாதது.

இந்த நெருக்கடியான நிலையில் நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு அமைதியை நிலைநாட்டவும், வெறுப்புகளற்ற, நீதியின் அடிப்படையிலான சமூக அமைப்பை வருங்கால தலைமுறைக்குப் பரிசளிக்கவும் முன்வருவோம்!

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: முஹம்மது அஸ்லம்.

Related posts

Leave a Comment